இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0582



எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்
வல்லறிதல் வேந்தன் தொழில்

(அதிகாரம்:ஒற்றாடல் குறள் எண்:582)

பொழிப்பு (மு வரதராசன்): எல்லாரிடத்திலும் நிகழ்கின்றவை எல்லாவற்றையும் எக்காலத்திலும் (ஒற்றரைக்கொண்டு) விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்.

மணக்குடவர் உரை: பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும் பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.

பரிமேலழகர் உரை: எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்அறிதல் - எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும் ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்.
('எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும். அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: யாரிடத்தும் எதனையும் என்றும் உளவால் விரைந்து அறிதல் வேந்தன் கடமை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எல்லார்க்கும் நிகழ்பவை எல்லாம் எஞ்ஞான்றும் வல்லறிதல் வேந்தன் தொழில்.

பதவுரை:
எல்லார்க்கும்-எல்லார் கண்ணும்; எல்லாம்-அனைத்தும்; நிகழ்பவை-நேரும் சொல்-செயல்கள்; எஞ்ஞான்றும்-எப்போதும்; வல்-விரைவாக; அறிதல்-தெரிந்து கொள்ளல்; வேந்தன்-மன்னவன்; தொழில்-கடமை.


எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை எஞ்ஞான்றும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பகைவராகியும் நட்டாராகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும்; [மத்திமர் - நடுநிற்போர்; உதாசீனர்-அரசியலைப் பொருட்படுத்தாதவர்)
பரிப்பெருமாள்: பகைவராகியும் நட்டோர் ஆகியும் மத்திமராகியும் உதாசீனராகியும் இருக்கின்ற அரசர்க்கும், அவர் சுற்றத்திற்கும், தம் சுற்றத்திற்கும், அறம் பொருள் இன்பங்களைப் பற்றி நிகழ்பவை எல்லாவற்றையும் நாடோறும்;
பரிதி: சத்துருவுக்கும் மித்துருவுக்கும் உண்டான காரியத்தை;
காலிங்கர்: ஒற்றாமை பெரிதும் குற்றம். ஆகலான் அகத்தோரும் புறத்தோரும் அருகலரும் ஆகிய அனைவர்க்கும் நிகழ்வனவாகிய நலம் தீங்குகளை நாடோறும்; [அருகலர்- அண்மையிலன்றி சேய்மைக்கண் இருப்பார்]
பரிமேலழகர்: எல்லார்கண்ணும் நிகழ்வன எல்லாவற்றையும் நாள்தோறும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'எல்லார்க்கும்' என்றது மூன்று திறத்தாரையும். நான்காவது ஏழாவதன் பொருட்கண் வந்தது. 'நிகழ்வன எல்லாம்' என்றது, நல்லவும் தீயவுமாய சொற்களையும், செயல்களையும்;

'எல்லார் கண்னும் நிகழ்வன எல்லாவற்றையும் நாளும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பகைவர், நண்பினர், நடுநிற்போர், பொருட்படுத்தாதவர் என நால்வகையினரைப் பேசுகிறார் மணக்குடவர்/பரிப்பெருமாள். பகைவர், நண்பர் என இருவர் பற்றியதாகக் கூறுகிறார் பரிதி. அகத்தோர், புறத்தோர், அருகலர் என மூவகையினரைச் சொல்கிறார் காலிங்கர். பகைவர், நட்பினர், அயலார் என்ற மூவகையினர் பற்றியதாகப் பரிமேலழகர் உரைக்கின்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எல்லாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் எப்பொழுதும்', '(தன் நாட்டிலும் அயல் நாடுகளிலும்) எல்லாரிடத்திலும் நடக்கிற நிகழ்ச்சிகளையும்', 'எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் ஒற்றர் மூலமாய் எப்போதும்', 'எல்லாரிடமும் நிகழ்வன எல்லாவற்றையும் எப்பொழுதும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எப்பொழுதும் என்பது இப்பகுதியின் பொருள்.

வல்லறிதல் வேந்தன் தொழில்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.
பரிப்பெருமாள்: பிறர் அறிவதன் முன்னம் தான் அறிதல் வேந்தனது தொழில் என்றவாறு.
பரிதி: ஒற்றினாலே அறிவது வேந்தன் தொழில் என்றவாறு.
காலிங்கர்: ஒற்றுவித்து விரைவில் உணர்தல் வேந்தனது செய்தி என்றவாறு.
பரிமேலழகர்: ஒற்றான் விரைந்தறிதல்; வேந்தன் தொழில் - அரசனுக்கு உரிய தொழில்.
பரிமேலழகர் குறிப்புரை: அவை நிகழ்ந்த பொழுதே அவற்றிற்குத் தக்க அளியாகத் தெறலாகச் செய்யவேண்டுதலின் 'வல்லறிதல்' என்றும், இவ்விருதொழிற்கும் அறிதல் காரணம் ஆதலின், அதனையே உபசார வழக்கால் 'தொழில்' என்றும் கூறினார். 'ஒற்றான்' என்பது அதிகாரத்தான் வந்தது. இதனான் ஒற்றினாய அறன் கூறப்பட்டது.

'பிறர் அறிவதன் முன்னர்த் தான் ஒற்றால் விரைந்து அறிதல் வேந்தனது தொழில்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழில்', 'உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டியது அரசனுடைய கடமை', 'விரைந்து அறிதல் அரசனுடைய கடமையாகும்', 'ஒற்றால் விரைந்து அறிதல் அரசனுக்குரிய தொழிலாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

விரைந்து அறிதல் வேந்தன் கடமை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எப்பொழுதும் வல்லறிதல் வேந்தன் கடமை என்பது பாடலின் பொருள்.
'வல்லறிதல்' என்றதன் பொருள் என்ன?

எல்லாரிடத்திலும் நிகழ்பவை எல்லாவற்றையும் எல்லாக் காலத்திலும் விரைந்தறிதல் ஆட்சியாளர் கடமை.
ஆட்சியாளர் கடமை என்று கூறப்பட்டதால், எல்லாரிடத்தும் என்பதற்கு அரசாட்சி தொடர்பான அனைவரிடத்தும் எனக் கொள்ளவேண்டும். அரசினது நண்பர்கள், பகைவர்கள் நட்பு-பகை இல்லாமலும் அரசுக்குத் தொடர்புடையவர்கள் இவர்கள் அனைவரையும் குறிக்கும். ஓர் ஆட்சிக்கு நன்மையும் தீமையும் யாராலும் நிகழலாம். எனவே 'எல்லார்க்கும்' என்கிறது குறள். நிகழ்பவை எல்லாம் என்பது அவர்களது சொல்-செயல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் எனப்பொருள்படும். எல்லாக் காலத்திலும் என்பதற்கு எப்பொழுதும் அதாவது ஒவ்வொரு நாளும் இரவும் பகலும் எந்த நேரமும் நடப்பவற்றை என்று பொருள். வல்லறிதல் என்பது விரைந்து அறிதல் என்ற பொருள் தருவது. எப்பொழுதும் விழிப்பாக இருந்து அரசாட்சி தொடர்பான அனைத்துப் பொருள்கள் பற்றி விரைந்து செய்திகள் திரட்டப்படவேண்டும். இதை ஓர் அரசு தன் ஒற்றர்கள் வழி செயல்படுத்துவர். காலநேரமின்றி எப்பொழுதும் செயற்படுவதாதலால் ஒற்றுவித்தலைத் 'தொழில்' என்ற சொல்லால் சுட்டுகிறது குறள்.

'எல்லார் தம்மையும்' என வழங்கிய தொல்காப்பிய மரபை வள்ளுவர் 'எல்லார்க்கும்' எனத் திரிந்தவடிவமாக மாற்றி எல்லார்க்கும் எல்லாம் நிகழ்பவை (582) என ஆண்டார் என்பார் இ சுந்தரமூர்த்தி.

'வல்லறிதல்' என்றதன் பொருள் என்ன?

'வல்லறிதல்' என்ற தொடர்க்கு விரைந்து அறிதல், பிறர் அறிவதன் முன்னம் தான் அறிதல், விரைவில் உணர்தல், உள்ளது உள்ளவாறும், உரிய காலத்திலும் அறிதல், உடனுக்குடன் அறிந்து கொள்ளல், எவர்க்கும் முற்பட அறிதல், விரைவில் அறிதல், திறம்படத் தெரிந்துகொள்வது என உரை ஆசிரியர்கள் பொருள் கூறினர். இவற்றுள் விரைந்து அறிதல் என்பது பொருத்தம்.

ஆட்சியாளர் தம் நாட்டில் அங்கங்கே நிகழும் செயல்கள் எல்லாவற்றையும் விரைந்தறிந்து, அவற்றிற்கேற்றவாறு செயல்பட வேண்டுமாதலால், 'வல்லறிதல்' எனச் சொல்லப்பட்டது. எங்கேனும் ஓரிடத்தில் சில குழுவினர் தம்முள் தாம் சண்டையிட்டுப் பொதுநலத்திற்கும் கேடு விளைவித்துத் தாமும் அழிகின்றனர். இத்தகைய கலகத்தை ஒற்றுவித்து முன்கூட்டியே உளவுச் செய்திகள் மூலம் அறிந்திருக்க முடியும். அப்படி உணர்ந்திருந்தால் அக்கலகம் தோன்றாவாறு செய்திருக்கலாம். உளவாளிகள் விரைந்து செயல்படுவர் என்பது தெரிந்தால் மீண்டும் பொது அமைதிக்கு ஊறு செய்யவும் அவர்கள் அஞ்சுவார்கள். ஆள்வோர் எப்பொழுதும் விழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகிற்கு உணர்த்துவதற்கு விரைந்து செய்தி சேகரிக்கும் ஒற்றினால்தான் இயலும். நட்போ பகையோ கொள்ளவும் கொடையோ ஒறுத்தலோ உடனுக்குடன் நிகழ்த்தவும் விரைந்து செய்திகளை அறியவேண்டுமாதலின் 'வல்லறிதல்' என்று கூறப்பட்டது. காலம்போக அறிந்தால் அதனால் விளையும் தீமை பலவாதலின் வல்லறிதல் எனப்பட்டது.

எல்லாரிடத்தும் நிகழ்கின்ற எல்லாவற்றையும் எப்பொழுதும் விரைந்து அறிதல் வேந்தன் கடமை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஆள்வோர் தம்நாடு, அண்டைநாடு இவற்றில் நடப்பனவற்றை நாளும் அறிந்து ஒற்றாடல் வேண்டும்.

பொழிப்பு

எல்லாரிடத்தும் நிகழ்வன எல்லாவற்றையும் என்றும் உளவால் விரைந்து அறிதல் ஆட்சியாளர் கடமை.