இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0657



பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:657)

பொழிப்பு (மு வரதராசன்): பழியை மேற்கொண்டு இழிதொழில் செய்து பெறும் செல்வத்தைவிடச் சான்றோர் வினைத்தூய்மை யோடிருந்து பெறும் பொல்லாத வறுமையே சிறந்தது.

மணக்குடவர் உரை: பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும், சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து.
மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: பழி மலைந்து எய்திய ஆக்கத்தின் - சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்; சான்றோர் கழி நல்குரவே தலை - அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.
(நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.)

தமிழண்ணல் உரை: பழிச்சொற்களைத் தம்மேல் ஏற்றுக்கொண்டு சேர்க்கும் செல்வம், செல்வாக்கு, பதவி போலும் பல ஆக்கங்களைவிடச் சான்றோராய் வாழ்ந்து அனுபவிக்கும் மிகுந்த வறுமையே மிகவுயர்ந்ததாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர் கழிநல்குரவே தலை.

பதவுரை:
பழி-பழிக்கப்படுதல்; மலைந்து-மேற்கொண்டு; எய்திய-பெற்ற; ஆக்கத்தின்-செல்வத்தை விட; சான்றோர்-மேலானவர்; கழி-மிகுதியான; நல்குரவே-வறுமை; தலை-சிறப்பு.


பழிமலைந்து எய்திய ஆக்கத்தின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பழியைச் சுமந் தெய்திய ஆக்கத்தினும்;
பரிப்பெருமாள்: பழிப்பினாலே மிகுதியாக எய்துகிற ஆக்கத்தின்;
பரிதி: பொல்லாங்கான காரியத்தைச் செய்து அதனால் வந்த இன்பத்தை அனுபவிப்பதில்;
காலிங்கர்: இங்ஙனம் சான்றோர் பழித்த வினைகளைத் தானும் தகாது என்று உடன்பட்டு, மற்று அவற்றினைச் செய்யத் தவிராது மற்று அவர் உரைத்த நீதிக்கு எதிர்மலைந்து இயற்றி, மற்று அதனால் தான் எய்துவதாகிய செல்வத்தினும்;
காலிங்கர் குறிப்புரை: மலைதல் என்பது மாறுபடுதல்.
பரிமேலழகர்: சாலாதார் தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தின்;

'தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு பெற்ற செல்வத்தினும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லவர் பழிசூடி எய்தும் செல்வத்தினும்', 'தீய வினைகளைச் செய்து அதனால் பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தைக் காட்டிலும்', 'பழியான தீய காரியங்களைச் செய்து அதனால் செல்வம் அடைவதைக் காட்டிலும்', 'பழியேற்றுப் பெற்ற செல்வத்தைப் பார்க்கிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தினும் என்பது இப்பகுதியின் பொருள்.

சான்றோர் கழிநல் குரவே தலை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சான்றோர் மாட்டு உளதாகிய மிக்க நல்குரவே தலைமையுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: மேற்கூறியவாறு செய்யின் நல்குரவு உளதாகு மென்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: சான்றோர்க்குப் பெருமிடியே தலை என்றவாறு.
பரிதி: நன்மைசெய்து மிடியை அனுபவிக்கை நன்று என்றவாறு.
காலிங்கர்: தனக்கு மிக்க வறுமை தானே பெரிதும் தலைப்பாடு உடைத்து என்றவாறு.
பரிமேலழகர்: அதுமேற் கொள்ளாத சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்.

'சான்றோர் அனுபவிக்கும் மிக்க நல்குரவே உயர்ந்தது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர்தம் வறுமையே பெருமையுடையது', 'பழிச்சொல் புரியாது சான்றோர் எய்திநின்ற வறுமையே சிறந்தது', '(பாவமில்லாத) நல்லவனாக மிகுந்த ஏழையாக இருப்பதே மேலானது', 'நல்லோரது மிகுந்த வறுமையே மேலானது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சான்றோர்தம் மிகுந்த வறுமையே மேலானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பழிமலைந்து பெற்ற செல்வத்தினும் சான்றோர் கழிநல்குரவே தலை என்பது பாடலின் பொருள்.
'ஆக்கத்தின் கழிநல்குரவே தலை' என்று ஏன் சொல்லப்பட்டது?

தூயதான எளிய வாழ்க்கை பழி நாணாது பெறும் பெரும்செல்வத்தைவிடத் தலையாயது.

பழியைப் பொருட்படுத்தாமல் அடைந்த செல்வத்தைவிட, குற்றம் நீங்கிய கொடிய வறுமை வாழ்வு மேலோர்க்கு சிறந்தது.
பழி உண்டாதற்குக் காரணமான தீயசெயல்களைச் செய்து அவற்றால் அடையும் வளம், தூயவாழ்வு மேற்கொண்டதால் சான்றோர்கள் உறும் மிகக்கொடிய வறுமை இவ்விருவேறு கருத்துகளைக் கூறி இவற்றுள் எது மேலானது என்ற வினாவிற்குப் பின்னதே மேலானது என விடை தருகிறது இப்பாடல். பழிவருமே என்று கவலைப்படாமல், இழிவான செயல்களைச் செய்து செல்வத்தைத் திரட்டுவதைவிட, சான்றோர் வறுமையான வாழ்வு நடத்துவதை மேலாகவே கருதுவர். பொதுக்கடமைக்கு இழுக்கானவற்றைச் செய்யும்போதும். பிறர் நன்மைக்கு இடையூறானவற்றைச் செய்யும்போதும். பெரியோர் பழிப்பார்கள். பழியைச் சுமந்துகொண்டு அடையும் ஆக்கத்தைவிட, சான்றோர் அடையும் கொடிய வறுமையே மேலானது என்கிறார் வள்ளுவர். அறஞ்சாராத எதுவும், அது எத்துணை ஆக்கத்தைக் கொண்டு வந்து கொட்டிக்குவிப்பினும் அவற்றை நீக்கி அறஞ்சார்ந்தவற்றையே செய்தல் வேண்டும் என்பதே அவரது திடமான கொள்கை.

இவ்வதிகாரம் அமைச்சியல் என்ற பகுப்பில் அமைவதால், அதிகாரப்பாடல்கள் அமைச்சர்க்குச் சிறப்பு வகையால் கூறப்பட்டது என்பர். இப்பாடல் அனைவர்க்கும் ஏற்றதாக இருந்தாலும் இங்கு சான்றோர் என்றது அமைச்சரையே குறிப்பதாகக் கொள்ளலாம். அரசியல் என்ற போர்வையில், ஆக்கம் உண்டாக்க வாய்ப்பு இருந்தாலும் அச்செல்வம் வேண்டாம் என்பார் நல்ல அமைச்சர் என்கிறது பாடல். கையூட்டு வாங்கல், நாட்டின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தல் போன்ற பழியான செயல்களில் அமைச்சர் ஈடுபட்டு செல்வம் சேர்க்க வேண்டாம் என்பது பொருள். நல்லார்கண் பட்ட வறுமை.. இன்னாதே.... (கல்லாமை 408) என நல்லவரிடம் உண்டான வறுமை கொடியது முன்னர் குறள் கூறியது. பழியுடன் கூடிய செயல்களால் வரும் ஆக்கத்தைவிட அமைச்சர் அக்கொடிய வறுமையை வரவேற்கலாம் எனச் சொல்லப்படுகிறது இங்கு.

'பழிமலைந்து' என்றதற்குப் பழியைச் சுமந்து, பழிப்பினாலே மிகுதியாக, பொல்லாங்கான காரியத்தைச் செய்து, சான்றோர் உரைத்த நீதிக்கு எதிர்மலைந்து இயற்றி, தீய வினைகளைச் செய்து அதனாற் பழியைத் தம்மேற் கொண்டு என்றவாறு பொருள் கூறினர்,
காலிங்கர் உரை 'சான்றோர் பழித்தவினைகளைத் தவிராது, அவர் உரைத்த நீதிக்கு எதிர்மலைந்து, செய்து' என உரை செய்கிறார். மேலும் மலைதல் என்பது மாறுபடுதல் எனப் பதவுரையும் தருகிறார். இவர் கூறுவது 'சான்றோர் பழித்ததற்கு மாறுபாடான வினைகளை (சான்றோராகிய) தானும் செய்து' என்றாகிறது. இவரும் பழிமலைந்து என்பதற்கு பழியான செயல்களைச் செய்து என்றே பொருள் கொள்கிறார். சான்றோர் என்பது அமைச்சரைக் குறிப்பதுமாகிறது.
காலிங்கரின் இவ்வுரை வழி தீயன கண்டு பழித்தற்கு உரியார் சான்றோரேயாவர் என்பதும் தெரியவருகிறது.

சொல்லாட்சியிலும் கருத்திலும் இக்குறளை ஒத்த செய்யுள் வரிகள் அகநானூற்றில் கழியக் காதலர் ஆயினும் சான்றோர் பழியொடு வரூஉம் இன்பம் வெஃகார் (அகம்112 பொருள்: சான்றோராவார் மிகக் காதல் கொண்டார் ஆயிடினும், பழியுடன் கூடி வரும் இன்பினை விரும்பார்.) என வருகிறது.

'ஆக்கத்தின் கழிநல்குரவே தலை' என்று ஏன் சொல்லப்பட்டது?

பழி சேரும் வழிகளில் பொருள் சேர்த்தவர்கள் நலமாக வாழ்தலும் உண்டு என்றாலும் அத்தகைய செல்வ வாழ்க்கை விரும்பத்தக்கதன்று. அதைதவிட வறுமையில் வாடுதலே மேல் என்கிறது இக்குறள். ஆக்கத்தினும் ஏன் வறுமை தலையானது என்பதற்கு உரையாளர்கள் கூறிய விளக்கங்களிலிருந்து சில:
பரிமேலழகர் 'நிலையாத செல்வத்தின் பொருட்டு நிலையின பழியை மேற்கோடல் சால்போடு இயையாமையின், 'சான்றோர் கழிநல்குரவே தலை' என்றார்' எனக் காரணம் கூறுவார். இது 'சால்பென்னும் திண்மையுண்டாகப் பெறின், வறுமை ஒருவற்கு இழிவானது அல்ல' என்ற பொருள் தருவது.
காலிங்கர் உரை 'அமைச்சரோ, அரசுக்காக அமைச்சரோ சான்றோர் பழிக்கும் வினையைச் செய்து ஈட்டிய செல்வத்தினும் வறுமையே தலை' என்கிறது.
ஜி வரதராஜன் தரும் விளக்கம்: 'வறுமையுற்ற காலத்தும் துன்பத்தை அனுபவித்துப் பிறருக்குத் துன்பம் செய்யாது இருக்கும்படியான பெரியோரின் வறுமை புகழப்படும். புகழ் நிலைத்திருக்கும். எனவே, பிறரை வருத்திப் பெற்ற பழியோடு கூடிய செல்வத்தைக்காட்டிலும், தானே வருந்தி அனுபவிக்கும் புகழோடு கூடிய வறுமையே சிறந்தது.'
தேவநேயப் பாவாணர் 'தீயோர் செல்வம் இம்மைக்குப் பழியும் மறுமைக்குத் துன்பமும் பயத்தலால், அவ்விரண்டு மில்லாத நல்லோர் வறுமை அதனினுஞ் சிறந்தது' என்றார்.
தண்டபாணி தேசிகர் 'புலி பசித்தாலும் புல்லைத் தின்னாதுபோல சான்றோர் வறுமையுற்ற காலத்தும் பழிப்படுவசெய்யார். ஆதலின் நல்குரவு தலையாயிற்று' என்றார்.

பழியை மேற்கொண்டு பெற்ற செல்வத்தினும் சான்றோர்தம் மிகுந்த வறுமையே மேலானது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைத்தூய்மையால் வரும் அறம் சார்ந்த வறுமை மேலானதே.

பொழிப்பு

சான்றோர் பழி ஏற்று அடையும் செல்வத்தினும் அவர்தம் வறுமையே மேலானது.