இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0576மண்ணோடு இயைந்த மரத்தனையர் கண்ணோடு
இயைந்துகண் ஓடா தவர்

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:0576)

பொழிப்பு: கண்ணோட்டத்திற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் கண்ணோட்டம் இல்லாதவர், (கண் இருந்தும் காணாத) மரத்தினைப் போன்றவர்.

மணக்குடவர் உரை: சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.

பரிமேலழகர் உரை: கண்ணோடு இயைந்து கண்ணோடாதவர் - ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்; மண்ணோடு இயைந்த மரத்து அனையர் - இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
('ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது. மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.)

சி இலக்குவனார் உரை: பார்வையோடு பொருந்தி (துன்புற்றாரைக் கண்டால்) இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்திற்கு ஒப்பாவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணோடு இயைந்து கண்ஓடாதவர், மண்ணோடு இயைந்த மரத்தனையர் .


மண்ணோடு இயைந்த மரத்தனையர்:
பதவுரை: மண்ணோடு-மண்ணுடன்; இயைந்த-பொருந்தி நிற்கின்ற; மரத்து-மரம்; அனையர்-ஒப்பர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவையோடு ஒப்பார்;
மணக்குடவர் குறிப்புரை: இது கண்ணோடாமை மரப்பாவைக்கு ஒக்கும் என்றது.
பரிப்பெருமாள்: சுதைமண்ணோடு கூடிச்செய்த மரப்பாவையோடு ஒப்பர்;
பரிப்பெருமாள் குறிப்புரை: கண் காணாமை மரப்பாவைக்கும் ஒக்கும். இது மகன் அல்லன் என்றது.
பரிதி: மண்ணோடு இயைந்த சித்திரத்தில் எழுதிப் பழுத்த மாமரத்துக்கு நிகராவான்;
காலிங்கர்: வண்ணம் எழுதா வகைத்து உருவாகிய மண் மேல் எழுதிய கற்பகத்தரு முதலிய மரத்தைப் போல்பவர்;
பரிமேலழகர்: இயங்காநின்றாராயினும் மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்.
பரிமேலழகர் குறிப்புரை: மரமும் கண்ணோடு இயைந்து கண்ணோடாமையின். இது தொழில் உவமம். அதனைச் சுதைமண்ணோடு கூடிய மரப்பாவை என்று உரைப்பாரும் உளர். அஃது உரையன்மை, காணப்படும் கண்ணானன்றி, அதனுள் மறைந்து நிற்கின்ற ஒருசார் உள்ளீட்டால் கூறினமையானும், மரக்கண்ணோ மண்ணாள்வார் கண்ணென்று, இரக்கண்டாய் (புறத்திரட்டு 1555 முத்தொள் ) என்பதனானும் அறிக.

மணக்குடவர்/பரிப்பெருமாள் 'சுதைமண்ணால் செய்த மரப்பாவையோடு ஒப்பார்' என்றும் 'மண்ணில் வரைந்த மாமரச் சித்திரத்திற்கு நிகர்' என்று பரிதியும் 'மண் மேல் எழுதிய கற்பகத்தரு மரத்தைப் போல்பவர்' என்று காலிங்கரும் 'மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்' என்று பரிமேலழகரும் வேறுபட இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மண்ணோடிருந்தும் வளராத மரம் போல்வர்', 'மண்ணோடு பொருந்தியிருந்தும் அதன் பயனைப் பெற்று வளராத மரம் போல்வர்', 'நிலத்தில் (முளைத்த இடத்தைவிட்டு நகர முடியாத) ஜடமாக இருக்கும் மரத்துக்குச் சமானமாவார்கள்', 'மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரத்தினை ஒப்பர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணோடு இயைந்து கண்ஓடா தவர்:
பதவுரை: கண்ணோடு-கண்ணுடன்; இயைந்து-பொருந்தி வைத்து; கண்ஓடாதவர்-இரக்கம் காட்டாதவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்தபின்பு கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
பரிப்பெருமாள்: ஒருவன் கண்ணோடு தங்கண்கலந்த பின்பும் கண்ணோட்டத்தைச் செய்யாதவர்.
பரிதி: கிருபைக்கண் இல்லாத அரசன் என்றவாறு.
காலிங்கர்: யார் எனின், செய்ய வாயும் செவ்வரிக் கண்ணும் கரிய குழலும் வெளிய நகையும் பிறவும் ஆகிய வகையமை உறுப்பின் வனப்பு வேற்றுமை தகைபெற உடைய தன்மையரேனும் கண்ணுறுப்புக்கு நுண்ணுறுப்பாகிய கண்ணோட்டம் இல்லாத கடுவினையாளர் என்றவாறு.
பரிமேலழகர்: ஓடுதற்கு உரிய கண்ணோடு பொருந்திவைத்து அஃது ஓடாதவர்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஓடாதவர்' என்புழிச் சினைவினை முதல்மேல் நின்றது.

'கண்ணோடு பொருந்திவைத்து கண்ணோட்டத்தைச் செய்யாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். கவிதை நடையில் கூறப்பட்ட காலிங்கரது இவ்வுரைப்பகுதி ஆசிரியப்பா நடை விரவ அமைந்துள்ளது உள்ளது என்பர்

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர்', 'கண்ணோடு பொருந்தியிருந்தும் உயிர்களிடத்தில் இரக்கம் காட்டாதவர்', 'கண்ணிருந்தும் கண்ணை ஓட்டி ஆராய்ந்தறிய முடியாதவர்கள்', 'இரக்கத்தோடு பார்த்தற்குரிய கண்ணையுடைய ராயிருந்தும் அதற்குரிய கண்ணோட்டம் இல்லாதவர்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு இயைந்த மரத்தினை ஒப்பர் என்பது பாடலின் பொருள்.
'மண்ணோடு இயைந்த மரம்' குறிப்பது என்ன?

அனையர் என்ற சொல்லுக்குப் போன்றவர் என்பது பொருள்.
கண்ணோடு என்ற சொல் கண்களோடு என்ற பொருள் தரும்.
இயைந்து என்ற சொல் பொருந்தி இருந்தும் எனப் பொருள்படும்.
கண்ணோடாதவர் என்ற சொல்லுக்கு இரக்கம் காட்டாதவர் என்று பொருள்.

கண்கொண்டு பார்த்தும் இரக்கம் காட்டாதவர் உணர்ச்சியற்ற மரம் போன்றவராவர்.
ஆறறிவுடைய மனிதனாகப் பிறந்திருந்தாலும் இரக்கம் இல்லாத பார்வை கொண்டவன் ஓரறிவு உடைய மரமேயாவான். மண்ணோடு இயைந்த மரம் என்பது அதன் இயற்கையான நிலையினைப் புலப்படுத்தி நின்றது. மரம் மண்ணில் முளைத்துக் கிளைகளொடு பரவி நின்றாலும், பிற உயிர்களின் துன்பங்களைக் கண்டு இரங்கும் இயல்பு அதற்கு இல்லை. கண்ணோட்டம் இல்லாதவன் உருவத்தால் மனிதனைப் போலக் காட்சியளித்தாலும் அவன் மனிதன் அல்லன்; மண்ணிலே பொருந்தி இருந்து இயங்கமுடியாத உணர்ச்சியற்ற மரம் போன்றவனேயாவான். நீட்டோலை வாசியா நின்றான் குறிப்பறிய மாட்டாதவன் நல்மரம் (மூதுரை 13 பொருள்: அவையின் நடுவே (ஒருவர்) நீட்டிய ஓலையை படிக்கமாட்டாமல் நின்றவனும் பிறர் குறிப்பை அறியமாட்டாதவனும் நல்ல மரங்களாம்) என்று அசைவுகள் காட்டாமல் நிற்கும் மரம் பற்றி மூதுரையும் கூறும். ஒருவர் குற்றஞ் செய்த வழியும், துன்புற்றவிடத்தும், இயல்பாக அவர்பால் கண்ணோடிக் குற்றத்தைப் பொறுத்தலும், துன்பத்தைக் களைதலும் மனித இயல்பு. ஆனால் என்ன துன்பமான சூழலிலும் மனம் இளகாத கல் நெஞ்சம் படைத்தவர்கள், கண்ணோட்டதிற்கு உரிய கண்ணோடு பொருந்தி இருந்தும் இரக்கம் இல்லாதிருப்பர். இவர்கள் மரத்தினைப் போன்றவர் என்கிறது பாடல்.

'மண்ணோடு இயைந்த மரம்' குறிப்பது என்ன?

'மண்ணோடு இயைந்த மரம்' என்ற பகுதிக்குச் சுதைமண்ணோடு கூடச்செய்த மரப்பாவை, மண்ணோடு இயைந்த சித்திரத்தில் எழுதிப் பழுத்த மாமரம், மண் மேல் எழுதிய கற்பகத்தரு முதலிய மரம், மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரம், (கண் இருந்தும் காணாத) மரம், மண்ணில் பொருந்தி நிற்கின்ற பார்வையற்ற கண்களையுடைய (கணுக்களையுடைய) மரம், மண்ணோடு கலந்த மரம், மண்ணோடிருந்தும் வளராத மரம், மண்ணோடு பொருந்தியிருந்தும் அதன் பயனைப் பெற்று வளராத மரம், (முளைத்த இடத்தைவிட்டு நகர முடியாத) ஜடமாக இருக்கும் மரம், மண்ணோடு பொருந்தியிருந்தாலும் (இயக்கமில்லாத) மரம், மண்ணோடு பொருந்தி நிற்கின்ற மரம், மண்ணோடு பொருந்திய மரம், மண்ணோடு பொருந்தியிருக்கும் மரம், நிலைத்திணையைச் சேர்ந்ததும் மண்ணோடு பொருந்தியதுமான மரம், மண்ணோடு சேர்ந்து இயங்காமல் நிற்கும் மரம், மண்ணிலே பிறந்து, மண்ணிலே மடியும் மரம், மண்ணில் ஜடமாக நிற்கும் மரம் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மண்ணோடியைந்த மரம் என்பதற்கு மரத்தை உள்ளீடாகக் கொண்டு மேலே மண் பூசிச் செய்த பதுமை, மண்மேல் எழுதும் சித்திரத்தில் காணப்படும் மரம், மண்ணொடு பொருந்தி நிற்கின்ற மரம் என மூவகையாகத் தொல்லாசிரியர்கள் உரை பகன்றனர்.
சுதைப் பாவைகள் செய்வோர், பாவை உறுதியாக நிற்க. உள்ளீடாக மரங்களைச் சீவி இணைத்து, மேல் சுதை அப்பி அழகு செய்வது வழக்கம். மண் பூசிய மரப்பாவைக்கும் அழகிய கண் இருக்கும். ஆனால் அதில் உணர்ச்சி இருக்காது. கண்ணுள்ள மனிதருள். அக்கண்ணின் தன்மையான கண்ணோட்டம் இல்லாவிடில் மரப்பாவைபோல் உணர்ச்சியற்று இருப்பர். இரண்டிற்கும் கண்கள் இருந்தும் பயன் ஆகவில்லை எனவே உணர்ச்சியற்ற மரப்பாவையுடன் ஒப்பர் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர். பரிதி 'சித்திரத்தில் எழுதிய பழுத்தா மாமரம்' என்றும் காலிங்கர் 'மண்மேல் எழுதிய கற்பக தரு' என்றும் உரை செய்தனர். பரிமேலழகர் 'கண்ணோடாதவர் இயங்குவாராயினும், இயங்காமலே நிலத்தொடு இயைந்துள்ள மரத்தை ஒப்பர்' என விளக்கினார். ஓட்டமுள்ள கண்ணிருந்தும் கண்ணோடாதவனுக்கு-உயிரிருந்தும் மண்ணோடு பொருந்தி இயக்கமில்லாது இருக்கும் மரம் போல்வன் என்ற பரிமேலழகர் உரை சிறந்தது.
இக்குறளுக்கு 'மண்ணோடு இயைந்திருந்தும் உயிரோட்டமின்றி மண்ணின் பயனைப் பெறாது மரம் போல்வர். கண்ணோடு இயைந்தும் கண்ணின் பயனான ஓட்டத்தைப் (இரக்க உணர்வை) பெறாதவர்' என உரை வரைந்தார் வ சுப மாணிக்கம்.
'தம் கண் முன்னர் எவ்வளவு துன்பச் செயல்கள் நடைபெற்றாலும் அதனை உணராது நிற்கும் மரத்திற்கும் கண்ணோடாதவர்களுக்கும் வேறுபாடு இல்லை. எனவே அவர்கள் மரம் போன்றவர் என்கிறது குறள். மரத்தின் செயலற்ற தன்மையை 'மண்ணோடு இயைந்த மரம்' என்ற தொடர் விளக்குகிறது.

கண்ணிருந்தும் இரக்கம் காட்டாதவர் மண்ணோடு பொருந்திய மரத்தினை ஒப்பர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கண்ணோட்டம் காட்டாத அசையா மனம் கொண்டோர் மரத்திற்குச் சமம்.

பொழிப்பு

கண்ணோடிருந்தும் இரக்கம் இல்லாதவர் மண்ணோடு பொருந்திய மரம் போல்வர்.