இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0619



தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:619)

பொழிப்பு (மு வரதராசன்): ஊழின் காரணத்தால் ஒரு செயல் முடியாமல் போகுமாயினும், முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலியையாவது கொடுக்கும்.

மணக்குடவர் உரை: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும் ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: தெய்வத்தான் ஆகாது எனினும் - முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்; முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் - முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது.
(தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.)

இரா சாரங்கபாணி உரை: ஊழால் கருதிய பயன் கைகூடாதாயினும், முயற்சி தன் உடலுழைப்புக்கேற்ற பயனை எப்பொழுதும் தரும். (ஊழ் துணையாய வழி பயன்மிகும் என்பது கருத்து.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.

பதவுரை:
தெய்வத்தான்-தெய்வத்தால்; ஆகாது-ஆகமாட்டாது; எனினும்-என்றாலும்; முயற்சி-முயலுதல்; தன்-தனது; மெய்-உடம்பு; வருத்தக்கூலி-உழைப்பிற்கு ஏற்ற பயன்; தரும்-கொடுக்கும்.


தெய்வத்தான் ஆகாது எனினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இல்லையாயினும்;
பரிப்பெருமாள்: புண்ணியம் இன்மையால் ஆக்கம் இன்றாயினும்;
பரிதி: தெய்வ சகாயத்தினாலேயாகிற காரியம்; [சகாயம் - துணை]
காலிங்கர்: இவ்வுலகத்து ஒருவர்க்கு விதியினால் சில காலம் ஆக்கம் இலதாயினும் இருந்ததேயாயினும்;
காலிங்கர் குறிப்புரை: தெய்வத்தான் என்றது விதியினால் என்றது.
பரிமேலழகர்: முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும்;

'புண்ணியம் இன்மையால்/தெய்வ சகாயம் இன்மையால்/விதியினால்/ பால்வகையால் ஆக்கம் இன்றாயினும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தெய்வத்தால் ஒரு செயல் முடியாது போகினும்', 'ஊழால் கருதிய பயன் கைகூடாதாயினும்', 'செய்த முயற்சி வரையறை இல்லாமையாற் கருதிய பயனைத் தராவிடினும்', 'முயன்ற வினை இயற்கைச் சூழ்நிலையால் எதிர்பார்த்த பயனைத் தாராது போனாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தெய்வத்தின் துணை இல்லாமல் போனாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
மணக்குடவர் குறிப்புரை: இது புண்ணியமில்லையாயினும் பயன் கொடுக்கும் என்றது.
பரிப்பெருமாள்: ஒருவினையின் கண்ணே முயல்வானாயின் முயற்சி தம் உடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன் கொடுக்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புண்ணியம் இன்மையாயினும் பயன் படும் என்றது.
பரிதி: தன் முயற்சியாலே ஒன்று பாதி பலிக்கும் என்றவாறு.
காலிங்கர்: பின்பு குறிக்கொண்டு முயல்வான் ஆயின், அம்முயற்சிதானும் விதியினால் விளைவது ஆகலின், மற்று இதுவும் தம் மெய் வருத்தத்தால் உள்ள பலத்தினை இறுதிக்கண் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது.
பரிமேலழகர் குறிப்புரை: தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும் என்பது உம்மையால் பெற்றாம். இருவழியும் பாழாகல் இன்மையின், தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து.

'முயற்சி மெய் வருத்தத்தால் உள்ள பயனைக் கொடுக்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயன்றால் அதற்குரிய கூலி உண்டு', 'முயற்சி தன் உடலுழைப்புக்கேற்ற பயனை எப்பொழுதும் தரும். (ஊழ் துணையாய வழி பயன்மிகும் என்பது கருத்து.)', 'அம்முயற்சிக்கு இடமாகிய உடம்பு வருந்திய வருத்தத்தின் அளவு கூலிதரும். (முற்றிலும் பாழாகாது.)', 'முயற்சி தன் உடம்பு வருந்திய வருத்தத்திற்கேற்பப் பயன் தரும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

முயற்சி தன் உடலுழைப்புக்கேற்ற பயனைத் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தெய்வத்தின் துணை இல்லாமல் போனாலும் முயற்சி மெய்வருத்தக் கூலி தரும் என்பது பாடலின் பொருள்.
'மெய்வருத்தக் கூலி' குறிப்பது என்ன?

தெய்வத்தின் துணையில்லாமையால் மேற்கொண்ட செயலில் எண்ணிய ஆதாயம் கிடைக்காமல் போனாலும் உடம்பு வருத்த உழைத்ததன் அளவுக்குப் பயன் கிடைத்தே தீரும்.

தெய்வத்தான் ஆகாது என்று ஒன்றும் இல்லை. தெய்வத்தால் மட்டுமே எல்லாம் ஆகும். ஆனால் மனிதரால் விளக்கமுடியாத காரணங்களால் சிலர் சிறிய முயற்சியால் பெரும் பயன் அடைகின்றனர். எந்த அளவுக்கு முயல்கிறார்களோ அதற்கு மேல் இயல்பு அளவுக்கு மிகுந்து அவர்களுக்குப் பயன் கிடைக்கிறது. இதை நாம் தெய்வத்தால் ஆகியது, கடவுளின் அருளால் உண்டானது அல்லது ஆகூழால் தோன்றியது என்கிறோம். இந்நிலையில், தெய்வத்தின் துணை இல்லையானால் நமக்கு ஒன்றுமே கிடைக்காதா என ஆள்வினையுடையோர் எண்ணத் தொடங்குவர். அவர்களுக்கு வள்ளுவர் தரும் அறிவுரை: 'தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி செய்த அளவு வரவேண்டிய உரிமைப் பயன் கிடைத்தே தீரும்' என்பது.
இக்குறளிலுள்ள 'தெய்வத்தால் ஆகாது எனினும்' என்ற தொடரை 'தெய்வத்தால் நாம் எண்ணும் அளவு கூலி தர ஆகாது என்றாலும்' எனக் கூட்டிக்கொண்டால் பொருள் புரிந்துகொள்ள எளிதாகும். தெய்வம் தரும் கூலி என்பது ஆகூழால் கிடைப்பது. மற்றவை உழைப்புக்கேற்ற ஊதியம். தெய்வக் கூலி கிடைக்காவிட்டாலும் ஒருவனுக்கு முயற்சிக்கூலி உறுதியாக உண்டு. எனவே விடாது முயல்க என்கிறது இக்குறள்.
முயற்சியின் பயன் கூறும் பாடல் இது; உழைப்புக்கேற்ற பயன் உண்டு என்கிறது.

காலிங்கர் உரையைத் தழுவி பரிமேலழகர் தரும் உரை தெளிவு பயக்கிறது. இவர் தனது பொழிப்புரையில் 'முயன்ற வினை பால்வகையால் கருதிய பயனைத் தாராதாயினும், முயற்சி தனக்கு இடமாய உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலிஅளவு தரும்; பாழாகாது' எனக் கூறி விரிவுரையில் 'தெய்வத்தான் ஆயவழித் தன் அளவின் மிக்க பயனைத் தரும்; முயற்சி ஊழ்வகையால் கருதிய பயனைத் தந்தவிடத்தும் தராதவிடத்தும் பயனின்றி வீணாகாது. தெய்வம் நோக்கியிராது முயல்க என்பது கருத்து' எனக்கூறுகிறார். இவர் உரையில் உள்ள 'தெய்வம் நோக்கியிராது முயல்க' என்றது இக்குறளின் பொருண்மையைத் தெற்றென விளங்கச் செய்கிறது. வீணாகாது என்பது மேற்கொண்ட வினை ஊழின் துணையால் முற்றுப்பெற்றவிடத்தும்பெரும்பயனைத் தருதலும் ஊழின் தடையால் முற்றுப் பெறாதாயினும் முயற்சினளவு பயனைத் தருதலும் ஆம்.
மெய்ம் முயற்சிக் கேற்ற பயன் எப்பொழுதும் கிடைக்கும்; அம்முயற்சிக்கு ஊழ் (தெய்வம்) துணையாய போது, பயன்மிகும் என்பது இவர் உரையின் சுருக்கம்.

'தெய்வத்தால் முடியாததை மனிதன் செய்ய முயலலாம்' என்றும் 'மனித முயற்சியை இறைப்பொருளின் எல்லைக்கு ஏற்றிச் செல்கிறார் வள்ளுவர்' என்றும் இக்குறளுக்கு விளக்கம் கூறியுள்ளனர். அவை ஏற்கத்தக்கனவாக இல்லை.

'மெய்வருத்தக் கூலி' குறிப்பது என்ன?

'மெய்வருத்தக் கூலி' என்ற தொடர்க்கு தன்னுடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன், தம் உடம்பினால் வருந்திய வருத்தத்தின் அளவு பயன், ஒன்று பாதி பலிக்கும், தம் மெய் வருத்தத்தால் உள்ள பலத்தினை, தன் உடம்பு வருந்திய வருத்தத்தின் கூலி, தன் உடம்பை வருத்திய வருத்தத்தின் அளவு கூலி, தன் உடலுழைப்புக்கேற்ற பயன், எவ்வளவுக்கெவ்வளவு உடல் உழைத்த பலன், தன் உடலை வருத்திப் பாடுபட்ட அளவுக்குரிய கூலி, உடம்பு வருந்திய வருத்தத்தின் அளவு கூலி, தன் உடம்பு வருந்திய வருத்தத்திற்கேற்பப் பயன், உடம்பு பட்ட பாட்டின் அளவு பயன் என உரையாளர்கள் பொருள் கூறினர்.

மெய்வருத்தக் கூலி என்பதற்கு உடம்பு உழைப்புக்கேற்ற ஊதியம் என்பது நேர் பொருள். இங்கு உடலுழைப்பு என்பது முயற்சியைக் குறிக்கும். முயற்சிக்கேற்ற பயன் பற்றிக் கூறும் குறள் இது.
சிறு முயற்சியால் பெரும் பயன் விளைவதும், பெருமுயற்சியால் சிறுபயன் விளைவது அல்லது எண்ணிய அளவு பயன் விளையாமல் போவது இவற்றை அவ்வப்போது காண்கிறோம். இதற்குப் பொதுவான காரணம் ஊழ் என்பர். ஊழ் உளதாயவழி ஒரு வருத்தமும் உறாமலே பெரும்பயன்கள் கிடைக்கலாம். அது ஒருபுறமிருக்க, ஒருவனது உழைப்புக்கேற்ற ஊதியம் உறுதியாக உண்டு என்கிறது குறள். ஊழ் உழைப்புடன் விளையாடுவதில்லை. அதாவது ஊழ் இல்லாத வழியும் உடம்பு வருந்திய அளவுக்குப் பயன் பொருந்தாமல் போகாது என்கிறார் வள்ளுவர்.
அடுத்தவன் இயல்புக்கு மீறி பயன் பெற்றால் அது அறக்கடவுளின் விதி. அதை யாரும் மாற்றமுடியாது. அது வேறு. இது வேறு. தெய்வத்தின் அருளைமட்டும் நம்பி இராதே; நீ உன்பாட்டுக்கு முயற்சியில் ஈடுபடு. உன் உழைப்பை விட்டுவிடாதே. எந்த முயற்சியும் பயனின்றி வீண் போகாது; உழைப்புக்கான ஊதியம் இறுதியாகக் கிடைக்கும் என்பது இக்குறள் கூறவரும் செய்தி.

'மெய்வருத்தக் கூலி' என்பது மெய்ம்முயற்சி அளவுக்குப் பயன் உண்டு என்பதைச் சொல்வது.

தெய்வத்தின் துணை இல்லாமல் போனாலும் முயற்சி தன் உடலுழைப்புக்கேற்ற பயனைத் தரும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வினையுடைமை உள்ள அளவு பயன் உறுதியாக உண்டு.

பொழிப்பு

தெய்வத்தின் துணை இல்லாமல் போனாலும் முயற்சி உடலுழைப்புக்குரிய பயன் கொடுக்கும்.