இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0716



ஆற்றின் நிலைதளர்ந் தற்றே வியன்புலம்
ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:716)

பொழிப்பு (மு வரதராசன்): விரிவான அறிவுத்துறைகளை அறிந்து உணர்கின்றவரின் முன்னே குற்றப்படுதல், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றதாகும்.

மணக்குடவர் உரை: ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும், அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல்.
இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஆற்றின் நிலை தளர்ந்தற்று - வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்; வியன் புலம் ஏற்று உணர்வார் முன்னர் இழுக்கு - அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல்.
(நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தினால் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: நிரம்பக் கற்றார் முன்னே குற்றப்படுதல் வழியிடை வழுக்கி விழுந்தது போலும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு ஆற்றின் நிலைதளர்ந் தற்றே .

பதவுரை: ஆற்றின்-வழியினின்றும்; நிலைதளர்ந்து-நிலை கலங்கியது போல; அற்றே-அத்தன்மைத்து; வியன்புலம்-விரிந்த அறிவு; ஏற்று-கொண்டு, கேட்டு; உணர்வார்-அறிவார்; முன்னர்-முன்; இழுக்கு-தவறுதல்.


ஆற்றின் நிலைதளர்ந் தற்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும்; [குலைந்தாற் போல-கலங்கியது போல]
பரிப்பெருமாள்: ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல இகழப்படும்;
பரிதி: ஆற்றுக்குள்ளே நிலைச்சுக் கரையேறுவான் அவன் நீச்சிலே விழுந்ததற்கு ஒக்கும்; [நிலைச்சு - நின்று; நீச்சிலே விழுந்ததற்கு - நீந்திச் செல்வதற்கு]
காலிங்கர்: தொன்று தொட்டுத் தாம் ஒழுகி வருகின்ற ஒழுக்க நிலையில் தவறியது எத்தன்மைத்து;
காலிங்கர் குறிப்புரை: ஆற்றின் நிலை தளர்ந்து அற்று என்பது தாம் ஒழுகி வருகின்ற ஒழுக்கின் நிலையின் தவறிய அத்தன்மைத்து என்றது.
பரிமேலழகர்: வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: நிலை தளர்ந்து வீழ்தல் 'உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும்' (குறள்.24) காத்தொழுகியான்,பின் இழுக்கிக் கூடா ஒழுக்கத்தனாதல் பயன் இழத்தலே அன்றி இகழவும்படும் என்பதாம். இதனான் அதன்கண் இழுக்கியவழிப்படும் குற்றம் கூறப்பட்டது.

'ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் காலிங்கரும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'ஆற்றுக்குள்ளே நிலைச்சுக் கரையேறுவான் அவன் நீச்சிலே விழுந்ததற்கு ஒக்கும்' என்றார். பரிமேலழகர் 'வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும்' என உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்ல நெறியிலே ஒழுகியவர் நெறி தவறியது போலாம். (இகழப்படுவர்)', 'ஒழுக்கத்தில் தவறுவதேயாகும்', 'நல்வழியிற் செல்லுகின்றவன் அந்நெறியின் வழுவி நிலைதளர்ந்து விழுவதைப் போலும்!', 'ஆற்றின் கண் நிலை தவறியதை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வழியில் செல்லும்போது நிலை கலங்கியது போலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வியன்புலம் ஏற்றுணர்வார் முன்னர் இழுக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல்.
மணக்குடவர் குறிப்புரை: இது தப்புதல் வாராமற் சொல்லல் வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல்.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஏற்று என்பது கேள்வியின்கண் வருதலின் கேள்வி ஆயிற்று. மேல் தப்புவாராமல் சொல்ல வேண்டும் என்றார்; அதனால் வரும் குற்றம் என்னை என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: பெரியோரிருந்த சமயத்திலே மந்திரி சொல் தட்டுப்படுதல் என்றவாறு.
காலிங்கர்: அவ்வளவு அன்றி அதனினும் சாலக் குற்றம் உடைத்து; யாது எனின் தம் கல்வியால் பரந்த அறிவினைத் தாம் ஒன்று சொல்லத் தொடங்கும்போது எதிர் ஏற்று அறிவோர் கூட்டத்து அவை முன்னர்த் தமது சொல்லின் சொல் இழுக்கம் என்றவாறு,
காலிங்கர் குறிப்புரை: வியன்புலன் என்பது உயர்ந்த அறிவு என்றது. ஏற்று உணர்வார் என்பது உரை கலப்பதன் முன்னமே யாது எனக் கருதி இதனை எதிர் ஏற்று அறிவோர் என்பது.
பரிமேலழகர்: அகன்ற நூற்பொருள்களை உட்கொண்டு அவற்றின் மெய்ம்மையை உணரவல்லார் அவைக்கண் வல்லானொருவன் சொல் இழுக்குப்படுதல்.

'அகன்ற கல்வியைக் கேட்டறியவல்லார் முன்னர்த் தப்புதல்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பரந்துபட்ட நூற்பொருள்களை ஏற்று அவற்றின் உண்மை தெளிய வல்லவரது கூட்டத்தில் ஒருவர் பேசும்போது குற்றப்படுதல்', 'விரிந்த கல்வியறிவுள்ள பிரசங்கத்தைக் கேட்டு அனுபவிக்க வல்ல (முதுவர்கள்) கூடிய சபையில் (முந்து கிளத்துப் பதட்டம் காட்டுகிற) குற்றம்', 'விரிந்து நூற்பொருளைக் கேட்டு அதன் உண்மையை ஆராயுமறிஞர்முன் சொற் குற்றப்படுதல்', 'அகன்ற நூற்பொருள்களைக் கற்று அவற்றின் மெய்மையை அறியவல்லார் முன்னிலையில் சொல்லிழுக்குப்படுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பரந்துபட்ட நூற்பொருள்களைக் கேட்டு அவற்றின் உண்மையை அறிய வல்லவரது அவையில் குற்றப்படுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பரந்துபட்ட நூற்பொருள்களைக் கேட்டு அவற்றின் உண்மையை அறிய வல்லவரது அவையில் குற்றப்படுதல் ஆற்றின் நிலைதளர்ந்து போலும் என்பது பாடலின் பொருள்.
'ஆற்றின் நிலைதளர்ந்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

பேரறிஞர் கூடிய அவைக்கு நன்கு ஆயத்தப் படுத்திக்கொண்டு செல்க.

விரிவான நூற்பொருளைக் கேட்டு அவற்றின் உண்மையை ஆராயவல்லவர் குழுமியுள்ள அவையின் கண் குற்றப்படுதல், வழி தடுமாறி நிலைகுலைந்ததை ஒக்கும்.
அது பல துறை அறிவுகொண்டோர் நிறைந்த ஓர் அவை. அவ்விடத்துக்குக் கருத்துக்களை உரைக்கச் செல்பவர் தம்மை அணியம் செய்துகொண்டு செல்லவேண்டும். இல்லையென்றால் அங்கு கேட்கப்படும் விளக்கங்களுக்கெல்லாம் விடைதெரியாமல் நிலை தடுமாறிப் போவர். அறிவில் மிக்கார் அவைக்கு முன்னேற்பாட்டுடன் செல்லாதவன் சொல்லுதலின் பயன் இழந்து இகழ்ச்சிக்கும் உள்ளாவான். இந்நீதியை விளக்க, 'பயணம் மேற்கொள்பவன் வழித்தடங்கள் எல்லாம் முன்னமே அறிந்து தகுந்த வாகனங்களையும் அறிந்து வைத்திருக்காவிடில் வழிதவறி இடர்ப்படுவது போல' என்று இன்னொரு நீதியை உவமமாகக் காட்டப்பட்டது.

மதுரையில் பாண்டியன் அவையில் தருமி கொண்டு வந்த கவிதையில் நக்கீரர் எழுப்பிய வினாக்களுக்குப் பதில் இறுக்கமுடியாமல் அவன் அவமானப் பட்ட கதைநிகழ்வு (பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடற் புராணம்) நினைவுக்கு வரலாம்.

'ஆற்றின் நிலைதளர்ந்தற்று' என்ற தொடர் குறிப்பது என்ன?

'ஆற்றின் நிலைதளர்ந்தற்று' என்றதற்கு ஒரு நெறியின்கண் நின்றார் அந்நிலைமை குலைந்தாற் போல, ஆற்றுக்குள்ளே நிலைச்சுக் கரையேறுவான் அவன் நீச்சிலே விழுந்ததற்கு ஒக்கும், தாம் ஒழுகி வருகின்ற ஒழுக்க நிலையில் தவறியது எத்தன்மைத்து, வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தாலொக்கும், ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவதைப் போன்றது, ஆற்றிலே நீந்துவானொருவன் கரை கடந்த வெள்ளத்தினிடையே அகப்பட்டு நிலை குலைந்து தளர்ந்ததற்கு ஒப்பாகும், நன்னெறியில் நின்றொழுகுவார் நிலை தடுமாறியது போன்றது, வழியிடை வழுக்கி விழுந்தது போலும், நல்ல நெறியிலே ஒழுகியவர் நெறி தவறியது போலாம், ஒழுக்கத்தில் தவறியதை ஒக்கும், பேராற்று வெள்ளத்தில் நீந்தும் ஒருவன் தன் நிலையில் தளர்ந்தது போல்வதாகும், நல்வழியிற் செல்லுகின்றவன் அந்நெறியின் வழுவி நிலைதளர்ந்து விழுவதைப் போலும்!, ஆற்றின் கண் நிலை தவறியதை ஒக்கும், ஆற்றிலே ஆழந்தெரியாமல் நிலை தவறி விடுபவனுக்கு ஒப்பாவான், செல்லும் வழிக்கிடையிலேயே மேலே நடக்க முடியாமல் தளர்தல் போலாகும் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

உரையாளர்கள் கூறிய வண்ணம் நான்கு வகையான விளக்கங்கள் கிடைக்கின்றன. நெறியின்கண்/ஒழுக்கநெறியிலிருந்து நிலை தளர்ந்து கெடுவது, வீடு எய்தற்பொருட்டு நன்னெறிக்கண் நின்றானொருவன் அந்நெறியினின்றும் நிலை தளர்ந்து வீழ்ந்தது, ஆற்றிலே நீந்துவானொருவன் கரை கடந்த வெள்ளத்தினிடையே அகப்பட்டு நிலை குலைந்து தளர்ந்தது, வழியிடை வழுக்கி விழுந்தது என்பன அவை. இவற்றுள் வ சுப மாணிக்கம்/ மு கோவிந்தசாமி இவர்களின் 'வழியிடை வழுக்கி விழுந்தது போலும்' / 'செல்லும் வழிக்கிடையிலேயே மேலே நடக்க முடியாமல் தளர்தல் போலாகும்' என்னும் பொருள்கள் இயல்பாக உள்ளன.

'ஆற்றின் நிலைதளர்ந்தற்று' என்றதற்கு வழியில் செல்லும்போது நிலை கலங்கியது போலும் என்பது பொருள்.

பரந்துபட்ட நூற்பொருள்களைக் கேட்டு அவற்றின் உண்மையை அறிய வல்லவரது அவையில் குற்றப்படுதல் வழியில் செல்லும்போது நிலை கலங்கியது போலும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையறிதல் சொல்/கருத்துப் பிழை வாராது காக்கச் செய்யும்.

பொழிப்பு

நல்ல கல்வி அறிவுபெற்றவர்கள் உள்ள அவையில் குற்றப்படுதல் செல்லும் வழியில் தடுமாறி விழுந்தது போலும்.