இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0653



ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை
ஆஅதும் என்னு மவர்

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:653)

பொழிப்பு (மு வரதராசன்): மேன்மேலும் உயர்வோம் என்று விரும்பி முயல்கின்றவர் தம்முடைய புகழ் கெடுவதற்குக் காரணமான செயலைச் செய்யாமல் விடவேண்டும்.

மணக்குடவர் உரை: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் ஆக்கங் கருதுவார் தவிர்க.
இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.

பரிமேலழகர் உரை: ஆதும் என்னும் அவர் - மேலாகக்கடவோம் என்று கருதுவார்; ஒளி மாழ்கும் வினை செய் ஓஒதல் வேண்டும் - தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.
('ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக. ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: மேன்மேலும் முன்னேற வேண்டும் எனக் கருதுபவர் நன்மதிப்பைக் கெடுதற்குக் காரணமான செயல்களை விட்டொழிக்க வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆஅதும் என்னுமவர் ஒளிமாழ்கும் செய்வினை ஓஒதல் வேண்டும்.

பதவுரை:
ஓஒதல்-ஓவுதல், ஒழித்துவிடுதல்; வேண்டும்-வேண்டும்; ஒளி-நன்கு மதிக்கப்படுதல்; மாழ்கும்-கெடுதற்கு ஏதுவாகிய; செய்வினை-(வினைசெய்)-செய்தல்; ஆஅதும்-ஆக்கம் பெறுவோம்; என்னுமவர்-எனக்கருதுகின்றவர்கள்.


ஓஒதல் வேண்டும் ஒளிமாழ்கும் செய்வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் தவிர்க;
மணக்குடவர் குறிப்புரை: இது முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.
பரிப்பெருமாள்: தமக்குப் புகழ்கெடவரும் வினையைச் செய்தலை தவிர்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது, முன்புள்ள புகழ் கெடவரும் வினையையும் தவிர்க என்றது.
ஓஒதல் வேண்டும் என்றது ஓவுக என்னும் பொருட்கண் ஓவுதல் வேண்டும் என ஒரு சொல்நீர்மைப்பட வந்தது.
பரிதி: ஓவென்று நொந்துகொண்டு அந்தக் காரியத்தைக் கைவிடுவான் என்றவாறு.
காலிங்கர்: தூய்மை அல்லாத வினை செய்தார்க்குக் கெடுதி உறுதி ஆகலான், அதனை ஒழியவேண்டும்;
காலிங்கர் குறிப்புரை: ஒளிமாள்கும் செய்வினை என்பது முன்பு தமக்கு நின்ற ஒளி கெடுமாறு செய்யும் வினை என்றது.
பரிமேலழகர்: தம் ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓஒதல்வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து. ஓவுதல் என்பது குறைந்து நின்றது. ஒளி - தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல். 'செய்' என்னும் முதனிலைத் தொழிற்பெயர் மாற்றப்பட்டது. அன்றிச் செய்வினை என வினைத் தொகையாக்கியவழிப் பொருளின்மை அறிக.

மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'புகழ்கெடவரும் வினையைச் செய்தலையும் தவிர்க' என்று பொருள் கூறினர். பரிதி உரை 'ஓவென்று நொந்துகொண்டு அந்தக் காரியத்தைக் கைவிடுவான்' என மூலச் சொற்களோடு பொருந்தாததிருப்பதால் இவர் ‘ஓவுதல்’ என்னும் பொருள் கொள்ளாது ஒலிக் குறிப்புப் பொருள்கொண்டார் எனத் தெரிகிறது. காலிங்கர் 'தூய்மை அல்லாத வினை செய்யாது ஒழியவேண்டும்' என்ற பொருளில் உரைவரைந்தார். பரிமேலழகர் காலிங்கரின் விளக்கவுரையை ஒட்டி 'ஒளி கெடுதற்குக் காரணமாய வினையைச் செய்தலைத் தவிர்க' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மதிப்புக் குறையும் காரியங்களைக் கொள்ளாது விடுக', 'இருக்கிற புகழைத் தொலைத்துவிடக்கூடிய காரியங்களை (கவனத்தோடு) விலக்க வேண்டும்', 'தமது மதிப்பைக் கெடுக்குஞ் செய்தலை ஒழித்தல் வேண்டும்', 'புகழ் கெடுதற்குக் காரணமாய வினைகள் செய்தலைத் தவிர்த்தல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மதிப்பைக் குறைக்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது இப்பகுதியின் பொருள்.

ஆஅதும் என்னு மவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கங் கருதுவார்.
பரிப்பெருமாள்: ஆக்கங் கருதுவார்.
பரிதி: அரசர்க்கு ஆகாத காரியம் கண்டால்.
காலிங்கர்: யார் எனின், இருமைக் கண்ணும் ஆக்கம் பெறக்கடவேம் யாம் என்னும் அறிவினை உடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: மேலாகக்கடவோம் என்று கருதுவார்;
பரிமேலழகர் குறிப்புரை: ஒளிகெட வருவது ஆக்கம் அன்று என்பதாம்.

'ஆக்கங் கருதுவார் தவிர்க' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முன்னேற வேண்டும் என்பவர்', 'மேலும் மேலும் புகழ் உள்ளவர்களாக விரும்புகிறவர்கள்', 'மேலாகவேண்டுமென்று நினைப்பவர்', 'உயர் நிலையை அடைய வேண்டும் எனக் கருதுகின்றவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இன்னும் உயர்வோம் என்று கருதுபவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இன்னும் உயர்வோம் என்று கருதுபவர் ஒளிமாழ்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது பாடலின் பொருள்.
'ஒளிமாழ்கும்' என்ற தொடரின் பொருள் என்ன?

மேன்மேலும் உயர விரும்புவோர் தாம் குற்றம்குறைகட்கு உள்ளாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

மேம்பாட்டினை அடைய விரும்புவோர் தம் பெரும்புகழ் மங்கவைக்கும் வரும் செயல்களை விட்டு முற்றிலும் நீங்குவாராக.
ஒரு செயலில் குற்றம் வரும் என்று தெரிந்தால் அதைச் செய்யாது விலக்கவேண்டும். அமைச்சரானவர் அப்பழுக்கற்ற தூயவராய் நடந்து வழிகாட்டி அரசுக்கிருக்கும் மதிப்பைக் காக்கவேண்டும். தாம் செய்யக் கருதும் வினையானது உள்ள புகழொளியை மங்கச் செய்யும் என்றால் அவ்வினைகளை மேற்கொள்ளார். ஆக்கம் பெறுதலை எண்ணுபவர் மதிப்புக் கேடான எச்செயலையும் செய்யார். குற்றம் நீங்கிய செயல்களே அரசை மேலும் மேலும் உயர்வை நோக்கிச் செல்லச் செய்யும்.

ஓவுதல் என்பது 'வு' குறைந்து இக்குறளில் ஓஒதல் என அளபெடுத்து வந்தது. ஓஒதல் வேண்டும்' என்பது ஒரு சொல் நீர்மைத்து என்பர்.
செய்வினை என வினைத்தொகையாகக் கொண்டால் செய்யும் வினை எனப் பொருள்பட்டு இயைபின்றாவதாலும்.பொருள் தெளிவுக்காகவும் 'செய்வினை' எனும் சொல் 'வினைசெய்' என மாற்றிக் கூறப்பட்டது.

'ஒளிமாழ்கும்' என்ற தொடரின் பொருள் என்ன?

'ஒளிமாழ்கும்' என்ற தொடர்க்குப் புகழ்கெடவரும், முன்பு தமக்கு நின்ற ஒளி கெடுமாறு, தாம் உள காலத்து எல்லாரானும் நன்கு மதிக்கப்படுதல் கெடுதல், புகழ் கெடுவதற்குக் காரணமான, மதிப்புக் குறையும், நன்மதிப்பைக் கெடுதற்குக் காரணமான, புகழை அழிக்கக்கூடிய, புகழ் மழுங்குமாறு, மதிப்பைக் கெடுக்கும், பெருமை குன்றும்படியான, புகழைக் குறைத்துவிடும்படியான என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காளிங்கர் 'ஒளி மாள்கும்' எனப்பாடம் கண்டு 'மாள்குதல்-அழிதல்' என உரை கண்டார். தண்டபாணி தேசிகர் 'நாலடியாரில் 'உண்ணான் ஒளிநிறாஅன் ஓங்குபுகழ் செய்யான்' என்புழி நாலடியாரில் புகழினும் வேறானதாகக் கருதப்படுகிறது. சீவக சிந்தாமணியில் 'உறங்குமாயினும் மன்னவன் தன்னொளி கறங்குதெண்டிரை வையகங் காக்குமால்' (சீவக.249) என்புழி 'ஒளி-அரசர்பாலுள்ள கடவுட்டன்மை' எனப்படுகிறது. பரிமேலழகரும் 693 ம் குறள் உரையில் 'மன்னவன் உறங்கவும் அவனொளி உலகைக் காவாநிற்கும்' என உரைகாண்பர். இவற்றான் ஒளி புகழ் மட்டும் அன்று புகழின் வேறான கடவுட்டன்மை எனல் காண்க' என இப்பாடலிலுள்ள 'ஒளி'யை விளக்குவார்.

ஒளிமாழ்கும் என்ற தொடர் பெருமதிப்புக் கெடும் என்ற பொருள் தரும்.

இன்னும் உயர்வோம் என்று கருதுபவர் மதிப்பைக் குறைக்கும் செயல்களைக் கொள்ளாது விடுக என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வினைத்தூய்மை கெடச் செய்வது ஒளி தராது.

பொழிப்பு

உயர்ச்சி பெறவேண்டும் என்று கருதுபவர் நன்மதிப்பைக் குறைக்கும் செயல்களை விட்டொழிக்க வேண்டும்.