இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0682



அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு
இன்றி யமையாத மூன்று

(அதிகாரம்:தூது குறள் எண்:682)

பொழிப்பு (மு வரதராசன்): அன்பு, அறிவு, ஆராய்ந்து சொல்கின்ற சொல்வன்மை ஆகிய இவை தூது உரைப்பவர்க்கு இன்றியமையாத மூன்று பண்புகளாகும்.

மணக்குடவர் உரை: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும், தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
இத்துணையும் தூதர் இலக்கணம் கூறியவாறு.

பரிமேலழகர் உரை: அன்பு - தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அறிவு - அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; ஆராய்ந்த சொல் வன்மை - அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று - தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
(ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல். 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.

நாமக்கல் இராமலிங்கம் உரை: தூது சென்று பேசுகின்றவர்களுக்கு அமைய வேண்டிய அத்தியாவசியமான தகுதிகள் என்னவெனில் (தாம் தூது சொல்லப் போகிற காரியத்தில்) ஆர்வம், (பேசப் போகிற விஷயத்தைப் பற்றிய) அறிவு, (பேசும்போது) நன்றாக ஆலோசித்துப் பொறுக்கியெடுத்த சொற்களைப் பேசும் நாநலம் ஆகிய மூன்றுமே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று.

பதவுரை:
அன்பு-காதல்; அறிவு-அறிவு; ஆராய்ந்த-பொருந்த நாடிய; சொல்-மொழி; வன்மை-வலிமை; தூது-தூது; உரைப்பார்க்கு-சொல்லுபவர்க்கு; இன்றியமையாத-இல்லாமல் முடியாத; மூன்று-மூன்று.


அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும்;
பரிப்பெருமாள்: அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும் என்னும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: ஆராய்ந்த என்றமையால் கல்வியாயிற்று.
பரிதி: அரசன்மேல் அன்புடைமையும், அறிவுடைமையும் அரசர்க்கு இழுக்கம் வாராத சொற்சொல்லும் சொல்வன்மையும்;
காலிங்கர்: அரசர்மாட்டு அன்பு பெரிதுடைமையும் இயற்கையானும் தெளிந்த அறிவுடைமையும், சொல்லும் சொல் ஏற்றத்தாழ்வு இல்லாத சொல்வன்மையும் என்னும்;
பரிமேலழகர்: தம் அரசன் மாட்டு அன்புடைமையும்; அவனுக்கு ஆவன அறியும் அறிவுடைமையும்; அவற்றை வேற்றரசரிடைச் சொல்லுங்கால் ஆராய்ந்து சொல்லுதல் வன்மையும் என;
பரிமேலழகர் குறிப்புரை: ஆராய்தல்: அவற்றிற்கு உடம்படுஞ் சொற்களைத் தெரிதல்.

'அன்புடைமையும், அறிவுடைமையும், தெரிந்த சொல்வன்மையுடைமையும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் வாளா அன்புடைமை எனக் கூற மற்றவர்கள் அரசன்மாட்டு அன்புடைமை எனப் பொருள் உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அன்பு அறிவு தெளிந்த பேச்சுவன்மை', 'அன்புடைமை, அறிவுடைமை, ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் என', 'தன் அரசன்மாட்டு அன்பும் அவனுக்கு ஆவதை அறியும் அறிவும், சொல்லின் பயன்தெரிந்து அதனைச் சொல்லுந் திறமையும்', 'அன்பும் (யாவரிடத்திலும்) அறிவும் எதனையும் ஆராய்ந்து சொல்லும் திறனும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தூதில் காதலுடைமை, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் என' என்பது இப்பகுதியின் பொருள்.

தூதுரைப்பார்க்கு இன்றி யமையாத மூன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தூதுரைப்பாற்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்.
மணக்குடவர் குறிப்புரை: இத்துணையும் தூதர் இலக்கணம் கூறியவாறு.
பரிப்பெருமாள்: மூன்றும் தூதுரைப்பார்க்கு இன்றியமையாதது என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறிய குணங்கள் எல்லாவற்றினும் இவை மூன்றும் இன்றியமையாதன என்று கூறிற்று. இத்துணையும் தூதர் இலக்கணம் கூறிற்று.
பரிதி: உள்ளவன் தூதன் என்றவாறு.
காலிங்கர்: இம்மூன்றும் அரசர்க்குத் தூதுரைக்கும் அமைவுடையோர்க்கும் பெரிதும் இன்றியமையாது என்றவாறு.
பரிமேலழகர்: தூதுரைக்க உரியார்க்கு இன்றியமையாத குணங்கள் மூன்று.
பரிமேலழகர் குறிப்புரை: 'இன்றியமையாத மூன்று' எனவே அமைச்சர்க்குச் சொல்லிய பிற குணங்களும் வேண்டும் என்பது பெற்றாம். இவை இரண்டு பாட்டானும் இரு வகை யார்க்கும் பொது இலக்கணம் கூறப்பட்டது.

'தூதுரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று குணங்களாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மூன்றும் தூதுவனுக்கு இன்றியமையாதவை', 'தூது செல்வார்க்கு உரிய இன்றியமையாத பண்புகள் மூன்றாகும்', 'தூது பேசுவார்க்கு இல்லாமல் தீராத (இன்றியமையாத) மூன்று குணங்களாம்', 'தூதராகச் சென்று உரைப்பார்க்குத் தவிர்க்க முடியாத மூன்று இயல்புகளாம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அன்பு, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை என்பது பாடலின் பொருள்.
'அன்பு' இங்கு குறிப்பது என்ன?

கடமையில்பற்று, தொழிலறிவு, தெளிந்த கருத்துரைதிறன் ஆகியன தூது செல்வார்க்கு இன்றியமையாதன.

தூதுசெல்லும் கடமையில் அன்பு, தூதுபொருளில் அறிவுடைமை, தூதுச் செய்தியை ஆராய்ந்து சொல்லத்தக்க சொல்வன்மை ஆகிய இவை தூது உரைக்கச் செல்பவர்க்கு இன்றியமையாத மூன்று குணங்கள் ஆகும்.
முந்தைய குறளில் அன்புடைமை, ஆன்றகுடிப்பிறத்தல், வேந்தவாம்பண்புடைமை என்ற மூன்று இயற்கைப் பண்புகள் துது செல்பவனுக்கு இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டது. அவை உடம்போடு ஒட்டிய குணங்களாக இயல்பாய் இருக்க வேண்டியவை. இங்கு அன்பு, அறிவு, ஆராய்ந்த சொல்வன்மை என்ற மூன்று செயற்கைப் பண்புகளும் தூதுவனுக்கு இன்றியமையாதன எனக் கூறப்படுகிறது. இவற்றை அவன் பயின்று பெற்றிருக்க வேண்டும்.
அன்பு என்பது தொழில்மீது உள்ள அன்பை இங்கு குறிக்கிறது. தூது பற்றிப் பேசும் அதிகாரமாதலால் தூதுரைக்கச் செல்பவன் தூதுச் செயலின் மேல் காதல் உள்ளவனாக இருக்கவேண்டும்.
அடுத்து அறிவு -. தூது செல்பவன் இயற்கை அறிவு தவிர்த்து பல கலைகளைக் கற்றும் கேட்டும் அடைந்த செயற்கையறிவையும் கொண்டிருத்தல் மிகத்தேவை; தனது அரசின் பொதுவான வெளிநாட்டுக் கொள்கை பற்றியும் தூது செல்லப்போகும் குறிப்பிட்ட நாட்டுடன் உள்ள உறவுமுறை பற்றியும் தெளிந்த அறிவு கொண்டிருக்க வேண்டும்; தான் எடுத்துச் செல்லும் செய்தியைப்பற்றி முழுதாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
சொல்வன்மை - தூதுவன் ஆராய்ந்த சொல்வன்மை உடையவனாய் இருப்பதும் இன்றியமையாதது. இது சொல்ல வேண்டியதை ஆராய்ந்து சொல்லும் வல்லமையைக் கருதுவது. தக்கது இது, தகாதது இது என்று சொற்களைத் தேர்ந்தெடுத்து தான் கொண்டு சென்ற செய்தியை கேட்பவர் மனமேற்கும்படி, பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். இந்நேரத்தில் இன்னசொல் சொன்னால் கேட்பவர், உள்ளதை உரைப்பார் என்று எதிர்பார்த்து அதற்கேற்ற சொல்லை ஆராய்ந்து தெளிந்து உரைத்து உண்மைகளைப் பெறுவதும் சொல்வன்மையாம்.
தூது செல்வதில் தணியாத விருப்பம் கொண்டு தம் செயலுக்கு வேண்டியவற்றை எல்லாம் அறிந்திருந்து, ஆராய்ந்தமைத்துக் கூறும் நாநலமும் ஆகிய இன்றியமையாத இம்மூன்று திறங்களும் உடையவரே தலைவனுடைய நம்பிக்கையைப் பெற்று தூதுரைப்பார் பொறுப்பு ஏற்கத் தகுதியுள்ளவர்கள் ஆகின்றனர்.

'அன்பு' இங்கு குறிப்பது என்ன?

இங்குள்ள 'அன்பு' என்ற சொல்லுக்கு அன்புடைமை, அரசன்மேல் அன்புடைமை, அரசர்மாட்டு அன்பு பெரிதுடைமை, தம் அரசன் மாட்டு அன்புடைமை, அன்பு, தன் அரசனிடம் அன்புடையவன், (தாம் தூது சொல்லப் போகிற காரியத்தில்) ஆர்வம், எவரிடத்தும் அன்பு, எல்லாரிடமும் அன்பு, அன்பு நிறைந்த மனம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இதற்கு முந்தைய குறளில் சொல்லப்பட்ட அன்புடைமைக்குத் தூதனை விட்டு நீங்காத குணமாக நாட்டுப்பற்று எனப் பொருள் கொள்ளப்பட்டது. இக்குறளில் கூறப்பட்ட பண்புகள் இன்றியமையாது வேண்டுவன எனச் சொல்லப்பட்டதால் அது வலிதாகப் பற்ற வேண்டிய பண்பு என்றாகிறது. இங்குள்ள அன்பு என்பதற்கு மேற்கொண்ட கடமைக்காக அன்பை எல்லோரிடத்தும் காட்டுதல் என உரை கூறுவர். தூது சொல்லப் போகிற செயலில் காதல் காட்டுவது என்பது இன்னும் பொருத்தமான பொருளாகும். இப்பற்றின் காரணமாக அறிவும் ஆராய்ந்த சொல்லும் உடையனாகி தான் சென்ற தூதுச் செயலை வெற்றிகரமாக முடித்து வருவான் என்பது கருத்து.

இங்குள்ள 'அன்பு' என்ற சொல்லுக்குத் தூதுச்செயல் மீதுள்ள பற்று என்பது பொருள்.

தூது செயலில் காதலுடைமை, பேசப் போகிற பொருளில் அறிவுடைமை. ஆராய்ந்து சொல்லும் சொல்லாற்றல் மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதவை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தூதுசெல்வான் பெற்றிருக்க வேண்டிய செயற்கைப் பண்புகள் மூன்று கூறுவது.

பொழிப்பு

அன்புடைமை, அறிவுடைமை, தெளிந்த பேச்சுவன்மை மூன்றும் தூதுவர்க்கு இன்றியமையாதன.