இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0620



ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
தாழாது உஞற்று பவர்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:620)

பொழிப்பு (மு வரதராசன்): சோர்வு இல்லாமல் முயற்சியில் குறைவு இல்லாமல் முயல்கின்றவர், (செயலுக்கு இடையூறாக வரும்) ஊழையும் ஒரு காலத்தில் தோல்வியுறச் செய்வர்.



மணக்குடவர் உரை: ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர், பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர்.
இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.

பரிமேலழகர் உரை: ஊழையும் உப்பக்கம் காண்பர் - பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்; உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் - அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.
(தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: சோர்வு இல்லாமல் குறைவின்றி எப்பொழுதும் விடாமுயற்சியோடு உழைப்பவர், பயனைத் தடுக்கும் ஊழ்வினையயும் புறங் காண்பர். (வெல்வர்).


பொருள்கோள் வரிஅமைப்பு:
உலைவு இன்றித் தாழாது உஞற்றுபவர் ஊழையும் உப்பக்கம் காண்பர்.

பதவுரை:
ஊழையும்-விதியையும்; உப்பக்கம் காண்பர்-பக்கவாட்டில் காண்பர்; உலைவின்றி- உள்ளத்தில் சோர்வு இல்லாமல்; தாழாது-முயற்சியில் குறைவு இல்லாமல். காலம் தாழ்த்தாமல் எனவும் கொள்வர்; உஞற்றுபவர் -முயற்சிப்பவர்.


ஊழையும் உப்பக்கம் காண்பர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பயன்படாமல் விலக்குகின்ற தீய வினையையும் முதுகு புறங்காண்பர்;
பரிப்பெருமாள்: அது பயன்படாமல் விலக்குகின்ற தீ வினையையும் முதுகு புறங்காண்பர்;
பரிதி: ஊழினையும் புறங்காண்பான்;
காலிங்கர்: தமது விதி தன்னையும் புறத்து இடுவர் போலும்;
காலிங்கர் குறிப்புரை: ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பது விதி தன்னையும் புறத்திடுவர் என்றது.
பரிமேலழகர்: பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்;

'பயனை விலக்குவதாய ஊழினையும் புறங்காண்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாறான விதியும் ஓடக் காண்பர்', 'ஊழ்வினைகளையும் முதுகுகாட்டி ஓடச் செய்து விடுவார்கள்', 'வலிமிக்க விதியையும் புறங்காண்பார்', 'பயனை விலக்குமென்று கூறப்படும் விதியையும் வெல்வர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊழையும் முந்தவிடாமல் காண்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

உலைவின்றித் தாழாது உஞற்று பவர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒரு வினையை மனத்திற் றளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஊழ்தன்னையும் வெல்வ ரென்றது.
பரிப்பெருமாள்: ஒரு வினையை மனத்தில் தளர்வு இன்றி நீட்டியாமல் முயலுமவர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஊழ்தன்னையும் வெல்வர் என்றது.
பரிதி: மனத்தின்கண் தாழ்வின்றி மடியாது முயல்வான் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின் தமக்குத் தருவதாகிய கருமம் செய்யும் இடத்துக் காலத்தாழ்வு வாராமல் பருவத்தோடு வினை முயலும் வேந்தர் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்விலக்கிற்கு இளையாது வினையைத் தாழ்வற முயல்வார்.
பரிமேலழகர் குறிப்புரை: தாழ்வறுதல் - சூழ்ச்சியினும் வலி முதலிய அறிதலினும் செயலினும் குற்றம் அறுதல். ஊழ் ஒருகாலாக இருகாலாக அல்லது விலக்கலாகாமையின் , பலகால் முயல்வார் பயன் எய்துவர் என்பார், 'உப்பக்கம் காண்பர்' என்றார்.தெய்வத்தான் இடுக்கண் வரினும் முயற்சி விடற்பாலதன்று என்பது இவை மூன்று பாட்டானும் கூறப்பட்டது.

'மனத்தில் தளர்வு இன்றி காலத்தாழ்வு வாராமல்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோர்வின்றிக் காலம் தாழ்க்காது உழைப்பவர்', 'மனங்கலங்காமல் இடைவிடாது முயற்சி செய்கிறவர்கள்', 'ஊழ்வினையால் கருதிய பயன் எய்தாத போதிலும், அதனால் வருந்திச் சோர்வடையாமல், மேன்மேலும் முயல்கின்றவர்', 'தளர்ச்சியில்லாமல் வாழ்வு நீங்க முயல்பவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மனத்தளர்வு இன்றி மேன்மேலும் விடாமுயற்சியோடு உழைப்பவர் என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
மனத்தளர்வு இன்றி மேன்மேலும் விடாமுயற்சியோடு உழைப்பவர் ஊழையும் உப்பக்கம் காண்பர் என்பது பாடலின் பொருள்.
ஊழையும் உப்பக்கம் காண்பது என்பது என்ன?

உள்ளத்தில் சோர்வு இல்லாமல், முயற்சியில் குறைவு இன்றி உழைப்பவர், அச்செயலுக்குப் பயன் விளைக்காதவாறு இடையூறாகத் தோன்றும் ஊழையும் ஒதுங்கச் செய்வர்.

ஊழ்தன்னையும் மனிதன் தாழச்செய்ய முடியும் என்று ஊக்கம் தரும் குறள் இது. ஊழ் என்றது விதி, வினை, பால், முறை, கர்மா, தலையெழுத்து எனப் பலவேறாக அறியப் பெறுவதைக் குறிப்பது. இன்றையச் சிந்தனையாளர்கள் நெறி, சூழ்நிலை, உலகத்தியற்கை என இதை அழைக்கின்றனர். மனித வாழ்வின் இன்ப துன்பம், ஆக்கம், இழப்பு, ஆகிய அனைத்திற்கும் காரணமாக அமையும் ஊழின் பெருவலி நாம் அனைவரும் நாளும் உணர்வதுதான். ஊழின் தோற்றத்திற்குப் பல காரணங்கள் அமையக் கூடும். இடம், காலம், அரசு, சமூகம், சுற்றுச் சூழல் முதலிய புறநிலைப் பாங்கெல்லாம் முடிவில், உலகியற்கையாய், ஊழாய் மாறி நிற்கும். அதன் போக்கைக் கணிப்பது எளிதல்ல (வ சுப மாணிக்கம்). ஊழ் இருவகைப்படும். ஒன்று ஆக்கம் தரும் ஆகூழ், மற்றொன்று கேடுகளைத் தரும் போகூழ். ஆகூழை உப்பக்கங்காணத் தேவையில்லை. எனவே இங்கு சொல்லப்படுவது போகூழ் அதாவது தீயூழே. ஊழ் பெருவலி கொண்டது; அதைத் தடுக்க நாம் வேறொரு வழியை எண்ணினாலும் அதற்கும் மேலாக அது முந்தி நிற்கக்கூடியது என வள்ளுவரே பிறிதொரு இடத்தில் கூறியுள்ளார். வலியதே எனக் கொள்ளினும் விடாமுயற்சி அதன் தாக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்கிறார் இங்கு.
பாடலிலுள்ள 'ஊழையும்' என்ற சொல்லிலுள்ள உம்மை ஊழின் இயற்கைப் பெருவலியை வற்புறுத்துவதற்காக வந்தது.

ஊழிற் பெருவலி யாவுள?...(குறள் 380) என்று கேட்ட வள்ளுவரே 'ஊழையும் உப்பக்கம் காண்பர்' என்கிறார். ஊழின் கோட்பாட்டிற்கு உடன்பட்டவர் வள்ளுவர். எவ்வளவு முயற்சி செய்தாலும் ஊழின் விளைவுகளை மாற்ற முடியாது என்பதை உணர்ந்தவர்தான் அவர். ஆயினும் 'எல்லாமே ஊழ் வழித்தான் நடக்கும் எனும் பொழுது நாம் ஏன் செயலாற்ற வேண்டும்' என்ற எதிர்மறை எண்ணம் ஒருவனுக்கு உண்டாகக் கூடாது. அவ்வித நம்பிக்கை அவன் மனத்திலே நிலைத்து விட்டால் எந்த முயற்சியையும் எடுக்காமல் எல்லாவற்றையும் ஊழின் ஆற்றலுக்கே விட்டுவிட்டுச் சோம்பியிருப்பர்; தோற்று விடுவோமோ என்ற அச்சமும், விதி நம்மை இட்டுச் செல்லும்பொழுது தான் ஏன் வருத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அவனைச் செயலின்மைக்கு இழுத்துச் சென்று விடும்; தனிமனிதனோ சமுதாயமோ எந்த முன்னேற்றத்தையும் காண இயலாது. ஊழினை மனித சமுதாயத்தினை முடக்கும் வன்மையுடையதாக ஆக்காது அதனை வெல்லும் ஆற்றலை மக்கள் பெறவேண்டும் என்பது நோக்கம்.
முயற்சி மேற்கொண்டவர் இயற்கையின் ஆற்றலை வென்றிருக்கிறார்கள் என்பதையும் முயன்றஅளவுக்கு பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதையும் அறிந்தவர் வள்ளுவர். எனவே ஊழ் பெருவலியுடையது என்பதற்காகப் பின்வாங்காமல் அதனை எதிர்த்து முயலச் சொல்கிறார். சின்னஞ்சிறு பொதுவான முயற்சி தீச்சூழ் நிலையை வெல்லப் போதாது; ஊழ் அல்லது சுற்றுச் சூழ்நிலை ஒருவனை முயலவிடாது தடைஏற்படுத்தும்; முயற்சிப் பயனை நுகர விடாது தடுக்கும். ஆனால் தளராமல் இடைவிடாமல் ஒருமுறை, இருமுறை என்றல்லாமல் பன்முறை முயலும் நெடு முயற்சி கொண்டோர்க்கு ஊழை வெல்லும் ஆற்றல் கைவரப்பெறும். ஆள்வினையை மேலும் மேலும் மேற்கொள்பவனால் ஊழின் தீய விளைவுகளைத் தடுக்க இயலும்.

இப்பாடலிலுள்ள தாழாது என்ற சொல்லுக்கு முயற்சியில் குறைவு இல்லாமல், நீட்டியாமல், காலம் தாழ்த்தாமல் எனப் பொருள் கொள்வர். தாழ்வறுதலாவது சூழ்ச்சியிலும் வலிமுதலியன அறிதலிலும் செயலிலும் குற்றங் குறையின்மை என்பது பரிமேலழகர் உரை. (ஊழின்) மேற்படுமாறு அதற்குத் தாழ்வுபடாது (மிகுந்த முயற்சி) என்றும் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் என்றும் பிறர் உரை கூறினர்.

ஊழையும் உப்பக்கம் காண்பது என்பது என்ன?

ஊழ் என்னும் உலகத்தியற்கைக்கு உள்ள பேராற்றலைப் பெருவலி எனக் குறிப்பார் வள்ளுவர். அவ்வலிய ஊழையும் முயற்சி கொண்டு ஒதுங்கச் செய்யலாம் என்று இக்குறளில் கூறுகிறார்.
தீயஊழ், மனித முயற்சி இவற்றுள் எது வலியது? எது வெல்லும்? என்று இக்குறளை இவற்றிற்கிடையேயான போராட்டமாகப் பலர் கருத்துக் கூறினர்.
ஊழ் என்பது இயற்கையின் ஆற்றல். எனவே அதைக் கேள்விக்குரியதாக்க இயலாது. அதனுடன் போரிட்டு வெல்லவும் முடியாது. ஆனாலும் அதன் தாக்கத்தை விலக்கிக்கொள்ள முயலலாம். அந்த முயற்சியையே, பொருள்நயத்திற்காக, ஊழை வெல்வதாகக் கூறுகின்றனர்.
வெள்ளம் வந்தால் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது; அதை எப்படி ஆக்க மேம்பாடுகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என வழிகளை ஆராய்வது முயற்சி. வெள்ளமே உண்டாகக்கூடாது எனச் செய்ய முடியுமா? அது, இயற்கையின் வலிமையாதலால், முடியாது. அதைப் போன்று தனிமனித வாழ்விலும் துயரங்கள் நம்மைச் சேரும்போது துவண்டுவிடாமல் சோர்வடைந்து விடாமல் தொடர்ந்து முயல வேண்டும். அப்படி முயல்கிறவர்கள் ஊழால் தோன்றும் துன்பங்களைத் தள்ளி நிற்கச் செய்வர் என்பதே இக்குறள் கூறவருவது.
ஊழ்க் கோட்பாட்டிற்கு உடன்பட்டவராயினும் ஊழின் வழியது வாழ்க்கை அமைவு என்பதை வள்ளுவர் முற்றாக ஒப்புக்கொண்டவர் அல்லர். தோல்விகள், துன்பங்கள், இவற்றை அறைகூவலாக ஏற்றுக் கொண்டு கடும் உழைப்பின் வழி தீயூழின் அழிவுகளிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்பது இக்குறட்கருத்து எனக் கொள்ளவேண்டும். ஊழை அடக்கி ஒடுக்கவோ புறமுதுகிட்டு ஓடச் செய்யவோ முடியாது. தளராது சலிக்காது மேற்கொள்ளும் விடா முயற்சியால் ஊழை விலகி நிற்கச் செய்யலாம். ஊழின் தாக்கத்தை ஆள முயற்சி செய்துகொண்டே இரு என்பதே அவர் கருத்தாக இருக்க முடியும்.

வள்ளுவர் உப்பக்கம் என்ற சொல்லைத் தேர்ந்து இங்கு பயன்படுத்துகிறார். அப்பக்கம் என்பது அந்தப் பக்கம்; இப்பக்கம் என்பது இந்தப்பக்கம். உப்பக்கம் எந்தப் பக்கம்? இடைப்பட்ட பக்கம் என்று ஒரு பொருள் உள்ளது. உரையாசிரியர்கள் பலர் முதுகுப்பக்கம் எனச் சொல்லி தாளாண்மையாளர் ஊழைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்வர் என்கின்றனர். இராமாநுசக்கவிராயர் என்னும் உரையாசிரியர் அது எதிர்முகமின்றிப் பின்னிற்கும் பொருளைச் சுட்டும் என்கிறார். முயற்சியால் ஊழை முன்னும் பக்கமும் நில்லாது பின்னுறச் செய்தல் கூடும் என்று மற்றொரு உரையாளர் கூறுகிறார். ஊழ்வினையையும் துளைத்து அதன் உள்ளிடத்தையுங் காண்பர் என உப்பக்கம் என்பதற்கு 'உள்ளிடம்' எனப் பொருள்காண்கிறார் இன்னொரு உரைகாரர்.
ஒருவன் என்ன வழிகண்டாலும் ஊழ் முந்துறும் அதாவது முற்பட்டு நிற்கும் அல்லது முந்திச் செல்லும் என்று 'ஊழிற்பெருவலி..' பாடலில் சொல்லப்பட்டது. முந்திச் செல்வதாய் இருந்தாலும் முதுகைத்தானே பார்க்கவேண்டும். முதுகைக் காட்டும் ஊழ்தானே அங்கு வெல்கிறது? இங்கு மட்டும் முதுகைக்காட்டும் ஊழ் ஏன் தோற்று ஒடிப்போவதாகக் கொள்ளவேண்டும்? எனவே உப்பக்கம் என்பதற்குப் பக்கவாட்டில் பார்ப்பர் எனக் கொள்ளலாம். ஊழை முந்திச் செல்லவிடாமல் இணையாகச் சென்றால் பக்கவாட்டில்தானே காணமுடியும். பக்கவாட்டில் காண்பது என்பது ஊழை முந்தவிடாமல் இருக்கச் செய்வதாகும். அதற்கு முயல்பவரும் தோற்றவர் ஆகமாட்டார்.

மனத்தளர்வு இன்றி மேன்மேலும் விடாமுயற்சியோடு உழைப்பவர் ஊழையும் முந்தவிடாமல் காண்பர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வினையுடைமை ஊழினை முந்தவிடாமல் செய்யும் ஆற்றல் கொண்டது.

பொழிப்பு

தளராத, இடைவிடாத முயற்சியுடையோர் ஊழ் முற்பட்டுச் செல்லாமல் பார்த்துக்கொள்வர்.