இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0612



வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு

(அதிகாரம்:ஆள்வினையுடைமை குறள் எண்:612)

பொழிப்பு (மு வரதராசன்): தொழிலாகிய குறையைச் செய்யாமல் கைவிட்டவரை உலகம் கைவிடும்; ஆகையால் தொழிலில் முயற்சி இல்லாதிருத்தலை ஒழிக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று.
இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று - வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது; வினைக்கண் வினைகெடல் ஓம்பல் - அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.
(குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.

மயிலை சிவமுத்து உரை: ஒரு வேலையை முற்றும் செய்து முடிக்காமல் அரை குறையாக விட்டவரை உலகமும் கைவிட்டுவிடும். ஆதலால் செய்யும் தொழிலில் (அரைகுறையாகச் செய்து) அதைக் கெடுத்துவிடுதலைத் தவிர்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைக்குறை தீர்ந்தாரின் உலகு தீர்ந்தன்று; வினைக்கண் வினைகெடல் ஓம்பல்.

பதவுரை:
வினைக்கண்-வேலையில்; வினைகெடல்-தொழிலைக் கெடுத்துவிடல்; ஓம்பல்-காத்தல்; வினைக்குறை-அரைகுறையாக வேலை செய்தல்; தீர்த்தார்-கைவிட்டவர்; தீர்ந்தன்று-விட்டது; உலகு-உலகம்.


வினைக்கண் வினைகெடல் ஓம்பல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க;
பரிப்பெருமாள்: வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க;
பரிதி: ஒரு காரியத்தை எடுத்தால் அந்தக் காரியம் குறையாமல் முடிப்பான்;
காலிங்கர்: அரசரானோர் தமக்குத் தகுவதாகிய கருமம் செய்ய முயலும் இடத்து அதற்குப் பழுது வராமல் பாதுகாத்து (ச்செய்யப்படும்);
பரிமேலழகர்: அதனான் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக.

'வினைசெய்யுங் காலத்து வினைகெடுதலைத் தவிர்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எடுத்த வினையை அரைகுறையின்றிச் செய்க', 'ஆதலால் தொடங்கிய தொழிலை முடிக்காது அரைகுறையாக விடுதலைத் தவிர்க', 'ஆதலால் காரியத்தைத் தொடங்கியபின் அதை இடையில் விட்டுவிடக் கூடாது', 'ஆதலின் செய்யப்படும் வினைக்கண் தவிர்ந்திருத்தலை ஒழிக', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும் என்பது இப்பகுதியின் பொருள்.

வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதன்று.
மணக்குடவர் குறிப்புரை: இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
பரிப்பெருமாள்: வினைக்குறையை முடித்தாரினின்றும் உலகம் விடப்பட்டதில்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தொடங்கின வினையைக் குறைபட விடலாகாதென்றது.
பரிதி: அப்படிக்கு ஏதொரு காரியமும் முடிப்பவனை உலகம் கைவிடாது என்றவாறு.
காலிங்கர்: வினை குறைபாடு2 நீங்கிய பெரியோர் மாட்டே தெளிவுற நிலைபெற்றது இவ்வுலகம் என்றவாறு.[வினை குறைபாடு-எடுத்த முயற்சியில் முடிவு பெறாமலிருப்பது]
பரிமேலழகர்: வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது.
பரிமேலழகர் குறிப்புரை: குறை - இன்றியமையாப் பொருள். அது 'பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே' (புறநா.188) என்பதனானும் அறிக. இதற்கு 'வினை செய்ய வேண்டும் குறையை நீங்கினாரின் நீங்கிற்று' என்று உரைப்பாரும் உளர்.

'வினையாகிய குறையைச் செய்யாது விட்டாரை உலகம் விட்டது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கடமையை விட்டாரை உலகம் விட்டு விடும்', 'வினைக்குறையை நிறைவேற்றாது விட்டாரை உலகம் கைவிட்டது', 'ஒரு காரியத்தைச் செய்துவிடுவதாக அதைத் தொடங்கி (அதை முடிக்காமல்) காரியத்தை இடையில் விட்டு விடுகிறவனை உலகத்தாரும் கவிட்டு விடுவார்கள்', 'வினையின் குறையைச் செய்யாது விட்டாரை உலகம் கை விட்டது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் என்பது பாடலின் பொருள்.
'வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு' என்ற பகுதி கூறுவது என்ன?

ஒரு செயலை முழுதும் முடிக்காமல் குறையாக விட்டவரை உலகமும் கைவிட்டுவிடும். ஆதலால் செய்யும் தொழிலைக் கெடுத்துவிடாமல் அதை நிறைவாக முடிக்குமாறு காக்க.

கொண்ட பணியைத் தொடங்கிய பிறகு இடைவிடாது முயன்று அதை முடித்துவிடவேண்டும். செயல் செய்யத் தொடங்கி செயலை முற்றாகச் செய்து முடிக்காது இடையில் விடுவது ஒருவரது பெருமையைக் குறைக்கும். உலகம் அவர்களை ஒரு பொருளாக மதிக்காது புறக்கணிக்கும்.
'வினைக்கண் வினைகெடல் ஓம்பல்' என்றது ஆளும் வினையில் மடி போன்றவை புகுந்து கேடு உண்டாகாதபடி பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்த்துகிறது. செயல் கெடுவதற்கான கடினமான சூழலிலும், விடாமல் காத்துக்கொள்க என்று பாடல் சொல்கிறது.
வினைக்குறை என்றது செயலின் முற்றுப்பெறாத குறைநிலையை, முயற்சியை விட்டு விடாமல் செயல் முழுமையாக நிறைவேற்றப்படவேண்டும் என்பது சொல்லப்படுகிறது. அவ்வாறு முயற்சியை இடைவிடாமல் செய்தவரையே இவ்வுலகம் உயர்ச்சியாக வைத்துப் போற்றும் என்பது கருத்து.

உழவுத் தொழிலின் செயல்முறையை இக்குறளுக்குக் காட்டாக்கலாம். வெள்ளாமை செய்வோர் உழுதபின் நாற்று நட்டதோடு அந்த செயலைப் பாதியிலேயே நிறுத்தி விட்டால் விளைச்சலைக் காண இயலாது; தண்ணீர் பாய்ச்சுதல், உரம் போடுதல், களை எடுத்தல், அறுவடை செய்தல், அடித்தல், தூற்றுதல், குவித்தல், நெல் மூடையாக்குதல் போன்ற பலவேறு தொடர்பணிகள் அவ்வக்காலங்களில் நடைபெற்று முழுமை அடைந்தால்தான் தொழிலின் பயனை எய்த முடியும்.
ஒரு செயலில் ஈடுபடும்போது, அச்செயல் கெடும்படியாக செய்வதை, அதாவது அதை கைவிடுதல், நீட்டித்தல் ஆகிய குறைபாடுகள் தவிர்க்கப்படவேண்டியன. ஏற்றுக்கொண்ட வினைக்குக் கேடுவராமல் மெனக்கெட்டு அதாவது சிரத்தைகொண்டு, மற்றவற்றை ஒதுக்கி வைத்துவிட்டு, முடிக்க வேண்டும். அரைகுறையாய் வேலையைச் செய்யாதே என்பது இக்குறள் கூறும் செய்தி.

'வினைக்குறை தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு' என்ற பகுதி கூறுவது பொருள் என்ன?

இப்பகுதியில் உள்ள வினைக்குறை என்ற தொடர்க்கு '(எச்சம் உண்டாகுமாறு) குறைபடச் செய்தல்' என மணக்குடவரும் 'குற்றம்' எனக் காளிங்கரும் 'இன்றியமையாது செய்யத் தகும் தொழில்' என்று பரிமேலழகரும் உரை கூறியுள்ளனர்.
'தீர்ந்தாரின்' என்பதற்கு 'வினைக்குறையை முடித்தவர்' என மணக்குடவர் முதலானோரும் 'வினைக்குறையை விட்டவர்' எனப் பரிமேலழகரும் இருதிறமாகப் பொருள் கண்டனர்.
இதனால் 'வினைக்குறையை முடித்தவர்களை அதாவது வினைகளைக் குறைவின்றி இறுதிவரை முடித்தவர்களை உலகம் விடாது' என்றும் 'வினைகளைக் குறைவாகவே வைத்து முடிக்காமல் விட்டவர்களை உலகம் விட்டு விடும்' என்றும் இப்பகுதிக்குப் பொருள் கூறினர். ஒன்று நற்பயன் கூறி வினையை முடிக்கத் தூண்டுவது. மற்றொன்று கேடு கூறி முயலத் தூண்டுவது. இவர்களிடை காணப்படும் வேறுபாடு 'வினைக்குறை' என்பதை 'வினையாகிய குறை' எனவும் 'வினையினது குறை' எனவும் பொருள் கண்டது ஒன்று. தீர்ந்தன்று என்பதில் அன்சாரியையாகக் கொண்டு 'தீர்ந்தது' என உடன்பாட்டு வினைமுற்றாகவும் 'விட்டதன்று' என எதிர்மறைமுற்றாகவும் கண்டது ஒன்று, ஆக இரண்டிடத்திலேயே என்பதையும் எண்ணுக. இவற்றுட் பொருட் சிறப்பு வலியுறுத்துக் கூறுமாற்றான் வினைக்குறையை முடித்தவரை உலகம் விடாது என்பதே எனல் தகும் (தண்டபாணி தேசிகர்).
'வினைக்குறையை (எச்சத்தை) செய்யாது விட்டாரை உலகம் விட்டது என்ற பொருள் காண்டல் நேரிது' என்பார் இரா சாரங்கபாணி.

கொண்ட வேலையை முயற்சிகுறை ஏற்படாவண்ணம் முற்றச் செய்யவேண்டும்; செயலை நிறைவேற்றாது அரைகுறையாக விட்டவரை உலகம் மதிக்காது புறக்கணித்துவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வினையுடைமை கொண்டு மெனக்கெட்டுச் செயலை முழுமையாக முடித்துவிடு.

பொழிப்பு

எடுத்த வேலையை அரைகுறையாக விடுதலைத் தவிர்க; செயலை நிறைவேற்றாது விட்டாரை உலகம் புறக்கணித்தது.