இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0646



வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்
மாட்சியின் மாசற்றார் கோள்

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:646)

பொழிப்பு (மு வரதராசன்): பிறர் விரும்பும் படியாகத் தாம் சொல்லி, பிறர் சொல்லும் போது அச்சொல்லின் பயனை ஆராய்ந்து கொள்ளுதல் மாசற்ற சிறப்புடையவரின் கொள்கையாகும்.

மணக்குடவர் உரை: தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல் மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு.
இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.

பரிமேலழகர் உரை: வேட்பத் தாம் சொல்லிப் பிறர் சொற்பயன் கோடல் - பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்; மாட்சியின் மாசு அற்றார் கோள் - அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
(பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார். இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: பின்னரும் பிறர் விரும்புமாறு பேசிப் பிறர் சொல்லாற்றல் இன்றிப் பேசினாலும் அச்சொல்லின் பயனை மட்டும் கொள்ளுதல் குற்றமற்ற பண்புடையவர் கொள்கையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன் மாட்சியின் மாசற்றார் கோள்.

பதவுரை:
வேட்ப-விரும்பும் வண்ணம்; தாம்-தாங்கள்; சொல்லி-உரைத்து; பிறர்-மற்றவர்; சொல்-மொழி; பயன்-நன்மை; கோடன்-கொள்ளுதல்; மாட்சியின்-மாட்சிமையில்; மாசற்றார்-குற்றம் நீங்கியவர்; கோள்-கொள்கை.


வேட்பத்தாம் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைத் தெரிந்து கொள்ளுதல்;
பரிப்பெருமாள்: தாம் சொல்லுங்கால் பிறர் விரும்புமாறு சொல்லிப் பிறர் சொல்லுங்கால் அதற்குப் பயனைத் தெரிந்து கொள்ளுதல்;
பரிதி: கேட்பார் விரும்பும்படி சொல்லி அவர் பிரியப்படச் சொல்லும் வார்த்தை கேட்டல்;
காலிங்கர்: இவ்வாறு நாம் விரும்பச் சொல்லுவதும் செய்து மற்று அதுவேயும் அன்றிப் பிறர் சொல்லினது பொருட்பயனும் தேர்ந்து உள்ளத்துக் கோடல் யாது;
பரிமேலழகர்: பிறர்க்குத் தாம் சொல்லுங்கால் அவர் பின்னும் கேட்டலை விரும்புமாறு சொல்லி, அவர் தமக்குச் சொல்லுங்கால் அச்சொல்லின் பயனைக் கொண்டொழிதல்;
பரிமேலழகர் குறிப்புரை: பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை இகழ்தல் வல்லுநர்க்குத் தகுதி இன்மையின், இதுவும் உடன் கூறினார்.

'விரும்பச் சொல்லுவதும் செய்து மற்று அதுவேயும் அன்றிப் பிறர் சொல்லினது பொருட்பயனும் தேர்ந்து உள்ளத்துக் கோடல்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்குமாறு சொல்லல் பிறர் சொல்லைக் கேட்டல்', 'தாம் சொல்ல வேண்டியதைப் பிறர் விரும்பும்படி இனிமையாகச் சொல்லி, பிறர் சொல்லுவது பயனுள்ளதாக இருந்தால் அதை ஒப்புக் கொள்வதும்', 'தாம் சொல்லுவதைப் பிறர் பின்னுங் கேட்க விரும்பும்படி சொல்லி, அவர் சொல்லுவதின் பயனைத் தாம் அறிந்துகொள்ளுதல்', 'பிறர் விரும்புமாறு தாம் சொல்லி, பிறர் சொல்லுகின்ற சொற்களின் பயனைக் கொள்ளுதல்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொற்களின் பயனைக் கொள்ளுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

மாட்சியின் மாசற்றார் கோள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு.
மணக்குடவர் குறிப்புரை: இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லல் வேண்டு மென்றது.
பரிப்பெருமாள்: மாட்சியில் குற்றமற்றார் கோட்பாடு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நயம்படக் கூறுதலே யன்றி, பிறர் சொல்லுஞ் சொல்லறிந்தும் சொல்லவும் வேண்டு மென்றது.
பரிதி: கற்றோர் கடன் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுவே அறிவுடைய அமைச்சரது கோட்பாடு என்றவாறு.
பரிமேலழகர்: அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு.
பரிமேலழகர் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அதனைச் சொல்லுமாறு கூறப்பட்டது.

'மாட்சிமையிற் குற்ற மற்றாரது கோட்பாடு' என மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'கற்றோர் கடன்' என்கிறார். காலிங்கர் 'அறிவுடைய அமைச்சரது கோட்பாடு' என்றும் பரிமேலழகர் 'அமைச்சியலுள் குற்றம் அற்றாரது துணிபு' என அமைச்சர்க்கு உரித்தாக்கிப் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவை நல்லறிஞரின் கொள்கை', '(தர்க்கம் பேசுவதின்) சிறப்பில் குற்றவர்களுடைய கொள்கை', 'குற்றமற்றவரது மேன்மைமிக்க கொள்கையாகும்', 'அமைச்சர் பெருமையில் குற்றமற்றாரது துணிபாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மாட்சிமையில் குற்றம் இல்லாதவரது கொள்கை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர்சொல் பயன்கோடல் மாட்சிமையில் குற்றம் இல்லாதவரது கொள்கை என்பது பாடலின் பொருள்.
'பிறர்சொல் பயன்கோடன்' குறிப்பது என்ன?

ஒரு கருத்தைச் சொல்லும்போது பிறர் விரும்பி அதை ஏற்றுக்கொள்ளுமாறு சொல்க; பிறர் சொல்லின் பயனையும் தெரிந்து கொள்க.

மாட்சிமை மிக்கோரின் சொல்வன்மைக் கொள்கைகளையும் நடைமுறைகளையும் கூறுகிறது இப்பாடல்.
பிறர் விரும்பிக் கேட்கும்படி சொல்வதும், மற்றவர்கள் சொல்வதில் இருக்கும் பயனுள்ளவற்றை ஏற்றுக்கொள்வதும், மாசுநீங்கிய சிறப்புடையவர்கள் கோட்பாடுகளாம். குற்றமற்றாரது துணிபு. கேட்குமாறு சொல்லல்; பிற சொல்லக் கேட்டல் என்கிறது பாடல். சொல்வன்மை என்பது ஒருவர் மட்டும் சொல்லிக்கொண்டே இருப்பதல்ல, கேட்பதும் தான் எனச் சொல்லும் குறள். மாசற்ற மாண்புடையவர் பிறர் விரும்பும்படி பேசுவர்; இன்னார் என்று கருதாது பிறர் பேசுவதில் உள்ள குற்றங்களைக் களைந்து, கொள்வதைமட்டும் கொள்வர். சொலல் வல்லார் தாம் சொல்லுவதைப் பிறர் விரும்பிக் கேட்கும் வண்ணம் எளிமையோடும் இனிமையோடும் கருத்துச் செறிவோடும் சொல்வர். அதுமட்டுமன்றி கேட்போர் நல்ல பயன் தரும் கருத்துக்களைச் சொன்னால் அவற்றைக் கேட்டு அவற்றில் உடன்பாடு உள்ளவற்றை உடனே ஏற்பர். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்று மற்றவர் கருத்துக்கும் உரிய மதிப்பளிப்பர். மற்றவரிடமிருந்து கருத்துக்களைப் பெற்றுப் பயன்படுத்துவதால் தம் மாட்சிமையில் குறைவு உண்டாகும் என எண்ணமாட்டார். கேட்பவர் விரும்பச் சொல்வர் பிறர் சொல்லியவற்றின் பொருட்பயனைத் தேர்ந்து உள்ளத்துக் கொள்வர்.
'மாட்சியின் மாசற்றார்' என்றதற்குச் சொல்வன்மையின் மாட்சியில் மாசற்றார் என்றும் பொருள் கூறுவர்.

'பிறர்சொல் பயன்கோடன்' குறிப்பது என்ன?

'பிறர்சொல் பயன்கோடன்' என்பதற்குப் பிறர் சொற்களின் பயன் கொள்ளல் என்பது பொருள். பிறர் சொற்கள் சொல்வன்மையில்லாதவைகளாக இருப்பினும், அச்சொற்கள் இலக்கணவழுவுடையதாயினும்-சொற்குற்றம் பொருட்குற்றம் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் சொற்களின் பயனைமட்டும் கொள்வர், அதாவது பிறர் சொல்வதும் பயனுடையதாக இருந்தால் அதனையும் ஏற்றுக்கொள்ளுதல் என்பது கருத்து. பரிமேலழகர் 'பிறர் சொற்களுள் குற்றமுளவாயினும், அவை நோக்கி இகழார் என்பதாம். வல்லாரை (இங்கு 'சொல்லும் வல்லமை இல்லாதாரை' எனப் பொருள் கொள்வர்) இகழ்தல் வல்லுநர்க்குத் (சொல்லும் வல்லமை உடையார்க்கு) தகுதி இன்மையின் இதுவும் உடன் கூறினார்' என இதை விளக்குவார்.

எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்பது அறிவு (அறிவுடைமை 424 பொருள்: தான் சொல்வதை எளிய பொருளாகக் கேட்பார் மனம் பொருந்தச் சொல்லி, பிறர்கூறக் கேட்கும் சொற்களின் நுண்மையையும் அவர் சொல்லிய பொருளிலே காண்பது அறிவு) என்னும் குறட்கருத்துடன் இப்பாடலின் கருத்து ஒப்பு நோக்கத் தக்கது.

'பிறர்சொல் பயன்கோடன்' என்பது பிறர் கூற்றில் உள்ள நல்லதை ஏற்றல் எனப் பொருள்படும்-

பிறர் விரும்புமாறு சொல்லி, பிறர் சொற்களின் பயனைக் கொள்ளுதல் மாட்சிமையில் குற்றம் இல்லாதவரது கொள்கை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிறர் சொல்லைக் கொள்தலும் சொல்வன்மையின் பாற்படும்.

பொழிப்பு

விரும்புமாறு சொல்லல் பிறர் சொல்லின் பயன் கொள்ளுதல் இவை மாட்சிமையில் குற்றம் இல்லாதவரது கொள்கை.