இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0639



பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர்
எழுபது கோடி உறும்

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:639)

பொழிப்பு (மு வரதராசன்): தவறான வழியை எண்ணிக் கூறுகின்ற அமைச்சனை விட எழுபது கோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மையாகும்.

மணக்குடவர் உரை: குற்றப்பட எண்ணும் அமைச்சரில் எழுபது கோடி மடங்கு நல்லர், உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர்.
இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.

பரிமேலழகர் உரை: பக்கத்துள் பழுது எண்ணும் மந்திரியின் - பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்; ஓரெழுபதுகோடி தெவ்உறும் - அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர்.
(எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறு தலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.)

சி இலக்குவனார் உரை: அண்மையில் இருந்துகொண்டு தீங்கினைக் கருதும் அமைச்சன் ஒருவனைவிடப் பகைவர்கள் ஓர் எழுபது கோடியினர் நன்மையினர் ஆவார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பக்கத்துள் பழுதெண்ணும் மந்திரியின் தெவ்வோர் எழுபது கோடி உறும்.

பதவுரை:
பழுது-குற்றம் செய்தல்; எண்ணும்-நினைக்கும்; மந்திரியின்-அமைச்சனைவிட; பக்கத்துள்-அருகிருந்த; தெவ்-பகைவர்; ஓர்-சற்றேறக் குறைய; எழுபது-எழுபது; கோடி-கோடி; உறும்-பொருந்தும்.


பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றப்பட எண்ணும் அமைச்சரில்;
பரிப்பெருமாள்: குற்றப்பட எண்ணும் அமைச்சரில்;
பரிதி: அரசர்க்குப் பழுது எண்ணும் மந்திரியின்;
காலிங்கர் ['பக்கத்துத்' பாடம்]: இவ்விலக்கணத்தானன்றி அரசர்க்கு உரியவனும் பொருள் கருமத்தைப் பழுதுபட எண்ணும் மந்திரியினும் அரசன் பக்கத்தின்கண்;
பரிமேலழகர்: பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சன் ஒருவனில்;

'பக்கத்திருந்து பிழைப்ப எண்ணும் அமைச்சனில்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேடு சூழும் ஒரு மந்திரியினும் அருகே', 'பக்கத்திலே இருந்து குற்றப்பட நினைக்கும் அமைச்சனைவிட', 'தப்பான ஆலோசனை சொல்லக்கூடிய ஒரு மந்திரி அரசனுக்குப் பக்கத்திலிருப்பது', 'அரசன் பக்கத்திலிருந்து அவனுக்குத் தீங்கு செய்ய நினைக்கும் அமைச்சன் ஒருவனைப் பார்க்கிலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பக்கத்திலே இருந்து குற்றப்பட நினைக்கும் அமைச்சனைவிட என்பது இப்பகுதியின் பொருள்.

தெவ்வோர் எழுபது கோடி உறும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர் ['தெவ்வர்' பாடம்; 'கூறு தலை' பாடம்]: உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர் எழுபது கோடி மடங்கு நல்லர்,
மணக்குடவர் குறிப்புரை: இவை யிரண்டும் மந்திரிகளுள் விடப்படுவாரது இலக்கணங் கூறின.
பரிப்பெருமாள் ['தெவ்வர்' பாடம்; 'கூறு தலை' பாடம்]: உட்பகையாய்த் தன் னருகிலிருப்பவர் எழுபது கோடி மடங்கு நல்லர்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இவனைப்போல் அவர்கள் செறுக்கமாட்டார் என்றவாறு. இவை இரண்டும் மந்திரிகள் ஆகாதார் இலக்கணம் கூறின.
பரிதி: கொல்லும் சத்துருக்கள் ஏழ்கோடி தலையான காரியம் என்றவாறு.
காலிங்கர் ['கூறு தலை' பாடம்]: பகைவர் பலர் புடை சூழ்ந்திருத்தல் யாது, மற்று அதுவே மிகவும் தலையானது; [கூறு-மடங்கு]
காலிங்கர் குறிப்புரை: மற்று அது எங்ஙனமோ எனின் பலரே ஆயினும் பகைவர் என்று அறிதலால் பரிகரிக்கவும் கூடுமன்; மற்று உழை இருந்துழி உரைத்தற்கு உரியான் ஒருவன் உணர்வு முதலிய குணம் இலனாயின், மற்று அவன் உரைக்கும் உரையினை நம்பி ஒழுகும் அரசனும் கெடும்; அவ்வரசன் ஆளும் நாடும் கெட்டுவிடும் என்றாவாறு.
பரிமேலழகர்: அரசனுக்கு எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர்.
பரிமேலழகர் குறிப்புரை: எழுபது கோடி என்றது மிகப் பலவாய எண்ணிற்கு ஒன்று காட்டியவாறு. வெளிப்பட நிற்றலான் அவர் காக்கப்படுவர்; இவன் உட்பகையாய் நிற்றலான் காக்கப்படான் என்பதுபற்றி இவ்வாறு கூறினார். 'எழுபது கோடி மடங்கு நல்லர்' என்று உரைப்பாரும், 'எழுபது கூறு தலை' என்று பாடம் ஓதுவாரும் உளர்.

'உட்பகையாய்த் தன்னருகிலிருப்பவர் எழுபது கோடி மடங்கு நல்லர்' என்ற பொருளில் மணக்குடவர், பரிப்பெருமாள் ஆகிய பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'பகைவர் பலர் புடை சூழ்ந்திருத்தல் அதுவே மிகவும் தலையானது' என விளக்கினார். பரிமேலழகர் தெவ்வோர் என்பதை தெவ்+ஓர் எனப் பிரித்து 'எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர்' என உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எழுபது கோடி பகைவர் நல்லவர்', 'அரசனுக்கு எதிராக நினைக்கும் பகைவன் எழுபது கோடி நல்லவன்', 'எழுபது கோடி பகைவர்கள் இருப்பதற்குச் சமானம்', 'பலகோடி பகைவர் ஏற்படுதல் பொறுக்கத்தக்கது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எழுபது கோடி பகைவர் நல்லவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பக்கத்திலே இருந்து குற்றப்பட நினைக்கும் அமைச்சனைவிட எழுபது கோடி பகைவர் நல்லவர் என்பது பாடலின் பொருள்.
'தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்ற பகுதி குறிப்பதென்ன?

ஆட்சித்தலைவனுக்கு அருகிலேயே இருந்துகொண்டு அவனுக்குத் தீங்கினை நினைக்கும் ஓர் அமைச்சனைக் காட்டிலும் அவனது பலகோடிப் பகைவர்கள் நல்லவர்கள்.

தன் தலைவனுக்கும் நாட்டுக்கும் உண்மையாக இல்லாத அமைச்சன் ஒருவனைக் காட்டிலும் எழுபது கோடி எதிரிகளைத் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வது மேலானது. வஞ்சக எண்ணம் கொண்ட உதவியாளரை விட பகைவன் மேலானவன் என்ற கருத்தை உணர்த்தும் குறள். ஆட்சியாளனுக்கு நெருக்கமாக இருப்பதால் நன்மைசெய்வார் போலக் கேடுசூழ்வாரை அறியமுடியாமற் போகும். கூட இருந்தே குழி தோண்டும் குணம் கொண்ட அமைச்சர்களிடமிருந்து தன்னைக் காத்துக்கொள்வது கடினம். பகைவரைப் பகைவர் என்றே அறிந்துகொள்ள முடிவதால் விலகி வென்று கொள்ளலாமாதலின் பகைவர் நல்லவர் எனச் சொல்லப்பட்டது.
பக்கத்திலிருந்து கொண்டே ஆட்சியாளனுக்குத் தீமை நினைக்கும் அமைச்சன் ஆட்சியின் அதிகாரத்தையே தன் அதிகாரமாகப் பயன்படுத்தி நாட்டு வளங்களைச் சூறையாடிவிடுவான். தீய செயல்களுக்கு உடன் இருந்து சட்டம் அமைதி ஒழுங்கு என்ற பெயர்களில் அவன் நாட்டையும் நாட்டு மக்களையும் இழிநிலைக்குக் கொண்டுவந்து விடுவான். இவனுக்குப் பதிலாக எழுபதுகோடி பகைவர் பக்கத்தில் இருந்தாலும் நன்மை உண்டாகும் என்று சொல்லி அமைச்சனைக். கடுமையாகச் சாடுகிறார்.
கேடான அமைச்சன் தன்னலனையே எண்ணுபவனாக இருப்பதால், ஆட்சியாளரை மகிழவைத்துத் தனக்குண்டான செயல்களை நிறைவேற்றிக்கொள்வான் நாட்டுநலனைச் சிந்திக்க மாட்டான். தீய வழிகாட்டும் அமைச்சனும் பழுதெண்ணுபவனே. இத்தகைய அமைச்சர்கள் உரைக்கும் உரையினை நம்பி ஒழுகும் ஆட்சியாளனும் கெடுவான்; அவன் ஆளும் நாடும் கெட்டுவிடும்.

'தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்ற பகுதி குறிப்பதென்ன?

தெவ்வோர் என்பதைக் கிடந்தாங்கே தெவ்வோர் என்றும் தெவ்+ஓர் என்று பிரித்தும் உரைகண்டனர். மணக்குடவர்/பரிப்பெருமாள் தெவ்வோர் என்றதற்குப் பகைவர் என்ற பொருளிலே உரை செய்தனர். பரிமேலழகர் 'தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்ற பகுதியைத் 'தெவ் ஓரெழுபது கோடி உறும்' எனப் பிரித்தார். தெவ்வோர் பலர் பால் பெயர்ச்சொல் உறும் என்பது செய்யும் என்னும் வாய்பாட்டு வினைமுற்று. ‘உறும் என்னும் செய்யுமென் முற்றுக்குத் தெவ்வோர் என்னும் பலர்பால் எழுவா யாதல் வழுவாகும், அதாவது தெவ்வோர்...உறும் எனக் கொண்டால் இலக்கணவழு உண்டாகும் அதனை எழுவாயாகக் கொள்ளாமல், தெவ்+ஓர் எனப் பிரித்து, எழுபது கோடி உறும் 'தெவ் ஓரெழுபது கோடி உறும்' எனக் கொண்டால் தெவ்... உறும் என முடிந்து இலக்கணவழு நீங்கும். இலக்கண நெறிக்காக பரிமேலழகர் இவ்விதம் பிரித்தார்.
எழுபது கோடி என்ற பேரெண் பலகோடி என்ற பெரும் அளவைக் காட்டுவதற்காகப் பெய்யப்பட்டது.
எழுபது கோடி உறும் என்பதற்கு 'எழுபது கூறு தலை' எனப் பாடங்கொண்டனர் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய உரையாசிரியர்கள். இத்தொடரிலிலுள்ள 'கூறு' என்ற சொல்லுக்கு மடங்கு என்பது பொருள். எனவே குறளின் இறுதிப்பகுதிக்கு 'எதிர் நிற்பார் ஓரெழுபதுகோடி பகைவர் உறுவர்' ('தெவ்வோர் எழுபது கோடி உறும்' பாடம்) எனவும் 'பகைவர் எழுபது கோடி மடங்கு தலையாவர், நல்லர்' ('எழுபது கூறு தலை' பாடம்) எனவும் இருதிறமாகப் பொருள் கூறினர். ‘எழுபது கோடி யுறும்’ என்னும் பாடமே குறட்போக்குக்கு இயைந்த தென்பது போதரும் என்பார் இரா சாரங்கபாணி.

'தெவ்வோர் எழுபது கோடி உறும்' என்றதற்கு எழுபது கோடி பகைவர் நல்லவர் என்பது பொருள்.

பக்கத்திலே இருந்து குற்றப்பட நினைக்கும் அமைச்சனைவிட எழுபது கோடி பகைவர் நல்லவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அடுத்துக் கெடுக்கும் அமைச்சு நாட்டுக்குப் பெருங்கேடு.

பொழிப்பு

கேடு நினைக்கும் அமைச்சனைவிட அருகே எழுபது கோடி பகைவர் நல்லவர்.