இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0678



வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:678)

பொழிப்பு (மு வரதராசன்): ஒரு செயலைச் செய்யும்போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக்கொள்ளல், ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றது.

மணக்குடவர் உரை: ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது, ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும்.
இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.

பரிமேலழகர் உரை: வினையான் வினை ஆக்கிக்கோடல் - செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க; நனைகவுள் யானையால் யானை யாத்தற்று - அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும்.
(பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.)

தமிழண்ணல் உரை: ஒரு காரியத்தைச் செய்து முடித்துக் கொள்கிற போதே, அதனோடு சேர்ந்து பிறிதொரு வினையையும் முடித்துக் கொள்ளுதல் ஓர் அரிய செயல் திறமையாகும். அது மதம் பொழியும் கன்னத்தையுடைய யானை ஒன்றைக்காட்டி அதைப்போன்ற பிறிதொரு யானையைப் பிடித்துக் கொள்வது போன்றதாகும்.
பார்வை யானையைக் காட்டினால், காட்டு யானை பின்தொடரும். அதைப் பிடிக்க இது ஒருவழி. 'கம்புக்குக் களையெடுத்தாற் போலவும் இருக்கும்; தம்பிக்குப் பெண்பார்த்தாற் போலவும் இருக்கும்' என்ற பழமொழி போன்றது இது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.

பதவுரை:
வினையால்-செயலால்; வினையாக்கி-செயல் ஆகும்படி செய்து; கோடல்-கொள்ளுதல்; நனை-ஈரமான; கவுள்-யானையின் கன்னம்; யானையால்-யானையைக் கொண்டு; யானை-யானை; யாத்து-கட்டுவது; அற்று-அத்தன்மைத்து.


வினையால் வினையாக்கிக் கோடல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது;
பரிப்பெருமாள்: ஒரு வினையாலே பிறிதொரு வினையைச் செய்து கொள்க;
பரிதி: காரியத்தாலே காரியமாக்கிக் கொள்ளுதல் எத்தன்மைத்து எனில்;
காலிங்கர்('யானையார்த் தற்று' பாடம்): ஒரு கருமத்திற்கு வேண்டும் பொருள் நேர்ந்து நிறைவு செய்து பின் அக்கருமத்தானே வேண்டிய கருமத்தை ஆக்கிக் கோடல் எத்தன்மைத்தோ எனின்;
பரிமேலழகர்: செய்கின்ற வினையாலே அன்னது பிறிதும் ஓர் வினையை முடித்துக்கொள்க;

'ஒரு வினையால் பிறிதொரு வினையைச் செய்து கொள்வது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒரு செயலால் இன்னொன்றையும் செய்துகொள்', 'செய்கின்ற ஒரு காரியத்தாலே வேறொரு காரியத்தையும் முடித்துக் கொள்ளுதல்', 'காரியத்தின் அந்தரங்கங்களை அறிந்த அனுபவக்காரனுடைய காரிய அறிவை நமதாக்கிக் கொள்வது', 'செய்கின்ற ஒரு வினையைக் கொண்டே பிறிதொரு வினையையும் முடித்துக்கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒரு செயலால் பிறிதொரு செயலும் ஆகும்படி செய்துகொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நனைகவுள் யானையால் யானையாத் தற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது.
பரிப்பெருமாள்: அது மதயானையோடே மதயானையைப் பிணித்தால் போலும் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நனைகவுள் என்பதனை இரட்டித்து கூட்டித் தனக்கு ஒரு பகை தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுக, அவர் தம்முள் தாம் பொருதல்லது தம் பக்கல் வருவாரில்லை என்றவாறாயிற்று.
பரிதி: அது ஆனையைக் கொண்டு ஆனை பிடித்தாற் போல் என்றவாறு.
காலிங்கர்('யானையார்த் தற்று' பாடம்): மதத்தினாலே நனையும் கபோல நன்மைக்கு உரியது ஓர் அண்ணல் யானையை ஆர்த்தற்கு வேண்டும் பொருள் நேர்ந்தும் பின் மற்று அதனாலே வேறு அடவியுள் வாழும் யானை பலவற்றையும் தங்கண் பிணித்துக் கொள்ளுகின்ற அத்தன்மைத்து என்றவாறு. [கபோல நன்மைக்கு - கன்னத்தின் நன்மைக்காக; ஆர்த்தற்கு- கட்டுதற்கு; அடவியுள் - காட்டுள்]
காலிங்கர் குறிப்புரை: நனைகவுள் என்பது மதத்தாலே நனையும் கபோலம்.
பரிமேலழகர்: அது மதத்தான் நனைந்த கபோலத்தினையுடைய யானையாலே அன்னது பிறிதுமோர் யானையைப் பிணித்ததனோடு ஒக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: பிணித்தற்கு அருமைதோன்ற 'நனைகவுள்' என்பது பின்னும் கூறப்பட்டது. தொடங்கிய வினையானே பிறிதும் ஓர் வினையை முடித்தற்கு உபாயம் ஆமாறு எண்ணிச் செய்க. செய்யவே. அம் முறையான் எல்லா வினையும் எளிதில் முடியும் என்பதாம்.

'ஒரு மதயானையால் பிறிதொரு மதயானையைப் பிணித்தாற்போலும்' என்று பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி மட்டும் மதம் என்ற சொல்லை விட்டுவிட்டு 'அது ஆனையைக் கொண்டு ஆனை பிடித்தாற் போல்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'யானையைக் கொண்டு யானை பிடிப்பதுபோல', 'நனைந்த கன்னத்தையுடைய பழகிய யானையால் வேறொரு யானையைப் பிடித்து கட்டியது போலாம்', 'பழகின யானையைக் கொண்டு பழகாத காட்டானையைக் கட்டிவிடுவது போன்றது', 'மதத்தால் நனையும் முகத்தினை யுடைய யானையைக்கொண்டு யானையைப் பிடித்ததை ஒக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடித்தது போலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒரு செயலால் பிறிதொரு செயலும் ஆகும்படி செய்துகொள்ளுதல் நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடித்தது போலாம் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட உவமை கூறும் செய்தி என்ன?

வேலைத்திறன்பாடு பெருகும்படி செயல் புரிக.

ஒரு செயலைக்கொண்டு பிறிதொரு செயலையும் முடித்துக்கொள்ளுதல் மதநீரால் நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடித்துக் கொள்வது போன்றதாகும்.
செயல்திறனை மிகுவித்துப் பயன் நிறைய உண்டாகும்படி செயலாற்ற வேண்டும் எனச் சொல்ல வருகிறது இப்பாடல். ஒன்றைச் செய்யும் போதே, அதனால் வரும் பயன் அல்லது ஒத்த எண்ணங்களைக் கொண்டு மற்ற செயல்களை முடிப்பது செயல் திறனைக் கூட்டுவிக்க உதவும் ஓர் உத்தியாகும்.
ஒரு கல்லில் இருமாங்காய்களை அடித்து வீழ்த்துவது என்பது செயல்திறனுக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. அமெரிக்கா போன்ற நாடுகளில் உயர்கல்வி கற்கும் மாணவர்கள் பகுதிநேர வேலைபார்த்துக் கொண்டே பொருள் தேடி தம் தேவைகளுக்கான செலவை ஈடுகட்டுவதுடன் படிப்பையும் முடித்துக் கொள்கின்றனர். இதுவும் வினையால் வினை ஆக்கிக் கொள்ளும் செயல்திறம்தான்.
இக்குறள் மதம் கொண்ட யானையைக்கொண்டு இன்னொரு யானையைப் பிணிப்பது போல, ஒரு செயல் செய்யும்போது இன்னொரு செயலையும் செய்து முடிக்கவேண்டும் எனச் சொல்கிறது. இங்கு இரண்டு செயல்கள் சொல்லப்பட்டுள்ளனவா? மதயானைகளை அடக்குவது ஒர் செயலாகவும் புதிய யானை கிடைப்பது இன்னொரு செயலாகவும் கொள்ளப்பட்டு இரண்டு வினைகளாகின்றன என்பர்.
அரசுக்கு ஒரு பகை தோன்றினால், அப்பகைக்குப் பகையாயினாரை, இப்பகைமேல் தூண்டி விடுவர். இதனால் இருபகைகளும் போர் நிகழ்த்திக் கொண்டு உழல்வராதலின், அது இந்த அரசுக்கு நன்மையாய் முடியும். இப்படி ஒரு செயல் செய்யும்போதே வேறொரு செயலையும் நடத்தி முடிப்பது.செயலால் செயல் முடிக்கும் திறனாம்.

இங்கு சொல்லப்பட்ட உவமை கூறும் செய்தி என்ன?

நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு மற்றொரு யானையைப் பிடித்துக் கொள்வது போன்றது என்பது உவமை. நனைந்த கன்னம் என்று சொல்லப்பட்டதால் மதநீரால் நனைந்த கன்னம் என விளக்கினர். மதம் கொண்ட யானையால் யானையைப் பிடித்துக் கொள்ளல் என்று பொருளாகிறது. மதநீர் யானை என்றது கூடல் வேட்கை கொண்ட யானையைக் குறிப்பது. மதநீர் ஒழுகும் யானையைக் காட்டி காட்டு யானைகளைப் பிடிப்பது சொல்லப்படுகிறது. மான் முதலான விலங்குகளையும் வீட்டுப் புறா காடை போன்ற சில பறவை வகைகளையும் ஒன்றைக் காட்டி மற்றதை வேட்டையாடுவர். காட்டப்படுவதை 'பார்வை விலங்கு' என அழைப்பர். பார்வை விலங்கைப் பார்த்து அதற்கு இனமான இணை ஒன்று பக்கத்தில் வரும்போது பிடிக்கப்படும். மதம் பிடித்த யானையை அடக்குவதற்கும் பார்வை யானையைப் பயன்படுத்துவர்.
கன்னமதம் வழிகின்ற பழகிய யானையைப் பார்வை விலங்காகக் காட்டிப் பழக்கப்படாத காட்டு யானைகளைப் படுகுழியிலகப்படுத்திப் பிடிப்பர். ஒரு பழகிய யானையின் உதவியால் வேறு யானைகளைப் பிடிக்கும் முறை உவமையாக இங்கு கூறப்பட்டது.

காலிங்கர் உரை 'ஒருபகையை வெல்லச்சேர்ந்த கருவிகளைக் கொண்டு, மற்றவனையும் வெல்லுதல்' என்னுங் கருத்தைத் தருகிறது. அதற்கேற்ப 'ஒரு யானையைப் பிடிக்கச் சேர்த்த பொருள்களைக் கொண்டு வேறொரு காட்டு யானையையும் பிடித்தது போல' என அவர் இவ் உவமையை விளக்குவார்.
நாமக்கல் இராமலிங்கம் 'கபோல மதம் என்பது இயற்கையாகக் காட்டிலுள்ள யானைக்கு இருக்காது. காட்டை விட்டு நாட்டில் மனிதரிடத்தில் அடங்கியிருக்கிற யானைக்குத்தான் -அதனுடைய மதம் இயற்கையான வழிகளில் வெளியாக முடியாததால்-கபோல மதம் அதிகமாக வெளியாகும் என்பது விலங்கின சாத்திரம். ஆதலால் 'நனைகவுள்' என்ற உடனேயே மனிதரிடத்தில் 'பழகின யானை' என்று பொருளாகும்' எனச் சொல்வார். 'மதத்தால் நனைந்த கபோலத்தையுடைய (பழகின) யானையைக் கொண்டு புது யானையைக் கட்டிப் பிடித்துக் கொள்வதைப் போன்றது' என்பது அவர் தரும் உவமை விளக்கம்.
தேவநேயப் பாவாணர் 'மதம் பிடித்த யானை பெண்யானையாலன்றி ஒருவாற்றானும் அடக்கப்படாததாகும். ஒரு செயலுக்கும் பயன்படாததும் ஆகும்' என வேறொரு செய்தி தருகிறார்.
மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'தமக்கு ஒரு பகைவர் தோன்றினால் அவர்க்குப் பகையாயினாரை அவரோடு பகைக்குமாறு பண்ணுவார் பக்கல் பகையாய் வருவாரில்லை யென்றது' என உவமையை விளக்கினர். இதை தண்டபாணி தேசிகர் 'நனைகவுள் யானையின் மதநாற்றம் காடெங்கும் பரவி, மற்றொரு மத யானையையீர்த்தலும், அவை பொருந்தலும், பின் ஓய்தலும், ஓய்ந்தபின் யானைபிடிப்பார் பிடித்துக்கொள்ளுதலும் வழக்கமாதலின் வலியபகைவனோடு மற்றொரு வலியவனை மூட்டிவிட்டு, இருவரும் ஓய்ந்தபின் இருவரையும் வயமாக்குதல் வினைசெயல்வகையாம்' என உவமையை இன்னும் தெளிவுபடுத்திக் கூறுவார்.

எடுத்த வினையைக் கொண்டு வேறொரு வினையையும் முடித்துக்கொள்க என்பது இக்குறட்கருத்து. செயல் திறம் மிகுந்தவர் ஒரு தொழிலைக் கொண்டு, அதுபோன்ற பிறிதொன்றையும் முடித்து இரட்டிப்புப் பயனுக்கு வழிவகுப்பர்.
வணிக உலகில் முறுக்குமுறை/கலப்புமுறை விற்றல் (Cross-selling/up-selling) என்று சொல்லப்படுவதை இக்குறள் சூழலில் பொருத்தலாம். வங்கிகள் வைப்பு/கடன் சேவைகள் வழங்குவதற்காக உண்டானவை. இன்று அவற்றுடன் காப்பீட்டுத் திட்டங்கள் போன்ற மற்ற நிதி சார்ந்தவைகளையும் அவர்களது வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்தி தங்கள் ஆதாயத்தை பெருக்குகின்றனர். வாடிக்கையாளர் தரவுத்திரட்டு இதற்கு மிகவும் உதவும். இதுவும் வினையால் வினையாக்கிக் கொள்ளல் என்பதற்கான காட்டாகும்.

ஒரு செயலால் பிறிதொரு செயலும் ஆகும்படி செய்துகொள்ளுதல் நனைந்த கன்னத்தையுடைய யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடித்தது போலாம் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல்திறம் மிகுவிக்குமாறு செய்வது ஆக்கம் பெருக்கும் வினைசெயல்வகையாம்.

பொழிப்பு

ஒரு செயலால் பிறிதொரு செயலும் ஆகும்படி செய்துகொள்ளுதல் மதம்கொண்ட யானையைக் கொண்டு வேறொரு யானையைப் பிடித்தது போலாம்