இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0652



என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை

(அதிகாரம்:வினைத்தூய்மை குறள் எண்:652)

பொழிப்பு (மு வரதராசன்): புகழையும் அறத்தையும் தாராத (தூய்மை அற்ற) செயல்களை எக்காலத்திலும் ஒருவன் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும், புகழொடு நன்மை பயவாத வினையை.
என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.

பரிமேலழகர் உரை: புகழொடு நன்றி பயவா வினை - தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை; என்றும் ஒருவுதல் லேண்டும் - அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.
(பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.)

இரா சாரங்கபாணி உரை: புகழும் நன்மையும் தாராத செயல்களை ஒருவன் எக்காலத்தும் நீக்குதல் வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
புகழொடு நன்றி பயவா வினை என்றும் ஒருவுதல் வேண்டும்.

பதவுரை:
என்றும்-எப்போதும்; ஒருவுதல்-(ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல்; வேண்டும்-செய்ய வேண்டும்; புகழொடு-நற்பெயரோடு; நன்றி-நன்மை; பயவா-விளைக்காத; வினை-செயல்.


என்றும் ஒருவுதல் வேண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்;
மணக்குடவர் குறிப்புரை: என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
பரிப்பெருமாள்: எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: என்று மென்றது செயலற்ற காலமுமென்றது.
பரிதி: என்றென்றும் கைவிடவேணும்;
காலிங்கர்: எஞ்ஞான்றும் குறிக்கொண்டு தவிர்தல் வேண்டும்;
பரிமேலழகர்: அமைச்சர்க்கு எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்.
பரிமேலழகர் குறிப்புரை: பெருகல், சுருங்கல், இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார். 'வேண்டும்' என்பது ஈண்டு இன்றியமையாது என்னும் பொருட்டு.

'எல்லாக் காலமும் தவிர்தல் வேண்டும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் ஒழித்துவிட வேண்டும்', 'எக்காலத்திலும் விலக்க வேண்டும்', 'எக்காலத்தும் நீக்குதல் வேண்டும்', 'எக்காலத்தும் ஒழிதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

என்றும் நீக்குதல் வேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

புகழொடு நன்றி பயவா வினை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புகழொடு நன்மை பயவாத வினையை.
பரிப்பெருமாள்: புகழொடு கூட அறத்தைப் பயவாத வினையை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முதலாகக் கடிய வேண்டுவன கூறுகின்றார். ஆதலின், முற்பட அறமும் புகழும் பயவாத வினையைத் தவிர்க்க என்றது.
பரிதி: ஆக்கமும் புகழும் தாராத காரியத்தை.
காலிங்கர்: யாதினை எனின் புகழுடன் தனக்கு நன்மையைப் பயவாத கருமத்தை என்றவாறு.
பரிமேலழகர்: தம் அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை.

'புகழொடு நன்மை பயவாத வினையை' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'அரசனுக்கு இம்மைக்கண் புகழும் மறுமைக்கண் அறமும் பயவாத வினைகளை' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'புகழும் நன்மையும் தராத காரியத்தை', '(செய்கிறவனுக்குப்) புகழையும் (எல்லாருக்கும்) நன்மைகளையும் உண்டாக்காத காரியங்களை', 'புகழும் நன்மையும் தராத காரியத்தை', 'புகழொடு நன்மை பயவாத வினைகள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நற்பெயரோடு நன்மையும் தராத செயல்களை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நற்பெயரோடு நன்றியும் தராத செயல்களை என்றும் நீக்குதல் வேண்டும் என்பது பாடலின் பொருள்.
'நன்றி' என்ற சொல்லின் பொருள் என்ன?

புகழ்தராததும் நன்மை உண்டாக்காததுமான செயல்களை விலக்க வேண்டும்.

ஓர் அமைச்சர் தம் அரசனுக்குப் புகழையும் நாட்டிற்கு நன்மையையும் தாராத எந்தச் செயலையும் எக்காலத்தும் மேற்கொள்ளாது நீங்குதல் வேண்டும்.
புகழ், நன்மை இரண்டும் தராதது தூய்மையற்றதாகவும் இகழ்வானதாகவும் இருக்கும். நிலையான நன்மையும் புகழும் இல்லாத அறம் சாரா இத்தகைய வினையை அமைச்சர் புறக்கணிக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். அமைச்சர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் எல்லோருக்கும் நன்மையையும் அரசுக்குப் புகழும் தரும் வண்ணம் இருத்தல் வேண்டும். அதுவே தூயவினையாக இருக்கும்.

பாடலில் உள்ள 'என்றும்' என்பதற்கு எக்காலத்தும் எனப் பொருள் கூறி அது செயலற்ற காலத்தையும் குறிக்கும் என்பர் மணக்குடவரும் பரிப்பெருமாளும். பரிமேலழகர் 'என்றும்' பற்றிக் கூறுவது: 'பெருகல் சுருங்கல் இடைநிற்றல் என்னும் நிலைவேறுபாடு காலத்தான் வருதலின், 'என்றும்' என்றார்'. அரசு சுருங்கிய காலத்தும் பெருகிய காலத்தும் இடைநிலை காலத்தும் ஒழிதல் வேண்டும் என்பது பொருள்.
"ஒருவுதல்" என்ற சொல்லுக்கு 'விடுதல்' , 'விட்டொழித்தல்', 'விலக்கல்' என்று பொருள் கூறுவர். இதற்கு (ஏற்றுக்கொள்ளாது) நீக்குதல் என்பது பொருள்.
விலக்கலின் காட்டாயத்தினை வற்புறுத்துவதற்காக 'வேண்டும்' என்ற சொல் ஆளப்பட்டது.

'நன்றி' என்ற சொல்லின் பொருள் என்ன?

'நன்றி' என்ற சொல்லுக்கு நன்மை, மறுமை அறம், ஆக்கம், நீடித்த நலம், பயன் என்றவாறு பொருள் கூறினர். பெரும்பான்மையர் நன்மை என்ற பொருளிலேயே உரை செய்தனர்.
'நன்றி' என்ற சொல் நன்மை என்ற பொருள் தரும்.

நற்பெயரோடு நன்மையும் தராத செயல்களை என்றும் நீக்குதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நன்மையும் புகழும் தந்தால் வினைத்தூய்மையாம்.

பொழிப்பு

நற்பெயரும் நன்மையும் தராத செயல்களை என்றும் நீங்குதல் வேண்டும்