இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0583



ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்
கொற்றம் கொளக்கிடந்தது இல்

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:583)

பொழிப்பு (மு வரதராசன்): ஒற்றரால் (நாட்டு நிகழ்ச்சிகளை) அறிந்து அவற்றின் பயனை ஆராய்ந்துணராத அரசன் வெற்றி பெறத்தக்க வழிவேறு இல்லை.

மணக்குடவர் உரை: ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை.
இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன் - ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்; கொற்றம் கொளக் கிடந்தது இல் - வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
(அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உளவால் செய்தி அறிந்துகொள்ளாத அரசன் கொள்ளும் வெற்றி எதுவும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன் கொற்றம் கொளக்கிடந்தது இல்.

பதவுரை:
ஒற்றினால்-உளவாளியால்; ஒற்றி-பிறரால் அறிந்து வரச் செய்து; பொருள்-பயன்; தெரியா-ஆராயாத; மன்னவன்-வேந்தன்; கொற்றம்-வெற்றி; கொள-அடைய; கிடந்தது-கூடியது; இல்-இல்லை.


ஒற்றினால் ஒற்றிப் பொருள்தெரியா மன்னவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன்;
பரிப்பெருமாள்: ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன்;
பரிதி: மாற்றார் செய்யும் தொழிலை ஒற்றினாலே உறுதியாக விசாரித்து அந்த ஏகாந்தத்தை அடக்கி அதற்குத் தக்க பரிகாரம் செய்யாமல்; .
காலிங்கர்: தனது நாட்டகத்து வாழ்வாரது வன்மையும் மென்மையும் வேற்றரசர்மாட்டுள்ள வன்மையும் மென்மையும் ஒற்றாரை உழலவிட்டு மற்று அவர்களான் ஒற்றுவித்துப் பின்னும் அவர் உருப்பதன்கண் பொருட்கருத்தும் தெரிந்து உணரவல்லாத மன்னனானவன்;
பரிமேலழகர்: ஒற்றினானே எல்லார்கண்ணும் நிகழ்ந்தவற்றை ஒற்றுவித்து அவற்றான் எய்தும் பயனை ஆராயாத அரசன்;

'ஒற்றராலே ஒற்றிப் பொருள் விசாரியாத மன்னவன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் உரை தெளிவாக உள்ளது. அவர் 'பொருட்கருத்தும் தெரிந்து உணரவல்லாத மன்னனானவன்' என்றும் பொருத்தமான உரை நல்கியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒற்றாலே உளவறிந்த செய்திகளை ஆராய்ந்தறியாத அரசன்', 'ஒற்றர்கள் மூலமாக (தனக்கு வேண்டிய) சேதிகளை அப்போதைக்கப்போது இரகசியமாக அறிந்து கொள்ளாத அரசன்', 'ஒற்றர் வாயிலாக எல்லாவற்றையும் மறைவாக அறிந்து அவற்றான் அடையக்கூடிய பயனை ஆராயாத அரசன்', 'ஒற்றுத் தொழிலால் எங்கும் நடக்கின்றவற்றை ஒற்றுவித்து (ஒற்றால் அறிவிக்கச் செய்து) அவற்றால் அடையும் பயனை ஆராயாத அரசன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒற்றர் தந்த உளவுச் செய்திகளின் கருத்து உணரமுடியாத ஆட்சியாளன் என்பது இப்பகுதியின் பொருள்.

கொற்றம் கொளக்கிடந்தது இல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.
பரிப்பெருமாள்: கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை:: இஃது ஒற்றின்மையால் வருங் குற்றங்கூறிற்று.
பரிதி: கொற்றத்தை ஒருவராலே வெல்லப்படாது என்றவாறு.
காலிங்கர்: அரசியல் திறமை கோடற்கு இயைபாவது யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: அந்நிகழ்ந்தனவும் பயனும் அறியாது பகைக்கு எளியனாதல் பிறிதின் தீராமையின் 'கொற்றம் கொளக் கிடந்தது இல்' என்றார். இதற்குக் கொளக்கிடந்ததொரு வென்றி இல்லை என்று உரைப்பினும் அமையும். இதனான் அத்தொழில் செய்யாதவழி வரும் குற்றம் கூறப்பட்டது.

'கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் என இப்பகுதிக்கு உரை செய்தனர். பரிமேலழகர் 'வென்றியடையக் கிடந்தது வேறொரு நெறி இல்லை' என உரை வரைந்தார். மற்றவர்கள் எல்லாரும் கொற்றம் என்பதற்கு வெற்றி எனப் பொருள் கொள்ள காலிங்கர் 'அரசியல் திறமை' எனப் பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை', 'எந்தக் காரியத்திலும் வெற்றியடைய முடியாது', 'வெற்றியடையக் கிடந்த வேறுவழி யாதும் இல்லை', 'வெற்றியடைய வேறொரு வழி இல்லை. வெற்றி அடைய முடியாது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒற்றர் தந்த உளவுச் செய்திகளின் கருத்து உணரமுடியாத ஆட்சியாளன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை என்பது பாடலின் பொருள்.
'கொற்றம் கொளக்கிடந்தது' என்றதன் பொருள் என்ன?

உளவாளிகள் கொண்டுவந்து தந்த தரவுகளை வாசித்து செய்தியாக அறிந்து கொள்ள முடியாத ஆள்வோர் அரசாட்சியில் எந்த ஒரு வெற்றியும் பெறமுடியாது.
ஒற்றரால் ஒற்றித் தெரிந்து கொள்வதிலேதான் ஆள்வோரது கொற்றம் உளது என்கிறது பாடல். ஒற்றர்களால் கொண்டுவரப்பட்ட செய்திகளை ஒற்றுமைப்படுத்தி கருத்தறியாத அரசன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை. தனது நாட்டகத்தும் வேற்றரசர் மாட்டும் வாழ்வாரது வன்மையும் மென்மையும் ஒற்றுவித்துப் பெறப்பட்ட தரவுகளை ஆய்ந்து அவற்றின் பொருளறிந்து தக்கது செய்யாத ஆட்சியாளரின் அரசியல் திறமையால் கொள்வதற்கு ஒன்றும் இல்லை. அந்த அரசால் தன் நாட்டுக் குடிகளின் குறைகளையும் அறிய முடியாது; பகைநாட்டவரின் படையெடுப்பதிலிருந்து நாட்டைக் காக்கவும் இயலாது.

உள்நாட்டிலும் பிற நாட்டிலும் நடக்கும் மறைப்பொருள்களைத் திரட்டித் தர ஒற்றர்களால் மட்டுமே முடியும். அரசானது ஒரு சிக்கலான உளவு வலையை வைத்து பலவேறு இடங்களிலிருந்து பல்வேறு நிலைகளிலும் வரும் தரவுகளைச் சேகரிக்கும். இவ்வாறு உளவுத்துறை, எல்லாருடைய தகவல்கள் எல்லாவற்றையும். எப்பொழுதும் தளராமல் பெற்று ஆட்சியாளர்க்குத் தந்தாலும், அவற்றின் நோக்கத்தைச் சரியான முறையிலே நிர்வாகத்துக்கு ஏற்றவாறு பயனாக்கிக்கொள்ளத் தெரியாவிடின் அந்த ஆட்சி எந்த வகையிலும் வெற்றி காண முடியாது.

'கொற்றம் கொளக்கிடந்தது' என்றதன் பொருள் என்ன?

'கொற்றம் கொளக்கிடந்தது' என்றதற்குக் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி, அரசியல் திறமை கோடற்கு இயைபாவது, வென்றியடையக் கிடந்தது, வெற்றி பெறத்தக்க வழி, வெற்றியடைவதற்கான வழி, கொள்ளும் வெற்றி, கொள்ளக் கிடந்ததொரு வெற்றி, அடையக்கூடிய வெற்றி, வெற்றியடையும் படியாக அமைந்த வாய்ப்பு, வெற்றியடையக் கிடந்த, வெற்றியடைய வேறொரு வழி, வெற்றி கொள்ளுதல், வெற்றியடையக் கூடிய வேறு வழி என்றபடி உரையாளர்கள் பொருள் கூறினர்.

கொற்றம் என்ற சொல்லுக்கு இங்கு வெற்றி என்பது பொருள். கொளக் கிடந்தது என்பது அடையக் கூடியது அல்லது கொள்வது என்ற பொருள் தரும். ‘கொற்றம்’ என்பதற்குக் காலிங்கர் அரசியல் திறமை என்று பொருள் கண்டார்.
தேவநேயப் பாவாணர்: 'நிகழ்ந்த செய்திகளையும் அவற்றின் விளைவையும் அறியாத அரசன் 'திடுமென்று பகைவரால் தாக்கப்படின் வெற்றியடைதற்கு வழியில்லை யாதலின், 'கொற்றங்கொளக் கிடந்ததில்' என்றார். இதைக் கொளக்கிடந்தது கொற்றமில்லை எனச் சொன்முறைமாற்றி தோல்வியின்றிக் கொள்ளக்கிடந்ததொரு வெற்றியில்லை என்றுரைப்பினுமமையும்' என விளக்குவார்.

'கொற்றம் கொளக்கிடந்தது' என்பதற்கு கொள்ளக் கிடந்ததொரு வெற்றி என்பது பொருள்.

ஒற்றர் தந்த உளவுச் செய்திகளின் கருத்து உணரமுடியாத ஆட்சியாளன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒற்றுத் தரவுகளைப் பொருள் கொண்ட செய்தியாக மாற்றுவதில் ஒற்றாடல் வெற்றி உள்ளது.

பொழிப்பு

ஒற்றாலே உளவறிந்த செய்திகளை ஒற்றுமைப்படுத்தி கருத்தறியாத அரசன் கொள்ளக் கிடந்ததொரு வெற்றி இல்லை