இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0594



ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் அசைவிலா
ஊக்கம் உடையான் உழை

(அதிகாரம்:ஊக்கமுடைமை குறள் எண்:594)

பொழிப்பு (மு வரதராசன்): சோர்வு இல்லாத ஊக்கம் உடையவனிடத்தில் ஆக்கமானது தானே அவன் உள்ள இடத்திற்கு வழி கேட்டுக்கொண்டு போய்ச் சேரும்.

மணக்குடவர் உரை: அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்.
நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ- என்றார்க்கு இது கூறப்பட்டது.

பரிமேலழகர் உரை: அசைவு இலா ஊக்கம் உடையான் உழை - அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு; ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும் - பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.
(அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார். எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: சோர்வில்லாத ஊக்கம் உடையவர்களிடத்துச் செல்வம் தானே வழிகேட்டுக் கொண்டு சென்றடையும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அசைவிலா ஊக்கம் உடையான் உழை ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்.

பதவுரை:
ஆக்கம்-செல்வம்; அதர்-வழி; வினாய்-வினவிக்கொண்டு; செல்லும்-போகும்; அசைவு-சோம்புதல்; இலா-இல்லாத; ஊக்கம்-மனவெழுச்சி; உடையான்-உடையவன்; உழை-இடத்தில்.


ஆக்கம் அதர்வினாய்ச் செல்லும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;
பரிப்பெருமாள்: ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்;
பரிதி: இலட்சுமி வழிகேட்டு வருவள்;
காலிங்கர்: ஒருவனுக்கு இருமைக்கும் உரிய ஆக்கமானது தானே வழி தேடிச் சென்று எய்தும்;
காலிங்கர் குறிப்புரை: அதர் என்பது வழி என்றது.
பரிமேலழகர்: பொருள் தானே வழி வினவிக் கொண்டு செல்லும்.
பரிமேலழகர் குறிப்புரை: வழி வினவிச் சென்று சார்வார் போலத்தானே சென்று சாரும் என்பார், 'அதர்வினாய்ச் செல்லும்' என்றார்.

'ஆக்கம், தானே வழி கேட்டுச் செல்லும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். ஆக்கம் என்பதற்கு இலட்சுமி என்று பரிதியும் இருமைக்குரிய ஆக்கம் என்று காலிங்கரும் பொருள் என்று பரிமேலழகரும் உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வீட்டுவழி கேட்டுச் செல்வம் சேரும்', 'செல்வம் வழி விசாரித்துக் கொண்டு அவனிடம் தானாகவே போய்ச் சேரும்', 'செல்வம் தானே வழிவிசாரித்துச் சென்று அடையும்', 'செல்வம் தானே வழி வினாவிக்கொண்டு செல்லும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வழி கேட்டுச் செல்வம் சென்றடையும் என்பது இப்பகுதியின் பொருள்.

அசைவிலா ஊக்கம் உடையான் உழை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு.
மணக்குடவர் குறிப்புரை: 'நினைத்ததனாலே ஊக்கமுண்டாமோ' என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிப்பெருமாள்: அசைவில்லாத ஊக்கமுடையான்மாட்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை:' நினைத்ததனாலே ஆக்கம் உண்டாமோ' என்றார்க்கு இது கூறப்பட்டது.
பரிதி: உறுதியான விசாரம் உள்ள அரசனிடத்து என்றவாறு.
காலிங்கர்: யாவர் மாட்டு எனின், சிறுது அசைவும் இல்லாத நெஞ்சு ஊக்கத்தை உடையார் மாட்டு.
காலிங்கர் குறிப்புரை: ஆகலான், ஊக்கம் உடைமை உளதாயினல்லாது தமக்குரிய தாளாண்மை உள ஆகா என்றவாறு.
பரிமேலழகர்: அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு.
பரிமேலழகர் குறிப்புரை: அசைவு இன்மை - இடுக்கண் முதலியவற்றான் தளராமை. எய்திநின்ற பொருளினும் அதற்குக் காரணமாய ஊக்கம் சிறந்தது என்பது, இவை நான்கு பாட்டானும் கூறப்பட்டது.

'அசைவில்லாத ஊக்கத்தை உடையான்மாட்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'சோர்வில்லா ஊக்கம் உடையவனது', 'உறுதியான ஊக்கம் உடையவன் இருக்கிற இடத்தை நாடி', 'தளராத ஊக்கத்தை உடையவர்பால்', 'அசைவில்லாத ஊக்கத்தை உடையானிடம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உறுதியான ஊக்கம் உடையவனிடம் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உறுதியான ஊக்கம் உடையவனிடம் அதர்வினாய்ச் செல்வம் சென்றடையும் என்பது பாடலின் பொருள்.
'அதர்வினாய்' என்றதன் பொருள் என்ன?

சிறுது அசைவும் இல்லாத நெஞ்சத்து ஊக்கம் உடையான் இருக்கும் இடம் தேடி ஆக்கம் போய்ச் சேரும்.
மற்றவர்கள் எல்லாரும் செல்வத்தைத் தேடி அலைவர். ஆனால் ஊக்கமுடையவனை அது தானே தேடிச் சென்றடையும். ஆக்கம் என்பது செல்வம், நன்மை, உயர்வு, முன்னேற்றம் போன்றவற்றைக் குறிக்கும் சொல். அசைவில்லாத ஊக்கமாவது முயற்சியின்கண் வரும் இடையூறுகள் முதலியவற்றான் தளராமை. உறுதியான ஊக்க உள்ளம் உடையவன் 'ஊக்கமே ஆக்கம்' என்று கண்ணும் கருத்துமாயிருந்து இடுக்கண்கள் வந்த போதும் சோர்வடையாமல், எதிர்கொள்ளும் சவால்களை சமாளித்து, குறிக்கோளை அடைய உழைப்பான். அவன் உலக இயற்கைச் சூழ்நிலையாம் ஊழ் பற்றியும் ஒரு சிறுதும் கவலைப்படாமல் செயல் நிறைவேறுவது பற்றியே சிந்தித்திருப்பான். இவன் இருக்கும் இடம் தேடி ஆக்கம் வந்து சேரும். ஊக்கமது கைவிடேல் என்பது வலியுறுத்தப்படுகிறது. திடமான ஊக்கமுடையவனுக்கு உறுதியாக ஆக்கம் உண்டாகும் என்பது கருத்து.

இக்குறள் நடையில் அமைந்த அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல்.( விருந்தோம்பல் 84 பொருள்: முகம் மலர்ந்து நல்விருந்து செய்வான் இல்லின்கண் திருமகள் மனம் மகிழ்ந்து உறையும்) என்ற பாடலில் விருந்தோம்பலில் சிறந்தவனிடம் செல்வம் மகிழ்ச்சியாகத் தங்கும் எனச் சொல்லப்பட்டது. கதம்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து(அடக்கமுடைமை 130 பொருள்: சினம் மனத்தில் தோன்றாமல் அடக்கப் பழகி ஒழுகுபவனைக் காணச் சமயம் பார்த்து அறக்கடவுள் அவன் வழி நுழைந்து எதிர் நோக்கும்) என்ற பாடலும் ....... மடியிலான் தாளுளான் தாமரையினாள் (ஆள்வினையுடைமை 617 பொருள்: ...திருமகள் சோம்பலில்லாதவனுடைய முயற்சியின் கண்ணே தங்குவள்) என்ற பாடலும் இவ்வகையைச் சார்ந்தவையே.

'அதர்வினாய்' என்றதன் பொருள் என்ன?

'அதர்வினாய்' என்றதற்கு வழி கேட்டு, வழி தேடி, வழி வினவிக் கொண்டு, வழி கேட்டுக்கொண்டு, இடந்தேடி வழி விசாரித்துக்கொண்டு, முகவரியைக் கேட்டுக் கொண்டு, வீட்டுவழி கேட்டு, வழி விசாரித்துக் கொண்டு, சேரும் வழிகேட்டு, வழிவிசாரித்து, வழி வினாவிக்கொண்டு, வீட்டு முகவரியைக் கேட்டு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அதர் என்ற சொல்லுக்கு வழி என்று பொருள். வினாய் என்ற சொல் வினவி அதாவது கேட்டு எனப்பொருள்படும். ஊக்கத்துடன் குறிக்கோளை அடையப் பாடுபடுவனை ஆக்கமே தேடி வந்தடையும் எனக் கூறி இக்குறள்வழி ஊக்கத்துடன் செயல்பட நமக்கு உற்சாகமூட்டுகிறார் வள்ளுவர். முந்தைய குறளில் ஊக்கத்தை உறுதியாகக் கடைப்பிடித்தவர்கள் வருந்தார்கள் எனச் சொல்லப்பட்டது. இங்கு தளராத ஊக்கம் உடையானுக்கு ஆக்கம் உண்டாவது மட்டுமல்ல அது அவன் இருப்பிடத்தின் வழி கேட்டு தானாகவே வந்து சேரும் எனக் கூறப்படுகிறது. 'வீடு தேடி வரும்' என்று பேச்சு வழக்கில் கூறுவது போலச் செல்வம் வழி கேட்டுக் கொண்டு வரும் என்று கூறியதால் உறுதியாகவும் எல்லோரும் அறியும்படியும் பயன் கிடைக்கும் என்று அறிவிக்கப்படுகிறது.

'அதர்வினாய்' என்ற தொடர்க்கு சேரும் வழிகேட்டு என்பது பொருள்.

உறுதியான ஊக்கம் உடையவனிடம் வழி கேட்டுச் செல்வம் சென்றடையும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஊக்கமுடைமை செல்வத்தை ஈர்க்கும் தன்மையது.

பொழிப்பு

சோர்வில்லா ஊக்கம் உடையவனிடத்துச் செல்வம் தானே வழிகேட்டுச் சென்றடையும்.