இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0631



கருவியும் காலமும் செய்கையும் செய்யும்
அருவினையும் மாண்டது அமைச்சு

(அதிகாரம்:அமைச்சு குறள் எண்:631)

பொழிப்பு (மு வரதராசன்): செயலுக்கு உரிய கருவியும், ஏற்ற காலமும், செய்யும் வகையும், செய்யப்படும் அரிய செயலும் சிறப்படையச் செய்ய வல்லவன் அமைச்சன்.

மணக்குடவர் உரை: செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும் மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.

பரிமேலழகர் உரை: கருவியும் - வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும்; காலமும் - அதற்கு ஏற்ற காலமும்; செய்கையும் - அது செய்யுமாறும்; செய்யும் அருவினையும் - அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்; மாண்டது அமைச்சு - வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.
(கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.}

சி இலக்குவனார் உரை: அரசியல் வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும் அதற்கு ஏற்ற காலமும் அது செய்யும் விதமும், செய்யப்படும் அரிய வினையும் பொருந்த எண்ண வல்லவனே அமைச்சன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.

பதவுரை:
கருவியும்-கருவியும்; காலமும்-பருவமும்; செய்கையும்-செய்யும் வகையும்; செய்யும்-செய்யப்படும்; அருவினையும்-அரியதான (அரச)செயலையும்; மாண்டது-திருந்தவுடையது; அமைச்சு-அமைச்சு.


கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செய்தற்கு அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும்;
மணக்குடவர் குறிப்புரை: செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல். [மறுமண்டலங் கோடல்-சிறிதென்னும் ஊக்கம் துரப்ப அயல்நாடுகளையும் பிடித்தல்]
பரிப்பெருமாள்: செய்யவேண்டும் அரியவினையும், அதற்காங்கருவியும், அதற்காங்காலமும், அதனையிடையூறு படாமற் செய்து முடித்தலுமாகிய இந்நான்கும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: செய்தற்கு அரியவினையாவது மறுமண்டலங்கோடல்; கருவியாவது யானை- குதிரை முதலிய படை: காலமாவது நீரும் நிழலுமுள்ள காலம்; செய்தலாவது மடியின்றிச் செய்தல்.
பரிதி: ஆயுதம் முதலானதும், கால நீதியும், செய்யும் முறைமையும், செய்யும் பெருமையும்;
காலிங்கர்: யாதொரு காரியங்கள் இயற்றுதற்கு மற்று அதற்கு அடுத்த கருவிகளும், மற்று அவை செய்தற்கு அடுத்த காலங்களும், தாம் பொருள்களைச் செய்யும் செய்கை வேற்றுமையும், மற்று அத்தொழில் வேற்றுமையால் செய்யும் அரிய கருமங்களும்;
பரிமேலழகர்: வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும், அதற்கு ஏற்ற காலமும், அது செய்யுமாறும். அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்;
பரிமேலழகர் குறிப்புரை: கருவிகள் - தானையும் பொருளும், காலம் - அது தொடங்குங் காலம், 'செய்கை' எனவே, அது தொடங்கும் உபாயமும், இடையூறு நீக்கி முடிவு போக்குமாறும் அடங்கின. சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது என்பார், 'அருவினை' என்றார். இவை ஐந்தினையும் வடநூலார் மந்திரத்திற்கு அங்கம் என்ப.

'வினை செய்யுங்கால் அதற்கு வேண்டும் கருவிகளும், அதற்கு ஏற்ற காலமும், அது செய்யுமாறும். அவ்வாற்றில் செய்யப்படும் அவ்வரிய வினைதானும்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கருவி காலம் செய்யுந்தன்மை காரியம்', 'வினை செய்வதற்கு வேண்டும் கருவிகளையும் வினைக்கு உற்ற காலத்தையும் வினை செயல்முறைகளையும் செய்யப்படும் அரிய வினையையும்', 'காரியத்தைச் செய்து முடிப்பதற்கு வேண்டிய சாதனங்களையும் அந்தக் காரியத்தைச் செய்யத்தக்க பருவ காலத்தையும் அதற்காக வேண்டிய செயல் நுணுக்கங்களையும் அவற்றிற்குரிய தந்திரங்களையும்', 'ஒரு காரியத்தைச் செய்து முடிக்க வேண்டிய கருவிகளையும், அதனைச் செய்யவேண்டிய காலத்தையும், அதன் இயல்பையும், செய்வதை அருமையாக நன்கு செய்யும் முறைமையையும்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செய்யப்படப்போகும் அரிய வினையையும், வினை செய்வதற்கு வேண்டும் கருவிகளையும், வினைக்கு உற்ற காலத்தையும், வினை செயல்முறைகளையும் என்பது இப்பகுதியின் பொருள்.

மாண்டது அமைச்சு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
பரிப்பெருமாள்: மாட்சிமைப்பட்டவன் அமைச்சனாவான்.
பரிதி: இந்தவகை உண்டானது அமைச்சு.
காலிங்கர்: ஒருவகைப்பட மாட்சிமைப்படத் தெளிந்து அமைந்ததே அமைச்சாவது என்றவாறு.
பரிமேலழகர்: வாய்ப்ப எண்ண வல்லவனே அமைச்சனாவான்.

'மாட்சிமைப்படத் தெளிந்து அமைந்ததே அமைச்சாவது' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவற்றில் நன்கு சிறந்தவனே அமைச்சன்', 'சிறப்பாக எண்ண வல்லவனே அமைச்சனாவான்', 'நன்றாக அறிந்து சொல்லக்கூடியவர்களே மந்திரிகள்', 'அறிந்தியற்ற வல்லவனே மந்திரியாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொருந்த எண்ண வல்லதே அமைச்சு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செய்யப்படப்போகும் அருவினையையும், வினை செய்வதற்கு வேண்டும் கருவிகளையும், வினைக்கு உற்ற காலத்தையும், வினை செயல்முறைகளையும் பொருந்த எண்ண வல்லதே அமைச்சு என்பது பாடலின் பொருள்.
'அருவினை' என்பதன் பொருள் என்ன?

திட்ட மேலாண்மை (Project Management)யை அமைச்சு எவ்விதம் கையாள்கிறது என்பதைச் சொல்லும் பாடல்.

செய்யப்படும் செயல், அதற்கு வேண்டிய கருவி, அதற்கு ஏற்ற காலம், அதனைச் செய்யும் முறை, ஆகிய இவைகளை மாட்சிமைப்படப் பொருத்தமாகத் திட்டமிட வல்லது அமைச்சு ஆகும். அரிய செயல்களை நன்கு திட்டமிட்டு அதற்கான கருவி சேகரித்து, நடைமுறைப்படுத்தும் காலம் கணித்து, செயல்வகைகளை பொருந்த ஆலோசிப்பதே அமைச்சு. கருவி என்பது பொருள், மனிதவளம் போன்ற வள ஆதாரங்கள் (ressources) குறித்தது. காலம் என்பது செயல் தொடங்கி முடிக்குங் காலமாம். செய்கை என்பது செய்யும் முறைமையைச் சொல்வது. செய்யும் அருவினை என்று செய்யப்படும் அரிய செயல் கூறப்பட்டது.
அமைச்சர் என்பவர் நாட்டு மக்களுக்கு நலன் பயக்கும் வகையில் அரசின் எண்ணங்களையும் திட்டங்களையும் செயல் படுத்தும் நிலையில் உள்ளவர். திட்டங்களின் நோக்கங்களை நிறைவேற்றும் பொருட்டு வியூகங்களையும் கொள்கைகளையும் வகுத்து, அவற்றைக் கருவி முதலியன கொண்டு செயல்படுத்துகிறார்.
இக்குறள் கூறும் கருத்தை மேலாண்மை அறிஞர்கள் ஆதார வளங்கள் திட்டமிடுதலும், தொழில் வளர்ச்சிக்கான வியூகங்கள் கொள்கைகள் வகுத்தலும். (Resource Planning & Strategic Business Process Management) எனக் குறிப்பிடுவர்.

படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்பன அரசுக்கு உறுப்புக்கள் ஆனாற்போல, அருவினை, கருவி, காலம், செய்கை முதலியன அமைச்சுக்கு அங்கமாயின.
'அமைச்சு' என்ற சொல் இவ்வதிகாரத்தில் அமைச்சர் குழுவைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. 'உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும், அஃறிணை மருங்கின் கிளந்தாங்கு இயலும்' என்ற தொல்காப்பிய விதியைக் காட்டி அமைச்சு என்பது அமைச்சனைக் குறிக்கும் என்பர் உரையாசிரியர்கள்.

'அருவினை' என்பதன் பொருள் என்ன?

'அருவினை' என்பதற்குச் செய்தற்கு அரியவினை (மறுமண்டலங் கோடல்-சிறிதென்னும் ஊக்கம் துரப்ப அயல்நாடுகளையும் பிடித்தல்), செய்யும் பெருமை, அத்தொழில் வேற்றுமையால் செய்யும் அரிய கருமங்கள், அரிய செயல், அரிய வினை (சிறிய முயற்சியால் பெரிய பயன் தருவது), செய்தற்கரியன என்றெண்ணும் ஆள் வினைகள், செயலின் அருமை, காரியம், அரிய வினை, செய்து முடிக்கக்கூடிய உபாயங்கள், அரிய செயல் திறம், அருமையாக நன்கு செய்யும் முறைமை என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அருவினை என்பது செயற்கரிய செயல் எனப் பொருள்படும். குறளின் பிறிதோரிடத்தில் செயற்கரிய செய்வார் பெரியர்... (குறள்எண்: 26) எனச் சொல்லப்பட்டது. செயற்கரிய வினையை மேற்கொள்வார் அமைச்சர் என்பது குறிப்பு. செய்தற்கரியன என்று எண்ணப்படும் ஆள்வினைகளை அவ்வப்பொழுது அரசு மேற்கொள்ளும். அம்முயற்சிகளைத் திறம்பட நடத்துபவராக ஆட்சித்தலைவனுக்கு அருகிலேயே இருக்கும் அமைச்சர் உள்ளார்.
அருவினை என்பதற்குப் பெரிய பலன்களைத் தரும் சிறிய செயல் என்று மணக்குடவரும் பரிமேலழகரும் உரை தருவர்.

'அருவினை' என்ற சொல் அரிய செயல் எனப்பொருள் தரும்.

செய்யப்படப்போகும் அரிய வினையையும், வினை செய்வதற்கு வேண்டும் கருவிகளையும், வினைக்கு உற்ற காலத்தையும், வினை செயல்முறைகளையும் பொருந்த எண்ண வல்லவனே அமைச்சு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

திட்ட மேலாண்மைத் திறன்கள் கொண்டதாக அமைச்சு இருக்க வேண்டும்.

பொழிப்பு

அரியவினை, கருவி, காலம், செய்யுந்தன்மை, இவற்றைச் சிறப்பாக எண்ண வல்லவனே அமைச்சனாவான்.