இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0617



மடிஉளாள் மாமுகடி என்ப மடியிலான்
தாள்உளாள் தாமரையி னாள்

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:617)

பொழிப்பு (மு வரதராசன்): ஒருவனுடைய சோம்பலிலே கரிய மூதேவி வாழ்கின்றாள்; சோம்பல் இல்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் வாழ்கின்றாள்.

மணக்குடவர் உரை: வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்; அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.
இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.

பரிமேலழகர் உரை: மா முகடி மடி உளாள் - கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும்; தாமரையினாள் மடிஇலான் தாள் உளாள் என்ப - திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
(பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: மூதேவி ஒருவனது சோம்பலிலே இருப்பாள் என்றும் சோம்பலில்லாதவனின் முயற்சியிலே தாமரையில் வாழும் திருமகள் இருப்பாள் என்றும் பெரியோர் கூறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாமுகடி மடிஉளாள் என்ப; தாமரையினாள் மடியிலான் தாள்உளாள்.

பதவுரை:
மடிஉளாள்-சோம்பலின்கண்ணே இருப்பாள்; மா-கரிய; முகடி-மூதேவி; என்ப-என்று சொல்லுவர்; மடியிலான்-சோம்பலில்லாதவன்; தாள்-முயற்சி; உளாள்-உறைவாள்; தாமரையினாள்-திருமகள்.


மடிஉளாள் மாமுகடி என்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்யுங்கால் அதனைச் செய்யாது சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்;
பரிப்பெருமாள்: வினை செய்யுங்கால் சோம்புவானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்;
பரிதி: மடித்த புத்தி சேட்டையைத் தரும் என்றவாறு.
காலிங்கர்: தனக்கு ஏற்ற கருமத்தின்கண் முயலாது மடிப்பானுடைய மடியானது, மற்று இது அளித்தாள் யார் எனின் வறுமை நெறியில் பெரியாளாகிய மூதேவி என்று சொல்லுப சான்றோர்;
பரிமேலழகர்: கரிய சேட்டை ஒருவன் மடியின் கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்;

'சோம்பியிருப்பானது சோம்பலின்கண்ணே மூதேவி உறைவள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோம்பேறியின் மடியில் இருப்பாள் மூதேவி', 'முயற்சியில்லாத சோம்பேறியிடத்தில் மூத்தவளாகிய மூதேவி தங்கியிருப்பாள் என்றும் (அறிவறிந்த மேலோர்கள்) சொல்லுவார்கள்', 'கரிய நிறமுடைய மூத்தவள் ஒருவனது சோம்பலின் கண்ணே தங்குவள் என்று அறிஞர் கூறுவார்கள்', 'பெரிய துன்பக் கடவுள் சோம்பலை இருப்பிடமாகக் கொண்டுளாள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சோம்பலின் கண்ணே மூதேவி இருப்பாள் என்று கூறுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

மடியிலான் தாள்உளாள் தாமரையி னாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.
மணக்குடவர் குறிப்புரை: இது வினையை மடியின்றிச் செய்யவேண்டுமென்பது கூறிற்று.
பரிப்பெருமாள்: அதனைச் சோம்பலின்றி முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவளென்று சொல்லுவர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினையை மடியின்றிச் செய்யவேண்டும் என்றது..
பரிதி: மடித்த புத்தி சேட்டையைத் தரும் என்றவாறு.
காலிங்கர்: மற்று மடியானது தன்னிடத்து இல்லாதோனது தாளாண்மை இடத்தாள் திருமகள் என்றவாறு.
பரிமேலழகர்: திருமகள் மடியிலாதானது முயற்சிக்கண்ணே உறையும் என்று சொல்லுவர் அறிந்தோர்.
பரிமேலழகர் குறிப்புரை: பாவத்தின் கருமை அதன் பயனாய முகடிமேல் ஏற்றப்பட்டது. மடியும் முயற்சியும் உடையார்மாட்டு நிலையை அவைதம்மேல் வைத்துக் கூறினார். இவை இரண்டு பாட்டானும் அவ்விருமைக்கும் ஏது கூறப்பட்டது.

'முயலுபவன் முயற்சியின்கண்ணே திருமகள் உறைவள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உழைப்பவன் அடியில் இருப்பாள் சீதேவி', 'சோம்பலில்லாதவனுடைய விடாமுயற்சியில் தாமரையாளாகிய செல்வ மகள் வீற்றிருப்பாள்', 'திருமகள் சோம்ப லில்லாதவனுடைய முயற்சியின் கண்ணே தங்குவள்', 'செல்வக் கடவுள் (திருமகள்) சோம்பல் இல்லாதவனின் முயற்சியை இருப்பிடமாகக் கொண்டுளாள்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

சோம்பலில்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சோம்பலின் கண்ணே மாமுகடி இருப்பாள்; சோம்பலில்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள் என்று கூறுவர் என்பது பாடலின் பொருள்.
'மாமுகடி', 'தாமரையினாள்' என்பவர்கள் யாவர்?

சோம்பல் உள்ள இடத்தில் மூதேவியும் முயற்சியுள்ள இடத்தில் திருமகளும் காணப்படுவர்.

சோம்பலினுள் முகடி தங்குவாள் என்றும் சோம்பலில்லாதவன் முயற்சியினுள் தாமரையினாள் தங்குவாள் எனக் கூறுவர் என்கிறது பாடல். முகடி மூத்தவளான (தவ்வை அதாவது அக்கா) மூதேவியையும் தாமரையினாள் இளையவளான சீதேவியையும் குறிக்கும் சொற்கள். மூதேவி என்பவள் வறுமையின் குறியீடாகவும் தாமரையினுள் வீற்றிருக்கும் சீதேவி செல்வத்தின் அடையாளமாகவும் நம்பப்படுபவர்கள். இவர்கள் முறையே சோம்பலின் உருவகமாகவும் முயற்சியின் உருவகமாகவும் இங்கு காட்டப்பட்டுள்ளனர்.

சோம்பல் உள்ளவனிடத்து மூதேவியும், முயற்சியுள்ளவனிடத்து இலக்குமியும் தங்குவர் என்றதை, சோம்பலில் மூதேவியும் முயற்சியில் திருமகளும் தங்குவர் என்று கூறப்பட்டது. சோம்பலே மூதேவிக்கு இருப்பிடம். முயற்சியில் திருமகள் விளங்குவாள்.
உழவேண்டிய நேரத்தில் சோம்பி இருந்துவிட்டு, அறுக்கும் போது அரிவாளைத் தூக்கிக் கொண்டு வந்தால் வயக்காட்டில் என்ன இருக்கும்? ஒன்றுமே இராது. உழைக்காமல், முயற்சி யில்லாமல் செல்வம் சேராது. மடியன் வறியனாவான். முயற்சியாளன் செல்வனாவான் என்பது இக்குறளின் திரண்ட பொருள்.

'மடி' என்ற சொல் உடலுறுப்பையும் குறிக்கும்; அதற்கு சோம்பல் என்ற பொருளும் உண்டு. அதுபோல் 'தாள்' என்ற சொல் தாளாண்மை அதாவது முயற்சியுடைமையைக் குறிக்கும் சொல்லாகவும் கால் என்ற உடலுறுப்புக்குப் பெயராகவும் உள்ள ஒன்று. ஆகையால் இக்குறளுக்குச் 'சோம்பியிருப்பவனின் மடியில் கரியநிற மூதேவி குடியிருப்பாள்; சோம்பலின்றி உழைப்பவனது காலடியின் கண்ணே செல்வமகள் வந்து தங்கியிருப்பாள்' என்றும் பொருள் கூறுவர்.
தண்டபாணி தேசிகர் 'மடியென்பது மடி என்னும் உறுப்பிற்கும் சோம்பற்கும் பெயராதலும் 'தாள்' என்பது காலுக்கும் முயற்சிக்கும் பெயராதலும் ஆகிய இயைபு இனிமை பயப்பதொன்று. 'அசந்து நடப்பவன் அடிமடியில் அக்கா; கடுகி நடப்பவன் காலிலேயே சீதேவி' என்ற பழமொழியுங் காண்க' என்று மடி, தாள் என்னும் ஒவ்வொரு சொல்லுக்கும் இருபொருள் கூறிப் பழமொழிப் பொருத்தமும் காட்டுவார்.

'மாமுகடி', 'தாமரையினாள்' என்பவர்கள் யாவர்?

'மாமுகடி', 'தாமரையினாள்' என்பவர்கள் இந்தியத் தொன்மங்களில் கூறப்படும் தெய்வங்கள். மாமுகடி என்பதற்கு கரிய(மா) மூதேவி என்றும் தாமரையினாள் என்பதற்கு தாமரை மலரில் உறைபவள் என்றும் பொருள். இவர்கள் இருவரும் தேவர்களும் அசுரர்களும் திருப்பாற் கடலைக் கடைந்தபோது தோன்றியவர்கள். திருமகளுக்கு முன் மூதேவி பிறந்ததால் மூத்தாள் எனப்பட்டாள். இவள் மக்களுக்குச் சோம்பல் முதலியவற்றை உண்டாக்கும் தெய்வமாவாள். அரவத்தை பாம்பு அணியாகவும் கழுதையை ஊர்தியாகவும் காக்கையைக் கொடியாகவும் துடைப்பத்தைப் படையாகவும் உடையவள் என்பர். அவளது பேய்த்தன்மையாலும் வறுமையின் பஞ்சத்தன்மையாலும், அவளுக்குக் கருமை நிறம் கொள்ளப்பட்டது. குறளில் மற்றுமொரு இடத்தில் (குறள் 936) சூது, முகடியாக உருவகப்படுத்தப்படுகிறது.
திருமகள் மூதேவியின் தங்கையாவள். செல்வத்திற்கு உரிய கடவுளாக திருமகளைக் கூறுவது மரபு. சீதேவி வாழும் இடத்தில் செல்வம் தழைக்கும் என்பது நம்பிக்கை. சோம்பல் கொள்ளாதவனது விடாமுயற்சியில் இத்தெய்வம் தங்கும் என இக்குறள் கூறுகிறது. குறள் திருமகளைச் செய்யவள், செய்யாள் என்ற பெயர்களாலும் குறிக்கும்.
குறளில் 'என்ப' (என்று கூறுவர்) என்ற சொல்லாட்சி இருப்பதால் தாமரையினாள், முகடி என்போர் மரபு நடையாக மட்டுமே காட்டப்பட்டனர் என அறியலாம்.

'மாமுகடி', 'தாமரையினாள்' இரண்டும் வறுமை, செல்வமாகிய இரண்டின் படிமங்களாகும்.

சோம்பலின் கண்ணே மூதேவி இருப்பாள்; சோம்பலில்லாதவனுடைய முயற்சியிலே திருமகள் தங்கியிருப்பாள் எனச் சொல்வர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வினையுடைமை உள்ள இடத்தில் செல்வக் கடவுள் இருக்கும்.

பொழிப்பு

சோம்பல் இடத்து மூதேவி இருப்பாள் எனக் கூறுவர்; சோம்பலில்லாதவனின் முயற்சியிலே தாமரையில் இருக்கும் திருமகள் உறைவாள்.