இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0650



இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர் கற்றது
உணர விரித்துரையா தார்

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:650)

பொழிப்பு (மு வரதராசன்): தாம் கற்ற நூற்பொருளைப் பிறர் உணருமாறு விரித்துரைக்க முடியாதவர், கொத்தாக மலர்ந்திருந்த போதிலும் மணம் கமழாத மலரைப் போன்றவர்.

மணக்குடவர் உரை: இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர், கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.
இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: கற்றது உணர விரித்து உரையாதார் - கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்; இணர் ஊழ்த்தும் நாறா மலர் அனையர் - கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர்.
(செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: கற்றதை எடுத்துச் சொல்ல முடியாதவர் மணமில்லாத கொத்துமலர் போன்றவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கற்றது உணர விரித்துரையாதார் இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர்.

பதவுரை:
இணர்-கொத்து; ஊழ்த்தும்-மலர்ந்தும்; நாறா-மணங் கமழாத; மலர்-பூ; அனையர்-ஒப்பர்; கற்றது-கற்ற நூல்; உணர-அறியும் வண்ணம்; விரித்து-அகலங் கூறி; உரையாதார்-உரைக்க மாட்டாதார்.


இணர்ஊழ்த்தும் நாறா மலர்அனையர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இணராய் மலர்ந்து நாற்ற மில்லாத பூவை யொப்பர்;
பரிப்பெருமாள்: இணராக மலர்ந்தும் நாற்ற மில்லாத பூவை யொப்பர்;
பரிதி: கண்ணுக்குப் புலப்படக் கொத்தாகப் பூத்து மணமில்லாத முருக்கம் பூவொடு ஒப்பர்;
காலிங்கர் ('மரத்தனையர்' பாடம்): நறுமலர்ப்பூங்கொத்து உடையவாகிய சண்பகம் புன்னை முதலியபோலத் தானும் பெரிதும் இணர் கொண்டு மலரப் பெற்றுவைத்தும் அவைபோல மணம் நாறப் பெறாத பிறமரத்தை ஒப்பர்;
காலிங்கர் குறிப்புரை: சொல்மலர் எவ்விடத்துப் பெறுதும் எனின், குரவர் முதலான அரசர் சொல் திருவாய் மலர்ந்தார் என்னும் வழக்கத்துள் கண்டு கொள்க. இணர் என்பது பூங்கொத்து. ஊழ்த்தல் என்பது மலர்தல் என்பது.
பரிமேலழகர்: கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர்.

'கொத்தின்கண்ணே மலர்ந்து வைத்தும் நாறாத பூவையொப்பர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். 'மலரனையர்' என்பதற்குக் காலிங்கர் 'மரத்தனையர்' எனப் பாடம் கொண்டார். மணமுடைமையும் இன்மையும் மலருக்கு அடையாக வருவதே சிறக்குமன்றி மரத்திற்கு அடையாக வருவது சிறவாதலால் மலரனையர் என்ற பாடமே நன்று. பரிதி கண்ணுக்கழகாக இருந்தும் மணமில்லா முருக்கம்பூவை ஒப்பர் என உவமிப்பார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் வீசாத மலரை ஒப்பர்', 'கொத்துக் கொத்தாகப் பூத்தும் வாசனையில்லாத மலர்களுக்குச் சமமானவர்களே', 'கொத்திலே மலர்ந்தும் மணம் வீசாப் பூவை ஒப்பர்', 'கொத்தின்கண்ணே மலர்ந்தும் மணம் வீசாத மலரை ஒப்பர்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் பெறாத மலரை ஒப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கற்றது உணர விரித்துரையா தார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுருங்கச் சொல்லுதலே யன்றி வேண்டுமிடத்து விரித்துஞ்சொல்லல் வேண்டு மென்றது.
பரிதி: கற்ற கல்வியைச் செவிக்குப் புலப்படச் சொல்லாதார் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின், தாம் கற்ற சொல் மலரினைக் கேட்ட அரசர் முதலானவர்க்கு, மற்று அதன் பொருள் நயம் மணம் தோன்ற விரித்துச் சொல்லமாட்டாத அமைச்சர் என்றவாறு.
பரிமேலழகர்: கற்றுவைத்த நூலைப் பிறரறியும் வண்ணம் விரித்துரைக்கமாட்டாதவர்.
பரிமேலழகர் குறிப்புரை: செவ்வி பெற மலர்ந்து வைத்தும் நாற்றம் இல்லாத பூச் சூடப்படாதவாறு போல, நூலைக் கற்றுவைத்தும் சொல்ல மாட்டாதார் நன்கு மதிக்கப்படார் என்றமையின், இது தொழில் உவமம் ஆயிற்று. இவை இரண்டு பாட்டானும் அது மாட்டாதாரது இழிபு கூறப்பட்டது.

'கற்றதனைப் பிறரறிய விரித்துச் சொல்ல மாட்டாதார்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் கற்ற செய்திகளைக் கேட்பார் உள்ளங் கொள்ளுமாறு விரித்துரைக்க மாடாதவர்', 'படித்தறிந்ததை மற்றவர்கள் புரிந்து கொள்ளும்படி விளக்கிச் சொல்லத் தெரியாதவர்கள்', 'கற்றதைப் பிறர் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர்', 'தாம் கற்றதைப் பிறர் அறியுமாறு விளக்கி உரைக்க முடியாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கற்றதைக் கேட்டார் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றதைக் கேட்டார் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர், இணர்ஊழ்த்தும் மணம் பெறாத மலரை ஒப்பர் என்பது பாடலின் பொருள்.
'இணர்ஊழ்த்தும்' என்ற தொடரின் பொருள் என்ன?

கற்றவற்றிற்கு விளக்கம் தரும் திறமை இல்லாதவர் மணமில்லாத மலரை ஒப்பர்.

ஒருவர் பலவற்றை ஓதுகிறார்; நிறையக் கேட்கிறார்; பல கலைகளைப் பயில்கிறார்; இப்படிக் கொத்துக் கொத்தாக கற்றவர் அவற்றின் பொருளைப் பிறர் உணரும்படி விளக்கமாகச் சொல்ல இயலாதவராய் இருக்கிறார், அப்படிப்பட்டவர், கொத்தாக அழகுபெற தோன்றினாலும் மணம் இல்லாமல் இருக்கும் மலருக்கு ஒப்பாவார் என்கிறார் வள்ளுவர்.
தாம் கற்றவற்றின் பொருளைப் பிறருக்குச் சொல்லும் திறமையில்லாதவரை கொத்தாக மலர்ந்தும், கண்களுக்கு அழகாகத் தெரிந்தும், மணமற்று இருக்கும் பூக்களுக்கு உவமையாக கூறியிருக்கிறார் வள்ளுவர். மலர் மணத்துடன் இருக்க வேண்டும். அப்பொழுதுதான் பிறருக்குப் பயன்பட்டு இன்பம் பயக்கும். விரித்துரைப்பவர்கள் மணம் பரப்பும் மலர்கள் போன்றவர்களாக இருக்க வேண்டுமானால் அவர்கள் தம் சொல்வன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
கற்றும் கேட்டும் உணர்ந்து கொள்ளுதல், கற்றதைப் பிறர் உணர விரித்துரைத்தல் ஆகிய இரண்டும் மொழிதலின் பயன்பாடுகள். இதனை கருத்துரைத் திறனால் நேரடியாக விளையும் பயன்கள் என்பர் தெரிவிப்பியலார். உணர்தலும் உணர்த்தலும் தொன்று தொட்டுத் தொடர்ந்து நடக்கும் தொழில்கள். இவற்றுள் உணர்த்தலுக்குச் சொல்வன்மை மிக இன்றியமையாதது.
இப்பாடல் 'தாம் இன்புறுவது உலகு இன்புறக்' காணச்செய்ய இயலாத பயனில் புலவரை மட்டும் குறிப்பதல்ல. கற்றதைப் பிறர்க்கு உணர்த்தி இன்பமுறுவதற்குத் தேவையான 'சொல்வன்மை' எனும் பேற்றினைப் பெறாத அனைவரையும் பற்றியது. ஆசிரியர்களைப் போலவே மற்றவர்களுக்கும் தெரிவிப்பியல் திறமை இருக்கவேண்டும். பிறர்க்கு எளிதில் புரியும்படி எடுத்துரைக்கத் தெரியும்படியான ஒரு பயிற்சியாளர் ஒவ்வொரு மேலாளருள்ளும் இருந்தால் தான் செயலில் ஆக்கம் உண்டாகும். மற்றவகையில் சிறப்பாகச் செயலாற்றுபவர்களாக இருந்தும், பலர் தாம் கற்றவற்றை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லத் தெரியாமல் இருப்பார்கள். அப்படிப்பட்ட பணிஇடங்களில் தொழில் சிறவாது. பணியிடங்கள் தவிர்த்து வேறு பல இடங்களுக்கும் சூழ்நிலைகளுக்கும் இக்குறட்கருத்து பொருந்தும்.

உலகில் மலருகின்ற மலர்கள் அனைத்தும் மணம் தருவதில்லை. சில மலர்கள் மட்டுமே மணம் தரும். மணம் தராத மலர்கள் 'நாறாமலர்' எனப்படும். மலரின் அழகையையும் மென்மையையும் கண்டு இன்புறுகிறோம். கொத்தாக மலர்ந்து விளங்கும் மலர்களின் அடுக்கையும் அமைப்பையும் கண்டு களிக்கின்றோம். ஆனால் மணமில்லா மலர்களை யாரும் விரும்பிச் சூடி மகிழமாட்டார்கள். தாம் கற்றதைப் பிறர்க்கு எடுத்துரைக்கும் சொல்வன்மை வேண்டும் என்பதே 'நாறா மலர்' வலியுறுத்தும் வள்ளுவர் சிந்தனையாகும். மிக அழகாக மலர்ந்திருக்கும் பூக்கள் மணம் பரப்பாவிடில் பயனழிதல் போல, சொல் வளம் அமையப்பெறாதவர் அதாவது தனக்குத் தெரிந்ததை மற்றவர்க்கு உணர்த்த இயலாதவர் பயனற்றவர். கல்வி/கேள்வி அறிவு பெற்றவர்கள், தாங்கள் அறிந்த செய்திகளைப் பலரும் அறிந்துகொள்ளக்கூடிய வகையில் தெரிவிக்குமாறு சொல்வன்மை கொண்டு விளங்க வேண்டும் என்பது செய்தி.
கல்வியொடு சொல்வன்மையும் அமைந்திருப்பது பொன்மலர் மணமும் உடையது போலாகும் என்று கூறினார் பிற்காலக் கவிஞர் ஒருவர்.

காலிங்கர் 'தாம் கற்ற சொல் மலரினைக் கேட்ட அரசர் முதலானவர்க்கு, மற்று அதன் பொருள் நயம் மணம் தோன்ற விரித்துச் சொல்லமாட்டாத அமைச்சர்' என இக்குறளை விளக்குவார். மேலும் அவர் 'சொல்மலர் எவ்விடத்துப் பெறுதும் எனின், குரவர் முதலான அரசர் சொல் திருவாய் மலர்ந்தார் என்னும் வழக்கத்துள் கண்டு கொள்க' என திருவாய் மலர்தல் என்னும் வழக்கைச் சொல்வன்மை என்பதனோடு இணைத்து நயம்பட உரைப்பார்.

'இணர்ஊழ்த்தும்' என்ற தொடரின் பொருள் என்ன?

இணர் என்ற சொல்லுக்குப் பூங்கொத்து என்பது பொருள். ஊழ்த்தல் என்ற சொல் மலர்தல் எனப்பொருள்படும். இணரூழ்த்தும் என்ற தொடர்க்குக் கொத்தாக மலர்ந்தும் என்று பொருள். கொத்துமலர் என்றும் கொத்தில் மலர்ந்தும் என்றும் கொத்தாக மலர்ந்தும் என்றும் இதற்குப் பொருள் கொள்வர்.
பலநிலையியலுயிர்களது மலர்கள் அளவில் சிறியதாக இருப்பதால் அதனை ஈடு செய்யவும் பூச்சி இனங்களைக் கவரவும் மலர்கள் இணராக அமைவதுண்டு. அப்படி இணராக அமைந்தவற்றில் சில மணமில்லாத வகையாகும். அறிவுநூல்கள் பலவற்றைக் கற்றும், பலர்வாய்க்கேட்டும், கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்ச் சொல்லமாட்டாதாரை மணமில்லாத இணருடன் ஒப்பிடுகிறார் வள்ளுவர்.
இணர்ஊழ்த்தும் நாறா மலர்க்கு 'மணமில்லாத முருக்கம் பூ'வைக் காட்டுவார் பரிதி.

கற்றதைக் கேட்டார் உணரும்படி விரித்துரைக்க மாட்டாதவர், கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம் பெறாத மலரை ஒப்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்வன்மையில்லாதவர் கருத்துரை திறன் பெற இயலாது.

பொழிப்பு

கற்றதைக் கேட்பார்க்கு எடுத்துச் சொல்ல முடியாதவர் கொத்தாக மலர்ந்திருப்பினும் மணம்பெறாததைப் போன்றவர்.