இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0624



மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற
இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து

(அதிகாரம்:இடுக்கணழியாமை குறள் எண்:624)

பொழிப்பு (மு வரதராசன்): தடைப்பட்ட இடங்களில் எல்லாம் (வண்டியை இழுத்துச் செல்லும்) எருதுபோல் விடாமுயற்சி உடையவன் உற்ற துன்பமே துன்பப்படுவதாகும்.

மணக்குடவர் உரை: இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து.
இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: மடுத்த வாய் எல்லாம் பகடு அன்னான் - விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து - வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
('மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.)

சி இலக்குவனார் உரை: தடை ஏற்படும் இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன் அடைந்த துன்பங்கள் துன்பம் அடையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மடுத்தவாய் எல்லாம் பகடன்னான் உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து.

பதவுரை:
மடுத்த-விலங்கிய (தடுத்த); வாய்-இடம்; எல்லாம்-அனைத்தும்; பகடு-காளை; அன்னான்-ஒத்தவன்; உற்ற-நேர்ந்த; இடுக்கண்-இடையூறு; இடர்ப்பாடு-துன்பம்; உடைத்து-உடையது.


மடுத்தவாய் எல்லாம் பகடன்னான்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை;
பரிப்பெருமாள்: இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை;
பரிதி: மேடு என்றும் பள்ளம் என்றும் பாராமல் நடக்கின்ற வண்டில் போலே திடமுடையவன்; [வண்டில்-வண்டி]
காலிங்கர்: தான் சென்று முகம்மடுத்த இடத்து எங்கும் ஏறானது எத்தன்மைத்து; [முகம் மடுத்தல் - முகத்தைக் கீழே ஊன்றி மண்டியிட்டு இழுத்தல்; ஏறு - காளை]
காலிங்கர் குறிப்புரை: பகடன்னான் என்பதனைக் களிறு அன்னான் என்று உரைத்தலும் ஒன்று.
பரிமேலழகர்: விலங்கிய இடங்கள் எல்லாவற்றினும், சகடம் ஈர்க்கும் பகடு போல வினையை எடுத்துக் கொண்டு உய்க்க வல்லானை; [விலங்கிய இடம்- வழி மாறி விலகின இடம். குறுக்கிட்ட இடம்]
பரிமேலழகர் குறிப்புரை: 'மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.

'இடுக்கண் வந்து உற்றவிடத்தெல்லாம் பகடுபோலத் தளர்வின்றிச் செலுத்த வல்லவனை' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடினப்பாதை செல்லும் காளைபோன்றவனுக்கு', 'தனக்குத் தடையாய இடங்களெல்லாவற்றையும் மீறி வண்டியை இழுத்துச் செல்லும் பெருமித எருது போன்றவன்', 'இடையூறுகள் அதிகரித்தாலும் பாரம் இழுக்கும் மாடுபோல் ஊன்றி நிற்கக்கூடிய உறுதியுடையவனிடம்', 'தடைப்பட்ட இடங்களிலெல்லாம் தனது வலியால் வண்டிகளை விரைவாக இழுத்துச் செல்லும் எருது போல, முயற்சியை விடாது நடத்த வல்லவனை' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன் என்பது இப்பகுதியின் பொருள்.

உற்ற இடுக்கண் இடர்ப்பாடு உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.
பரிப்பெருமாள்: உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தளர்வில்லாதவன் உற்ற துன்பம் கெடுமென்றது.
பரிதி: பக்கல் வந்த இடுக்கண் தானே விதனப்படும் என்றவாறு.
காலிங்கர்: மற்று இத்தன்மைப்பட்ட அஞ்சா (மன்ன)வன் தன்னை வந்து உற்ற இடுக்கணானது தான் பெரிதும் இடர்ப்பாடு உடைத்தாம் இத்துணையாம் என்றவாறு.
பரிமேலழகர்: வந்துற்ற இடுக்கண் தானே இடர்ப்படுதலை உடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'மடுத்தவாய் எல்லாம்' என்பது பொதுப்பட நின்றமையின், சகடத்திற்கு அளற்று நிலம் முதலியவாகவும், வினைக்கு இடையூறுகளாகவும் கொள்க. 'பகடு மருங்கு ஒற்றியும் மூக்கு ஊன்றியும் தாள் தவழ்ந்தும்' (சீவக.முத்தி,186) அரிதின் உய்க்குமாறு போலத் தன் மெய் வருத்தம் நோக்காது முயன்று உய்ப்பான் என்பார் 'பகடு அன்னான்' என்றார்.

'உற்ற துன்பம் இடர்ப்படுதலை யுடைத்து' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வந்த துன்பமன்றோ துன்பப்படும்', 'ஊக்கத்துடன் செய்யும் தொழிலிடையே வந்த துன்பம் துன்பப்படும்', 'வந்த துன்பங்களே துன்பமடையும்', 'அடைந்த இடையூறானது தானே துன்பப்படுதல் உடைத்தாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வந்த இடையூறு துன்பப்படும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மடுத்தவாய் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவனுக்கு வந்த இடையூறு துன்பப்படும் என்பது பாடலின் பொருள்.
'மடுத்தவாய்' குறிப்பது என்ன?

விடாமுயற்சி கொண்டவன் தடைகளை உடைத்தெறிந்து முன்னேறிச் செல்வான்.

தான் எதிர்கொள்ளும் தடைகளை எதிர்த்து சுமைவண்டியை இழுத்துச் சொல்லும் பகடு போன்ற முயற்சி உடையவனைப் பற்றிச் சொல்லும் பாடல். 'பகடு' என்னும் பலபொருள் ஒருசொல்லுக்கு காளை என்றும் களிறு என்றும் பொருள். காலிங்கர் தனது உரையில் பகடு என்பதற்கு 'ஏறு' என்றும், வேற்றுரையாக அதற்குக் 'களிறு' என்றும் பொருள் கூறினார்.
பாரவண்டி இழுத்துச் செல்லும் காளையை நினைத்துப் பார்த்து விடாமுயற்சியுடன் செயல் முடிக்கச் சொல்கிறார் வள்ளுவர். சுமையோடு கூடிய வண்டியை வழியில் கிடக்கிற பாறாங்கல் ஒன்று தடுக்கிறது. ஆனால் எருது வண்டிச் சக்கரத்தைக் கல்லின் மீது ஏற்றி அல்லது அக்கல்லை நொறுங்கச் செய்து முன்னேறிச் செல்கிறது. காளையின் போக்கை கல் நிறுத்த முடியவில்லை. பணியிடத்து, இந்தக் காளையைப் போல ஒருவர் எந்தத் துன்பம் வந்தாலும் தக்கபடி முயன்று, தாக்குப் பிடித்து அதை எதிர் கொண்டால், அந்த இடையூறே துன்பமடைந்து போய் விடும் என்பது உணர்த்தப்பட்டது.

தடைப்பட்ட இடங்களில் எல்லாம் அரும்பாடுபட்டு வண்டியை இழுத்துச் செல்லும் எருதோடு விடாமுயற்சியுடையானை ஒப்பு நோக்கினார் வள்ளுவர். தடையுற்ற இடங்களில் எல்லாம் கொஞ்சமும் தளராமல் விடா முயற்சியுடன் சுமையை இழுத்துச் செல்லும் அது. இழுக்க முடியாத இடங்களிலே அழுத்தமாகக் கால்களை ஊன்றிச் செல்லும். எத்தகைய இடரான வழியிலும் வண்டியோடு கொண்டு சென்று, பேராற்றல் காட்டும். ஊக்கமுடைய இந்த எருது, வழியில் எதிர்கொள்ளும் எந்தவித இடர்ப்பாடுகளைக் கண்டும் கலங்காது. தடையாகக் கிடந்த கல் நொறுங்க மட்டுமல்லாது, மேடு பள்ளங்கள் நிறைந்த பாதையாயினும், களரும், அளறும், மணலும், காடும்போன்ற வழிகளிலும், பக்கம் உராய்ந்தும், கால்களை மண்டியிட்டுக் கொண்டு தவழ்ந்தும், மூக்கை நிலத்தில் பதித்தும் முழு ஆற்றலோடு வண்டியை இழுத்துத் தடையைத் தாண்டிச் செல்லும். உழைப்பதற்கு அஞ்சாது. இத்தடைகளைக் கடந்து வெற்றி எய்துதற்குத் தக்க உரம் பெற்றிருக்க வேண்டும். ஒரு செயலில் ஈடுபடுபவனும் காளையைப் போன்ற உள நிலை படைத்தவனாக இருக்க வேண்டும். இடையில் வரும் இடையூறுகளைக் கண்டு மனம் தளராமல் மெய் வருத்தம் நோக்காது உறுதியோடு கடமையாற்றினால் எந்த இடையூற்றையும் வெல்ல முடியும். விடாமுயற்சியுடன் உழைப்பவனுக்கு வரும் இடர்கள் அவனை இடர்ப்படுத்த முடியாது ஏமாந்துபோகும் அதாவது இடையூறுகள் வந்தாலும் தடைகளைத் தகர்த்து வெல்வான்.
காளை பாரவண்டியை இழுக்கும் காட்சி மனத்தில் தோன்றும்போது அந்த மனக்காட்சியே நம்முள் ஒரு புதிய ஆற்றலை உண்டாக்கும்.

நிரம்பாத நீர் யாற்று இடுமணலுள் ஆழ்ந்து
பெரும் பார ஆடவர் போல் பெய் பண்டம் தாங்கி
மருங்கு ஒற்றி மூக்கு ஊன்றித் தாள் தவழ்ந்து வாங்கி
உரம் கெட்டு உறுப்பு அழுகிப் புல் உண்ணா பொன்றும்
(சீவக சிந்தாமணி, முத்தி இலம்பகம், விலங்கு கதித் துன்பம், 2784 பொருள்: சிறியதாகிய நீரை உடைய யாற்றிலே; பெருமணலில் வண்டி ஆழ்ந்து போதலாலே; மிகுதியான சுமையையுடைய ஆடவரைப்போல தன்னிடம் பெய்த பண்டத்தைச் சுமந்து; (தமக்குப் போகலா) நிலத்தைச் சார்ந்து மூக்கை நிலத்திலே ஊன்றி; மடி முழந்தாள் இட்டு; இழுத்து; தம் வலியெல்லாங் கெட்டு; பின்பு உறுப்புக்கள் அழுகி; புல்லுண்ணாமற் சாகும்.) என்று சிந்தாமணி மாடு தடை கடந்து செல்வதைப் பாடுவதைப் பரிமேலழகர் சுட்டிக் காட்டினார்.

'மடுத்தவாய்' குறிப்பது என்ன?

'மடுத்தவாய்' என்றதற்கு இடுக்கண் வந்து உற்றவிடத்து, மேடு என்றும் பள்ளம் என்றும் பாராமல், தான் சென்று முகம்மடுத்த இடத்து, விலங்கிய இடங்கள், தடைப்பட்ட இடங்கள், நடவாது புதைந்த இடம், பள்ளமான வழி, தடை ஏற்பட்ட இடம், கடினப்பாதை, தனக்குத் தடையாய இடம், இடையூறுகள் அதிகரித்தல், தடையுண்டாகிய பொழுது, தடை ஏற்படும் இடங்கள், தடை நேர்ந்த இடங்கள், தடை உண்டான இடம் என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பரிமேலழகர் மடுத்தவாய் என்றதற்கு விலங்கியவிடத்து அதாவது வழி மாறி விலகின இடத்து அல்லது குறுக்கிட்ட இடம் எனப் பொருள் கூறுவார். மடுத்தல் என்ற சொல்லுக்கு இடையூறு அல்லது தடை எதிர்ப்படுதல் எனவும் மடுத்தவாய் என்ற தொடர்க்குச் செயலின் எப்பக்கமும் அன்றி துன்பம் வரும் எந்நேரத்தும் என்றும் பொருள் கூறினர். மடு என்பதன் அடியாக வந்த சொல் எனக் கொண்டு பள்ளம் என்ற பொருள் கொண்டு, மடுத்த வாயெல்லாம் என்பதற்குப் பள்ளங்கள் நிறைந்த பாதைகளில் எனவும் உரை செய்வர்.

'மடுத்தவாய்' தடைப்பட்ட இடம் என்ற பொருள் தருவது. இங்கு சுமையேற்றிச் செல்லும் வண்டி மாட்டின் பெருமிதம் பேசப்படுவதால் தடைப்பட்ட இடங்களாவன: ஏற்ற இறக்கம், மேடு, பள்ளம், கரடு முரடான இடங்கள், சேற்று நிலம், களர்நிலம், மணல் நிறைந்த பகுதி போன்றவையாம்.

தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவனுக்கு வந்த இடையூறு துன்பப்படும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விடாமுயற்சியோடு மேற்செல்ல இடர்ப்பாடுகள் உடைபடும் என்னும் இடுக்கணழியாமை பாடல்.

பொழிப்பு

தடையாய இடங்களில் எல்லாம் முனைந்து இழுக்கும் காளை போன்றவன் எதிர்கொள்ளும் இடையூறுதான் துன்பப்படும்.