இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0579



ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:579)

பொழிப்பு: தண்டித்தற்குரிய தன்மை உடையவரிடத்திலும் கண்ணோட்டம் செய்து, (அவர் செய்த குற்றத்தைப்) பொறுத்துக் காக்கும் பண்பே சிறந்தது.

மணக்குடவர் உரை: தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும் கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.

பரிமேலழகர் உரை: ஒறுத் தாற்றும் பண்பினார் கண்ணும் - தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்; கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை - கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
('பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம் 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.)

வ சுப மாணிக்கம் உரை: தண்டிக்கும் ஆற்றல் இருப்பினும் மனமிரங்கிப் பொறுத்துக் கொள்ளும் பண்பே சிறந்தது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும் கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை.


ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்:
பதவுரை: ஒறுத்தாற்றும்-தண்டித்துச் செய்யக்கூடிய; பண்பினார்கண்ணும்- இயல்பினாரிடத்தும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும்;
பரிப்பெருமாள்: தம்மை யொறுத்துச் செய்யும் இயல்புடையார்மாட்டும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: அன்றியும் ஒறுத்துச் செய்ய வேண்டும் இயல்பினை உடையார் மாட்டும் என்றும் ஆம்.
பரிதி: தமக்கு ஒறுப்புச் செய்யும் மாற்றாரிடத்தும்;
காலிங்கர்: தம்மை ஒருவர் உணர்ந்தும் உணராது ஒரு காலத்து ஒறுத்தாராயினும், அவரவர்மாட்டு;
பரிமேலழகர்: தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார் இடத்தும்;
பரிமேலழகர் குறிப்புரை: 'பண்பினார்' என்றதனான், அவர் பயிற்சி பெற்றாம்.

'ஒறுத்துச் செய்யும் இயல்புடையார் இடத்தும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறரைத் தண்டிக்கும் வலிமையுடையவரிடத்தும்', '(தமக்கு ஒரு தீங்கு செய்து) தாம் தண்டனை செய்ய வேண்டியவர்களிடத்திலும் கூட', 'தண்டித்து அடக்குதற்கு உரியவர்களிடத்தும், (ஓறுத்தாற்றும் பண்பினார் என்பதற்குத் தம்மைத் தவறாகத் தண்டிக்கும் இயல்புடையாரிடத்தும் என்று பொருள் கொள்ளுதலும் உண்டு.)', 'தண்டித்து நல்வழிப்படுத்தும் பண்புடையவரிடமும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தண்டிக்கும் வலிமை உடையவர்க்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணோடிப் பொறுத்தாற்றும் பண்பே தலை:
பதவுரை: கண்ணோடி-இரக்கம் காட்டி; பொறுத்துஆற்றும்-பொறுத்து நல்வழிப்படுத்தும்; பண்பே-குணமே; தலை-சிறப்பு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
பரிப்பெருமாள்: கண்ணோடிப் பொறுத்துச் செய்யும் குணமே தலையான குணம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: உம்மை சிறப்பும்மை. பிறர்க்குக் குற்றம் செய்தாரையே அன்றித் தமக்குக் குற்றம் செய்தாரையும் பொறுக்க வேண்டும்.
பரிதி: கிருபை செய்து காரியத்தைக் கொள்வது தலையான காரியம் என்றவாறு.
காலிங்கர்: தாம் கண்ணோட்டம் உடையராய் மற்று அவர் செய்த பிழையினைத் தாம் பொறுத்து மற்று அதனை ஒழுகச் செய்யும் இயல்பே தலைமைப்பாடாவது என்றவாறு.
பரிமேலழகர்: கண்ணோட்டம் உடையராய்க் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே அரசர்க்குத் தலையாய இயல்பாவது.
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒறுத்தாற்றும்', 'பொறுத்தாற்றும்' என்பன ஈண்டு ஒரு சொல் நீர.

'கண்ணோடிப் பொறுத்துச் செய்வதே தலையான குணம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மனம் இரங்கிப் பிழைகளைப் பொறுத்துக் கொள்ளும் பண்பு அமைதல் சிறந்தது', 'தாட்சணியம் காட்டிப் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு மேலும் உதவி செய்வதே மிகச் சிறந்தது', 'கண்ணோட்டத்தால், அவர்கள் குற்றத்தைப் பொறுக்கும் இயல்பே மேலான தன்மையாம்', 'இரக்கம் காட்டிக் குற்றத்தைப் பொறுத்து நல்வழிப்படுத்தும் இயல்பே தலையாயது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒறுத்தாற்றும் பண்பினார் இடத்தும், இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது என்பது பாடலின் பொருள்.
'ஒறுத்தாற்றும் பண்பினார்' யார்?

கண்ணும் என்ற சொல்லுக்கு இடத்தும் என்பது பொருள்.
கண்ணோடி என்ற சொல் இரக்கம் காட்டி என்ற பொருள் தரும்.
பொறுத்தாற்றும் என்றதற்குப் பொறுத்து நல்வழிப்படுத்தும் என்று பொருள் கொள்வர்.
பண்பே தலை என்ற தொடர்க்கு குணமே சிறந்தது என்று பொருள்.

தண்டிக்கும் ஆற்றல் உடையவர்க்கும், கண்ணோட்டமுடையராய் இருந்து குற்றத்தைப் பொறுத்து நல்வழிப்படுத்துவதே, தலையாய குணம் ஆகும்.
ஒருவன் தொடர்ந்து குற்றங்களைச் செய்து வருகிறான். என்ன எடுத்துச் சொல்லியும் பொருட்படுத்தாமல் ஒறுக்கத்தக்கவனாக இருக்கிறான். தான் ஒறுக்கும் வல்லமை கொண்டிருந்தாலும் ஒருவன் பொறுமை காத்து அதாவது இரக்கம் காட்டி குற்றம் செய்தவனை நல்வழிப்படுத்த வேண்டும் என்கிறது பாடல். செல்விடத்துக் காப்பான் சினம் காப்பான்... ( வெகுளாமை 302 பொருள்: தன் சினம் செல்லுமிடத்தும் அது வராமல் தடுப்பவன் சினங்காப்பான்...) என்று முன்னர் சொல்லப்பட்ட குறள் நடையிலேயே இப்பாடலும் அமைந்தது.
தண்டனை ஓர் உயிரை அழிப்பதாகவோ, துன்புறுத்துவதாகவோ பழிவாங்குவதாகவோ அல்லாமல் குற்றத்தை உணர்த்துவதற்கான வாய்ப்பாக இருத்தல் வேண்டும் என்பது உட்கிடக்கை.

'ஒறுத்தாற்றும் பண்பினார்' யார்?

'ஒறுத்தாற்றும் பண்பினார்' என்றதற்குத் தம்மை ஒறுத்துச் செய்யும் இயல்புடையார், ஒறுத்துச் செய்ய வேண்டும் இயல்பினை உடையார், தமக்கு ஒறுப்புச் செய்யும் மாற்றார், தம்மை ஒருவர் உணர்ந்தும் உணராது ஒரு காலத்து ஒறுத்தார், தம்மை ஒறுக்கும் இயல்பு உடையார், தண்டித்தற்குரிய தன்மை உடையவர், தம்மைப் பகைத்து வேண்டுமென்று துன்புறுத்தும் இயல்பினார், தம்மை வருத்திப் பழகும் இயல்புடையார், தண்டிக்கும் ஆற்றல் இருப்பவர், பிறரைத் தண்டிக்கும் வலிமையுடையவர், தண்டனை கொடுக்க வேண்டிய தகுதியுடையவர்கள், தண்டித்தே தம் எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ளும் தன்மை உடையவர், தண்டித்து அடக்குதற்கு உரியவர், தம்மைத் தவறாகத் தண்டிக்கும் இயல்புடையார், தண்டித்து நல்வழிப்படுத்தும் பண்புடையவர், தண்டனை பெறத்தக்கவர், தம்மை வருத்தும் இயல்புடையவர், தம்மை வருத்தியொழுகும் இயல்புடையார் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

இத்தொடரிலுள்ள 'ஒறுத்தாற்றும்' என்ற சொல்லால் குறட்பாவின் கருத்தைப் புரிந்து கொள்வதில் இடர்ப்பாடு நேர்கின்றது. 'தண்டித்தே ஆக வேண்டியிருந்தாலும்' என்றும் 'பிறரை அழிக்க நினைப்பவரிடத்திலும்' என்றும் 'தம்மையே ஒறுத்துச் செயல்படுவாரிடத்தும் அதாவது தமக்கே குற்றம் செய்வாரிடத்திலும்' என்றும் இதற்கு வேறுவேறாகாப் பொருள் கூறினர்.
பரிப்பெருமாள் 'ஒறுத்தாற்றும் பண்பினார்' என்பதற்குத் 'தண்டித்தேயாக வேண்டும் என்ற இயல்புடையார்' எனக் கூறுகிறார். ஒறுத்தல் என்பதற்குத் தண்டித்தல் என்பது தவிர்த்து வெறுத்தல் அல்லது வருத்துதல் என்ற பொருளும் உள்ளது. வருத்துதல் எனப் பொருள் கொண்டு வை மு கோபாலகிருஷ்ணமாச்சாரியார் ‘ஒறுத்தாற்றும் என்பதற்குத் தம்மை வருத்தி அவ்வருத்துதலைத் தொடர்ச்சியாகச் செய்யும் என்றும் பொறுத்தாற்றும் என்பதற்கு அக்குற்றத்தைப் பொறுத்து மேலும் அவர்க்கு உதவச் செய்யு மென்றும் கொள்ளின் இக்குணம் உத்தமோத்தமமாம்' என உரை செய்தார். குறளின் சொல்லமைப்பு நோக்கினால் இவ்வுரை நன்கு பொருந்துகிறது. வ சுப மாணிக்கம் 'இக்குறட்கு ‘ஒறுத்து ஆற்றவல்ல இயல்பு மிக்கவர்களிடத்தும் கண்ணோடி, பிறர் குற்றத்தைப் பொறுக்கும் பண்பே சிறப்பாகும். அஃதாவது ஆற்றலுடையவர்க்கும் ஒறுத்தல் சிறப்பாகாது. கண்ணோடிப் பொறுத்தலே சிறப்பாகும்’ என்பது கருத்தாகக் கொள்க' என்கிறார் 'தாம் ஒறுக்கும் இயல்பினாரிடத்துப் பொறுமை காட்டலே சிறப்பு. ஆகவே ஆற்றலுடையார்க்கும் ஒறுத்தல் சிறப்பாகாது; கண்ணோடிப் பொறுத்தலே சிறப்பாகும்' என்னும் இவர் கருத்து மேலானது.
அனைத்து உரைகளையும் நோக்கும்போது 'ஒறுத்தாற்றும் பண்பினார்' என்றதற்கு 'தண்டிக்கும் ஆற்றல்பெற்ற தன்மையர்' என்ற பொருள் சிறந்து நிற்கிறது.

தண்டிக்கும் வலிமை உடையவர்க்கும், இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே தலையாயது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் காட்டி குற்றஞ் செய்தவன் உணருகிறவரை பொறுத்திருக்க.

பொழிப்பு

தண்டிக்கும் ஆற்றல் உடையவர்க்கும் இரக்கம் காட்டிப் பொறுத்து நல்வழிப்படுத்தும் குணமே சிறந்தது.