இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0641



நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம்
யாநலத்து உள்ளதூஉம் அன்று

(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:641)

பொழிப்பு (மு வரதராசன்): நாவன்மையாகிய நலம் ஒருவகைச் செல்வம் ஆகும்; அந்த நாநலம் தனிச்சிறப்புடையது. ஆகையால் மற்ற எந்த நலங்களிலும் அடங்குவது அன்று.

மணக்குடவர் உரை: நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது; அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது.
எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.

பரிமேலழகர் உரை: நாநலம் என்னும் நலன் உடைமை - அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்; அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று - அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
('நாவால் உளதாய நலம்' என விரியும். 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.)

தமிழண்ணல் உரை: நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படுகிற நலமே, ஒருவனுக்குச் சிறந்த உடைமையாகும். அந்நன்மை, பிற எந்த நலத்துள்ளும் அடங்குவது அன்று; அவை யாவற்றிலும் மிக்கது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாநலம் என்னும் நலனுடைமை அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று.

பதவுரை:
நாநலம்-சொல்வன்மை; என்னும்-என்கின்ற; நலனுடைமை-திறமையுடைமை; அந்நலம்-அந்த சிறப்பு; யா-எந்த; நலத்து-நன்மையுள்; உள்ளதூஉம்-இருப்பதும்; அன்று-இல்லை.


நாநலம் என்னும் நலனுடைமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது;
பரிப்பெருமாள்: நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது;
பரிதி: நாவின் நலமாகிய சொல்லும்;
காலிங்கர்: அரசர்க்கு அமைச்சராய் அமைந்தோர்க்குத் தமது நாவில் பிறக்கும் சொல்நலமாகின்ற இந்நலமுடைமையாவது;
பரிமேலழகர்: அமைச்சர்க்கு இன்றியமையாக் குணமாவது சான்றோரான் நாநலம் என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை உடையராதல்;
பரிமேலழகர் குறிப்புரை: 'நாவால் உளதாய நலம்' என விரியும்.

'நாவினது நலமென்று சொல்லப்படுகின்ற நலம் ஒருவற்கு உடைமையாவது' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரும் பரிமேலழகரும் நாநலம் அமைச்சர்க்குரிய குணமாகக் கொள்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாவன்மை ஒருவர்க்கு நல்ல சொத்து', 'நாவன்மை என்று சிறப்பித்துச் சொல்லப் பெறும் நலம் ஒருவனுக்குச் செல்வமாகும்', 'நாக்கு நல்லதாக உள்ளவன் எனப்படும் குணத்தான் ஒருவனுக்குச் செல்வம்', 'நாவின் நன்மை என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நலத்தினை பெற்றிருத்தல் யாவர்க்கும் இன்றியமையாதது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சொல்வன்மை என்கின்றது நல்ல உடைமை என்பது இப்பகுதியின் பொருள்.

அந்நலம் யாநலத்து உள்ளதூஉம் அன்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது.
மணக்குடவர் குறிப்புரை: எல்லா நலத்துள்ளும் உள்ளதொரு நலமன்று என்றமையால் இன்பம் பயக்குமென்பதாயிற்று.
பரிப்பெருமாள்: அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது எல்லா அழகினும் மிகுந்த அழகு என்றமையால் இன்பமும் பயக்கும் என்றது, 'சொல்வலை வேட்டுவன்'1 (புறநானூறு-252) என்றாரும் உளர்-
பரிதி: மற்றை நாலு புலன்களினும் விசேஷம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அது வேறு யாவை சில நன்மையின் கண்ணும் உள்ளது ஒன்று அன்று.
காலிங்கர் குறிப்புரை: எனவே இதற்கு மற்றும் ஒரு நன்மை உவமையாக எடுத்து உரைத்தல் அரிது என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அந்நலம் பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும் அடங்குவதன்றி மிக்கது ஆகலான்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இந்நலம் உலகத்தைத் தம் வயத்ததாக்கும் அமைச்சர்க்கு வேறாக வேண்டும்' என்னும் நீதிநூல் வழக்குப்பற்றி, 'நாநலம் என்னும் நலன்' என்றும், பிறர்க்கும் இதுபோலச் சிறந்தது பிறிது இன்மையான், 'அந்நலம் யாநலத்துள்ள தூஉம் அன்று' என்றும் கூறினார். பிரித்தல் பொருத்தல் முதலிய தொழில் இல்லாதார்க்கும் இஃது இன்றியாமையாததாயபின், அத்தொழிலார்க்குக் கூறவேண்டுமோ என்பது கருத்து.

'அந்நலம் எல்லா நலத்துள்ளும் உள்ள தொரு நலமன்று; மிக்கது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது எல்லா நன்மையினும் சிறந்தது', 'அந்நலம் மற்றைய எந்த நலத்தினும் உள்ளதொரு நலமன்று. மிக்கது', 'அதனால் வரக்கூடிய நன்மைகளும் வேறு எந்த நற்குணத்திலும் இல்லை', 'அந்நன்மை எல்லா நன்மைகளுக்கும் மேம்பட்ட சிறப்பினை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அந்தச் சிறப்பு எந்த நன்மையுள் இருப்பதும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சொல்வன்மை என்கின்றது நல்ல உடைமை; அந்தச் சிறப்பு யாநலத்து இருப்பதும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'யாநலத்து' குறிப்பது என்ன?

பேச்சு வன்மை என்னும் திறமை ஒருவனுக்கு நற்செல்வம் ஆகும். அது தரும் நலம் மற்ற செல்வங்கள் எவற்றிலும் இல்லை.

நாநலம் என்னும் நலம் தரும் அக உடைமை சிறப்புடையது. அது ஒருவரிடமுள்ள மற்ற நலங்களிலிருந்து வேறுபட்டது.
நா என்பது நாவாகிய கருவியால் ஒலிக்கப்பெறும் சொல்லைக் குறிக்கும். நலம் என்பது நலம் பயப்பதாகிய அச்சொல்லின் வன்மையைக் குறிப்பது. நாவின் நலமானது சொல்வன்மையைக் குறிக்கும். நாநலம் என்றதற்கு 'உலகத்தைத் தம் வயமாக்கும் வன்மையது' என்ற கருத்துப்பட பரிமேலழகர் பொருள் கூறுவார்.

ஒருவரது பேச்சுத் திறமையைச் சிறந்த ஒரு செல்வமாக வள்ளுவர் கருதுகிறார். மனிதன் பேசுவதற்குத் துணை புரிவது வாய். அதிலுள்ள நாக்கு, பல், உதடு ஆகிய இம்மூன்றினையும் ஒலிகளை உருவாக்கும் ஒலிப்பான்கள் என்று சொல்வர் மொழிநூல் வல்லுநர்கள். அவற்றிலும் பெரும்பங்கினை வகிப்பது நாக்கு. உணவின் சுவையை உணர்வதற்குப் பயன்படுவதோடு சொற்களை உச்சரிப்பதற்கும் அது பெரிதும் உதவுகிறது. வாக்கின் திறன் வளர்ப்பதற்கு அடிப்படைத் தேவை நாக்கு. நாவின் நலம் நல்கும் பெருமையே சொல்வன்மை. சொல்வன்மையை மிகுவிக்கும் நாக்கு தனிச் சிறப்புடையது. அது மற்ற எந்த நலங்களிலும் அடங்குவதன்று.

இயல் நோக்கி அமைச்சருக்கு இருக்க வேண்டிய குணமாக நாநலத்தை வள்ளுவர் சொன்னார் என்கின்றனர் சிலர். சொல்வன்மை யாவருக்கும் இன்றியமையாதது என்பதால் அதைப் பொதுமைப்படுத்துவதே ஏற்றமிகு கருத்தாக அமையும். தலைமைப் பொறுப்பில் இருப்பவருக்கு இந்த நலம் மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

பரிப்பெருமாள் ‘நாநலம் என்னும் நலன் உடைமை’ (641) என்பதற்கு, ...சொல்வலை வேட்டுவன்... (புறநானூறு 252 பொருள்: சொல்லாகிய வலையை யுடைய வேட்டைக்காரனாயினான்) என்றாரும் உளர்’ என்று புறநானூற்றுச் செய்யுளைச் சுட்டுகிறார்.

'யாநலத்து' குறிப்பது என்ன?

'யாநலத்து' என்றதற்கு எல்லா நலத்துள்ளும், மற்றை நாலு புலன்களினும், வேறு யாவை சில நன்மையின் கண்ணும், பிறர்க்கும் பிறநலம் எல்லாவற்றுள்ளும், மற்ற எந்த நலங்களிலும், பிற எந்த நலத்துள்ளும், எல்லா நன்மையினும், மற்றைய எந்த நலத்தினும், வேறு எந்த நற்குணத்திலும், வேறு எந்த நலங்களிலும், மற்ற எவ்வகைச் சிறப்புக்களுள்ளும், எல்லா நன்மைகளுக்கும், எல்லாச் செல்வங்களிலும், வேறு எவ்வகை நற்பேறுகளுள்ளும், வேறு பிற எந்தச் செல்வத்தாலும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உரையாசிரியர்களுள் பரிதி மட்டும் ஐம்பொறிகளுள் நாவினை விதந்து கூறப்பட்டதாகக் கொண்டு, 'யா' என்பதற்குப் பிற நான்கு பொறிகளும் எனக் கூறினார்.
யா என்ற சொல்லுக்கு எந்த என்பது நேர் பொருள். யாநலத்து என்பது எந்தவகை நன்மைகளுள்ளும் எனப் பொருள்படும். சிலர் இச்சொல்லுக்கு சிறப்பு, செல்வம், நற்குணம், நற்பேறு எனப் பொருள் கண்டனர்.
பிற நலன்கள் என்றதற்குக் கேட்டறிதல், பார்த்தறிதல், சுவைத்தறிதல் முதலியன எனவும் கல்வியுடைமை, பொருளுடைமை, ஆண்மையுடைமை, அழகுடைமை முதலியன எனவும் பொருள் கூறினர். யா நலம் என்றது அமைச்சர்க்கு உரியனவாக ஓதப்பெற்ற தெரிதல் முதலிய பிறநலங்கள் எவற்றினும் என்பதாம் எனவும் இதை விளக்கினர். அமைச்சர்க்குச் சொல்லப்பட்ட நலங்கள் என்பதைவிட மற்ற எவ்வகை நலன்களினும் என்று பொதுமைப்படுத்திப் பொருள் கொள்ளுதல் சிறக்கும்.

'யாநலத்து' என்ற தொடர்க்கு 'பிற எந்த நலத்துள்ளும்' என்பது பொருள்.

சொல்வன்மை என்கின்றது நல்ல உடைமை; அந்தச் சிறப்பு யாநலத்து இருப்பதும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சொல்வன்மை ஒருவன் பெற்ற நலங்களில் தனித்தது.

பொழிப்பு

சொல்வன்மை ஒருவர்க்கு திறமை உடைமை; அந்தச் சிறப்பு வேறு எந்த நன்மையுள் இருப்பதும் இல்லை