இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0714



ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணங் கொளல்

(அதிகாரம்:அவையறிதல் குறள் எண்:714)

பொழிப்பு (மு வரதராசன்): அறிவிற் சிறந்தவரின்முன் தாமும் அறிவிற் சிறந்தவராய்ப் பேச வேண்டும்; அறிவில்லாதவர் முன் தாமும் வெண் சுண்ணம்போல் அறிவில்லாதவராய் இருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும் வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.

பரிமேலழகர் உரை: ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்- அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக; வெளியார்முன் வான்சுதை வண்ணம் கொளல் - ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.
('ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல். அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.)

வ சுப மாணிக்கம் உரை: அறிவுக் குழுவில் நல்லறிஞனாய் விளங்குக; பேதைக் குழுவில் வெள்ளைபோல் நடக்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல் வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்.

பதவுரை: ஒளியார்-ஒள்ளிய அறிவுடையார்; முன்-எதிரில்; ஒள்ளியர்-அறிஞர்; ஆதல்-ஆகுக; வெளியார்-வெள்ளியார், வெள்ளைகள், பேதையர், உள்ளீடற்றவர், தொடர்பற்றவர்; முன்-முன்னால்; வான்-வெண்மையான; சுதை-சுண்ணாம்பு; வண்ணம்-நிறம்; கொளல்-கொள்க.


ஒளியார்முன் ஒள்ளியர் ஆதல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும்;
பரிப்பெருமாள்: ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராயிருத்தலும்;
பரிதி: சமர்த்தன் முன்னே சமர்த்தன் என்று பெயர் பெறுதல்;
காலிங்கர்: ஒள்ளிய அறிவாளர் அவை முன்னர்க்கு ஏற்பத் தாமும் ஒள்ளிய அறிவாளர் ஆதல் உடையர் எனின்; .
காலிங்கர் குறிப்புரை: ஒளியார் என்பது ஒள்ளிய அறிவுடையார். .
பரிமேலழகர்: அறிவால் ஒள்ளியாரவைக்கண் தாமும் ஒள்ளியராக;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒள்ளியார்' என்றது மிக்காரையும் ஒத்தாரையும். அது விகாரத்தால் 'ஒளியார்' என்று நின்றது. ஒள்ளியராதல்: தம் நூலறிவுஞ் சொல்வன்மையும் தோன்ற விரித்தல்.

'ஒள்ளிய அறிவுடையார்முன்பு தாமும் ஒள்ளிய அறிவுடையராக' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவுடையார் கூட்டத்தில் தாமும் அறிவுடையராய்ப் பேசுக', 'அறிவாளிகள் கூடியுள்ள சபையில் அவர்களைக் காட்டிலும் அறிவாளியென்று புகழடையப் பேச வேண்டும்', 'அறிஞர்முன் அறிவுடையவனாகப் பேசுக', 'அறிவால் சிறந்தார் முன்னர் தாமும் அறிவுடையராக விளங்குக' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக என்பது இப்பகுதியின் பொருள்.

வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வெள்ளிய அறிவுடையார் முன்பு வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.
பரிப்பெருமாள்: வெள்ளறிவினார் முன்னர் வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மையைக் கொண்டிருத்தலும் அவையறிதலாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் அவையறிந்து ஆராய்ந்து சொல்லவேண்டும் என்றார்; அவற்றுள் அவை அறிதலாவது இது என்று கூறியது.
பரிதி: வெள்ளை முன்னே கறுப்பு வெண்மையாமோ என்றவாறு.
காலிங்கர்: அவ்வறிவு, இல்லாப் பேதையார் ஆகிய வெள்ளறிவாளர் முன்னர் வரின் அங்குத்தனையும் வெண்மை நிறமே தனக்கு இயல்பு ஆகிய சுதை போலும் வெள்ளைவண்ணத்தைத் தம் கண் உள்ளதாகக் கொண்டு கழிதல் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வெளியர் என்பது வெள்ளியார்; அறிவுகேடர். வான் சுதை வண்ணம் கொளல் என்பது, இதில் வாலிமை -வெண்மை; சுதை என்பது மணலும் நீறும் கூடிய சுண்ணாம்பு. பரிமேலழகர்: ஏனை வெள்ளைகள் அவைக்கண் தாமும் வாலிய சுதையின் நிறத்தைக் கொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: அவை அறியாத புல்லாரை 'வெளியார்' என்றது. வயிரம் இல் மரத்தை 'வெளிறு' என்னும் வழக்குப்பற்றி. அவர் மதிக்கும் வகை அவரினும் வெண்மையுடையராக என்பார், 'வான் சுதை வண்ணம் கொளல்' என்றார். அவையளவு அறிந்தார் செய்யும் திறம் இதனான் தொகுத்துக் கூறப்பட்டது. பின்னர் விரித்துக் கூறுப.

'வெள்ளறிவினார் முன்னர் வாலியசுதை வண்ணம் போன்ற வெண்மை நிறத்தைக் கொள்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவற்ற வெள்ளைகளின் கூட்டத்தில் வெள்ளை போல் பேசாதிருக்க', 'அறிவு குறைந்த சாதாரண மக்கள் கூடியுள்ள இடத்தில் அவர்களைக் காட்டிலும் சாதாரண மனிதனாகப் பேச வேண்டும்', 'அறிவில்லாதவர் அவைக்களத்தே வெண்சாந்தின் தன்மையுடையவனாய் இருக்கவும். (அஃதாவது ஒன்றும் அறியாதவன் போல் இருக்கவேண்டும்.)', 'அறிவற்ற கூட்டத்தினர் முன்னர், தாமும் ஒன்றும் அறியாதவர் போல் நடிக்க. (வெண்சுண்ணத்தின் நிறத்தைக் கொள்க.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண்சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக; பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண்சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக என்பது பாடலின் பொருள்.
'வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

பேசுபவர், அவைக்குத் தகுந்தாற்போலத் தன் நிறத்தை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அறிவுடைய அவையினர் முன்பு தாம் அவரினும் அறிவுடையவராக இருந்து பேசுதல் வேண்டும்; தனக்குத் தொடர்பில்லாதவர் குழுமியுள்ள அவைக்களத்திலே வெண்சுண்ணம் போல் அதாவது ஒன்றும் அறியாதவர் போல் இருத்தல் வேண்டும்.
ஒளியார் என்பதற்கு அறிவுடையவர் என்றும் வெளியார் என்பதற்கு அறிவிலே வெண்மை கொண்டவர்கள் அதாவது அறிவில்லாதவர் என்றும் அனைவரும் பொருள் கொள்கின்றனர். ஓர் அவைக்கு வருவோரை அறிவுடையவர் அறிவிலிகள் என்று கூறுபடுத்திப் பார்க்க இயலாது. ஒரு துறையில் சிறந்தவர்களை அத்துறையில் ஒளியார் அல்லது அறிவுடையார் எனக்கொள்ள வேண்டும். அத்துறையில் சிறந்தவர்கள் நிரம்பிய அவையில் வித்தக நடையில் பேசவேண்டும். அத்துறைக்கு வெளியே உள்ளவர்கள் அத்துறையைப் பொறுத்தவரையில் வெள்ளியார்தானே. வெளியார் கூடிய அவையில் தாம் இருக்க நேரிட்டால் அதுபற்றித் தமக்கு ஒன்றும் தெரியாதது போல் இருக்கவேண்டும் என்கிறது பாடல். தனக்குத் தொடர்பில்லாதது போல் காட்டிக்கொள்ளவேண்டும் என்பது பேசாமல் இருக்கவேண்டும் என்பதாகிறது. ஒள்ளியோன் தன் அறிவை வெளிப்படுத்தாது வெண்மையாகவே அவ்வவையில் இருந்து கழிக என்பது கருத்து. இது காலிங்கர் உரையைத் தழுவியது. காலிங்கர் உரை 'ஒள்ளிய அறிவாளர் அவை முன்னர்க்கு ஏற்பத் தாமும் ஒள்ளிய அறிவாளர் ஆதல் உடையர் எனின் அவ்வறிவு, இல்லாப் பேதையார் ஆகிய வெள்ளறிவாளர் முன்னர் வரின் அங்குத்தனையும் வெண்மை நிறமே தனக்கு இயல்பு ஆகிய சுதை போலும் வெள்ளைவண்ணத்தைத் தம் கண் உள்ளதாகக் கொண்டு கழிதல்' என்கிறது.
ஒருதுறையில் ஒளியார் இன்னொரு பிரிவில் வெளியார் ஆகும் சூழலும் உண்டு. காட்டாக, நிதித்துறையில் சிறந்த ஒருவர் நிதி தொடர்பான கூட்டங்களில், அவையறிந்து, தனது நிதிசார்ந்த அறிவை மிகக் காட்டி கேட்போர் மனதில் ஆழமாகப் பதியுமாறு ஒள்ளிமையோடு பேசுவார். அவரே கணினி தொடர்பான அவையிலும் பங்கேற்ப வேண்டி வரும். அவர்க்கு கணினி பற்றி ஓரளவு தெரிந்திருந்தாலும், தனக்கு தகவல்தொழிநுட்பம் பற்றி ஒன்றும் தெரியாதவர்போல்தான் அவ்வவையில் இருக்க வேண்டும் என்கிறது இக்குறள்.
தேர்ந்தெடுத்த பொருளில் ஐயமின்றித் தெளிவான கருத்துடைமை ஒருவர்க்குத் தேவை; தனக்குத் தெரியாத பொருள்பற்றி அவைக்கண் தன் அறிவாற்றலை நிலை நிறுத்திக் கொள்ள முயலக்கூடாது. அவையறியாமல் அவ்விடத்துள்ளோரிடம் தன்னை அறிவாளியாகக் காட்ட முனைவது இழிவைத்தான் தரும்.

ஒளியார்முன் நல்லறிஞர் ஆகுக; வெளியார் முன் வெள்ளையாயிருக்க என்கிறது பாடல். இதைத் தன்னிலும் மேலான தனக்குச் சமமான அறிஞர் கூடியுள்ள அவையில் தன் நூல் அறிவும் சொல்வன்மையும் வெளிப்படப் பேசுக; தன் அறிவிலும் குறைவான மக்கள் கூடியுள்ள அவையில் அவருக்கு விளங்கும்படி இறங்கிப் பேசுக எனவும் விளக்குவர். பொதுஇடங்களில் நாம் ஒருதனி ஆளிடம் பேசும்பொழுது கூட அவர் அறிவின் ஆழம் எவ்வளவு, எந்தவகையான சொற்றிறம் உள்ளவர் என்பதை உணர்ந்துதான் பேசுவோம். அதுபோல ஒரு அவையில் பேசும்போதும் அவையினர் இயல்பறிந்து பேச வேண்டும். அவர்களுக்கு என்ன வேண்டும், எப்படி சொன்னால் புரியும் என்று அறிந்து பேச வேண்டும். நமக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக எல்லா அவையிலும் ஒன்றுபோலப் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. பேசுபொருள் தொடர்புடையவர்கள் நாம் சொல்வதை வெகு எளிதாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்களுக்கு அவர்கள் புரியும்படி எளிமையாக பேச வேண்டும். சொல்லும் கருத்து மேம்பாடு உடையதாயினும் கேட்கும் அவையோர்க்குத் தக நடைவேறுபாடு அமைதல் வேண்டும் என்பது கருத்து.

'வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

வான் சுதை என்பது வாலிய சுதை அதாவது வெண்மையான சுண்ணம் (சுண்ணாம்பு) எனப் பொருள்படும். வான்சுதை வண்ணம் என்பது வெண்மையான சுண்ணம் போன்ற நிறம் என்ற பொருள் தரும். வனமூலை வான் கோட்டு (கலித்தொகை 97. வரி12) என்னும் பகுதியினும் ஆம்பல் வான்மலர் (கலித்தொகை 72. வரி6) என்ற பகுதியினும் வான் -வெண்மை என்ற பொருளில் வந்தன. வெளியார் என்ற சொல்லுக்கு வெளியார்-வெள்ளிய அறிவுடையார் (வெள்ளியார்) என்பது பொருள். வெள்ளை என்பது மரபாக கபடமற்ற தன்மை (வெள்ளந்தி), கள்ளச் சிந்தை இல்லாமலிருப்பது, அப்பாவியாக இருப்பது இவற்றைக் குறிக்கும். வெண்மை அறிவின்மையைக் குறிக்கும் என்பதால் அறிவு நிறையாதாரையும் வெள்ளை அதாவது நிறமற்றவர் எனக்கொண்டு வெளியார் என்று கூறுவர். அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு (தெரிந்து தெளிதல் 503 பொருள்: மிகச் சிறந்த கல்வி பெற்று ஐயந்திரிபு நீக்கியவராகத் தோன்றுபவர் இடத்தும் ஆராய்ந்தால் அறியாமை முற்றிலும் இல்லாதிருத்தல் என்பது இல்லை) என்னும் குறளில் இன்மை அரிதே வெளிறு என்பதற்கு வெண்மை (அறியாமை) இல்லாமை அரிது எனக் கூறப்பட்டது. வெண்மை எனப்படுவது யாதெனின் ஒண்மை உடையம்யாம் என்னும் செருக்கு (புல்லறிவாண்மை 844 பொருள்: புல்லறிவு என்று சொல்லப்படுவது யாது என்றால், `யாம் அறிவுடையேம்` என்று ஒருவன் தன்னைத்தானே மதித்துக் கொள்ளும் செருக்காகும்.) என்னும் குறளிலும் வெண்மை என்பது இழிந்த அறிவு என்ற பொருளிலேயே ஆளப்பட்டது. 'வெளியார் முன் வான் சுதை வண்ணங் கொளல்' என்பதற்கு வெள்ளறிவாளரிடம் இன்னும் வெண்மை காட்டி நீங்குக என்று பொருள். அறிவுக்குறைபாடு உள்ளவர் முன்பு சிறந்த நுண்ணிய கருத்துக்கள் பயன்படா என்பதாலும் அறிவுடையார் வெளிற்றுரையை விரும்பிக் கேட்கமாட்டார் ஆதலாலும், அறிவுடையார் முன்னர் அறிவாராயும் அறியார்முன் வெள்ளியாராகவும் அமைக எனச் சொல்லப்பட்டது.
பரிதி உரை 'சமர்த்தன் முன்னே சமர்த்தன் என்று பெயர் பெறுதல் வெள்ளை முன்னே கறுப்பு வெண்மையாமோ' என்கிறது. 'சமர்த்தர் முன்னே சமர்த்தர் எனத் தெளியப்பட்டார் ஒருவர், வெள்ளறிவினர் முன்னே வெள்ளறிவினராதல் இயலுவதொன்றாகுமா? கறுப்பு வெண்மையாகுமா? அது போல வெளியார் முன் வான்சுதை வண்ணங் கொள்ளற்க' என்பது இதன் பொழிப்பு எனக்கூறி, ''கொளல்' என்பதனை ஈண்டு எதிர்மறை ஏவலாகக் கொண்டனராதல் தெளிக. இதனாற் போந்த்தது தக்கார் அவையிலே தக்கன சொல்லித் தக்கான் என்று பெயர் வாங்குக. அல்லார் அவையிலே அவர்கட்குத்தக பேச இயலாது; அகலுக என்பதாம். 'அவர் கருத்து 'ஒள்ளியார் முன் ஒள்ளியாராகுக. வெளியார்முன் வெளியார் ஆகற்க' என்பதே' என தண்டபாணி தேசிகர் பரிதி உரையை விளக்குவார்.

அறிவு குறைந்தவர்முன் வெண்சுண்ணாம்பு போன்று வெள்ளறிவாளராக இருக்கவேண்டும் என்பது 'வெளியார்முன் வான்சுதை வண்ணங் கொளல்' என்ற பகுதியின் பொருள்.

அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக; பேசுபொருளுக்குத் தொடர்பற்ற அவையினரானால் வெண்சுண்ணத்தின் நிறம் கொண்டு வெளியேறுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அவையறிதல் சொல்நடை தெரிவுசெய்ய உதவும்.

பொழிப்பு

அறிவுடையார் கூட்டத்தில் நல்லறிஞனாய் விளங்குக; அறிவு குறைந்த கூட்டத்தில் வெண்மையாய் இருக்க.