இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0577



கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார்
கண்ணோட்டம் இன்மையும் இல்

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:577)

பொழிப்பு: கண்ணோட்டம் இல்லாத மக்கள் கண் இல்லாதவரே ஆவர். கண் உடைய மக்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தலும் இல்லை.

மணக்குடவர் உரை: கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.

பரிமேலழகர் உரை: கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் - கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்; கண் உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்- கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
(கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கண்ணோட்டம் இல்லாதவர்கள் கண்ணுடையவராகக் கருதப்படமாட்டார். உயிர்த் தன்மைக்கு இனமாகிய கண்ணுடையவர்கள் கண்ணோட்டம் இல்லாதிருத்தல் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணோட்டம் இல்லவர் கண்இலர் கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்.


கண்ணோட்டம் இல்லவர் கண்இலர்:
பதவுரை: கண்ணோட்டம்-இரக்கம்; இல்லவர்-இல்லாதவர்; கண்-விழி; இலர்-இல்லாதார்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணோட்டமில்லாதவர் கண்ணிலரே;
பரிப்பெருமாள்: கண்ணோட்டம் இல்லாதார் கண்ணிலரே;
பரிதி: கிருபை இல்லாதார் அந்தகற்கு ஒப்பர்;
காலிங்கர்: இனிப் பல சொல்லி என்? உலகத்துப் பிறர் மாட்டுக் கண்ணோட்டம் இல்லாதவர் யாவர்? மற்று அவரே கண் இல்லாதோர் ஆவார்;
பரிமேலழகர்: கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணுடையரும் அல்லர்;

'கண்ணோட்டம் இல்லாதவர் கண் இல்லாதோர் ஆவார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரக்கம் இல்லாதவர் கண்ணில்லாதவர்', 'இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவரே', 'தாட்சணிய குணம் இல்லாதவர்கள் பிறருடைய தராதரத்தைப் பார்க்க முடியாத குருடர்கள்', 'கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிருந்தும் கண்ணில்லாதவரே' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்உடையார் கண்ணோட்டம் இன்மையும் இல்:
பதவுரை: கண்-விழி; உடையார்-உடைமையாகக் கொண்டவர்; கண்ணோட்டம்-இரக்கம்; இன்மையும்-இல்லாதிருத்தலும்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை.
பரிப்பெருமாள்: கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இலார் ஆதலான் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: உம்மை ஐயத்தின்கண் வந்தது. கண் உண்டாயின் நோக்குமாயின் வந்து நிலைமையைக் கண்டு கண்ணோடும்; ஆதலான் கண்ணோட்டம் இல்லாதவர் கண்ணிலர் என்று மிகுத்துக் கூறிற்று என்றது.
பரிதி: கிருபையான பார்வை உள்ளவர் கண்ணுடையர் என்றவாறு.
காலிங்கர்: மற்று இனிக் கண்ணுடையராவர் கண்ணோட்டம் இல்லாமையும் இல்லை.
பரிமேலழகர்: கண்ணுடையவர் கண்ணோட்டம் இலராதலும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: கண்ணுடையராயின் காட்சிக்கண்ணே அஃது ஓடும் என்பதுபற்றி, 'கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர்' எனக் கூறியபின், அதனை எதிர்மறை முகத்தான் விளக்கினார். உம்மை இறந்தது தழீஇய எச்ச உம்மை. இவை இரண்டு பாட்டானும் கண்ணோடாதாரது இழிபு கூறப்பட்டது.

'கண்ணுடையார் கண்ணோட்டமிலராதலும் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணுடையவர் இரக்கம் உடையவர்', 'கண் உடையவர் இரக்க உணர்வு இல்லாதவர் ஆதலும் இல்லை', 'ஆராய்ந்தறியக்கூடிய கண்களையுடையவர்கள் தாட்சணியம் இல்லாமல் நடந்து கொள்ள மாட்டார்கள்', 'கண்களைப் பெற்றுள்ளோர் கண்ணோட்டம் இல்லாதிருந்தும் இல்லை. (அவ்விதம் இல்லாதிருந்தால் கண்கள் இல்லாதவரே.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இன்மையும் இல் என்பது பாடலின் பொருள்.
'கண்ணோட்டம் இன்மையும் இல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

கண்ணோட்டம் என்ற சொல்லுக்கு இரக்க உணர்வு என்பது பொருள்.
இல்லவர் என்ற சொல் இல்லாதவர்கள் என்ற பொருள் தரும்.
கண்இலர் என்ற தொடர்க்கு கண்ணில்லாதவர்கள் என்று பொருள்.
கண்ணுடையார் என்ற சொல் கண் உள்ளவர்கள் என்ற பொருளது.

கண்ணுடையவர் இரக்கமில்லாமல் இருக்க முடியாது.
கண்பொறியுடைய உயிர்கள்- நாலறிவு கொண்ட உயிர்களிலிருந்து ஆறறிவு உள்ள மக்கள் வரை- எல்லாவற்றிற்கும் ஒரு சிறிதளவாவது கண்ணோட்டம் உண்டு என்பது வள்ளுவரின் வலுவான நம்பிக்கை. அதனால்தான் கண் பெற்றிருப்பவர் எவரும் கண்ணோட்டம் இல்லாமல் இருக்கமாட்டார்கள் என்கிறார் இப்பாடலில். கண்ணினால் இரக்கத்தை வெளிப்படுத்தாதவர், கண்ணைப் பெற்றிருந்தும், கண் இல்லாதவர்தான் என்றும் இங்கு கூறுகிறார். ஒரு துயரத்தை ஒருவனது கண் காண நேர்ந்தால் தானே இரக்கப்பட்டுவிடும்- அவன் வலிந்து அதைத் தவிர்த்தாலொழிய இரக்கவுணர்வு தானாக வெளிப்பட்டுவிடும்.
நாமக்கல் இராமலிங்கம் 'கண் இலர்-கண்ணேயில்லாதவர் என்பது கருத்தன்று. பிறரைக் கண்டறிய கண்ணில்லாதவர்' என்றும் 'கண்ணுடையார்' என்பதற்குப் 'பிறரைக் கண்டறியும் கண் உடையார்' எனவும் இக்குறளுக்கான உரையில் கூறினார்.
'கண்ணோட்டம் என்ற பண்புக்கும் கண் என்ற பண்பிக்கும் உள்ள இயைபு சொல்லப்பட்டது. இத்தொடர்பு பிரிக்க முடியாத தொடர்பு அதாவது சமவாய சம்பந்தம்; தீயும் சூடும் போல. ஆதலால் கண்ணோட்டமில்லையாயின் கண்ணில்லை, கண்ணிருந்தால் கண்ணோட்டமும் இல்லாமலிருக்காது என்கிறார் வள்ளுவர். கண்ணின் தொழிற் பண்பு பொருள்களைக் கண்டறிதல். குணப்பண்பு கண்ணோட்டம். கண்டறிதலே கண்ணோட்டத்திற்காகத்தான். ஆகவே கண் பொருள்களைப் பார்த்தறியுமாயினும் கண்ணோட்டம் செய்யாதாயின் இல்லாதது போலத்தான். கண் இருந்தால் கண்ணோட்டமில்லாமலிராது என்பது' என்று தண்டபாணி தேசிகர் கருத்துரை வழங்கியுள்ளார்.

'காட்சியினாற் கொள்ளும் சிறந்த பயன் இன்மையால் 'கண்ணோட்ட மில்லவர் கண்ணிலர்' என்றார். அதை வற்புறுத்தவும் குறள் நிரம்பவும் பின்னும் அதை எதிர்மறை முகத்தாற் கூறினார்' என்று முன்னணி உரையாளர் ஒருவர் குறித்துள்ளார். இதில் 'குறள் நிரப்ப' என்ற கூற்று முற்றிலும் தவறானதும் வருந்துதற்குரியதாகும். வள்ளுவர் குறள் நிரம்பு வெற்றுச் சொல்லையோ அதிகாரம் நிரப்பு வெற்றுக் குறளையோ நூலில் எவ்விடத்திலும் சேர்த்ததில்லை. ஒவ்வொரு சொல்லும் முற்றிலும் தேவையானதாகவும் பொருள் பொதிந்ததுமாகவும் ஒவ்வொரு குறளும் மற்றதினின்றும் வேறுபட்ட செய்தியைத் தாங்கியதாகவுமே இருக்கும்.
கண்ணைப் பெற்றதனால் அந்தக் கண்ணுக்குக் கண்ணோட்டம் உண்டு என்ற புதிய கருத்தைப் பதியவே இக்குறள் யாக்கப்பட்டது என்பது அறியப்படவேண்டியது.

'கண்ணோட்டம் இன்மையும் இல்' என்ற பகுதியின் பொருள் என்ன?

இப்பகுதிக்குக் கண்ணோட்டமிலராதலும் இல்லை, கண்ணோட்டம் இன்மையும் இலார், கிருபையான பார்வை உள்ளவர், கண்ணோட்டம் இல்லாமையும் இல்லை, கண்ணோட்டம் இலராதலும் இல்லை, இரக்கம் உடையவர், இரக்க உணர்வு இல்லாதவர் ஆதலும் இல்லை, தாட்சணிய குணம் இல்லாதிருப்பதும் இல்லை, கண்ணோட்டம் இல்லாமல் இராது (உண்டு), கண்ணோட்டம் இல்லாதிருத்தல் இல்லை, கண்ணோட்டம் இல்லாதிருந்தும் இல்லை. (அவ்விதம் இல்லாதிருந்தால் கண்கள் இல்லாதவரே.), எப்போதேனும் என்ன கரணியம் பற்றியும் கண்ணோட்ட மில்லாதவராகவும் இரார், கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.
இவற்றுள் 'கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள்' என்பது பொருத்தம்.

'தானாடாவிட்டாலும் தன் சதை ஆடும்' என்ற வழக்குப் போல வெளியே தோன்றாவிட்டாலும் கண்ணோட்டம் இல்லாததுமான கண் இல்லை என்பது பொருள்.

இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணைப் பெற்றிருப்பவர் கண்ணோட்டம் இல்லாமலும் இருக்கமாட்டார்கள் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கண்ணோட்டம் என்பது எல்லா உயிர்களிடத்தும் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஓர் அளவில் இருக்கவே செய்யும்.

பொழிப்பு

இரக்க உணர்வு இல்லாதவர் கண் இல்லாதவர்; கண்ணுடையவர் இரக்க உணர்வு இல்லாமலும் இருக்கமாட்டார்கள்.