இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0688



தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின்
வாய்மை வழிஉரைப்பான் பண்பு

(அதிகாரம்:தூது குறள் எண்:688)

பொழிப்பு (மு வரதராசன்): தூய ஒழுக்கம் உடையவனாதல், துணை உடையவனாதல், துணிவு உடையவனாதல் இந்த மூன்றும் வாய்த்திருத்தலே தூது உரைப்பவனுடைய தகுதியாகும்.

மணக்குடவர் உரை: தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும், இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம்.
தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.

பரிமேலழகர் உரை: வழி உரைப்பான் பண்பு - தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; தூய்மை - பொருள் காமங்களால் தூயனாதலும்; துணைமை - தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும்; துணிவுடைமை - துணிதலுடைமையும்; இம்மூன்றன் வாய்மை - இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை. (பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும் , யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.)

வ சுப மாணிக்கம் உரை: தூய்மை துணை துணிவு இம் மூன்றும் நன்கு வாய்த்தல் தூதுவன் தகுதியாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றின் வாய்மை வழிஉரைப்பான் பண்பு.

பதவுரை:
தூய்மை-தூய்மை; துணைமை-உதவியாந் தன்மை; துணிவுடைமை-அஞ்சாமை; இம்மூன்றின்-இந்த மூன்றும்; வாய்மை-வாய்த்தல்; வழி உரைப்பான்-சொல்லியவாறே சொல்லுபவன்; பண்பு-இலக்கணம்.


தூய்மை துணைமை துணிவுடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும்;
மணக்குடவர் குறிப்புரை: தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல்.
பரிப்பெருமாள்: தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: தூய்மை- மெய்யும் மனமும் தூயனாதல். இதன் மெய்மையாவது பிறர்க்கு வேண்டிச் செய்யாது தனக்கு வேண்டிச் செய்தல். சுற்றத்தார் மாட்டும் பொய் கூறாமை பகைவர்மாட்டுப் பொய்கூற வேண்டுதலின் இது பின் கூறப்பட்டது. துணிவு- துணிந்த பின்பு ஐயம் தோற்றாமல் துணிதல்.
பரிதி: வினைத்தூய்மை, உதவிக்கட்டு, திடபுத்தி; [உதவிக்கட்டு-துணைவரின் கட்டுப்பாடு; திடபுத்தி - நிலைத்த அறிவு]
காலிங்கர்: குலத்தூய்மை குணத்தூய்மை மனத்தூய்மை வாய்மொழித் தூய்மை முதலிய தூய்மையும், இருபாலும் சென்று சொல்லுங்கால் தன் அரசற்கும் அவன் கருமத்திற்கும் பெரிதும் துணைமைப்பாடுடையன் ஆதலும், அரசர் முன்னர்ச் சொல்லுமிடத்துக் கலங்காது சொல்லும் தெளிவுடைமை;
இனி வழியுரைப்பான் என்பது அரசன் ஏவலின் பின் சென்று உரைப்பான் என்றது.
பரிமேலழகர்: பொருள் காமங்களால் தூயனாதலும் தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும் துணிதலுடைமையும்;
பரிமேலழகர் குறிப்புரை: பொருள் காமங்கள் பற்றி வேறுபடக் கூறாமைப் பொருட்டுத் தூய்மையும், தன் அரசனுக்கு உயர்ச்சி கூறிய வழி 'எம்மனோர்க்கு அஃது இயல்பு' எனக்கூறி, அவர் வெகுளி நீக்குதற் பொருட்டுத் துணைமையும், 'இது சொல்லின் இவர் ஏதஞ்செய்வர்' என்று ஒழியாமைப் பொருட்டுத் துணிவுடைமையும்.

'தூய்மையுடைமையும், சுற்றமுடைமையும், ஒரு பொருளை யாராய்ந்து துணிதலுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'வினைத்தூய்மை, உதவிக்கட்டு, திடபுத்தி' என்கிறார்; காலிங்கர் 'குலத்தூய்மை குணத்தூய்மை மனத்தூய்மை வாய்மொழித் தூய்மை முதலிய தூய்மையும், இருபாலும் சென்று சொல்லுங்கால் தன் அரசற்கும் அவன் கருமத்திற்கும் பெரிதும் துணைமைப்பாடுடையன் ஆதலும், அரசர் முன்னர்ச் சொல்லுமிடத்துக் கலங்காது சொல்லும் தெளிவுடைமை' என உரை செய்தார். பரிமேலழகர் 'பொருள் காமங்களால் தூயனாதலும் தமக்கு அவரமைச்சர் துணையாந் தன்மையும் துணிதலுடைமையும்' எனப் பொருள் கூறுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தூய்மை உடைமை, தான் அரசனுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய', 'சுத்தமான எண்ணம், தனக்குத்தானே ஆலோசனை சொல்லிக் கொள்ளும் துணைவனாகும் தன்மை, அப்போதைக்கப்போது சமயோசிதமான செயல் முறையை நிச்சயித்துக் கொள்ளும் திறமை', 'பொருள் இன்பப் பற்றினால் கடமை தவறாமையும், தக்க துணையாகும் இயல்பும், திடமான அறிவும்', 'தூய்மை யுடையனாதல், துணையாய் இருத்தல், துணிவினைப் பெற்றிருத்தல் முதலியனவாம்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தூய்மை, தான் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய என்பது இப்பகுதியின் பொருள்.

இம்மூன்றின் வாய்மை வழிஉரைப்பான் பண்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம்.
பரிப்பெருமாள்: இம்மூன்றின்கண்ணும் மெய்யுடைமையும் தூதற்கு இயல்பாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: வழியுரைப்பார் என்பது அரசன் சொன்ன மாற்றத்தையே சொல்லுதலால்.
பரிதி: இம்மூன்றும் உள்ளவனாய் ஒருவழிப்பட்ட வார்த்தை சொல்வான் தானாபதி என்றவாறு.
காலிங்கர்: இம்மூன்றினுடைய வஞ்சனையற்ற வாய்மைப்பாடுடையது யாது மற்று அது தூது நடந்து சொல்லுவான் மரபாவது என்றவாறு.
இனி வழியுரைப்பான் என்பது அரசன் ஏவலின் பின் சென்று உரைப்பான் என்றது.
பரிமேலழகர்: இம்மூன்றோடு கூடிய மெய்ம்மையும் என இவை தன் அரசன் வார்த்தையை அவன் சொல்லியவாறே வேற்றரசர்க்குச் சென்று சொல்வானது இலக்கணமாவன; பரிமேலழகர் குறிப்புரை: யாவரானும் தேறப்படுதற் பொருட்டு மெய்ம்மையும் வேண்டப்பட்டன. 'இன்' ஒடுவின் பொருட்கண் வந்தது.

இம்மூன்றின் கண்ணும் வாய்மை உடையது என மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் கூற பரிமேலழகர் வாய்மை என்பதை நாலாவதாகக் கூட்டி உரை சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இம்மூன்றினிடத்தும் வாய்மையாயிருத்தல் அரசன் சொல்லியபடி வேற்றரசரிடம் சென்று சொல்லும் தூதனின் இயல்பாகும்', 'இந்த மூன்றும் சேர்ந்து உள்ளவனே தூதனாகத் தகுதியுள்ளவன்', 'தூதுரைப்பவனுடைய சிறப்பு இலக்கணங்கள் எவையெனில் இவை மூன்றுங் கலந்த மெய்ம்மையுமாம்', 'தன் அரசன் வழி நின்று தூது சொல்வான் பண்புகள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இம்மூன்றும் வாய்த்திருத்தல் கூறியது கூறும் தூதனின் இயல்பாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தூய்மை, தான் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றும் வாய்த்திருத்தல், கூறியது கூறும் தூதனின் இயல்பாகும் என்பது பாடலின் பொருள்.
'வாய்மை' என்ற சொல் இங்கு குறிப்பது என்ன?

கூறியது கூறும் தூதனுக்குப் பொருள்தூய்மை, நாட்டுப்பற்று, துணிவு என்றிவை தேவை.

உள்ளத்தால் தூய்மையுடைமை, நாட்டிற்குத் துணையாக நிற்கும் உணர்வு, துணிவுடைமை ஆகிய இம்மூன்றும் வாய்த்தல் கூறியது கூறும் தூதுவனின் குணமாகும்.
தூய்மை- என்பது உள்ளத்தூய்மையைக் குறிப்பது. கையூட்டு, வஞ்சகம் இவற்றால் இகல்நாட்டவர் பக்கம் சாய்ந்துவிடாமல் செயலாற்றுவதைச் சொல்வது.
துணைமை- தன் நாட்டிற்கும் தான் மேற்கொண்ட செயலுக்கும் துணையாதல் துணைமை எனச் சொல்லப்பட்டது. வேறுவேறு நாட்டிற்குச் சென்று தூதுரைக்கும்போது தன் நாட்டின் நலனையே பெரிதாக எண்ணிச் செயல்படுவது. தான் தூது சென்ற நாட்டவையில் உள்ளோரில் சிலரையே தனக்குத் துணையாக்கிக் கொள்ளும் வன்மை- அனுமன் விபீடணனை யாக்கிக் கொண்டது போலும்- என்றும் பொருள் கூறுவர்.
துணிவுடைமை- தனது நாட்டின் நிலைப்பாட்டைக் கலங்காது துணிந்து கூறும் திண்மை துணிவுடைமை எனப்பட்டது.
இம்மூன்றின் வாய்மை- இத்தொடர் இம்மூன்றும் வாய்த்திருத்தல் என்று பொருள்படும்.
'வழிஉரைப்பான்' எனச் சொல்லப்பட்டதால் இது தன் அரசு சொல்வதைச் சொல்லியவாறே கூட்டாமல் குறைக்காமல் மாற்றாமல் கூறும் தூதர் அதாவது 'கூறியது கூறுவான்' பற்றியது என அறியலாம். அவர் தாம் தனித்த எண்ணப்படி தூதுரைக்கமாட்டாதவர்.

உள்ளத்தூய்மை, நாட்டிற்குத் துணைநிற்றல், துணிவுடைமை இந்த மூன்றும் தூதனுக்கு வாய்க்க வேண்டிய குணங்கள்.

'வாய்மை' என்ற சொல் இங்கு குறிப்பது என்ன?

'வாய்மை' என்ற சொல்லுக்கு மெய்ம்மை உடைமை என இதற்குப் பொருள் உரைத்தார் மணக்குடவர். அறிவுரு ஆராய்ந்த கல்விஇம் மூன்றன் செறிவுடையான் செல்க வினைக்கு (684) என்ற பாடலைப் போல, இம்மூன்றின்கண்ணும் வாய்மையுடையராதல் அதாவது இம்மூன்றின் கண்ணும் உண்மையாக நிலைத்திருத்தல் என 'இம்மூன்றின் வாய்மை' என்ற தொடர் பொருள்படும்.
பரிமேலழகர் தூய்மை துணைமை துணிவுடைமை இம்மூன்றுடன் நான்காவதாக வாய்மை என்னும் பண்பையும் இணைத்துப் பொருள் கண்டார். 'தூய்மை முதலிய மூன்றோடும் வாய்மையைக் கூட்டிச்சொல்லாது பிரித்துக் கூறியது மாற்றரசனிடம் வாய்மையல்லாதனவும் வாய்மையெனத் தோன்றச் சொல்லுதல் வேண்டுமாதலின் என்க' என இதற்கு விளக்கம் தரப்பட்டது.
அடுத்து மு வரதராசன், வ சுப மாணிக்கம், நாமக்கல் இராமலிங்கம் போன்றோர் 'இம்மூன்றும் வாய்த்திருத்தல்' என உரை வரைந்தனர். ஆனால் 'இம்மூன்றும் வாய்மை என முற்றும்மையிருப்பின் நலம். இம்மூன்று என்ற எழுவாயேற்ற பெயர்ச் சொல்லுக்கு 'இன்' என்ற சாரியை வேண்டப்படாது; அன்றியும் அது மரபும் ஆகாது' என தண்டபாணி தேசிகர் இவ்வுரையை ஏற்கமாட்டார்.
இவற்றுள் மூன்றும் வாய்த்திருத்தல் என எழுதிய மு வரதராசனும் பிறரும் கூறிய உரை நேரிதாகவும் பொருத்தமாகவும் உள்ளது.

'வாய்மை' என்ற சொல்லுக்கு இங்கு வாய்த்திருத்தல் என்பது பொருள்.

தூய்மை, தான் நாட்டுக்குத் துணையாந் தன்மை, துணிவுடைமை ஆகிய இம்மூன்றும் வாய்த்திருத்தல், கூறியது கூறும் தூதனின் இயல்பாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கூறியது கூறும் தூதுவின் ஒழுக்கம் கூறப்பட்டது.

பொழிப்பு

தூய்மை, தன் நாட்டுக்குத் துணையாந் தன்மை துணிவுடைமை இம் மூன்றும் நன்கு வாய்த்தல் கூறியது கூறும் தூதுவன் தகுதியாம்.