இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0634



தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச்
சொல்லலும் வல்லது அமைச்சு

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:634)

பொழிப்பு (மு வரதராசன்): (செய்யத்தக்க செயலை) ஆராய்தலும், அதற்குரிய வழிகளை ஆராய்ந்து செய்தலும், துணிவாகக் கருத்தைச் சொல்லுதலும் வல்லவன் அமைச்சன்.

மணக்குடவர் உரை: ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சனாவான்.

பரிமேலழகர் உரை: தெரிதலும் - ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும்; தேர்ந்து செயலும் - அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்; ஒருதலையாச் சொல்லுதலும் - சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; வல்லது அமைச்சு - வல்லவனே அமைச்சனாவான்.
(தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.)

இரா சாரங்கபாணி உரை: மேற்கொள்ளும் வினையை ஆராய்தலும் வினை முடித்தற்குரிய வழிமுறைகளை ஆராய்ந்து செய்தலும் ஐயமின்றித் துணிவாகச் செய்திகளைக் கூறுதலும் வல்லவனே அமைச்சனாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும் வல்லது அமைச்சு.

பதவுரை:
தெரிதலும்-ஆராய்ந்து தெளிவுறுதலும்; தேர்ந்து-தேர்ந்தெடுத்து; செயலும்-செய்தலும்; ஒருதலையா-துணிவாக; சொல்லலும்-சொல்லுதலும்; வல்லது-வல்லது; அமைச்சு-அமைச்சு.


தெரிதலும் தேர்ந்து செயலும் ஒருதலையாச் சொல்லலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும்;
பரிப்பெருமாள்: ஒருவினையை நன்றோ தீதோ ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும்; .
பரிதி: காரியத்தை நாலுவகையாக விசாரித்தலும், விசாரித்தாற்போலே செய்தலும், ஒரு மொழியாகச் சொல்லுதலும்;
காலிங்கர்: அரசனது காரியம் வேறுபட்டுத் தெரிதலும், அங்ஙனம் தெரிந்த பின்னும் காரியத்தில் சிறந்தனை ஓர்ந்து பார்த்துச் செய்தலும், மேற்செய்யும் கருமங்களை ஐயுறாது ஒருவழிப்பட அரசர்க்குச் சொல்லுதலும்;
பரிமேலழகர்: ஒருகாரியச் செய்கை பலவாற்றால் தோன்றின் அவற்றுள் ஆவது ஆராய்ந்தறிதலும், அது செய்யுங்கால் வாய்க்கும் திறன் நாடிச் செய்தலும்,சிலரைப் பிரித்தல் பொருத்தல் செயற்கண், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதலும்; [வாய்க்கும் திறன் நாடி - கைகூடுந் திறத்தை நாடி]
பரிமேலழகர் குறிப்புரை: தெரிதல், செயன் மேலதாயிற்று. வருகின்றது அதுவாகலின்.[தெரிதல் செயல் மேலதாயிற்று - தெரிதல் என்பது ஆராய்தல் என்ற அளவில் நில்லாமல், ஆராய்ந்து செய்தல் என்பதைக் காட்டிற்று; வருகின்றது அதுவாகலின் - அமைச்சனுக்கு ஆராய்ந்தறிய நேர்வது காரியத்தைச் செய்வதாதலால்]

'ஒருவினையை நன்றாக ஆராய்தலும், அதனைச் செய்ய நினைத்தால் முடியுமாறெண்ணிச் செய்தலும், ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதலும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆராய்தல் தெளிந்து செய்தல் உறுதியாகச் சொல்லுதல்', '(செய்ய வேண்டிய காரியத்தையும் அதன் பலாபலன்களையும் தெரிந்தவர்களாக இருப்பதும், (ஏற்கனவே தெரிந்திருந்து போதாவிட்டாலும் வேண்டிய மட்டிலும்) ஆராய்ந்து தெரிந்துகொண்டு அதன் பிறகு அதைச் செய்வதும், நிச்சயமான ஒரே யோசனை சொல்லுவதும்', 'ஆகுங் காரியம் இஃதென்று அறிதலும், அக்காரியம் வாய்க்கும் வழியை ஆராய்ந்து செய்தலும், அரசர்க்குக் கலக்கமேற்பட்ட காலை செய்யத்தக்கதைத் துணிவு பிறக்கும்படி வற்புறுத்தலும்', 'ஆராய்தலும், செய்யும் திறனை நாடிச் செய்தலும், ஐயம் தோன்றுங்கால் துணிந்து சொல்லுதலும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலை ஆராய்தலும், கைகூடும் திறனை நாடித் தெரிவு செய்தலும், செயல்பற்றிய கருத்துக்களைத் துணிந்து சொல்லுதலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வல்லது அமைச்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வல்லவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள்: வல்லவன் அமைச்சனாவான்.
பரிதி: வல்லது மந்திரி தத்துவம் என்றவாறு.
காலிங்கர்: வல்லது அமைச்சு என்றவாறு.
பரிமேலழகர்: வல்லவனே அமைச்சனாவான்.

'வல்லவன் அமைச்சனாவான்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வல்லவனே அமைச்சன்', 'ஆகிய திறமைகள் உள்ளவர்களே மந்திரிகளாகத் தக்கவர்கள்', 'செய்ய வல்லவனே அமைச்சனாவான்', 'வல்லவன் அமைச்சன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வல்லவன் அமைச்சன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலை ஆராய்தலும், கைகூடும் திறனை நாடித்தெரிவு செய்தலும், ஒருதலையாச் சொல்லலும் வல்லவன் அமைச்சன் என்பது பாடலின் பொருள்.
'ஒருதலையாச் சொல்லலும்' என்ற தொடரின் பொருள் என்ன?

ஆராய்தல், தேர்ந்துசெய்தல், உறுதியாய்ச் சொல்லல், அமைச்சர்தம் வல்லமை.

தெரிதல், தேர்தல், ஒரேமுடிவாகச் சொல்லுதல் எனும் அமைச்சர் செயற்பாடுகள் விளக்கப்படுகின்றன.
தெரிதல் என்றது ஆராய்தல் குறித்தது. நாலு வகையாக அல்லது நாலாபக்கமும் கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டும் எனவும் அரசு செயலாக வேறுபட்டு ஆராயவேண்டும் எனவும் வினைசெய்யும் வகை பலவாகத் தோன்றின் அவற்றுட் சிறந்ததை முழுவாய்ப்பாக உள்ளதை ஆய்ந்தறிதல் எனவும் இதற்குப் பொருள் கூறுவர்.
தேர்ந்து செய்தல் என்பதை தேர்வு செய்தல் எனக் கொள்ளலாம். நாட்டின் முன்னேற்றத்திற்கான செயல்கள் வெற்றி பெறுவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து அவற்றில் கைகூடும் வகையைத் தேர்ந்து எடுப்பது என்பது பொருள்.
ஒருதலையாச் சொல்லல் என்பது ஒரே முடிவாகச் சொல்வதைக் கூறுவது. செயல் முடிக்க மேற்கொள்ளும் வழிகளில் நல்லதும் இருக்கும் தீயதும் இருக்கும். எவ்வழியில் அச்செயலைச் செய்து முடிக்கலாம் என்று அமைச்சர் பரிந்துரைக்கும்போது சாதக பாதகங்களைக் குறிப்பிட்டு, அதற்கான காரணங்களை விளக்கி, குறிப்பிட்ட ஒரு வழியில் நடைமுறைப்படுத்தலாம் என்பதை உறுதிபடச் சொல்லவேண்டும் எனப் பொருள்படும்.

செயலை மேற்கொள்வதற்கு முன்பு அதை நன்றாக மதிப்பீடு செய்தலும், அதற்குண்டான மாற்றுவழிகள் அனைத்தையும் எண்ணித் தக்கதைத் தெரிவு செய்தலும், இவ்வாராய்ச்சியின் முடிவுகளைத் தயக்கமின்றித் துணிவுடன் அரசிடம் தெரிவிப்பதும் ஆகிய இவற்றில் வல்லமை உடையவனே சிறந்த அமைச்சன் ஆவான்.
நாட்டின் அமைச்சர் ஒரு செயலின் பரிமாணங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து தெரிந்து கொள்வார். பின்னர் அதை நடைமுறைப்படுத்துவதற்குப் பல வழிகள் இருந்தால் அவற்றுள் சிறந்த ஒன்றைத் தேர்வு செய்வார். இப்படியும் செய்யலாம் அப்படியும் செய்யலாம் என்று சாத்தியக் கூறுகளை விளக்குவதோடு அப்பொழுதைய சூழ்நிலையில் அது ஒன்றுதான் தான் ஏற்றது எனச் செயல்படுத்தும் முறை பற்றிய ஆய்வறிக்கையை அரசுக்குத் தெரிவிப்பார். இவ்வாறு ஓர் அமைச்சர் செயல் முடிக்கும் வழிகளை ஆராயும் முறைமை பற்றிக் கூறுகிறது இப்பாடல்.

'ஒருதலையாச் சொல்லல்' என்ற தொடரின் பொருள் என்ன?

'ஒருதலையாச் சொல்லல்' என்பதற்கு ஐயமாகிய வினையைத் துணிந்து சொல்லுதல், ஒரு மொழியாகச் சொல்லுதல், மேற்செய்யும் கருமங்களை ஐயுறாது ஒருவழிப்பட அரசர்க்குச் சொல்லுதல், அவர்க்கு இதுவே செயற்பாலது என்று துணிவு பிறக்கும் வகை சொல்லுதல், துணிவாகக் கருத்தைச் சொல்லுதல், கருத்துரை கூறுங்கால் இவ்வாறும் செய்யலாம் அவ்வாறும் முடிக்கலாம் எனக் குழப்பாது இதுவே செய்யத் தகுந்தது என ஒரே உறுதிபடச் சொல்லுதல், எடுத்த முடிவை ஒரே நிலையில் சொல்லுதல், உறுதியாகச் சொல்லுதல், ஐயமின்றித் துணிவாகச் செய்திகளைக் கூறுதல், நிச்சயமான ஒரே யோசனை சொல்லுவது, எதனையும் உறுதியாகச் சொல்லல், அரசர்க்குக் கலக்கமேற்பட்ட காலை செய்யத்தக்கதைத் துணிவு பிறக்கும்படி வற்புறுத்தல், ஐயம் தோன்றுங்கால் துணிந்து சொல்லுதல், இச்செயலைச் செய்யலாமா செய்யக்கூடாதா என உள்ளத்தில் குழப்பம் ஏற்படுமானால் நன்கு சிந்தித்து இரண்டில் ஒன்றைத் துணிந்து சொல்லல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

எந்த ஒரு செயலுக்கும் தீர்வு சொல்லும்போது தான் எடுத்த முடிவைத் துணிவாக கூறவேண்டும் அமைச்சர் என்பது 'ஒருதலையாச் சொல்லல்' என்ற தொடரின் பொருள். செயல் முடிக்கும் வகைபற்றி இப்பொழுது ஒன்று, பிறகு ஒன்று என்று மாற்றி மாற்றிப் பேசாமல், இன்னதுதான் தீர்வு என்று துணிந்து கருத்துரை தரச் சொல்வது இது. இப்படியும் செய்யலாம் அப்படியும் செய்யலாம் என்று தெளிவற்ற மழுப்பலாகக் கூறாது உறுதியான ஒரே முடிவாகச் சொல்லவேண்டும் என்பது கருத்து.

'ஒருதலையாச் சொல்லல்' என்ற தொடர்க்கு ஐயுறாது ஒருவழிப்படச் சொல்லுதல் என்பது பொருள்.

செயலை ஆராய்தலும், கைகூடும் திறனை நாடித் தெரிவு செய்தலும், செயல்பற்றிய கருத்துக்களைத் துணிந்து சொல்லுதலும் வல்லவன் அமைச்சன் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல் முடிக்கும் வழிகளை ஆராய்தல் அமைச்சுவின் கடமை.

பொழிப்பு

செயலை ஆராய்தலும் அதைச்செய்யும் திறன் வழிகளைத் தேர்ந்து செய்தலும் உறுதியாகச் செய்திகளைக் கூறுதலும் செய்ய வல்லவன் அமைச்சன்.