இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0686



கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லிக் காலத்தால்
தக்கது அறிவதாம் தூது

(அதிகாரம்:தூது குறள் எண்:686)

பொழிப்பு (மு வரதராசன்): கற்பன கற்று, பிறருடைய பகையான பார்வைக்கு அஞ்சாமல், கேட்பவர் உள்ளத்தில் பதியுமாறு சொல்லி, காலத்திற்குப் பொருத்தமானதை அறிகின்றவனே தூதன்.

மணக்குடவர் உரை: தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.

பரிமேலழகர் உரை: கற்று -நீதி நூல்களைக் கற்று; செலச்சொல்லி - தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி; கண் அஞ்சான் - அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; காலத்தால் தக்கது அறிவது தூதாம் - காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான்.
(அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: போன இடத்திலுள்ள நிலைமையை அறிந்து, யாரிடத்தும் அஞ்சாமல், சொல்ல வேண்டியதை விளங்கச் சொல்லி, சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்திருப்பதுதான் தூது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்று செலச்சொல்லிக் கண் அஞ்சான் காலத்தால் தக்கது அறிவதாம் தூது.

பதவுரை:
கற்று-ஆராய்ந்து; கண்-(வெகுண்ட)பார்வைக்கு; அஞ்சான்-அஞ்சாதவன்; செல-மனங்கொள்ள; சொல்லி-உரைத்து; காலத்தால்-காலத்தோடு பொருந்த; தக்கது-தகுதி வாய்ந்தது; அறிவதாம்-தெரிவதாம்; தூது.


கற்றுக்கண் அஞ்சான் செலச்சொல்லி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னரசன் சொன்ன மாற்றத்தைச் சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி;
பரிப்பெருமாள்: தன்னரசன் சொன்ன மாற்றத்தையே சொல்லுங்கால் பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, அவ்விடத்து அஞ்சுதலின்றி வெகுட்சி தீருமாறு இசையச் சொல்லி;
பரிதி: மந்திரி நூல் கற்று ஆஸ்தானம் அஞ்சாதவனுமாய் அரசன் செவிக்கு ஏறச்சொல்பவனுமாய்;
காலிங்கர்: இராச நீதிக்கு ஏற்ற நூல்களை இனிது உணரக் கற்றும், இகல்வேந்தர் முன்னர்ச் சென்று உரைக்கு மிடத்துத் தறுகண்மையும் வேண்டுங்கால் உடையனாய், வேண்டாக்கால் அவர் செவிக்கு இனிது சொல்லுமாறு சொல்லி; [தறுகண்மை -அஞ்சாமை]
பரிமேலழகர்: நீதி நூல்களைக் கற்று தான் சென்ற கருமத்தைப் பகை வேந்தர் மனங்கொளச் சொல்லி அவர் செயிர்த்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது; [செயிர்த்து -சினந்து]

'பகையரசன் வெகுண்டானாயின் அது மாற்றுதற்காம் உபாயத்தைக் கற்று, எவ்விடத்தினும் அஞ்சுதலின்றி மகிழ்ச்சி வருமாறு இசையச் சொல்லி' என்ற பொருளில் பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி 'நூல் கற்று ஆஸ்தானம் அஞ்சாதவனுமாய் அரசன் செவிக்கு ஏறச்சொல்பவனுமாய்' என்றார். காலிங்கர் 'இராச நீதி நூல்களைக் கற்றும், இகல்வேந்தர் முன்னர்ச் சென்று உரைக்கு மிடத்து அஞ்சாமை உடையனாய், வேண்டாக்கால் அவர் செவிக்கு இனிது சொல்லுமாறு சொல்லி' என்று உரை கூறினார். பரிமேலழகர் 'நீதி நூல்களைக் கற்று, பகைவேந்தர் மனங்கொளச் சொல்லி அவர் சினந்து நோக்கின் அந்நோக்கிற்கு அஞ்சாது' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கற்று அஞ்சாது எடுத்துச் சொல்லி', 'அற நூல்களைக் கற்றுப் பகை வேந்தர்தம் சினப்பார்வைக்கு அஞ்சாது அவர் மனங்கொள்ளக் கூறும் செய்திகளைக் கூறி', 'சொல்ல வேண்டியதை நன்கறிந்து பகையரசர் சினப் பார்வைக்கு அஞ்சாது, சொல்லுவதை அவர் மனத்திற் பதியும்படி சொல்லி', 'அரசியல் நூல்களைக் கற்று, பார்வைக்கு அஞ்சாதவனாய் பகையரசர் உளங்கொள்ளுமாறு சொல்லி' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்தியை நுணுகி ஆராய்ந்து, துணிவாண்மையுடன் அஞ்சாது, உளங்கொள்ளுமாறு சொல்லி என்பது இப்பகுதியின் பொருள்.

காலத்தால் தக்கது அறிவதாம் தூது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து சொல்ல வல்லவன் தூதனாவான்.
பரிப்பெருமாள்: நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிந்து செய்ய வல்லவன் தூதனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தக்கதறிதலாவது சொல்லிய வார்த்தையைச் சொல்லாமல் போதலும் வினைசெய்து போதலும், இஃது இவ்விடத்திற்கு ஆவன செய்யவேண்டும் என்பது.
பரிதி: காலம் அறிவன் தானாபதி என்றவாறு.
காலிங்கர்: சொல்லுதற்கு அமைந்த காலத்தையும் கடைப்பிடித்து ஏற்றத்தாழ்வு படாமல் சொல்லத் தக்கதனையே அறிந்து சொல்லுவது யாது, மற்று அதுவேயாம் தூது என்று சொல்லப்படுவது என்றவாறு.
பரிமேலழகர்: காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிவானே தூதனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வுபாயம் அறிதற் பொருட்டு நீதி நூற்கல்வியும், அதனானன்றிப் பிறிதொன்றான் முடியுங்காலம் வரின் அவ்வாறு முடிக்கவேணடுதலின் காலத்தால் தக்கது அறிதலும், இலக்கணமாயின.

'காலத்தோடு பொருந்த வினை முடிக்கத்தக்கதனையே அறிந்து சொல்லுவது தூது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சமயத்துக்கு ஏற்றது அறிந்தவனே தூதன்', 'காலத்தோடு பொருந்த ஏற்ற வழியை அறிபவனே தூதன்', 'கால நிலைமைக்குத் தக்கபடி இவ்வாறு பேசி இவ்வாறு காரியத்தை முடிக்கவேண்டுமென்று அறிபவனே தக்க தூதுவனாவான்', 'காலத்தோடு பொருந்த ஏற்பதை அறிபவனே தூதனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளத் தெரிந்தவனே தூதன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்தியை நுணுகி ஆராய்ந்து, துணிவாண்மையுடன் அஞ்சாது, உளங்கொள்ளுமாறு சொல்லி, காலத்தால் தக்கது அறிவது தூதன் என்பது பாடலின் பொருள்.
'காலத்தால் தக்கது அறிவது' என்ற தொடர் குறிப்பது என்ன?

கொண்டு செல்லும் செய்தியை உரியவர் மனங்கொள்ளுமாறு காலமறிந்து சொல்பவன் தூதன்.

தான் கொண்டுசெல்லும் செய்தியை நுணுகி ஆராய்ந்து தெரிந்துகொண்டு, வேற்றரசால் வெகுண்டு நோக்கப்பட்டாலும் அஞ்சாதவனாய், அச்செய்தியை ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி, காலத்தை உணர்ந்து நடந்துகொள்பவனே தூதனாவான்.
தூதனின் கல்வியறிவு பற்றி இவ்வதிகாரத்து மற்ற பாடல்களில் சொல்லப்பட்டது. எனவே இங்குள்ள 'கற்று' என்னும் சொல் தான் எடுத்துப்போகிற செய்தியைப் பற்றி முன்னரே முழுதாக நன்கு ஆய்ந்து அறிந்து என்பதைக் குறிப்பதாகக் கொள்வது பொருத்தமாகும்.
'கண் அஞ்சான்' என்றது பயமில்லாதவன் குறித்தது. பகையரசு சினந்து நோக்கினாலும் அதற்கு அஞ்சாது தான் சொல்லவந்ததைத் தயக்கமின்றி சொல்பவன் தூதன் என்பதாம். 'கண் அஞ்சான்' என்ற தொடர்க்கு சினந்து நோக்குமிடத்தும் (இடப்பொருளாக) கண் அஞ்சான் அதாவது எவ்விடத்தும் அஞ்சானாய் என்றும் உறுப்புப் பெயராகக் கொண்டு கண்ணுக்கு அஞ்சாது என்றும் வேறுவேறு வகையாப் பொருள் கண்டனர். மேலும் கண்ணஞ்சான் என ஒரு சொல்லாகக் கொண்டு 'தறுகண்மையுடையனாய்' அதாவது வீரமுள்ளவனாய் எனவும் பொருள் கொள்ளலாம்.
'காலத்தாற்றக்கது அறிவது' என்ற தொடர் சமயத்திற்கு ஏற்றதறிந்து என்ற பொருளது;

தான் கொண்டுசெல்லும் செய்தியை முன்னரே நன்கு படித்து, காலம், இடமறிந்து, தறுகண்மையுடைனாய், செய்திக்குரியவர் மனதிற் கொள்ளுமாறு சொல்லிச் செல்தல் தூதாம்.

'காலத்தால் தக்கது அறிவது' என்ற தொடர் குறிப்பது என்ன?

'காலத்தால் தக்கது அறிவது' என்றதற்கு நாளோடே கூடச் செய்யத் தகுவன அறிதல், காலம் அறிதல், சொல்லுதற்கு அமைந்த காலத்தையும் கடைப்பிடித்து ஏற்றத்தாழ்வு படாமல் சொல்லத் தக்கதனையே அறிந்து சொல்லுவது, காலத்தோடு பொருந்த அது முடிக்கத்தக்க உபாயம் அறிதல், காலத்திற்குப் பொருத்தமானதை அறிதல், அந்தக் கணத்தில் அச்சூழலில் எவ்வாறு பேச வேண்டுமென காலத்திற்குத் தக்கவாறு உடனுக்குடன் பேச அறிதல், தூது உரைக்கும் காலத்தில் சூழலையறிந்து, சமயத்துக்கு ஏற்றது அறிதல், காலத்தோடு பொருந்த ஏற்ற வழியை அறிதல், சமயோசிதமாக நடந்து கொள்ளத் தெரிந்திருப்பது, உரிய போதில் அறிய வேண்டுவனவற்றை அறிந்து கொள்ளுதல், கால நிலைமைக்குத் தக்கபடி இவ்வாறு பேசி இவ்வாறு காரியத்தை முடிக்கவேண்டுமென்று அறிதல், காலத்தோடு பொருந்த ஏற்பதை அறிதல், சமயோசித அறிவின்படி நடத்தல், காலத்திற் கேற்பத் தகுந்த வழிகளைக் கையாள்தல், தகுந்த சமயத்தில் அந்தச் சூழ்நிலைகளை அறிந்துகொள்தல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தூதனானவன் தான் வந்த நோக்கத்தைக் கருத்தில்கொண்டு அதற்குத்தக சூழ்நிலைக்கு இசையும்வகையில் செய்தியைச் சொல்வான். பரிப்பெருமாள் 'சொல்லிய வார்த்தையைச் சொல்லாமல் போதலும்' அதாவது சில செய்திகளைச் சொல்லாமல் விட்டுவிட வேண்டும் என்ற தேவையிருந்தால் அவற்றைத் தவிர்த்துவிடலும் தக்கதறிதல் என்பார். நோக்கம் நிறைவேற வேண்டும் என்பது அவனது குறிக்கோளாக இருக்குமாதலால், அதற்குத்தக நடந்துகொள்வான். 'காலத்தால் தக்கது அறிவது' என்பது தனது நுண்ணறிவாலும், உலகியலறிவாலும், கால நிலைமைக்குத் தக்கபடி பேசிச் செயல் முடிப்பதை அறிவதைச் சொல்வது.

'காலத்தால் தக்கது அறிவது' என்பது சூழ்நிலைக்கிசைந்ததை உணர்ந்துகொள்வது என்ற பொருள் தரும்.

செய்தியை நுணுகி ஆராய்ந்து, துணிவாண்மையுடன் அஞ்சாது, உளங்கொள்ளுமாறு சொல்லி, சமயத்துக்கு ஏற்றவாறு நடந்து கொள்ளத் தெரிந்தவனே தூதன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சூழ்நிலைக்கிசைந்தவாறு செயல் முடித்து வருவது தூது.

பொழிப்பு

செய்தியை நன்கு கற்று, துணிவுடன், கேட்போர் உளங்கொள்ளுமாறு சொல்லி, சமயத்துக்கு ஏற்ற வழியைத் தெரிந்தவனே தூதன்.