இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0658



கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம்
முடிந்தாலும் பீழை தரும்

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:658)

பொழிப்பு (மு வரதராசன்): ஆகாதவை என விலக்கப்பட்ட செயல்களை விலக்கி விடாமல் மேற்கொண்டு செய்தவர்க்கு, அச் செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே கொடுக்கும்.

மணக்குடவர் உரை: நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும்.
இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.

பரிமேலழகர் உரை: கடிந்த கடிந்து ஒரார் செய்தார்க்கு - நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு; அவைதாம் முடிந்தாலும் பீழை தரும் - அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும்.
(முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: அறநூல்கள் விலக்கிய தீச்செயல்களைத் தாமும் விலக்கித் தள்ளாமல் அவற்றைப் பொருள் பெறும் நோக்கத்தில் செய்தவர்களுக்கு அத்தீச் செயல்கள் ஒருகால் நிறைவேறினாலும் இறுதியில் துன்பத்தையே கொடுக்கும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்.

பதவுரை:
கடிந்த-நீக்கிய; கடிந்து-நீக்கி; ஒரார்-நீங்காதவராய்; செய்தார்க்கு-செய்தவர்க்கு; அவை-அவை; தாம்-தாம்; முடிந்தாலும்-நிறைவேறினாலும்; பீழை-துன்பம்; தரும்-கொடுக்கும்.


கடிந்த கடிந்துஒரார் செய்தார்க்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு;
பரிப்பெருமாள்: நல்லோரால் கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு;
பரிதி: காரியமல்லாத காரியத்தைக் கடிந்து நல்ல காரியம் செய்வான்; .
காலிங்கர்: இவை இவை செய்யத்தகா என்று சான்றோர் கடிந்தனவாகிய வினைத்தீமைகளைத் தாமும் கடிந்து நீங்காது செய்வார் யாவர்;
காலிங்கர் குறிப்புரை: கடிந்த என்பது செய்யத்தகாதன என்றது. ஓரார் என்பது நீங்கா என்றது.
பரிமேலழகர்: நூலோர் கடிந்த வினைகளைத் தாமும் கடிந்தொழியாது பொருள் நோக்கிச் செய்த அமைச்சர்க்கு;

'கடியப்பட்டவற்றைக் கடிந்து நீக்காது செய்யுமவர்க்கு' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விலக்கியவற்றை விலக்காமல் செய்தவர்க்கு', '(பெரியோர்களாலும் நீதி நூல்களாலும் பழியானவைகள் என்று) வெறுத்து விலக்கப்பட்ட காரியங்களை நாமும் வெறுத்து விலக்கிவிட வேண்டும். அப்படி விலக்காமல் செய்தால்', 'பெரியோர் பழித்தவற்றை இகழ்ந் தொதுக்காது முயன்றவர்க்கும், அவை கைகூடும்', 'அற நூலோர் விலக்கிய செயல்களை நீக்காது செய்தார்க்கு' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பழிக்கப்பட்டவற்றை இகழ்ந்து விலக்காது செய்தார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அவைதாம் முடிந்தாலும் பீழை தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வினைகள் தாம் கருதியவாற்றான் முடிந்த பின்பும் பீடையைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நன்மையல்லாத வினையைச் செயின், அது தீமை தருமென்றது. அவை பின்பு காட்டப்படும்.
பரிப்பெருமாள்: அவ்வினை தான் கருதியவாற்றான் முடிந்த பின்பு பீடையைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உம்மையால் முடிவதன் முன்னும் பீடை தரும் என்றது. இது நன்மையல்லாத வினையைச் செயின், அதுவும் தீமை தரும் என்றவாறு.. அவை பின்பே காட்டப்படும் என்றார்.
பரிதி: காரியமல்லாத காரியம் முடிந்தாலும் பின்பு பீழை வரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவர்க்கு அவை தாம் கருதியாங்கு முடிந்தாலும் பெரிதும் இடரைத் தருவதன்றிப் பெருமை பெறுதல் அரிது என்றவாறு.
பரிமேலழகர்: அவை தூய அன்மையின் முடியா, ஒருவாற்றான் முடியினும், பின் துன்பத்தையே கொடுக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: முடித்தல் - கருதிய பொருள் தருதல். பீழை தருதலாகிய பொருளின் தொழில் அதற்குக் காரணமாய வினைகள்மேல் ஏற்றப்பட்டது.

'முடிந்தாலும் பின்பு பீழை வரும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியம் முடிந்தாலும் துன்பம் உண்டாகும்', 'அந்தக் காரியங்கள் வெற்றிகரமாக முடிந்தாலும் பின்னால் அவற்றால் நிச்சயமாகத் துன்பம் வரும்', 'ஆயினும் (பின்) துன்பத்தைக் கொடுக்கும்', 'வெற்றியுடன் முடிந்தாலும் பின் துன்பத்தையே கொடுக்கும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயல் முடிந்தாலும் பின் துன்பம் உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழிக்கப்பட்டவற்றை இகழ்ந்து விலக்காது செய்தார்க்கு செயல் முடிந்தாலும் பீழை தரும் என்பது பாடலின் பொருள்.
'முடிந்தாலும் பீழை தரும்' என்ற பகுதியின் பொருள் என்ன?

தூய்மையற்ற செயல்களும் வெற்றியாக முடியலாம்; ஆனாலும் கடைசியில் இன்னல்களையே கொடுக்கும்.

உலகோரால் வெறுக்கப்பட்ட செயல்களைத் தாமும் வெறுத்து நீக்காமல் செய்வாருக்கு அச்செயல்கள் நிறைவேறினாலும் அவை துன்பத்தையே தரும்.
தாம் விரும்பியதை விரும்பியவாறு எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று கருதிச் சிலர் செயலாற்றுவர். அவர்களுக்குச் செயல் நிறைவேற்றம் ஒன்றே குறிக்கோள். இப்படிச் செய்தால்தான் வெற்றி பெறமுடியும் என்று அவர்கள் நம்பி குற்றமான செயலை குற்றவழியில் புரிவர். அப்படிச் செய்பவர்களது வினை நிறைவேறினாலும் முடிவில் அது துன்பத்தையே தரும்.
சான்றோர் கடியும் செயல்களில் பிறன்மனை விழைதலும் ஒன்று. பழி உண்டாகும் என்பதைப் பொருட்படுத்தாமல் இராவணன் பிறனது மனைவியான சீதையைக் கவர்ந்து சென்றான். தூக்கிச் சென்றது வெற்றியானாலும் பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளில் இராவணன் துன்பமுற்று குலத்தோடு அழிந்தான்.

'முடிந்தாலும் பீழை தரும்' என்ற பகுதியின் பொருள் என்ன?

தீச்செயல்கள் செய்து முடிக்கப்பட்டாலும், அதனால் துன்பமே வரும் என்பது இப்பகுதியின் பொருள்.
இந்த அதிகாரத்துப் பாடல்கள் அனைவருக்கும் பொதுநிலையிற் கூறியிருப்பதாகக் கொள்வதும் பொருந்தும் என்றாலும். அமைச்சியலில் பகுப்பட்டதால் சிறப்பாக அமைச்சர்க்குக் கூறப்பட்டதாகக் கொள்வர். பாடலின் பிற்பகுதிக்குச் சான்றாக, அரசு மேற்கொள்ளும் தீச்செயல்கள் எப்படி குடிகளுக்குத் துன்பம் தந்தன/தருகின்றன என்பதைக் காட்டலாம். முந்தைய அமைச்சு ஒன்று பரிசுச் சீட்டு நடத்தி குடிமக்களை சூதுக்குப் பழக்கப்படுத்தி அரசின் வருவாய் பெருக்குவதில் வெற்றி பெற்றது. ஆனால் பரிசுச் சீட்டு வாங்கிய எளியமக்கள் நாளும் அதையே சிந்தித்து, வேறு தொழில்களில் நாட்டமில்லாமல், தமது சிறிய சேமிப்பையும் முழுவதுமாக இழந்து அல்லலுற்றனர். பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது.
மற்றொரு கடியப்பட்ட தீயபழக்கமான கள்ளுண்ணலையும் பொருள் வருவாய்க்காக அரசே ஆதரிக்கிறது. கள்ளை உற்பத்தி செய்வது, கள்ளை விற்பது போன்றவை உலகோர் விலக்கும் தீச்செயல்களாம். அவற்றைக் கடிந்து ஒராமல் அரசே அவற்றில் ஈடுபடுவது இழிவானதாகும். அரசுக்கு வருவாய் கூடியிருக்கலாம். ஆனால் அவற்றால் மக்கள் படும் துன்பங்கள் மிகை என்பது கண்கூடு.

பழிக்கப்பட்டவற்றை இகழ்ந்து விலக்காது செய்தார்க்கு செயல் முடிந்தாலும் பின் துன்பம் உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைத்தூய்மைஇல்லாதது துன்பத்திலேயே முடியும்.

பொழிப்பு

பழிக்கப்பட்டவற்றை விலக்காமல் செய்தவர்க்குச் செயல் முடிந்தாலும் துன்பம் உண்டாகும்