இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0588



ஒற்றுஒற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:588)

பொழிப்பு: ஓர் ஒற்றன் தெரிவித்த செய்தியையும் மற்றோர் ஒற்றனால் கேட்டுவரச் செய்து உண்மை கண்டு கொள்ள வேண்டும்.



மணக்குடவர் உரை: ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளைப் பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.

பரிமேலழகர் உரை: ஒற்று ஒற்றித் தந்த பொருளையும் - ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்; மற்றும் ஓர் ஒற்றனால் ஒற்றிக் கொளல் - பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
(ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஒற்றன் உளவு பார்த்துக் கூறிய செய்தியை அரசன் மற்றுமோர் ஒற்றனாலும் உளவு பார்த்து ஒப்புமை கண்டு கொள்ள வேண்டும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒற்று ஒற்றித் தந்த பொருளையும், மற்றும் ஓர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்.

பதவுரை:
ஒற்று-உளவாளி; ஒற்றி-உளவறிந்து; தந்த-அறிவித்த; பொருளையும்-செய்தியையும் மற்று-வேறு; ஒர்-ஒரு; ஒற்றினால்-உளவாளியால்; ஒற்றி-உளவறிந்து; கொளல்-பெறுக.


ஒற்றுஒற்றித் தந்த பொருளையும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒற்றர் மாற்றரசர்மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுதல் கூடுமாதலால், ஓரொற்று அறிந்து சொன்ன பொருளை;
பரிப்பெருமாள்: ஓர் ஒற்றன் அறிந்து சொன்ன பொருளை;
பரிதி: ஒருவன் சொன்ன ஒற்றின் சேதியை;
காலிங்கர்: இவ்வாறு செய்யும் இடத்து ஒற்றன் ஒற்றிக் கொணர்ந்து உரைத்த உரைப்பொருள் தன்னையும்;
பரிமேலழகர்: ஒரொற்றன் ஒற்றிவந்து அறிவித்த காரியந்தன்னையும்;

'ஓரொற்று அறிந்து சொன்ன பொருளை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஓர் உளவாளி கொண்டுவந்த செய்தியையும்', 'ஒரு ஒற்றன் உளவறிந்து வந்து சொன்ன விஷயங்களையும்', 'ஓர் ஒற்றன் மறைவாக அறிந்து வந்து தெரிவித்த செய்தியை', 'ஓர் ஒற்றன் ஒற்றிவந்து அறிவித்த செய்தியையும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியையும் என்பது இப்பகுதியின் பொருள்.

மற்றுமோர் ஒற்றினால் ஒற்றிக் கொளல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க.
பரிப்பெருமாள்: பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றி அறிந்து பின்பு அதனது உண்மை கொள்க என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: ஒற்றர் தங்களிலே மாற்றரசர் மாட்டும் பொருள் பெற்று மாறுபடச் சொல்லுவாரும் உளராதலின், அவர் சொன்ன பொருளைப் பின்பும் ஒருவனை விட்டு ஆராயவேண்டும் என்றது.
பரிதி: வேறொருவரைப் போகவிட்டு,அறிந்த ஒற்றர் சொல்லும் நிகராகில் ஒப்புக்கொள்க என்றவாறு.
காலிங்கர்: அவன் அறியாமல் வேறேயும் ஒரு ஒற்றினால் ஒற்றுவித்து ஒத்ததாயின் கொள்க. இல்லையாயின் அது செய்யற்க என்றவாறு.
பரிமேலழகர்: பிறனோர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டுகொள்க.
பரிமேலழகர் குறிப்புரை: ஒற்றப்பட்டாரோடு ஒத்து நின்று மாறுபடக் கூறலும் கூடுமாகலின், ஒருவன் மாற்றம் தேறப்படாது என்பதாம்.

'பின்னையும் ஓரொற்றினாலே ஒற்றியறிந்து பின்பு அதனுண்மை கொள்க' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பின்னும் ஓர் உளவாளியால் தெளிக', 'வேறொரு ஒற்றனைக் கொண்டு அதே விஷயங்களை ஆராய்ந்து வரச்செய்து அதன் பிறகே தலைவன் ஏற்றுக் கொள்ள வேண்டும்', 'பிறிதோர் ஒற்றனாலும் அறிந்து ஒப்புமை கண்டுகொள்க', 'பின்னும் ஓர் ஒற்றனாலும் ஒற்றுவித்து ஒப்புமை கண்டு கொள்ளுதல் வேண்டும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

வேறு ஒரு ஒற்றினால் அறிந்து ஒற்றுமை காண்க என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியையும் வேறு ஒரு ஒற்றினால் அறிந்து ஒற்றுமை காண்க என்பது பாடலின் பொருள்.
ஏன் அதே செய்தியை மறுபடி ஒற்றுவிக்க வேண்டும்?

ஒரு உளவாளி சேகரித்துச் சொன்ன செய்திகளை எப்படி ஆய்தல் வேண்டும் என்று இங்கு சொல்லப்படுகிறது. இன்னொரு உளவாளி மூலம் முன்னர் கிடைத்த ஒற்றுச் செய்தியினை ஒப்பிட்டு நோக்கி உண்மை அறிய வேண்டும் என்கிறது பாடல்.
ஒற்றர்கள் கொண்டு வரும் செய்தியை அப்படியே நம்பி ஏற்று நடவடிக்கை மேற்கொள்ளுதல் கூடாது. ஓர் ஒற்றன் கொண்டுவந்த செய்தியை வேறு ஒற்றர் வழி தனியே பெற்றுச் சரிபார்த்து ஒத்ததாயின் செய்க இல்லையாயின் அது செய்யற்க என்பது கருத்து.
ஒரே ஒரு வழியாக வரும் செய்தியை அப்படியே உண்மை என்று நம்பிவிடக்கூடாது. ஓர் ஒற்றன் கொண்டுவரும் செய்தியைப் பெற்றுக் கொண்ட ஆட்சியாளர் அதே பொருளை இன்னோர் ஒற்றன் வழியும் உளவுசெய்தி பெற்று ஒப்பிட்டுச் சரியென உறுதிப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். அனுபவம் மிக்க நம்பிக்கைக்குரிய ஒற்றனாயினும் அவனும் அறியாமல் பிழை செய்து விடலாம்; வேறு வகையில் மனநிலை திரியலாம், ஆர்வமேலீட்டால் இல்லாததை ஏற்றிச் சொல்லவும் வாய்ப்புண்டு; ஒற்றப்பட்டாரோடு உடன்பட்டு நின்று மாறுகொளக் கூறுதலும் கூடும். எனவே ஓர் ஒற்றன் கூறிய செய்தியை இன்னொரு ஒற்றன் வாயிலாக உறுதி செய்தி கொள்ளவேண்டும்.

ஏன் அதே செய்தியை மறுபடி ஒற்றுவிக்க வேண்டும்?

ஒற்றுஆளும் முறையில் ஒன்றாக ஒற்றிவந்த பொருளையும் பின்னும் ஓர் ஒற்றனால் ஒற்றுவித்து ஒப்புமை காணவேண்டும் எனச் சொல்லப்பட்டது.. இப்படிச் செய்வதால் ஒற்றிவந்த செய்தி மேலும் தெளிவடையும். ஒன்றுக்கு மேற்பட்டோரிடம் உளவு உரைகளைப் பெறுவது செய்தியின் நம்பகத்தன்மையை மிகுவிக்கும். தன் செயலையே அவனறியாமல் மீண்டும் ஒற்றறிவார்கள் எனத் தெரிந்தால் ஒற்றர்கள் யாரும் காட்டிக்கொடுக்க அஞ்சுவர். இக்காரணங்களுக்காகவே ஒற்றர்களிடம் ஒரே பொருளைத் தனித்தனி மறைவாகக் கேட்பர் ஆட்சியாளர்.

ஓர் ஒற்றன் உளவறிந்து கொண்டுவந்த செய்தியையும் வேறு ஒரு ஒற்றினால் அறிந்து ஒற்றுமை காண்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒற்றாடலில் உளவுச் செய்தியின் நம்பகத்தன்மை இன்றியமையாதது.

பொழிப்பு

ஓர் ஒற்றன் கொணர்ந்த உரைப்பொருளை மற்றும் ஓர் உளவினால் அறிந்து பின்பு அதன் உண்மை கொள்க.