இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0597



சிதைவிடத்து ஒல்கார் உரவோர் புதைஅம்பின்
பட்டுப்பாடு ஊன்றும் களிறு

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:597)

பொழிப்பு (மு வரதராசன்): உடம்பை மறைக்குமளவு அம்புகளால் புண்பட்டும், யானை தன் பெருமையை நிலைநிறுத்தும்; அதுபோல், ஊக்கம் உடையவர் அழிவு வந்தவிடத்திலும் தளரமாட்டார்.

மணக்குடவர் உரை: தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல.
இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.

பரிமேலழகர் உரை: களிறு புதை அம்பின் பட்டுப்பாடு ஊன்றும் - களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார் - அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.'
(புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: மெய் புதைந்த அம்பினால் புண்பட்டு யானை தளராது பெருமையை நிலைநிறுத்தும். அதுபோல ஊக்கம் உடையார் செய்யும் முயற்சிக்கு இடையூறு வரினும் தளராது பெருமையை நிலைநாட்டுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
களிறு புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும்; உரவோர் சிதைவிடத்து ஒல்கார்.

பதவுரை:
சிதைவு-அழிதல்; இடத்து-இடத்தில்; ஒல்கார்-தளரார்; உரவோர்-ஊக்கமுடையவர்; புதை-அம்புக்கட்டு; அம்பின்-அம்பால்; பட்டு-பட்டால்; பாடு-பெருமை; ஊன்றும்-நிலை நிறுத்தும்; களிறு-ஆண் யானை.


சிதைவிடத்து ஒல்கார் உரவோர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்;
பரிப்பெருமாள்: தளர்ச்சி வந்தவிடத்துத் தளரார் உள்ள மிகுதியுடையார்;
காலிங்கர்: நெஞ்சு ஊக்கமுடைய அரசரானவர், தமது விதி வகையான் யாதானும் ஒருவாற்றான் தமது ஆக்கம் அழியுமிடத்துத் தளர்வுறார்;
காலிங்கர் குறிப்புரை: சிதைவு இடத்து என்பது ஆக்கம் அழிவு இடத்து என்றது; ஒல்கார் என்பது தளரார் என்றது; உரவோர் என்பது அறிவுடையோர் என்றது.
பரிமேலழகர்: அதுபோல ஊக்கமுடையார் தாம் கருதிய உயர்ச்சிக்குச் சிதைவுவந்த இடத்துத் தளராது தம் பெருமையை நிலை நிறுத்துவர்.

'தளர்ச்சி வந்தவிடத்து/ஆக்கம் அழியுமிடத்து/சிதைவுவந்த இடத்து தளரார் உள்ள மிகுதியுடையார்/நெஞ்சு ஊக்கமுடைய அரசர்/ஊக்கமுடையார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உறுதியானவர் அழிவிலும் ஊக்கம் தளரார்', 'அதுபோல ஊக்கமுடையவர்கள் தம்முடைய முயற்சிகளில் ஒரு நஷ்டம் வந்துவிட்டால், அதற்காகப் பின் வாங்கிவிடாமல் முன்னிலும் ஊக்கத்தோடு முயல்வார்கள்', 'அதுபோல ஊக்கமுடையவர் தாங்கருதிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்தவிடத்துத் தளராது தம் பெருமையை நிலைநிறுத்துவர்', 'அது போல ஊக்கம் உடையார் தாம் நினைத்த உயர்ச்சிக்குச் சிதைவு வந்த இடத்துத் தளரார்; தம் பெருமையை நிலை நிறுத்துவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊக்கம் உடையார் தமது முயற்சிக்கு பேரிடர் வந்த இடத்துத் தளரார் என்பது இப்பகுதியின் பொருள்.

புதைஅம்பின் பட்டுப்பாடு ஊன்றும் களிறு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடூன்றும் களிறுபோல.
மணக்குடவர் குறிப்புரை: இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
பரிப்பெருமாள்: மெய் புதைந்த அம்பினுட்பட்டும் பாடாற்றும் களிறுபோல.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது உயிர்க்கேடு வரினுந் தளரார் என்றது.
காலிங்கர்: அது என்போல எனின், ஒருவன் எய்த அம்பானது தன் மெய் அழுந்தப்பட்டு வைத்தும் பின்னும் தனது பெருந்தன்மையை உரைத்து நிற்கும் அண்ணல் யானையானது மற்று அது என்றவாறு.
பரிமேலழகர்: களிறு புதையாகிய அம்பால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்.
பரிமேலழகர் குறிப்புரை: புதை - அம்புக்கட்டு : பன்மை கூறியவாறு. 'பட்டால்' என்பது 'பட்டு' எனத் திரிந்து நின்றது. ஒல்காமை களிற்றுடனும், பாடு ஊன்றுதல் உரவோருடனும் சென்று இயைந்தன. தள்ளினும் தவறாது உள்ளியது முடிப்பர் என்பதாம். இவை மூன்று பாட்டானும் ஊக்கம் உடையாரது உயர்ச்சி கூறப்பட்டது.

'மெய் புதைந்த அம்பினுட்பட்டும் தன் பாடூன்றும் களிறுபோல' என மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகியோர் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் புதை என்பதற்கு அம்புக்கட்டு என்று கொண்டு 'அம்புக்கட்டிலிருந்து வந்த அம்புகளால் புண்பட்ட இடத்து' என உரை கண்டார்

இன்றைய ஆசிரியர்கள் 'அம்புகள் தைத்தாலும் யானை வலிபொறுக்கும்', 'யானையானது தன்னுடைய தேகத்தில் அம்பு புதைத்து புண்பட்டபின் முன்னிலும் அதிக உறுதியோடு எதிர்க்கும்', 'யானையானது தன் உடம்பிலே புதைபட்ட அம்பினால் புண்பட்டாலும், தளராது தன் பெருமையை நிலைநிறுத்தும்', 'யானை தன் முகத்தில் தைக்கும் அம்பினால் புண்பட்ட இடத்துத் தளராது தன் பெருமையை நிலை நிறுத்தும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உடம்பில் புதைந்த அம்பினால் புண்பட்டும் யானை தளராது யானை பெருமையை நிலைநிறுத்தும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
புதைஅம்பின் பட்டும் யானை தளராது பெருமையை நிலைநிறுத்தும்; ஊக்கம் உடையார் தாம் எண்ணிய உயர்ச்சிக்குச் சிதைவு வந்த இடத்துத் தளரார் என்பது பாடலின் பொருள்.
'புதைஅம்பின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

போர்யானை தன் உடல் பகைவர் எய்திய அம்புகளால் புதைக்கப்பட்ட நிலையிலும் ஊக்கத்துடன் முன்னேறிச் சென்று பெருமையை நிலை நிறுத்தும். அதுபோல உரங்கொண்ட உள்ளமுடையார் தாம் மேற்கொண்ட செயலுக்கு இடையூறு வந்த விடத்தும் தளராது வீறுகொண்டு முயற்சியில் முன்னேறிச் செல்வர்.
இப்பாடலில் ஊக்கமுடையாரின் வலிமை காட்டப்படுகிறது. எந்த ஒரு செயலையும் எவர் தொடங்கினாலும் அதற்குப் பல இடையூறுகள் உண்டாகும். சிலர் குறை கூறுவர். சிலர் பழியுங் கூறுவர். இன்னுஞ் சிலர் செயலையே சிதைக்கவும் முற்படுவர். இவைகளை யெல்லாம் கண்டு கலங்காமல் கருமமே கண்ணாகக் கொண்டு நிறைவேற்றுவார் உரனான உள்ளம் கொண்டவர் என்று கூறவருகிறது பாடல். இவ் வூக்கத்தை விளக்க, போரின்போது உயிர்போகும் தாக்குதலுக்கு உள்ளாகியும் தந்தங்களைக் குலுக்கி, துதிக்கையைச் சுழற்றி, பிளிறிப் பெருங்குரல் எழுப்பி, அம்புகள் எய்தவனை நோக்கிப் பாய்ந்துசெல்லும் யானையின் துணிச்சலையும் வேகத்தையும் எடுத்துக் காட்டுகிறார் வள்ளுவர். அம்பால் புண்பட்ட யானை முன்னைவிட பலமடங்கு விரைவுடன் முன்னேறிச் செல்லும். அதுபோல ஊக்கமுடையவர்கள் இடர்ப்பாடுகள் உற்றபோதும் தளராமல் விரைந்து முயற்சியில் மேற்செல்வர் என்பதும் பெறப்படுகிறது.

'புதைஅம்பின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'புதைஅம்பின்' என்ற தொடர்க்கு மெய் புதைந்த அம்பின், அம்பானது தன் மெய் அழுந்தப்பட்டு வைத்தும், புதையாகிய அம்பால், உடம்பை மறைக்குமளவு அம்புகளால், முகத்தில் புதையுண்ட அம்புகளால், இரும்புத்தளையால் கட்டப் பெற்றாலும், அம்புகள் தைத்தாலும், மெய் புதைந்த அம்பினால், தேகத்தில் அம்பு புதைத்து, அம்பு தன் உடலில் ஆழப் புகுந்தாலும், தன் உடம்பிலே புதைபட்ட அம்பினால், தன் முகத்தில் தைக்கும் அம்பினால், தன் உடம்பில் ஆழப்பதிந்த அம்பினால் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'புதை யம்பு' என்பதற்கு மெய் புதைந்த அம்பு என மணக்குடவர் பொருள் தந்தார்.
பரிமேலழகர் புதை என்றதற்கு அம்புக்கட்டு (அம்பின் தொகுதி) எனப் பொருள் கூறி பல அம்புகள் வந்து தைத்த உடல் எனக் குறிப்பார்.
பழைய உரை ஒன்று புதையம்பு என்பதற்கு கட்டுக் கட்டுதல்: அம்புக்கு அலகேற்றி இருப்புத் தகடு கட்டல் எனப் பொருள் கூறும்.
புதையம்பிற் பட்டு என்பதற்கு உடம்பை மறைக்கும் அளவு அம்புகளால் புண்பட்டு என்பது மு வ உரையாகும்.
புதையம்பு என்பது மரப்பலகையில் பதியவைத்த கூர்த்த அம்புகள் என்றும், அவற்றை யானை விளைபுலம் அழிக்க வரும் வழியில் புதைய வைப்பர் என்றும் அவை வரும் யானையின் காலில் பட்டொழியும் அவை எவ்வகையானும் அகப்படாது தப்பி வரும் என்றும்
அம்பு என்பது மூங்கிலையும், புதை என்பது யானையைப் புதைக்குமளவு வெட்டப்பட்ட பிடிகுழியையுமே குறிக்கும்; அவ்வாறு மூங்கில்களைக் கொண்டு மறைக்கப்பட்ட புதைகுழியிலே அகப்பட்டுக்கொண்ட யானை தன் கால்களை ஊன்றி நின்று மேலே வரப்பார்க்கும் என்றும் 'புதை அம்பு' என்பதற்கு விளக்கங்கள் உள.
மணக்குடவர் உரை உடம்பு முழுதும் மறைதற்கு இடனான நிறைந்த அம்புகள் என்றும் மெய்க்குட் புகுந்து மறைந்த அம்பு என்றும் பொருள் கொள்ளுமாறு அமைந்துள்ளது. இது பொருத்தமாக உள்ளது.

'புதைஅம்பின்' என்ற தொடர் (மெய்) புதைந்த அம்புகளினால் எனப் பொருள்பட்டு, தம் மெய்யிற் புதைந்திருந்தும் அதனைப் பொருட்படுத்தாது பகைவரை எதிர்க்கும் களிறு என்பதைக் குறிக்க வந்தது.

உடம்பில் புதைந்த அம்பினால் புண்பட்டும் யானை தளராது பெருமையை நிலைநிறுத்தும்; ஊக்கம் உடையார் தாம் எண்ணிய உயர்வுக்குச் சிதைவு வந்த இடத்துத் தளரார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊக்கமுடைமை எப்பேரிடரையும் தகர்க்கும்.

பொழிப்பு

உடம்புள் புதைந்த அம்புகளால் புண்பட்டும் யானை பெருமையை நிலைநிறுத்தும்; ஊக்கம் உடையார் தமது முயற்சிக்கு இடர் வரினும் தளரார்.