இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0585



கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:585)

பொழிப்பு (மு வரதராசன்): ஐயுற முடியாத உருவத்தோடு, பார்த்தவருடைய கண்பார்வைக்கு அஞ்சாமல் எவ்விடத்திலும் மனத்திலுள்ளதை வெளிப்படுத்தாமல், இருக்கவல்லவனே ஒற்றன் ஆவன்.

மணக்குடவர் உரை: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி, அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.

பரிமேலழகர் உரை: கடாஅ உருவொடு - ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி; கண் அஞ்சாது - அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று; யாண்டும் உகாஅமைவல்லதே ஒற்று - நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.
('கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.)

சி இலக்குவனார் உரை: பிறர் கண்டால் ஐயப்படாத வடிவத்தோடு எவர் பார்வைக்கும் அஞ்சாது, எப்பொழுதும் உள்ளத்துள் உள்ளவற்றைப் பிறர்க்கு அறிவிக்காமல் இருக்கும் திறமையே ஒற்றுக்குரியது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று.

பதவுரை:
கடாஅ-ஐயுறாத; உருவொடு-வடிவுடன்; கண்ணஞ்சாது-கண்களுக்கு அஞ்சமாட்டாது; யாண்டும்-எக்காலத்தும்; உகாஅமை-வெளிப்படுத்தாமை; வல்லதே-வல்லமையே; ஒற்று-உளவு.


கடாஅ உருவொடு கண்ணஞ்சாது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி;
பரிப்பெருமாள்: வினாவப்படாத வடிவோடேகூடி கண்ணஞ்சுதலும் இன்றி;
பரிப்பெருமாள் குறிப்புரை: வினாவப்படாத வடிவானது வணிகரும் பார்ப்பாரும் ஆகிய (வடிவு) ஒற்றற்குத் தக எவ்விடத்துஞ் சோர்வு இன்றியே நடக்க வல்லவன் என்றவாறு. பரிதி: கடவுதலையுடைய வடிவோடு நின்று மனத்தில் கலக்கமின்றி;
காலிங்கர்: அறவோர் வேடமும் துறவோர் வேடமும் வறியோர் வேடமும் பிறவுமாகிய நல்லுருவு கொண்டு ஒற்றாடுமிடத்து அமைச்சரும் பிறரும் ஆகிய அறிவுடையாளருள் யாவரேனும் தன்னைக் கண்டு ஐயுற்று, 'இவ்விடை வந்து எய்திய நீ யாரோதான்' என்று வினாவுதல் செய்யாதபடி உறுவேடத்தோடு திரிதலும், மற்று இங்ஙனம் திரியுமிடத்தும் ஐயுற்றுக் கைப்பற்றியும் சிறைப்படுத்தியும் வருத்தம் செய்யுமிடத்துச் சிறிது நெஞ்சு அஞ்சாது நிறையுரம் செய்தலும்;
காலிங்கர் குறிப்புரை: மற்றும் தனது தந்தை தாயர் நட்டோர் சுற்றம் என்னும் இவர்மாட்டும் சோர விடாமை ஒற்று என அறிக.
பரிமேலழகர்: ஒற்றப்பட்டார் கண்டால் ஐயுறாத வடிவோடு பொருந்தி, அவர் ஐயுற்று அறியலுறின் செயிர்த்து நோக்கிய அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று;
பரிமேலழகர் குறிப்புரை: 'கடா' என்பது 'கடுக்கும்' என்னும் பெயரெச்சத்து எதிர்மறை. ஐயுறாத வடிவாவன பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவு.

'வினாவப்படாத/கடவுதலையுடைய/ஐயுறாத வடிவோடு கண்ணிற்கு அஞ்சாது நின்று' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து', 'ஐயப்படாத வடிவம் தாங்கிப் பிறரது சினப்பார்வைக்கு அஞ்சாது', 'தன்னை யாரும் சந்தேகிக்க முடியாதபடி மாறுவேடத்துடன் பயமில்லாமல் எங்கும் சென்று', 'பிறர் ஐயப்படாத வடிவோடு பொருந்தி அவர் கண்ணிற்கு அஞ்சாது நின்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஐயப்படாத வடிவோடு அஞ்சாது பார்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

யாண்டும் உகாஅமை வல்லதே ஒற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.
பரிப்பெருமாள்: அறிந்தபொருளை எவ்விடத்தினும் சோர்வின்றியே அடக்கவல்லவன் ஒற்றனாவன்.
பரிதி: எவ்விடத்தும் சோராமை வல்லது ஒற்று என்றவாறு.
காலிங்கர்: மற்றுந்தான் வகைந்து உட்கொண்ட மறை பொருளினை வேறு ஓரிடத்தும் சோரவிடாமையும் வல்லது யாது? மற்று அதுவே அரசர்க்கு ஒற்றாவது என்றவாறு.
பரிமேலழகர்: நான்கு உபாயமும் செய்தாலும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவான்.

'எவ்விடத்தினும் மனத்துக் கொண்டவற்றை உமிழாமை வல்லனே ஒற்றனாவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்விடத்தும் வெளியிடாதவனே ஒற்றன்', 'எவ்விடத்தும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாததில் வல்லவனே ஒற்றனாவான்', '(தான் இன்னான் என்பதையும் தான் வந்த காரியம் இன்னதென்பதையும் வெளிப்படுத்தி விடாமல் (உளவறிந்து) வரக்கூடியவனே ஒற்றனாவான்', 'அரசர் ஒழியப் பிறர் யார்க்குந் தன் மனத்துட் கொண்டவற்றை வெளிப்படுத்தாமல் இருக்க வல்லவனே ஒற்றனாவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கடாஅ உருவோடு அஞ்சாது பார்த்து எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது பாடலின் பொருள்.
'கடாஅ உரு' என்பது என்ன?

கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாத நோக்குடன் உழன்று எச்சூழலிலும் தன்னகத்தே உள்ள உளவுச் செய்திகளை யாரிடமும் தெரிவித்துவிடாமல் இருக்க வல்லது ஒற்று ஆகும்.
ஒற்றிற்கு செல்பவன் யார்?
ஒற்றுவிக்கப்படும் மாந்தர் ஐயப்படாத உருவில் சென்று, அவர்கள் ஐயுறுவதுபோல் தோன்றினாலும் அஞ்சாது அவரை எதிர்ப்பார்வை கொண்டு, தான் திரட்டிய மறைச் செய்திகளை எச்சூழலிலும் யாரிடமும் ஒருக்காலும் வெளியிடாது வந்து உரைப்பவனே ஒற்றனாவான். தான் யார் என்று தெரியப்படுத்தாமல் ஆனால் ஒற்றியவர் பற்றி அறிந்துவருவான் இவன். யாரும் ஐயப்படாத தோற்றத்துடன் செல்வான், கண்ணஞ்சாது இருப்பான், யாண்டும் உளக்கருத்தை உமிழ மாட்டான். இவ்வாறு மூன்று ஒற்றாளும் கூறுகள் இக்குறளில்கூறப்பட்டன.
ஒற்றரது உடல் அசைவதையும் முகம்மாறுவதையும் வைத்தே அவர்மேல் ஐயம் உண்டாகிவிடும். தன்மீது ஐயம் ஏற்பட்டுவிட்டது என்று தெரிந்தபின்னும் தான் அச்சமில்லாமல் இருப்பதாகக் காட்டிக்கொள்வான். திருடனுக்குத் தேள் கொட்டினால் என்ன செய்வான்? தன் வலியை வெளியே காட்டினால் பிடிபட்டுவிடுவான் என்பதால் தான்படும் கடும் வலியுணர்ச்சியை வெளிக் காட்டாமல் இருப்பான். அதுபோல் தன் முகத்தில் எந்தவித உணர்ச்சி மற்றங்களையும் காட்டாமல் 'கண்ணஞ்சாது' நேர்கொண்ட பார்வையால் தன் செயல்களைத் தொடர்வான் ஒற்றன்.
எக்காலத்தும் தான் வந்த நோக்கத்தையோ இதுகாறும் சேகரித்த செய்திகளையோ தன் வாயிலிருந்து வெளிவராமல் காப்பவனே ஒற்றன். தனது தாய் தந்தை இவர்களிடம் கூட தன் மனத்திலிலுள்ள மறைச்செய்திகளை நழுவவிடமாட்டான் இவன்.
யாரும் எளிதில் இனம் கண்டுகொள்ளாத உருவில் சென்று, தன் உயிரைத் துச்சமென எண்ணி பகைவருக்கு நடுவே உலவி வந்து, அவர்களை உய்த்தறியும் ஒற்றன் எந்தச் சூழ்நிலையிலும் தன் வாய் தடுமாற விடமாட்டான். இவ்வாறு ஒற்றுக்குச் செல்பவன் எத்தகையவனாக இருக்க வேண்டும் என்பதை இக்குறள் எடுத்துக் கூறுகிறது.
உகாமை என்றது உமிழாமை எனப்பொருள்படும் தன் வாயிலிருந்து உமிழ்ந்து உண்மை சிதறாமல் காப்பான் என்பது பொருள்.

'கடாஅ உரு' என்பது என்ன?

'கடாஅ உரு' என்ற தொடர்க்கு வினாவப்படாத வடிவு, கடவுதலையுடைய வடிவு, நல்லுருவு, ஐயுறாத வடிவு, ஐயுற முடியாத உருவம், ஐயுறுதலுக்குரியதல்லாது உருவம், ஐயப்படாத வடிவு, ஐயப்பட முடியாத மாறுவேடம், ஐயப்படாத உருவம், ஐயம் ஏற்படுத்தா வண்ணம் தோன்றுதல், அயிர்க்கப்படாத வடிவு, சந்தேகமில்லாத உருவம் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கடாஅ உருவொடு' என்பதற்கு மணக்குடவரும் பரிப்பெருமாளும் 'வினவப்படாத வடிவொடு கூடி' என்று பொருள் கண்டனர். பரிமேலழகர் 'ஐயுறாத வடிவோடு பொருந்தி' என்று உரை கண்டார். கடுக்கும் -ஐயுறும்; கடா-ஐயுறப்படாத எனக் கடுக்கும் என்பதன் எதிர்மறை கடா என்பார் பரிமேலழகர். கடா என்ற சொல்லுக்கு வினா என்பதும் பொருள். ஐயுற்றவழியே வினா நிகழுமாதலின் கடாஅ உரு என்பது கேள்விக்குரியதாகாத வடிவம் எனவும் பொருள்படும்.
ஒற்றனானவன் இடத்துக்கும் காலத்துக்கும் தக்கபடி வெவ்வேறு தோற்றம் காட்டி அங்கங்கே அச்சமின்றிச் சென்று ஊடாடி உளவறியக் கூடியவனாக இருக்க வேண்டும். 'அறவோர் வேடமும் துறவோர் வேடமும் வறியோர் வேடமும் பிறவுமாகிய நல்லுருவு கொண்டு' என வேடங்களுக்குக் காட்டுகள் கூறுவார் காலிங்கர். ஐயுறாத வடிவான பார்ப்பார், வணிகர் முதலாயினார் வடிவென்பார் பரிமேலழகர். ஒற்றர்கள் என்ன வேடங்களில் எல்லாம் சென்றனர் என்பதைப் பழம் இலக்கியங்கள் கூறுகின்றன. இராவணனின் ஒற்றர்கள் வேவுபார்க்க வானரவடிவினராகி வந்த செய்தியை, இற்றிது காலமாக இலங்கை வேந்தன் ஏவ ஒற்றர் வந்தளவு நோக்கிக் குரங்கென உழல்கின்றாரை (கம்ப இராமாயாணம், யுத்த காண்டம், ஒற்றுக் கேள்விப் படலம், பொருள்: காலம் இத்தன்மையது ஆக இலங்கை மக்களின் தலைவனான இராவணனது ஏவலினால் (வேவு பார்க்கும்) ஒற்றர்கள் (அங்கு) வந்து (வானரப் படையின் திறம், எண்ணிக்கை முதலிய) அளவுகளைப் பார்த்து குரங்குகள் போல வேடமிட்டுப் (பாடி வீடுகட்கிடையே) திரிகின்றவர்களை) என்பார் கம்பர். அணிவகுப்புப் படலத்தில் சார்த்தூலன் என்னும் ஒற்றனை இராவணன் ஏவியறிந்த ஒற்றுச் செய்தி பற்றிக் காண்கிறோம். அவன் தாயைப் போல் உடன் பழகியவர்களும் கண்டு கொள்ள முடியாத வேடத்துடன் இருந்தானாம். இராவணனுடைய ஒற்றர்கள் வானர வடிவமுடன் வானரப் படைகளிடையே மறைந்து திரிந்து ஒற்றறிய முயன்றமையை விபீடணன் கண்டு பிடிக்கிறான். பெருங்கதையுள் யூகி என்னும் அமைச்சர் உண்மையான பித்தன் என்று துணியும்படி நடந்துகொண்டான். தீர்த்தயாத்திரை செய்வார், தவஞ் செய்வார், முற்றந் துறந்தார் என்ற வேடங்களையும் ஒற்றர்கள் அணிந்தனர்.

கேள்விக்குரியதாகாத தோற்றத்தோடு, அஞ்சாது பார்த்து, எச்சூழலிலும் மனத்திலுள்ள செய்திகளை வெளிப்படுத்தாத திறமே ஒற்றாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒற்றுச் செய்தியை யாரிடமும் எதற்காகவும் உளறிவிடக்கூடாது என்னும் ஒற்றாடல் பாடல்.

பொழிப்பு

ஐயப்படாத வடிவம் கொண்டு அஞ்சாது பார்த்து எச்சூழலிலும் உளவுபற்றி வெளியிடாத திறமே ஒற்று.