இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0662



ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள்

(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:662)

பொழிப்பு (மு வரதராசன்): இடையூறு வருவதற்கு முன்பே நீக்குதல், வந்தபின் தளராமை ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவரின் கொள்கையாம்.

மணக்குடவர் உரை: வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் நீதி நெறியை ஆராய்ந்தவர்.

பரிமேலழகர் உரை: ஆய்ந்தவர் கோள் - முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு; ஊறு ஒரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறு என்பர் - பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.
(தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும்,இவ் இரண்டன் கண்ணே பட்டது என்பார் 'இரண்டன் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்.

இரா சாரங்கபாணி உரை: தொழில் செய்யும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து விலக்குதலும் ஒருகால் இடையிலே வந்தால் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழியே வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவனின் கொள்கையாம் என்பர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆய்ந்தவர் கோள் ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர்.

பதவுரை:
ஊறு-இடையூறு; ஒரால்-நீக்கல்; உற்றபின்-நேர்ந்தால்; ஒல்காமை-தளராமை; இவ்விரண்டின்-இந்த இரண்டினது; ஆறு-நெறி; என்பர்-என்று சொல்லுவர்; ஆய்ந்தவர்-ஆராய்ந்தவர்; கோள்-கோட்பாடு.


ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின் ஆறென்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ('ஊறோரார்' என்பது பாடம்): வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார்;
பரிப்பெருமாள் ('ஊறோரார்' என்பது பாடம்): வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார்;
பரிதி ('ஊறோரார்' என்பது பாடம்): காரியம் செய்வார் எப்படிச் செய்வார் என்னில் தங்கள் விதனம் பாரார்; விதனம் வந்ததென்று ஒடுங்கார்;
காலிங்கர்: யாதானும் ஒருவினை செய்யும் இடத்து அதற்கு இடையூறு வருவதும் வந்துற்றதுமாய் இருக்கும்; அவற்றுள் வருவதாகிய இடையூறு முன்கோலிக் கழியுமாறு செய்தலும், அது அன்றி ஒன்று உற்றதாயின் அதற்கு மனம் தளராமையும் அவ்விரண்டினது நெறி என்று சொல்லுப; [முன்கோலி - வருமுன் அறிந்து]
பரிமேலழகர்: பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர் நூலோர்.
பரிமேலழகர் குறிப்புரை: தேவர்க்கும் அசுரர்க்கும் அமைச்சுப் பூண்ட வியாழ, வெள்ளிகளது துணிபு தொகுத்துப் பின் நீதிநூலுடையார் கூறியவாறு கூறுகின்றமையின், ஈண்டு வினைத்தூய்மையும் உடன் கூறினார். உறுதலுடையதனை முன் 'ஊறு' என்றமையின், 'உற்றபின்' என்றும், இவ் இரண்டின் கண்ணே பட்டது என்பார் 'இரண்டின் ஆறு' என்றும் கூறினார். 'ஊறு ஒரார்' என்று பாடம் ஓதுவாரும் உளர், அஃது 'ஒல்காமை' என்னும் எண்ணோடும், 'இரண்டு' என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர். [ தேவர்க்கு அமைச்சர் வியாழன் (பிருகஸ்பதி). இவர் செய்த நீதி நூலின் முடிபைச் சுருக்கிச் சாணக்கியர் கூறினார். அசுரர்க்கு அமைச்சர் வெள்ளி (சுக்கிரன்). இவர் செய்த நீதிந்நுலைச் சுருக்கிக் காமாந்தகர் கூறினார்.]

பழம் ஆசிரியர்களில் மணக்குடவரும் பரிப்பெருமாளும் பரிதியும் 'ஊறோரார்' என்று பாடம் கொண்டதால், 'வினைசெய்யுங்கால் உறும் துன்பத்தை ஓரார் ஆதலும் அவ்விடத்துத் துன்பமுற்றால் தளரார் ஆதலுமாகிய இவ்விரண்டினது நெறியென்று சொல்லுவார் என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'இடையூறு வருவதை முன் அறிந்து நீக்கலும், பின் இடையூறு வந்தால் அதற்கு மனம் தளராமையும் அவ்விரண்டினது நெறி' எனப் பொருள் உரைப்பார். பரிமேலழகர் 'பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை தெய்வத்தான் பழுதுபட்ட வழி அதற்குத் தளராமையும் ஆகிய இவ்விரண்டன் வழி என்பர்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வருமுன் காத்தல், வந்தால் தளராமை இவ்விரண்டே வழிகள்', 'பிறருக்குத் துன்பம் விளைக்கக்கூடிய காரியங்களைச் செய்யாதிருப்பதும் தமக்குத் துன்பம் வந்தால் தளர்ந்துவிடாமலிருப்பதும் ஆகிய இந்த இரண்டு குணங்களும் சேர்ந்த ஒழுக்கம்தான் என்று சொல்லுவார்கள்', 'காரியத்திற்கு இடையூறாவதை முன்னதாக நீக்கிக் கொள்ளுதலும், ஊழினால் வந்த பழுதிற்கு மனந்தளராமையும் ஆகிய இரண்டின் வழியாக உள்ளதென்பர் அறிஞர்', 'பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும், செய்யும் வினை நம் ஆற்றலைக் கடந்து பழுதுபட்ட வழி அதன் பொருட்டுத் தளர்ச்சி அடையாமையும், ஆகிய இவ்விரண்டும் நெறி முறையைச் சேர்ந்தது என்று கூறுவர் பெரியோர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழி என்பது இப்பகுதியின் பொருள்.

ஆய்ந்தவர் கோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீதி நெறியை ஆராய்ந்தவர்.
பரிப்பெருமாள்: நீதி நெறியை சொல்லுவர்கள் வினையை எண்ணினவர்கள் செய்து முடிக்கும் கோட்பாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மனத்திட்பமாவது யாது என்றார்க்கு அஃது இரண்டு வகைப்படும் என்று கூறிற்று.
பரிதி: இது சாதுரியவான்கள் குணம் என்றவாறு. [சாதுரியவான்கள்- திறமைசாலிகள்]
காலிங்கர்: ஆராய்ந்து அமைந்த அமைச்சரானோர் வினையினது கோட்பாட்டினை என்றவாறு.
பரிமேலழகர்: முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு;

ஆராய்ந்து அமைந்த வினையினது கோட்பாட்டினை என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'நீதி நெறியை ஆராய்ந்தவர்' எனக் கூற பரிதி 'இது திறமைசாலிகளின் குணம்' என்கிறார். காலிங்கர் 'ஆராய்ந்து அமைந்த அமைச்சரானோர் வினையினது கோட்பாடு' என்கிறார். பரிமேலழகர் 'நீதிநூல் ஆராய்ந்த அமைச்சரது துணிபு' என்பார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிஞர் கண்ட', 'ஆராய்ந்து அறிந்தவர்களுடைய வினைத்திட்பக் கொள்கை என்னவென்றால்', 'ஆராய்ந்து ஒரு காரியத்தைச் செய்வாரது கொள்கை', 'அரசியல் முறைகளை ஆராய்ந்தவர் கொள்கை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வினை அறிஞரின் கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஆய்ந்தவர் கொள்கை, செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழி என்பது பாடலின் பொருள்.
'ஆய்ந்தவர்' யார்?

எதிர்வரும் இடையூறுகளை முன்னரே உணர்ந்து நீக்கு; அதன்பின்பும் ஊறு நேரின் மனம் தளராமல் முன்னேறிச் செல்.

ஊறுஒரால், உற்றபின்தளராமை இவ்விரண்டின் வழி செல்வர் வினைத்திட்பமுடையார் என்பது அறிஞர் கண்ட முடிவு.
வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவர் என்ன முடிவுக்கு வந்துள்ளனர்? அவர்கள் வகுக்கும் கொள்கை என்ன? ஒருவர் ஒரு செயலை மேற்கொள்ளும்போது ஏதாவது ஒரு பகுதியில் ஏதாவது இடையூறு வந்துகொண்டுதான் இருக்கும். அத்தகைய ஊறு வருவதற்கு முன்பே அதனை அறிந்து விலக்குதலும், அதன்பின்பும் ஊறு நேரின் அதன் பொருட்டு உள்ளம் தளராமையும் ஆகிய இந்த இரண்டினது வழியே செல்வது வினைத்திட்பம் என்பது அவர்கள் துணிவு. இடையூறு நேராவண்ணம் முன்னரே அறிந்து காப்பது. ஊறு வந்த காலத்தும் உள்ளம் தளராமல் உறுதியுடன் இருப்பது இவை இரண்டும் வினைத்திட்பத்தின் முக்கியமான கூறுகளாக உள்ளமை கண்டறியப்பட்டன. அதாவது வருமுன் காத்தலும் வந்தால் தளராமையுமே வினைஅறிஞர் கண்ட வினைத்திட்பம் பெறுவதற்கான வழிகள் என்கிறது பாடல்.

உற்றவை, ஊறு என்னும் சொற்கள் பெரிதும் இடையூறுகளையே உணர்த்தும்.
வாரி பெருக்கி வளம்படுத்து உற்றவை ஆராய்வான் செய்க வினை (தெரிந்து வினையாடல் குறள் எண்:512 பொருள்: பொருள்வரும் வழிகளைப்பெருக்கி, அப்பொருளால் வளங்களை விரிவுபடுத்தி, இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவன் வினையை ஆளவேண்டும்) என முன்பு இடையூறுகளைத் தொடர்ந்து கண்காணித்து வருதல் கூறப்பட்டது. அதுபோலவே வினைத்திட்பமுடையவன் இடையூறுகளைத் தொடர்ந்து ஆராய்பவனாயிருப்பான் என்று இங்கு சொல்லப்படுகிறது. மேலும் அவ்விதம் நேரும் தடைகளைக் கண்டு மனம் தளராதிருப்பான் எனவும் கூறப்படுகிறது.

செம்மையான வகையில் செயல்களை நிறைவேற்ற, இரண்டு நல்ல வழிகள் சொல்லப்படுகின்றன: இடையூறு வரும் முன்னரே அதை உணர்ந்து நீக்குவது; மீறி வந்திடும் இடையூறை உறுதியுடன் நின்று நீக்குவது என்பவை அவை.
ஊறொரால் என்பதற்குப் பழுதுபடும் செயலை விலக்குதல் என்றும் துன்பந்தரும் வினைகளை ஒருவுதல் என்றும் சிலர் பொருள் கூறினர். இது அப்படிப்பட்ட வினைகளையே செய்யலாகாது என்ற பொருள் தருகிறது. வினைத்திட்ப அதிகாரத்தின் நோக்கம் அதுவல்ல. செயலிடையே எழும் இடையூறுகளை அல்லது துன்பங்களை அறிந்து நீக்குவது என்பதே ஊறொரால் என்றதற்குப் பொருத்தமான பொருள்.

மணக்குடவர் உரைக்கு ‘ஊறொரார்’ எனப் பாடங் கொள்ள வேண்டும். காலிங்கர் ஊறு ஒரால் எனக் கொண்டார். அதைப் பின்பற்றி பரிமேலழகரும் ஒரால் எனப் பாடம் கொண்டு ‘'ஓரார் என்ற பாடம் ஒல்காமை’ என்னும் எண்ணோடும் ‘இரண்டு’ என்னும் தொகையோடும் இயையவில்லை என மணக்குடவர் உரையை மறுப்பார்.

'ஆய்ந்தவர்' யார்?

'ஆய்ந்தவர்' என்ற சொல்லுக்கு நீதி நெறியை ஆராய்ந்தவர், வினையை எண்ணினவர்கள், ஆராய்ந்து அமைந்த அமைச்சர், முன் நீதிநூல் ஆராய்ந்த அமைச்சர், வினைத் திட்பம் பற்றி ஆராய்ந்தவர், நிருவாக நடைமுறைகளை ஆராய்ந்தவர், ஆராய்ந்து அறிந்த அறிஞர்கள், அறிஞர், வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவன், ஆராய்ந்து அறிந்தவர், வினைத்திண்மையை ஆராய்ந்தவர், ஆராய்ந்து ஒரு காரியத்தைச் செய்வார், அரசியல் முறைகளை ஆராய்ந்தவர், வினைத்திட்பம் பற்றி ஆய்ந்தவர், வினைத்திட்பத்தை ஆராய்த்தறிந்த அமைச்சர் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மேலும் 'ஆய்ந்தவர்' என்பதற்கு வியாழன், வெள்ளி என்னும் மந்திரியார் சரித்திர நூலை ஆராய்ந்த பெரியோர் என்று பழைய உரை (உ வே சா) சொல்லும். இவற்றுள் வினையை எண்ணினவர் அல்லது வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவன் போன்ற அதிகாரத் தலைப்பு தொடர்பான விளக்கம் சிறந்தவை.

'ஆய்ந்தவர்' என்பதற்கு வினைத்திட்பம் பற்றி ஆராய்ந்தவன் என்பது பொருள்.

வினை அறிஞரின் கொள்கை, செயல் ஆற்றும்போது இடையூறு வரும் என முன்னே அறிந்து நீக்குதலும், இடையிலே ஊறு நேரின் அதற்குத் தளராதிருத்தலும் ஆகிய இந்த இரண்டினது வழி என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தோல்விகளைத் தவிர்த்தலும் வினைத்திட்பத்தின் கூறுபாடுதான்.

பொழிப்பு

இடையூறை உய்த்தறிந்து காத்துக்கொள்ளுதலும், ஊறு நேரினும் தளராமையும் ஆகிய இரண்டின் வழி வினைத்திட்ப அறிஞர் கொள்கை செல்லும்.