இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0673



ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்
செல்லும்வாய் நோக்கிச் செயல்

(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:673)

பொழிப்பு (மு வரதராசன்): இயலுமிடத்திலெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.

மணக்குடவர் உரை: இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.
இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.

பரிமேலழகர் உரை: ஒல்லும் வாய் எல்லாம் வினை நன்று - வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று; ஒல்லாக்கால் செல்லும் வாய் நோக்கிச் செயல் - அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க.
(இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின். இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: இயலும் இடமெல்லாம் வினை செய்தல் நல்லது. இயலாத காலத்து அதனை நினைத்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்.

பதவுரை:
ஒல்லும்-இயலும்; வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; வினை-செயல்; நன்றே-நன்மையுடையதே; ஒல்லாக்கால்-இயலாதவிடத்து; செல்லும்-முடியும்; வாய்-வழி; நோக்கி-பார்த்து; செயல்-செய்க.


ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று;
பரிப்பெருமாள்: இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று;
பரிதி: காரியத்தை எந்தவகையாலும் செய்தால் அது பாரத்தைக் கொடுக்கும்; [பாரத்தை-சுமையை]
காலிங்கர்: கீழ்ச்சொல்லிப் போந்த வினைசெய்யும் கூறுபாடுகள் அங்ஙனம் செய்கை தமக்கு இயலுமாயின் அவ்வியலும் வழியெல்லாம் வினை செய்து ஒழுகுதல் சாலநல்லது; [வினைசெய்யும் கூறுபாடுகள்- வினை செய்யும் வகைகள்]
பரிமேலழகர்: வினை செய்யுங்கால் இயலுமிடத்தெல்லாம் போராற் செய்தல் நன்று;
பரிமேலழகர் குறிப்புரை: இயலுமிடம்: பகையின் தான் வலியனாகிய காலம். அக்காலத்துத் தண்டமே நன்று என்றார், அஞ்சுவது அதற்கேயாகலின்.

'இயலும் இடமெல்லாம் வினைசெய்தல் நன்று' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். வினை என்றதற்குப் பரிமேலழகர் 'போர்' எனப் பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'முடிந்தவரை தூதால் முடித்துக்கொள்ளல் நன்று', '(தூங்கிச் செய்ய நினைத்த காரியத்தையும் எதிர்பாராத) நல்ல சந்தர்ப்பம் வாய்த்துவிட்டால் உடனே செய்வதுதான் நல்லது', 'இயலும் இடங்களில் எல்லாம் தமக்கு நலம் பயக்கும் முயற்சி செய்தல் நல்லதே', 'செய்து முடிக்கக்கூடிய இடங்களில் எல்லாம் வினையைச் செய்தல் நல்லதே' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இயலக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்தல் நல்லது என்பது இப்பகுதியின் பொருள்.

ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.
மணக்குடவர் குறிப்புரை: இது வினைசெய்து முடிந்ததில்லை யென்று இகழாது பின்பு காலம் பார்த்துச் செய்கவென்றது.
பரிப்பெருமாள்: இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேல் பகை எஞ்சவிடலாகாது என்றார்; அது முடியாத காலத்துச் செய்யும் ஆறு என்னை என்றர்க்கு அதனை இகழாது பின்பு ஆம் காலம் பார்த்துச் செய்க என்றது.
பரிதி: தன்னால் முடிகிற காரியமே செய்வான் என்றவாறு.
காலிங்கர்: மற்று இயலாதற்பினும் அவ்வினைகள் செலவுபடும் வழி எல்லாம் ஓர்ந்து பார்த்துச் செய்து கொள்க என்றவாறு. [இயலாதற்பினும்- முடிவு பெறாத பின்னும்; செலவுபடும் வழி-சொல்லும்படியாக; ஓர்ந்து- ஆராய்ந்து]
பரிமேலழகர்: அஃது இயலாவிடத்து ஏனை மூன்று உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க.
பரிமேலழகர் குறிப்புரை: இயலா இடம் - ஒத்த காலமும் மெலிய காலமும். அவ்விரண்டு காலத்தும் சாமபேத தானங்களுள் அது முடியும் உபாயத்தாற் செய்க என்றார். அவை ஒன்றற்கொன்று வேறுபாடுடையவேனும் உடம்படுத்தற் பயத்தான் தம்முள் ஒக்கும் ஆகலின், இதனான், வலியான், ஒப்பான், மெலியான் என நிலை மூவகைத்து என்பதூஉம், அவற்றுள் வலியது சிறப்பும் கூறப்பட்டன.

'இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க' என்று பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'தன்னால் முடிகிற காரியமே செய்வான்' என்பது பரிதியின் உரை. 'முடிவு பெறாத பின்னும் ஆராய்ந்து பார்த்துச் செய்து கொள்க' என்றார் காலிங்கர். 'இயலாவிடத்து ஏனை மூன்று (சாம பேத தானம்) உபாயத்துள்ளும் அது முடிவதோர் உபாயம் நோக்கிச் செய்க' என்பது பரிமேலழகர் உரை.

இன்றைய ஆசிரியர்கள் 'முடியாக்கால் பலிக்குமுறை பார்த்துச் செய்க', 'அந்த வாய்ப்பு இல்லாதபோது (முன் எண்ணியபடி) வாய்ப்புக்காகக் காத்திருந்து (தூங்கிச்) செய்ய வேண்டும்', 'இயலாத விடங்களில் பயன்தரக்கூடிய சூழ்ச்சியைக் கவனித்து அதனையே கைக்கொள்ளுக', 'முடியாதபோது முடிக்கும் வழிகளை ஆராய்ந்து செய்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இயலாதபோது முடிக்கும் வழிகளை ஆராய்ந்து செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இயலக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்தல் நல்லது; ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல் என்பது பாடலின் பொருள்.
'ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

இயன்றவரை எல்லா வழிகளிலும் செயலை முடிக்க முயலுக.

செய்ய இயலும் இடமெல்லாம் செயலைச் செய்து முடித்தல் நல்லது; செய்ய இயலாத இடத்து அதே எண்ணமாக இருந்து, இயலும் இடம் பார்த்துச்செய்தல் வேண்டும்.
இடம் அறிந்து செயலை முடிக்கக் கூறுகிறது இக்குறள்.
செயல் முற்ற முடித்தலைக் குறிக்கொண்டு 'முடியுமிடத்துச் செய்'; 'இல்லையானால் இடம் வாய்த்த போதுசெய்' என மாற்று வழி சென்றாவது செயலை நிறைவேற்றுக என அறிவுரை தருகிறது பாடல். வாய்ப்புள்ள இடங்களைப் பயன்படுத்திக் கொள்க; வாய்க்காதபோது வேறு வாய்ப்புக்களைத் தேடிக்கொள்க என்பது கருத்து. நான் செய்யக்கூடியவை ஒன்றும் இவ்விடத்தில் இல்லை என்று சோர்ந்துவிடாமல் இருப்பதற்காக எவ்வாறு எவ்வழியில் முயன்றால் முடியுமோ அவ்வழியைக் கண்டறிந்து மாறிக் கொள்க என்று ஆகும் வழியைப்பார்த்துச் செயல்படச் சொல்கிறது இக்குறள்.
இங்கு சொல்லப்பட்ட செயல் போர்வினை எனக் கருதிச் சிலர் உரை செய்தனர். போர்ச்செயல் மட்டுமன்றி எல்லாச் செயல்களுக்கும் உரியதாகப் பொதுமையிற் கொள்வதே சிறந்தது.

'ஒல்லாக்கால் செல்லும்வாய் நோக்கிச் செயல்' என்ற பகுதி குறிப்பது என்ன?

இப்பகுதிக்கு உரைகாரர்கள் தரும் விளக்கங்கள்:

  • (முடிந்தவரை தூதால் முடித்துக் கொள்ளல் நன்று) முடியாவிட்டால் பலிக்கும் முறை பார்த்துச் செய்க.
  • 'வினை-போர். 'காரியமாகுமானால் தலையைப் பிடி. காரியம் ஆகாவிட்டால் காலைப் பிடி' என்றவாறு முடிந்தால் போர்; முடியாவிட்டால் அடைக்கலம் என்பதாம்.
  • முடிந்தாற் போர்-முடியாவிட்டால் சமாதானம்.
  • (அமைச்சன் தானே சில வினைகளைச் செய்யவேண்டும். அரசன் செய்வதுபோலச் செய்யவேண்டும்) இருவரானும் இயலாத செயலை தம் நம்பிக்கைக் உரிய பிறரைக் கொண்டு முடிக்கவேண்டும். அன்றிச் சாமபேத தானங்களாற் செய்க.
  • அந்த வாய்ப்பு இல்லாதபோது (முன் எண்ணியபடி) வாய்ப்புக்காகக் காத்திருந்து (தூங்கிச்) செய்ய வேண்டும்.
  • இயலாத காலத்து அதனை நினைந்திருந்து இயலும் இடம் பார்த்துச் செய்க.
  • அது முடியாத காலத்துச் செய்யும் ஆறு என்னை என்றர்க்கு அதனை இகழாது பின்பு ஆம் காலம் பார்த்துச் செய்க என்றது.
  • மற்று இயலாதற்பினும் அவ்வினைகள் செலவுபடும் வழி எல்லாம் ஓர்ந்து பார்த்துச் செய்து கொள்க
  • இயலவில்லையானால் பயன்படும் இடம் நோக்கியாவது செய்யவேண்டும்.
  • தான் முயன்ற வழிகளில் இயலாதவிடத்து, அந்த வினையின் போக்கை ஆராய்ந்து, அதற்கேற்ற வேறு எவ்வழியில் முடியுமோ அதன் மூலம் காரியத்தைச் செய்து முடித்தல் வேண்டும்.
  • அது பொருந்தாது எனின், அதனை நிறைவேற்றும் வழியை நுணுகி அறிந்து செய்தல் வேண்டும்.
  • இயலாத விடங்களில் பயன்தரக்கூடிய சூழ்ச்சியைக் கவனித்து அதனையே கைக்கொள்ளுக.
  • முடியாதபோது முடிக்கும் வழிகளை ஆராய்ந்து செய்தல் வேண்டும்.
  • அவ்விதம் செய்ய இயலாத காலத்து அதே எண்ணமாக இருந்து, இயலும் இடம் பார்த்துச்செய்தல் வேண்டும்.

வெற்றியாளன் தடைக்கற்களையும் படிக்கற்களாக ஆக்கிக் கொள்வான்; செயல் முடிப்பில் நம்பிக்கை இழந்தவனுக்கு நல்ல வாய்ப்புகளும் தடைகளாகவே தோன்றும். தடையில்லாமல் எளிதாக, முடிந்த வழிகளிலெல்லாம் செயலைச் செய்தல் நல்லது; அவ்விதம் இயலாதபடி சூழல் முட்டுக்கட்டை உண்டாக்கினால், செயலைக் கொண்டு செலுத்தும் வழியை எண்ணி முன்பின் பார்த்துச் செய்யவும் என்கிறது குறளின் பிற்பகுதி.

இயலக்கூடிய இடங்களில் எல்லாம் செயலைச் செய்தல் நல்லது; இயலாதபோது முடிக்கும் வழிகளை ஆராய்ந்து செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

முடிந்ததைச் செய் என்ற வினைசெயல்வகையை அறிவுறுத்தும் பாடல்.

பொழிப்பு

முடிந்தவரை செயலை முடித்துக்கொள்ளல் நன்று; இயலாதபோது அதனை ஆராய்ந்து பார்த்து முடிக்கும் இயலும் இடம் பார்த்துச் செய்க.