இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0569



செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்
வெருவந்து வெய்து கெடும்

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:569)

பொழிப்பு (மு வரதராசன்): முன்னமே தக்கவாறு அரண் செய்துகொள்ளாத அரசன் போர் வந்த காலத்தில் (தற்காப்பு இல்லாமல்) அஞ்சி விரைவில் அழிவான்.

மணக்குடவர் உரை: தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து அச்சமுற்றுக் கடிதுகெடும்.
இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: சிறை செய்யா வேந்தன் - செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் செருவந்த போழ்தில் வெருவந்து வெய்து கெடும் - அது வந்த காலத்து ஏமம் இன்மையான் வெருவிக் கடிதின் கெடும்.
(பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன.)

ஆ பழனி உரை: அரசியல் சுற்றத்திடத்தும் குடிமக்களிடத்தும் தோன்றும் செருக்கை அரசன் தானே தடுத்துக் கொள்ள வேண்டும். தடுக்கானாயின் அஞ்சத் தக்க வகையில் விரைவில் அழிவான்.
செரு-செருக்கு; சிறை செய்தல்-தடுத்துக் கொள்ளுதல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன் வெருவந்து வெய்து கெடும்.

பதவுரை: செரு-செருக்கு, போர்; வந்த-நேர்ந்த; போழ்தில்-நேரத்தில்; சிறை-அரண்; செய்யா-செய்துகொள்ளாத, இயற்றாத; வேந்தன்-மன்னவன், ஆட்சித்தலைவன்; வெருவந்து-அஞ்சி; வெய்து-விரைவில், வெம்மையுற்று; கெடும்-அழியும்.


செருவந்த போழ்தில் சிறைசெய்யா வேந்தன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து;
பரிப்பெருமாள்: தனக்குக் காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன் செருவந்த காலத்து;
பரிதி: குடிக் கடமையை அன்பினாலே வாங்கி, மாற்றார் வந்தால் அக்குடியைக் காட்டிக் கொடுக்கும் மன்னவன்; [மாற்றார் - பகைவர்]
காலிங்கர்: முன்னமே மதிற்சிறை முதலிய வன்சிறை நான்கும் வில்லரணும் வேலரணும் தோலரணும் துர்க்க அரணும் உளவாகிய வியூகச்சிறையும் உடையரேனும் மற்று அச்சிறை நீங்கிச் செருத்தொழில் புரியச் சென்ற தேயத்துப் புறத்திறை மன்னரால் போரழிவு வந்தகாலம் நோக்கிய இடத்து இறையும் சிறை பலவும் செய்து கொள்ளாத மன்னவனானவன் முனையெதிர் படை போந்து முற்றிய காலத்து; [துர்க்க அரண் - கோட்டையாகிய அரண்; வியூகம் - படைவகுப்பு; புறத்திறை மன்னரால்-நாட்டின்புறம்பே முற்றுகையிட்டு தங்கிய அரசர்களால்; இறையும்-சிறுதும்; முனை-போரின் முகப்பு]
பரிமேலழகர்: செரு வருவதற்கு முன்னே தனக்குப் புகலாவதோர் அரண்செய்து கொள்ளாத அரசன் அது வந்த காலத்து ஏமம் இன்மையான்; [ஏமமின்மை - பாதுகாப்பு இன்மை]

'காவலானவற்றை முன்னேயமைத்துச் செய்யாத வேந்தன், செருவந்த காலத்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி மாறுபாடாக 'மாற்றார் வந்தால் அக்குடியைக் காட்டிக் கொடுக்கும் மன்னவன்' என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'போர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன்', 'போர் நிகழும் காலத்தில் நாட்டையும் குடிமக்களையும் காவாத அரசன்', '(குடிகள் நடுங்கும்படியான வெருவந்த செயல்களால் பின்னால் விளையக்கூடிய தீமைகளை அறிந்து) எச்சரிக்கை கொள்ளாமல் வெருவந்த காரியங்களைச் செய்து கொண்டிருக்கும் வேந்தன் (அதனால் குடிகள் அவனுடன் பிணங்கி) எதிர்ப்பு வந்துவிடுகிற சமயத்தில்', 'போர் வருவதற்கு முன்னே அரணைச் செய்து கொள்ளாத வேந்தன், சண்டை வந்தபோது பாதுகாப்பின்மையால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செருக்குத் தோன்றும்போது காக்க தவறிய ஆட்சித்தலைவன் என்பது இப்பகுதியின் பொருள்.

வெருவந்து வெய்து கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அச்சமுற்றுக் கடிதுகெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது தனக்கும் அச்சம் வருவன செய்யலாகாதென்றது.
பரிப்பெருமாள்: அச்சமுற்றுக் கடிதுகெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தனக்கு அச்சம் வருவன செய்யலாகாதென்றது.
பரிதி: சடுதியிலே கெடும் என்றவாறு.
காலிங்கர்: வெருவுதல் கடிதின் கெட்டு விடும் என்றவாறு.
பரிமேலழகர்: வெருவிக் கடிதின் கெடும். [வெருவிக் கடிதிற் கெடும் - அஞ்சி விரைவில் கெடுவான்]
பரிமேலழகர் குறிப்புரை: பகையை வெருவிச் சேர்ந்தார் நீங்குதலின், தனியனாய்த் தானும் வெருவி அப் பகைவயத்தனாம் என்பதாம். இதனால் தான் அஞ்சும் வினையும் அது செய்தான் எய்தும் பயனும் கூறப்பட்டன. [பகையை வெருவி- பகைக்குப் பயந்து]

'அச்சமுற்றுக் கடிதுகெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கலங்கி வெதும்பி அழிவான்', 'அச்சமெய்தி விரைந்து கெடுவான்', 'உடனே கேடடைவான்', 'அஞ்சி விரைந்து கெடுவான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அச்சமுற்று விரைவில் அழிவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செருவந்த போழ்தில் சிறைசெய்யா ஆட்சித்தலைவன் அச்சமுற்று விரைவில் அழிவான் என்பது பாடலின் பொருள்.
'செருவந்த போழ்தில் சிறைசெய்யா' என்பதன் பொருள் என்ன?

குடிகளை அஞ்சச்செய்து ஆட்சிபுரிபவன் அச்சத்தாலே அழிவான்.

செருக்குற்றபோது அதனை அடக்காத ஆட்சித்தலைவன் விரைவில் குடிமக்களாலேயே அச்சம் அடைந்து விரைவில் அழிவான்.
ஆட்சித்தலைவன் செருக்குக் கொண்டு, தன்னைக் கேட்பவர் யாருமில்லை; தான் நினைத்ததைச் செய்யலாம் என்று வெருவந்த செய்தால் விரைவில் தானே அச்சங்கொள்ளும்படி ஆகிவிடும். வெரு என்ற சொல் அச்சத்தைக் குறித்து வெருவருதல் என்பது அஞ்சுதல் எனப் பொருள் தரும். குடிமக்கள் வெருவந்த செய்பவன் கொடுங்கோலன். வெங்கோல் ஆட்சி நீண்டகாலம் நிலைக்காது; குடிமக்களே அகந்தை கொண்ட ஆட்சியாளன் அஞ்சும்படி செய்ய நேரும் என்கிறது பாடல். உலக வரலாற்று நிகழ்வுகள் இதற்குச் சான்று பகரும்.

'செருவந்த போழ்தில் சிறைசெய்யா' என்பதன் பொருள் என்ன?

செரு என்றதற்குப் போர் என்றும் சிறை செய்யா என்றதற்கு அரண் அமைத்துக் கொள்ளாத என்றும் பொருள் கொண்டு பெரும்பான்மை உரையாசிரியர்கள் இக்குறட்குப் பொருள் கூறினர். ஆட்சித்தலைவன் காவற்பணியில் தவறி அவனுக்கே அச்சம் வருமாறு நடந்து கொள்வது பற்றிச் சொல்கிறது இப்பாடல் என்றனர் இவர்கள்.
'போர் வருவதற்கு முன்பாகவே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாத வேந்தன், அது வந்த காலத்தில், பாதுகாப்பு இல்லாமல் அஞ்சியவனாக, அழிந்து போவான்' என்றவாறும் 'போர் செய்ய நேர்ந்தபோது தன் பகைவனை வளைக்கச் சென்ற அரசன் முதலில் தனக்கு அரண் அமைத்துக் கொள்ளாமல் இருப்பானேயானால் போதிய பாதுகாவல் இன்மையால் பகைவனைக் கண்டு அஞ்சி விரைவில் அழிவான்' என்றவாறும் தொல்லாசிரியர்களும் பின்வந்தவர்களும் பொருள் கண்டனர். 'போர்க்காலத்துத் தீயகுடியைச் சிறையிடாத அரசன் கலங்கி வெதும்பி அழிவான்' எனவும் உரைக்கப்பட்டது.

வெருவந்த செய்யாமை அதிகாரம் கொடுங்கோல் ஆட்சிபுரிபவனுக்கும் அவன் குடிகளுக்கும் உள்ள தொடர்பை விளக்குவதாகும். இதில் உள்ள மற்ற குறள்கள் குடிகளை அச்சுறுத்தும் அரசின் வெங்கோன்மை பற்றிப் பேசுகின்றன. ஆனால் இக்குறளுக்கான உரைகள் எல்லாம் ஆட்சித்தலைவன் காவற்பணியில் தவறி அவனுக்கே அச்சம் வருமாறு நடந்து கொள்வதாக அமைந்தன. அவற்றுள் பல வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை... (குற்றங்கடிதல் 435)எதிரதாக் காக்கும் அறிவினார்க் கில்லை.. (அறிவுடைமை 429) முன்னுறக் காவா திழுக்கியான்... (பொச்சாவாமை 535) போன்ற குறட்பாக்கள் சொல்லும் வருமுன் காத்தலை வலியுறுத்துகிறதுபோல் உள்ளன. குடிகளை அச்சுறுத்துவது போன்ற கருத்து காணப்படவில்லை. இதனால் உரையாளர்கள் ஆட்சியாளன் தன்னைத் தானே வெருவந்த செய்தல் பற்றிய பாடல் எனச் சொல்லிப் போந்தனர். அதிகாரம் குடிகட்கு வெருவந்த செய்யாமையேயன்றித் தனக்கு வெருவந்த தேடிக்கொள்ளாமையை வலியுறுத்துவது அன்று என்பதால் இத்தகைய உரைகள் இப்பாடலுக்கு அதிகார இயைபு உண்டாக்க இயலாததாக உள்ளன. அரசு தனக்குப் பாதுகாப்பைச் செய்து கொள்ளாததையும் அதனால் அது பின்னர் அஞ்சும் செயலையும் சொல்கிறது இப்பாடல் என்பது ஏற்கத்தக்கதாக இல்லை.

நாமக்கல் இராமலிங்கம் 'செரு-குடிகளின் எதிர்ப்பு, சிறை-எச்சரிக்கை எனப் பொருள் கண்டு, வெருவந்த காரியங்களால் வரக்கூடிய கேடுகளை அறிந்து முன்னெச்சரிக்கை செய்து கொள்ளாத அரசன் வெருவந்த காரியங்களையே செய்து கொண்டிருந்து (அதனால்) அவன் மேல் குடிகளுக்குப் பிணக்கு வருகிற பொழுது அவர்களுடைய ஆதரவில்லாமல் சடுதியில் கெட்டுப் போவான்' என உரை செய்தார்.
பரிதி உரை 'குடிக் கடமையை அன்பினாலே வாங்கி, மாற்றார் வந்தால் அக்குடியைக் காட்டிக் கொடுக்கும் மன்னவன் சடுதியிலே கெடும்' என்கிறது. தண்டபாணி தேசிகர் இதை ஏற்று 'செருவந்த காலத்தில் குடிகளைப் பாதுகாப்பான இடத்தில் வைத்துக் காப்பாற்றக் கடமைப்பட்ட அரசன் அங்ஙனம் செய்யாது தான் தன்னினத்தொடு அரணிற் புகுந்து மக்களைக் காட்டிக் கொடுத்து மாற்றானிடம் தப்பலாம் ஆயினும் குடிகளிடம் வெருவந்து அழிவன் என்பதுபட நிற்றலின், குடிகளைக் காட்டிக் கொடுத்தல் கொடுங்கோன்மை. அதனால் விளைந்த பயன் குடிகளிடம் தான் அஞ்சுதல்' என்பதுபட நிற்கின்றது. சிறை செய்தல்-அரண்களில் வைத்துப் பாதுகாத்தல். இவ்வுரை இவ்வதிகாரத்திற்கு ஏற்புடையது. இதுவரை குடிமக்கள் வெருவரும் செயல்களைச் செய்தலாகாது என்ற ஆசிரியர் இக்குறளால் குடிமக்களை வெருவரச் செய்தமையால் தானே வெருவரநேரும், கெடவரும் என்று அதனை வலியுறுத்துகிறார். ஆதலால் இவ்வுரை சிறந்தது எனலாம்' எனப் பரிதியுரையைப் பாராட்டுவார்.

'அரசியல் சுற்றத்திடத்தும் குடிமக்களிடத்தும் தோன்றும் செருக்கை அரசன் தானே தடுத்துக் கொள்ள வேண்டும்; தடுக்கானாயின் அஞ்சத் தக்க வகையில் விரைவில் அழிவான்' என்பது ஆ பழனியின் உரை (திருவள்ளுவர் 2000 ஆவது ஆண்டுமலர்-சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்). இவ்வுரையைச் சுட்டிக்காட்டிச் 'செருக்குக் காரணமாகத் தோன்றுவது ஆதலின் போர் செரு எனப்பட்டது. ஆகவே செரு என்பதன் அடிப்பொருள் கண்டு ‘செருவந்த போழ்தில்’ என்பதற்குச் செருக்குத் தோன்றும் போது எனப் பொருள் கண்டெழுதிய உரையும் ஏற்கத் தகும்' என்பார் இரா சாரங்கபாணி. இவ்வுரை அதிகார இயைபும் உடையதாகவும் உள்ளது. இதுவே இக்குறட்குப் பொருத்தமான உரையாகலாம்.

செருக்குத் தோன்றும்போது காக்கத் தவறிய ஆட்சித்தலைவன் அச்சமுற்று விரைவில் அழிவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சுற்றத்திடமும் குடிகளிடமும் வெருவந்த செய்யாமை ஆட்சியாளரது அழிவு காக்கும்.

பொழிப்பு

தன் செருக்கைக் காவாத ஆட்சியாளன் அச்சமெய்தி விரைவில் அழிவான்.