இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0674



வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்
தீயெச்சம் போலத் தெறும்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:674)

பொழிப்பு (மு வரதராசன்): செய்யத் தொடங்கிய செயல், கொண்ட பகை என்று இவ்விரண்டின் குறை, ஆராய்ந்து பார்த்தால், தீயின் குறைபோல் தெரியாமல் வளர்ந்து கெடுக்கும்.

மணக்குடவர் உரை: வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும். எச்சம்- சேஷம்.
இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: வினை பகை என்ற இரண்டின் எச்சம் - செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்; நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும் - ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும்.
(இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.)

மயிலை சிவமுத்து உரை: செய்யத் தொடங்கிய ஒரு செயல், தீர்க்கத் தொடங்கிய ஒரு பகை, ஆகிய இரண்டனையும் அரைகுறையாக விட்டுவைத்தல் கூடாது. அவ்வாறு விட்டுவைக்க எண்ணினால், தீயின் ஒரு பகுதியை மட்டும் அணைக்காமல் விட்டுவைத்தால் அஃது அவ்விதம் பின் வளர்ந்து கெடுதியை விளைவிக்குமோ அந்த அரைகுறைச் செயலும் பகைமையும் கெடுதல் விளைவிக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்.

பதவுரை:
வினை-செயல்; பகை-பகைமை; என்ற-என; இரண்டின்-இரண்டினது; எச்சம்-ஒழிவு; நினையுங்கால்-ஆராயும்போது; தீ-நெருப்பு; எச்சம்-ஒழிவு; போல-ஒத்திருப்ப; தெறும்-அழிக்கும்.


வினைபகை என்றிரண்டின் எச்சம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு;
மணக்குடவர் குறிப்புரை: எச்சம்- சேஷம். [சேஷம்-மிச்சம்]
பரிப்பெருமாள்: வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிவும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: எச்சம்- சேஷம்.
பரிதி: காரியமும் பகையும் ஒன்றிரண்டு காரியத்தை முன்பின் பாராமல் செய்தால்;
காலிங்கர்: தாம் எடுத்துக்கொண்டது ஓர் கருமம் முடியச் செய்யாது ஒழிவுபட நிற்றலும் தமது பகைதீர்க்கும் இடத்துத் தீராது ஒழிவுபட்டு நிற்றலும் என்னும் இவ்விரண்டு ஒழிவுபாடும்;
பரிமேலழகர்: செய்யத் தொடங்கிய வினையும் களையத்தொடங்கிய பகையும் என்று சொல்லப்பட்ட இரண்டனது ஒழிவும்;

'வினையும் பகைமையு மென்னும் இரண்டினது ஒழிபு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியக்குறை பகைக்குறை என்ற இரண்டும்', 'செய்யத் தொடங்கிய தொழிலும் விலக்கத் தொடங்கிய பகையும் என்ற இரண்டினையும் முடிக்காமல் அரைகுறையாக மிச்சமாக விட்டு வைத்தால்', 'தொடங்கிய காரியத்தைப் பூர்த்தி செய்யாமல் மிச்சம் விட்டுவைப்பதும் பகைமையைத் தீர்த்து விடாமல் மிச்சம் விட்டு வைப்பதும் ஆகிய இந்த இரண்டும்', 'செய்யும் முயற்சி அதற்கு முற்றப்பெறாது குறைவாயிருந்தாலும், நேர்ந்த இடையூறு முற்றும் ஒழியாது சிறுது நிலைத்தாலும் ஆகிய இரண்டு குறையும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மேற்கொண்ட செயல், நீக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டினது ஒழிவுபாடுகள் என்பது இப்பகுதியின் பொருள்.

நினையுங்கால் தீயெச்சம் போலத் தெறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது.
பரிப்பெருமாள்: விசாரிக்குங்காலத்துத் தீயின் ஒழிவுபோலக் கெடுக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அது வினைசெய்யுங்கால் சிறிதொழியச் செய்தோமென்று விடலாகாதென்றது. ஈண்டுப் பகை கூறியது என்னை எனின், வினை செய்வார் பகைவர்மாட்டாதலான் அவரைச் சிறியரென்று இகழாமையும் வேண்டும்; ஆதலான் ஈண்டுக் கூறப்பட்டது.
பரிதி: தீயைப் போலக் கெடுக்கும் என்றவாறு.
காலிங்கர்: ஆராயுங்காலத்து, ஒன்றினைக் கொளுவிப் பரந்த தீயினைச் செலவு அறந்தணியாது சிறுது ஒழிவுபட இகழ்ந்து நீங்கியவழி, மற்று அது யாங்ஙனம் சுட்டுவிடுவதுபோல, [கொளுவிப்பரந்த-பற்றிப்பரந்த; செலவு அறந்தணியாது - முற்றும் தணிந்து போகாமல்]
காலிங்கர் குறிப்புரை: இவை இரண்டும் பற்றி நிற்பன தம்மாட்டு ஆகலான் வினை எச்சத்தால் தம் பொருட்கேடும் பகை எச்சத்தால் தமது உயிர்க்கேடும் வரும் என்றவாறு.
பரிமேலழகர்: ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: இனி,இக்குறை என் செய்வது? என்று இகழ்ந்தொழியற்க, முடியச் செய்க என்பதாம், பின் வளர்தல் ஒப்புமைபற்றிப் பகையெச்சமும் உடன் கூறினார். இதனான் வலியான் செய்யுந் திறம் கூறப்பட்டது.

'ஆராயுங்கால் தீயினது ஒழிவு போலப்பின் வளர்ந்து கெடுக்கும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நெருப்புக்குறை போல வளர்ந்து அழிக்கும்', 'தீயினது மிச்சம் போலப் பின் வளர்ந்து கெடுக்கும்', 'எண்ணிப் பார்த்தால், (நெருப்பை) அணைக்கும்போது முற்றிலும் அணைத்துவிடாமல் ஒரு துணுக்கு மிச்சம் விட்டதைப் போல, பின்னால் பெருகி துன்பத்தை உண்டாக்கும்', 'முற்றிலும் அணையாத தீக்கனல்போல ஒரு காலத்தில் கெடுதி விளைக்குந் தன்மையன. தீ எரியாது அடங்கி இருந்தாலும் காற்றடிக்கும் காலத்தில் மூண்டு கெடுதி செய்யும். அதுபோல முயற்சியிற் குறைவு இருந்தால் அக்குறைவு ஒரு காலத்திற் பெரிய இடையூறாகி விடும். அவ்வாறே பகையும் அடங்கியிருப்பது போலத் தோன்றி ஒரு வேளையில் வலிமை அடையும். ஆதலால் செய்யும் முயற்சியை முற்றுப்பெறச் செய்ய வேண்டும். அதற்குப் பகையையும் வேரறக் களைய வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எண்ணிப்பார்த்தால் தீயினது ஒழிவு போல அழிக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மேற்கொண்ட செயல், நீக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டினது ஒழிவுபாடுகள், எண்ணிப்பார்த்தால் தீயெச்சம் போல அழிக்கும் என்பது பாடலின் பொருள்.
'தீயெச்சம்' என்பது என்ன?

தொடங்கிய செயலைக் கொஞ்சம் கூட மிச்சம் வைக்காமல் முடிக்க வேண்டும்.

செய்யத் தொடங்கிய செயல், பகைமை நீக்கம் ஆகிய இரண்டினது ஒழிவுகள், ஆராயுங்கால் நெருப்பினது மிச்சம் போல அழிவை உண்டாக்கும்.
பற்றி எரிகின்ற நெருப்பை அணைக்கும்போது, அணைத்தவர்கள் 'பெரும்பகுதி அணைத்து விட்டோம்; இந்த மூலையிற் புகைந்து கொண்டிருக்கும் சிறு பகுதி என்ன செய்யும்' எனச் சிறிதாக கனன்று கொண்டிருக்கும் தீயை அணைக்காமல் விட்டுவிடுவார்களேயானால், அந்தச் சிறுதீ காற்றுபட பரவி எழுந்து வளர்ந்து பெருங்கேடு விளைக்கும். அதுபோல மேற்கொண்ட செயலை முழுதாக நிறைவேற்றாமல் அரைகுறையாய் விட்டுவிடுவதும் பகைமையை நீக்கும் முயற்சியில் முற்ற முடிக்காமல் விடுவதும் தீங்கு விளைக்கும்.

எடுத்துகொண்ட எந்தச் செயலையும் முடிக்காது விட்டுவைக்கக் கூடாது; தம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்; இயலாதபோது மாற்று வழிகளில் சென்று குறை வைக்காமல் முடிக்கவேண்டும். குறையாக விடப்படும் செயல் பொருட்கேட்டிற்குக் காரணமாகி மாறுபட்ட வழிகளில் பணியை முடிக்கநேரும்; வினை நீட்டிக்கப்படவே செய்யும்.
அடுத்து, பகைமை நீக்குதற்குத் தனது செல்வம் செல்வாக்கு இவற்றைப் பொறுத்து பலம் கொண்டோ அல்லது அமைதி வழியிலோ முயலலாம். போர் செய்து வென்று பகைமையைப் போக்கலாம்; பகைமையின் காரணத்தை அறிந்து பகைவருடன் அமைதி கொள்ளலாம்; தூது அனுப்பிப் பகைமையை நீக்கி நட்புக் கொள்ளலாம். பகைமையைக் களையும் முயற்சியில் குறைவைத்தால் பகைவர் பலம் பெருகி நம்மை அழிக்க முயலவர்.
தீயை முழுதும் அணைக்காது மீதம் விட்டுச் சென்றால் எச்சமான அத்தீ மீண்டும் எப்படிக் கனன்று பற்றிப் பரவிக் கொள்ளுமோ, அது போல, முடிக்காது விட்ட வினை, பகை என்ற இரண்டும் வளர்ந்து கேடு பயக்கும், அதனால் செய்ய வேண்டின வினைகளை நிறைவேற அதாவது முடிவு பெறச் செய்யவேண்டும்; வினைக்கண் தவிர்த் திருத்தலை ஒழிக.
களை களையும் போது, நன்றாகக் களையாது விட்ட சிறுபகுதி புற்கள், வெள்ளக் காலத்திற் பெருங் குளக்கரை யுடைப்பையெல்லாம் அடைத்தவர் ஒரு சிறு கசிவை விட்டுவைப்பது, கொடிய நோய்க்கு மருத்துவம் செய்து கொள்பவன் ஒரு சிறு பகுதியைப் புறக்கணிப்பது என்றிவற்றை வினையின் எச்சத்திற்கு எடுத்துக் காட்டுகளாகக் கூறியுள்ளனர்.
வினை எஞ்சின் பகையையும், பகைமிஞ்சின் வினையையும் மூளச்செய்யு மாதலால் இவ்விரண்டன் எச்சங்களையும் இணைத்துக் கூறி அவற்றைத் தூரோடு களைக என்றதாம் (தண்டபாணி தேசிகர்).

'தீயெச்சம்' என்பது என்ன?

'தீயெச்சம்' என்பது தீ ஒழிவை அதாவது குறைவுபட அணைக்கப்பட்ட நெருப்பைக் குறிக்கும்,
'தீயெச்சம்' தெறும் எனச் சொல்லப்பட்டது. தெறும் என்ற சொல்லுக்குச் சுடும் என்றும் காய்ச்சும் என்றும் பொருள் கூறுவர். இங்கு இதற்குக் கெடுக்கும் என்றும் அழிக்கும் என்று பொருள் கொள்கின்றனர்.
கொளுவிப் பரந்த நெருப்பை முழுதும் அணைக்காது விட்டால், பெருந்தீயாக மீண்டும் மூண்டு, கேடு விளைவிக்கும். அதைப்போல, செய்ய நினைத்த செயலும், எதிர்க்கும் பகையும் முழுதும் முடிக்காது இருத்தல், கேடு தரும்.
வினையெச்சம், பகையெச்சம், என்ற இரண்டையும் தீஎச்சத்தோடு இங்கு ஒப்பு நோக்கி அரை குறையாக விடப்படும் செயலும் குறைவோடு நீக்கப்பட்ட பகைமையும், சரியாக அணைக்காமல் விடப்பட்ட நெருப்பு போல எனச் சொல்லப்படுகின்றது. இம்மூன்றையும் முற்ற முடிக்க என்கிறது பாடல்.

'தீயெச்சம்' என்பது தீயின் மிச்சம் குறித்தது.

மேற்கொண்ட செயல், நீக்கத் தொடங்கிய பகை ஆகிய இரண்டினது ஒழிவுபாடுகள், எண்ணிப்பார்த்தால் தீயினது ஒழிவு போல அழிக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

மிச்சம் மீதி வைக்காமல் முழுமையாகச் செய்து முடிப்பதே தெளிவான வினைசெயல்வகையாம்.

பொழிப்பு

செயற்குறை பகைமைக்குறை என்ற இரண்டும் தீயினது மிச்சம் போலப் பின் வளர்ந்து அழிக்கும்.