இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0587



மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை
ஐயப்பாடு இல்லதே ஒற்று

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:587)

பொழிப்பு (மு வரதராசன்): மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய் அறிந்த செய்திகளை ஐயப்படாமல் துணியவல்லவனாய் உள்ளவனே ஒற்றன் ஆவான்.

மணக்குடவர் உரை: பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.
இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.

பரிமேலழகர் உரை: மறைந்தவை கேட்க வற்று ஆகி - ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்; அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று - கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
(மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு அறிந்தவற்றில் தெளிவுடையவனே ஒற்றன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறைந்தவை கேட்கவற்று ஆகி அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று.

பதவுரை:
மறைந்தவை-மறைந்து இருப்பவை; கேட்க-வினவ; வற்று-வல்லது; ஆகி-ஆய்; அறிந்தவை-அறிந்த பொருள்கள்; ஐயப்பாடு-ஐயம்; இல்லதே-இல்லாததே; ஒற்று-உளவு.


மறைந்தவை கேட்கவற்று ஆகி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி;
பரிப்பெருமாள்: பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி;
பரிதி: பிறர்மனை செய்வனவற்றைக் கேட்டறியவற்றால்;
காலிங்கர்: வேந்தரிடத்தும் பிறரிடத்தும் மிகவும் மறை பொருளாகிய வினைச் சூழ்ச்சிகளை வினாவியும் விடுத்தும், நட்பினும் நகையினும் பிறவினும் தெரிந்து, விளங்கக் கேட்டுணர வல்லனும் ஆகி, [விடுத்தும் - விடையளித்தும்]
பரிமேலழகர்: ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய்;

'பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மறைவான செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவனாய்', 'தனக்குப் புலப்படாத இரகசியங்களைக் கேள்விகள் கேட்டுத் தெரிந்து கொள்ளக்கூடிய வல்லமையுள்ளவனாகி', 'மறைவாகப் பிறர் செய்த செயல்களை, அவற்றிற்கு உள்ளாயினர்பால் கேட்கவல்லவனாய்', 'ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினரால் (வேண்டியவரால்) கேட்க வல்லனாய்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மறைக்கப்பட்ட செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவதாகி என்பது இப்பகுதியின் பொருள்.

அறிந்தவை ஐயப்பாடு இல்லதே ஒற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்.
மணக்குடவர் குறிப்புரை: இவை மூன்றும் ஒற்றிலக்கணங்கூறின.
பரிப்பெருமாள்: அறிந்தவையிற்றை ஐயம்தீர் அறியவல்லன் ஒற்றனாவான்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்றினாலும் ஒற்றிலக்கணம் கூறிற்று.
பரிதி: அறிந்த பொருள்களை ஐயமின்றித் துணிந்து அறியவல்லது ஒற்று என்றவாறு.
காலிங்கர்: அங்ஙனம் அறிந்தவை தம்பால் சிறுதும் ஐயப்பாடு இன்றித் தெளிவுற உரைக்கும் திறமையுள்ளது யாது? மற்று அதுவே அரசற்கு ஒற்றாவது என்றவாறு.
பரிமேலழகர்: கேட்டறிந்த செயல்களில் பின் ஐயப்படாது துணியவல்லவனே ஒற்றனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: (மறைந்தவை சொல்லுவாரை அறிந்து, அவர் அயிராமல் சென்று ஒட்டித் தாமே சொல்லும் வகை, அதற்கேற்ற சொல்லாகச் செயலாக முன்னே விளைத்து,அத்தொடர்பால் கேட்குங்காலும் உறாதார்போன்று நின்று கேட்கவேண்டுதலின், 'கேட்க வற்று ஆகி' என்றும் கேட்டறிந்தவற்றைத் தானே ஐயுற்று வந்து சொல்லின் அரசனால் அவற்றிற்கு ஏற்ற வினை செய்யலாகாமையின் 'ஐயப்பாடு இல்லதே' என்றும் கூறினார். இவை நான்கு பாட்டானும் ஒற்றினது இலக்கணம் கூறப்பட்டது.)

'அறிந்தவற்றைத் தீர அறியவல்லவனே ஒற்றனாவான்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'தெளிவுற உரைக்கத் தெரிந்திருப்பது ஒற்று' என்று ஆட்சியரிடம் தெரிவிப்பதையும் சேர்த்துச் சொல்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கேட்டறிந்த செய்திகளுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவனே ஒற்றன் ஆவான்', 'தெரிந்தமட்டிலும் சந்தேகத்துக்கு இடமில்லாதபடி தெரிந்து வரக் கூடியவனே சரியான ஒற்றனாவான்', 'கேட்டவற்றைச் சந்தேகமில்லாது முடிவாக உசாவியறிபவனே ஒற்றனாவான்', 'கேட்டறிந்த செயல்களில் ஐயப்பாடு இல்லாமல் துணிய வல்லவனே ஒற்றன் ஆவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவதே ஒற்று ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மறைந்தவை கேட்கவற்று, அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவதே ஒற்று ஆகும் என்பது பாடலின் பொருள்.
'மறைந்தவை கேட்கவற்று' என்ற தொடரின் பொருள் என்ன?

நேரடியாக அணுகமுடியாத செய்திஊற்றுக்களில் உள்ளவற்றைப் பிறர் மூலம் கேட்டறிய வல்லவனாய், சேகரித்தவற்றில் தெளிவுற்றவனாய் ஆட்சியாளரிடம் கூறத்தக்கவனே ஒற்றன் ஆவான்.
மறைவான செய்திகளையும் உளவு பார்த்து, ஐயம் நீங்கித் தெளிவாய் இருப்பது உளவு என்கிறது பாடல். இது 'மறைந்தவை கேட்கவற்று ஆகி', 'அறிந்தவை ஐயப்பாடு இல்லதே' என்ற இரண்டு பகுதிகளில் சொல்லப்பட்டது. முதல் பகுதியில் உள்ள மறைந்தவை என்பதற்கு 'மறைக்கப்பட்டவற்றை' என்றும் 'மறையச் செய்த செயல்களை' என்றும் பொருள் கூறினர். ஒரு அரசாட்சியில் எல்லாப் பொருள்களும் திறந்தவெளியில் இருப்பதில்லை. வெளிப்படைத்தன்மை இல்லாமல் நிறைய செயல்கள் உண்டு. வெளிப்படைத்தன்மை இல்லாதவற்றுள் சில இயல்பாகவே மறைவாக இருக்கும். சில தெரிந்தே மறைக்கப்பட்டு இருக்கும். எந்த வகையாயினும் மறைந்து நிற்கும் பொருள்களை மறைந்தவை எனும் சொல் குறிக்கிறது.
திரட்டிய செய்திகளில் எந்தவித ஐயமின்றித் தெளிவாக இருக்க வேண்டும். அறிந்ததை ஒற்றனே ஐயத்துடன் சென்று சொன்னால், அதில் ஆட்சியாளர் துணிந்து யாதும் செய்வதற்கில்லை. ஆதலால் அவன் சேகரித்த செய்திகளில் ஐயப்பாடு தோன்றாது இருக்கவேண்டும். இதை 'அறிந்தவை ஐயப்பாடு இல்லதே' என்ற பகுதி கூறுகிறது. காலிங்கர் இப்பகுதிக்கு 'ஐயமின்றித் தெரிந்து, தெரிந்தவற்றைச் சிறுதும் ஐயப்பாடின்றித் தெளிவுற உரைக்கும் திறமை இருக்கவேண்டும்' என உரை கூறுவார். இதனால் ஐயமின்றி அறிதல் மட்டுமல்லாமல், ஐயத்திற்கு இடமில்லாமல் உரைக்கவும் வேண்டும் என்று சொல்லப்பட்டது.

'மறைந்தவை கேட்கவற்று' என்ற தொடரின் பொருள் என்ன?

'மறைந்தவை கேட்கவற்று' என்றதற்குப் பிறரால் மறைக்கப்பட்டவற்றைக் கேட்டறிய வல்லனாகி, பிறர்மனை செய்வனவற்றைக் கேட்டறியவற்றால், வேந்தரிடத்தும் பிறரிடத்தும் மிகவும் மறை பொருளாகிய வினைச் சூழ்ச்சிகளை வினாவியும் விடுத்தும், நட்பினும் நகையினும் பிறவினும் தெரிந்து, விளங்கக் கேட்டுணர வல்லனும் ஆகி, ஒற்றப்பட்டார் மறையச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினாரால் கேட்க வல்லனாய், மறைந்த செய்திகளையும் கேட்டறியவல்லவனாய், மறைவாக நடக்கும் இரகசியங்களைத் துருவித்துருவிக் கேட்டறிய வல்லவனாகி, மறைவான செய்திகளை ஒட்டுக் கேட்டு, மறைவான செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவனாய், மறைந்திருக்கும் இரகசியங்களைக் கேள்விகள் போட்டு அறிந்து கொள்ளும் வல்லமையுள்ளவனாகி, மறைவாகப் பிறர் செய்தவற்றைக் கேட்கும் திறனுடையவராய், மறைவாகப் பிறர் செய்த செயல்களை, அவற்றிற்கு உள்ளாயினர்பால் கேட்கவல்லவனாய், ஒற்றப்பட்டார் மறைவாகச் செய்த செயல்களை அவர்க்கு உள்ளாயினரால் (வேண்டியவரால்) கேட்க வல்லனாய், மறைந்த பொருள்களைக் கண்டுபிடித்துச் சந்தேகமறத் தெரிந்துகொள்வது என்றபடி உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

இத்தொடர்க்கான காலிங்கரது உரையான 'வேந்தரிடத்தும் பிறரிடத்தும் மிகவும் மறை பொருளாகிய வினைச் சூழ்ச்சிகளை வினாவியும் விடையளித்தும், நட்பினாலும் நகையினாலும் பிறவற்றலும் தெரிந்து, விளங்கக் கேட்டுணர வல்லனும் ஆகி' என்பது நல்ல விளக்கம் தருகிறது. நாமக்கல் இராமலிங்கம் 'மறைந்திருக்கும் இரகசியங்களை மறைமுகமாகக் கேள்விகள் கேட்டு அறிந்து கொள்ளும் வல்லமையுள்ளவனாகி' என்று இத்தொடர்க்குப் பொருள் கூறினார். தேவநேயப்பாவாணர் மறைந்தவை' சொல்வாரைத்தப்பாது அறிந்து அவரிடம் சென்று, அவர் தாமே அம்மறை பொருட்களைச் சொல்லுமாறு குரங்கெறிவிளங்காயாகச் சில சொற்களைச் சொல்லியும் சில வினைகளைச் செய்தும், அம்மறைபொருட்களை அவர் வாயினின்று கேட்கும் போதும் அவர் தன்னை எள்ளளவும் அயிராவாறு அச்செய்தியில் தான் முற்றும் பற்றற்றவன் போல் நடித்து, அவர் சொல்வதனைத்தையுங் கேட்க வேண்டியிருத்தலின் 'கேட்க வற்றாகி' என விளக்கினார்.

'மறைந்தவை கேட்கவற்று' என்ற தொடர்க்கு மறைந்துநிற்கும் பொருள்களைக் கேட்டு அறிந்துகொள்ளவல்ல என்பது பொருள்.

மறைக்கப்பட்ட செய்திகளைப் பிறரைக் கொண்டு கேட்டறிய வல்லவதாகி, அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுபடுபவதே ஒற்று ஆகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சேகரித்த செய்திகளுள் தெளிவுபடுவது ஒற்றாடலின் ஒரு கூறு.

பொழிப்பு

மறைக்கப்பட்ட செய்திகளை ஒட்டுக் கேட்டு, அறிந்தவற்றுள் ஐயப்பாடில்லாமல் தெளிவுடையதுவே ஒற்று.