இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0573



பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்?

(அதிகாரம்:கண்ணோட்டம் குறள் எண்:573)

பொழிப்பு: பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும்? அதுபோல், கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன பயனுடையதாகும்?

மணக்குடவர் உரை: பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின். அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து.
இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.

பரிமேலழகர் உரை: பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல் - பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்; கண் என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் - அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
('பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.)

தமிழண்ணல் உரை: பாட்டுக்கு இயைபுபடாத பண்ணால் பயன் என்ன? அதுபோலக் கண்ணோட்டம் இல்லாத கண்ணாக இருந்தால், அக்கண்ணால் என்ன பயன்? கண்ணிருந்தும் பயனில்லை. கண்ணை இறைவன் படைத்திருப்பது, இடரோ, துன்பமோ கண்டவிடத்துக் கருணை காட்டுதற்கேயாகும் என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பாடற்கு இயைபின்றேல் பண்என்னாம்? கண்ணோட்டம் இல்லாத கண் கண்என்னாம்? .


பண்ணென்னாம் பாடற்கு இயைபின்றேல்:
பதவுரை: பண்-இசை; என்னாம்-சொல்லோம்; பாடற்கு-பாடுதல் தொழிலோடு; இயைபு-பொருத்தம்; இன்றேல்-இல்லையாயின்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின்;
பரிப்பெருமாள்: பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின்;
பரிப்பெருமாள் குறிப்புரை: பாடலாவது பாடுதல் தொழில். அஃதாவது மந்தம், உச்சம், சமம், குடிலம் முதலாயின. அதனொடு பொருத்தம் இன்மையாவது எடுத்துக்கொண்ட பண் இவ்விடங்களில் ஒவ்வாது நின்று கேட்டற்கு இன்பம் பயவாமை.
பரிதி: சங்கீத லட்சணம் இல்லாத பாட்டுப் பாட்டாமோ?
காலிங்கர்: இலக்கண முறையான் இசை அறியாது மயக்க மாந்தர் தமது இயற்கைச் செவியினால் கேட்டு மற்று இது மிகவும் இனியது ஓர் பண் என்றார் ஆயினும், அதனை யாம் பண் என்று சொல்லோம்; என்னையோ எனின் பாடல் தூக்காகிய இசைத் தொடர்பின்கண் தான் வந்துமேவி நின்று அவ்விசைநூல் யாப்பிற்கு இனிது இயைபு இன்றி நிற்குமாயின்;
பரிமேலழகர்: பண் என்ன பயத்ததாம் பாடல் தொழிலோடு பொருத்தமின்றாயின்;

'பண் என்ன பயனுடைத்தாம், பாடலொடு பொருந்தாதாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் பாடல் என்பதற்குப் பாடுதல் தொழில் எனச் சொல்லி அதற்குச் சுருங்கிய விளக்கமும் தந்தார். பரிமேலழகர் அதை மேலும் விரித்து எழுதினார். மற்றவர்கள் என்னாம் என்ற சொல்லுக்கு 'என்ன ஆகும்' என்று உரை செய்ய, காலிங்கர் 'சொல்லோம்' எனப் பொருள் தருவர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பாட்டுக்குப் பொருந்தாத இசையாற் பயனென்ன?', 'பாட்டோடு பொருந்தி வாராவிடின் பண்ணால் என்ன பயன்?', '(தாட்சண்ணியம் இல்லாத வாழ்க்கை பயனற்றது) இராக தாளங்களோடு பொருந்தப் பாடுவதற்கு முடியாத பாட்டினால் என்ன பயன்?', 'பாடல்பொருளுக்குப் பொருத்தமில்லையேல் பண்ணால் என்ன பயன் உண்டு?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணென்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்:
பதவுரை: கண்-விழி; என்னாம்-என்ன ஆகும்; கண்ணோட்டம்-இரக்கம்; இல்லாத-இல்லாத; கண்-இடத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.
பரிப்பெருமாள்: அதுபோலக் கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்ட மில்லாத காலத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிறர்க்கும் இன்பம் பயவாதென்றது.
பரிதி: அதுபோலக் கண்ணோட்டம் இல்லாத கண் புண்ணோடு ஒக்கும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதுபோல ஈண்டு நுண்ணுணர்வில்லோர் கண் என்றாராயினும் அதனைக் கண் என்று சொல்லோம் கண்ணோட்டம் இல்லாத கண்ணினை என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோலக் கண் என்ன பயத்ததாம் கண்ணோட்டமில்லாத இடத்து.
பரிமேலழகர் குறிப்புரை: 'பண்', 'கண்' என்பன சாதிப்பெயர், பண்களாவன: பாலையாழ் முதலிய நூற்றுமூன்று. பாடல் தொழில்களாவன: யாழின்கண் வார்தல் முதலிய எட்டும், பண்ணல் முதலிய எட்டும், மிடற்றின்கண் எடுத்தல், படுத்தல், நலிதல், கம்பிதம், குடிலம் என்னும் ஐந்தும், பெருவண்ணம், இடை வண்ணம், வனப்பு வண்ணம் முதலிய வண்ணங்கள் எழுபத்தாறுமாம். இவற்றோடு இயையாதவழிப் பண்ணால் பயன் இல்லாதவாறுபோலக் கண்ணோட்டத்து இயையாத வழிக் கண்ணால் பயனில்லை என்பதாம். கண் சென்ற வழி நிகழ்தல் பற்றி அதனை இடமாக்கினார். இறுதிக்கண் 'கண்' என்பதனைக் 'கண்ணகல் ஞாலம்' (திரிகடுகம் 1) என்புழிப் போலக் கொள்க.

'கண் என்ன பயனுடைத்தாம், கண்ணோட்டமில்லாத காலத்து/இடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர் இறுதியில் உள்ள கண் என்பதற்கு 'இடத்து' என்றில்லாமல் 'காலத்து' எனப்பொருள் கொள்கிறார். முதல் பகுதிபோலவே, மற்றவர்கள் என்னாம் என்ற சொல்லுக்கு 'என்ன ஆகும்' என்று உரை செய்ய, காலிங்கர் இங்கும் அதற்கு 'சொல்லோம்' எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இரக்கம் காட்டாத கண்ணால் என்ன பயன்?', 'அதுபோல் இரக்கமில்லாத இடத்துக் கண் பெற்றதனால் என்ன பயன்?', 'அதைப்போல, ஒருவரைப் பார்த்தவுடனே அவருடைய தாரதாம்மியத்தை அறிய முடியாத கண்களால் பயனென்ன?', 'அதுபோலக் கண்ணோட்டம் இல்லாத கண் என்ன பயனைத் தரும்? ஒன்றுமில்லை ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? என்பது பாடலின் பொருள்.
'பாடற்கு இயைபு' குறிப்பது என்ன?

பண் என்ற சொல்லுக்கு இசை என்று பொருள்.
என்னாம் என்றதற்கு என்ன ஆகும் என்றும் சொல்லோம் என்றும் பொருள் உண்டு. முதலில் உள்ள என்னாம் என்பதற்குச் 'சொல்லோம்' என்றும் அடுத்துள்ள என்னாம் என்றதற்கு 'என்ன ஆகும்' எனவும் கொள்ளலாம்.
இன்றேல் என்ற சொல்லுக்கு இல்லாவிட்டால் என்பது பொருள்.
கண் என்ற சொல் விழி குறித்தது.
கண்ணோட்டம் என்றது இரக்கம் எனப்பொருள்படும்.
இல்லாத கண் என்ற தொடர் இல்லாதவிடத்து என்ற பொருள் தரும்.

பாடலுக்குப் பொருந்தாத இசையிருந்தால் பாட்டு சுவைக்காது. இரக்கம் காட்டாத கண் இருப்பதில் பொருள் இல்லை.
பாடலோடு இயைத்து நிற்கும் இசையைத்தான் கேட்கமுடியும். அப்படியில்லையென்றால் செவிக்கு இன்பம் இல்லை. அதுபோல இரக்கமில்லாத பார்வை கொண்டவனின் கண் சீரற்று விளங்கும். மக்களிடம் தண்ணளி காட்டிக் கண்ணோட்டம் உடையவனாய் இருக்க வேண்டுமென என்று ஆள்வோனுக்கு உரைக்கப்பட்டாலும் இது எல்லா மனிதர்க்கும் பொருந்துவது. எப்படிப் பாட்டோடு ஒட்டாத இசை இசையாகாதோ அதுபோல இரக்கத்துக்குரியவற்றைப் பார்த்து மனம் இளகச் செய்யாத கண் இருந்தும் என்ன ஆகும்? கண்ணின் பயன் கண்ணோட்டம் செலுத்துவது, அது இல்லையானால் கண்ணினால் பயனில்லை. கண்ணோடதற்குரியனவற்றைக் கண்ணுற்றதும் உணர்ச்சியற்று விலகிச் செல்லாமல் அன்பும், கனிவும் கொண்டு செயல்பட முன்வர வேண்டும். அப்பொழுதுதான் கண் பெற்றதற்கான பயன் உண்டாகும் என்பது கருத்து.

'பாடற்கு இயைபு' குறிப்பது என்ன?

'பாடற்கு இயைபு' என்ற தொடர் பாடலொடு பொருந்துவதைக் குறிக்கிறது,
பாடலோடு இசை இயல்பாகக் கலந்திருக்கும் நிலையைச் சுட்டுகிறது. 'பா பாதி; பண் பாதி' என்ற பழமொழி இங்கு நினைவுகூர்தற்கு உரியது (க த திருநாவுக்கரசு).
பாடல் என இங்குச் சொல்லப்பட்டது கவிதையையா? பாடுவதையா? பாடுவதை என்று தொல்லாசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். பண்ணோடு பயிலப்படும் வாய்ப்பாட்டுக் கலை இங்கு கூறப்படுகிறது.
பாட்டு பிழையாக இருந்தால் இயைபு இருக்காது என்று பழைய உரை ஒன்று கூறுகிறது.
காலிங்கர் இதற்கு 'இசையிலக்கணமே யறியாதான் ஒருவன் பாட்டைக் கேட்டு இசை இனிமையானது என்றால், அதனைப் பண் என்று நாம் ஒப்பமாட்டோம்' எனப் பொருள் கூறினார்.
சி இலக்குவனார் 'பாடல்பொருளுக்குப் பொருத்தமில்லையேல் பண்ணால் என்ன பயன் உண்டு? என உரைத்ததால் 'பாடற் பொருளுக்கும் இசைக்கும் இயைபு இருக்க வேண்டும்' என்பது இவர் கருத்தாகிறது.
பரிமேலழகர் பாடற்தொழிலோடு பொருந்துவது என உரை வரைவார்.
மற்றும் சிலர் இராக தாளங்களோடு பொருந்துவதைக் குறிப்பர்.
'பாடற்கு இயைபு' என்றது பாடல், தாளம் தப்பாமல், இசையோடு ஒத்துச் செல்வதைக் குறிக்கிறது. உயர்த்தும் தாழ்த்தும் வலிந்தும் மெலிந்தும் பல வகைகளில் பாட்டிற்குத் தொடர்பில்லாத இசை இனிமை தராது. அதுபோல இரக்க உணர்வு காட்டாத கண்ணால் பயனில்லை என்பது கருத்து. பாடலுக்கும் இசைக்கும் உள்ள இந்தத் தொடர்பைக் கண்ணோட்டத்திற்கும் கண்ணுக்கும் தொடர்புபடுத்திக் குறிப்பிடுகிறது இச்செய்யுள்.

வாய் பாடும் பாட்டு இசைக்கருவிகள் மூலம் எழுப்பப்படும் ஒலியுடன் பொருந்தி இருக்க வேண்டும்.

பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

இரக்கம் பாராத கண் எதற்கு எனக் கேட்கும் கண்ணோட்டம் பாடல்.

பொழிப்பு

பாட்டுக்குப் பொருந்தாவிடில் இசை என்று சொல்லோம்; இரக்கமில்லாத இடத்து கண் என்னத்துக்கு?