இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0561



தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால்
ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து

(அதிகாரம்:வெருவந்த செய்யாமை குறள் எண்:561)

பொழிப்பு: செய்த குற்றத்தைத் தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாதபடி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

மணக்குடவர் உரை: குற்றத்திற்குத் தக ஆராய்ந்து, ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.

பரிமேலழகர் உரை: 'தக்காங்கு' நாடி - ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து: தலைச்செல்லா வண்ணத்தால் 'ஒத்தாங்கு' ஒறுப்பது வேந்து - பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
(தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.)

இரா சாரங்கபாணி உரை: ஒருவன் செய்த குற்றத்தை ஆராயத்தக்க முறைப்படி ஆராய்ந்து மீண்டும் அக்குற்றத்தில் அவன் தலையிடாவண்ணம் அக்குற்றத்திற்கு ஒப்பத் தண்டிப்பவனே அரசனாவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து.


தக்காங்கு நாடி:
பதவுரை: தக்கு-நடுவாக; ஆங்கு-போல; நாடி-ஆராய்ந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றத்திற்குத் தக ஆராய்ந்து;
பரிப்பெருமாள்: குற்றத்திற்குத் தக்கவை ஆராய்ந்து;
பரிதி: குடிக்குத்தக்க கடமை நீதியாலே கொண்டு;
காலிங்கர்: மற்று இப்படியாகலான் அவை அவை செய்யத்தக்க பரிசு ஆராய்ந்து; [பரிசு- தன்மை]
பரிமேலழகர்: ஒருவன் தன்னின் மெலியார்மேல் சென்ற வழி அதனை நடுவாகநின்று ஆராய்ந்து;

நாடி என்ற சொல்லுக்குப் பழம் ஆசிரியர்கள் 'ஆராய்ந்து' என்று பொருள் கூறினர். 'தக்காங்கு' என்றதற்கு 'குற்றத்திற்குத் தக' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற, பரிதி 'குடிக்குத்தக' என்றார். காலிங்கர் 'அவை அவை செய்யத்தக்க தன்மை' எனச் சொல்ல பரிமேலழகர் 'நடுவாக நின்று' எனக் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தக்கபடி ஆய்ந்து', '(குற்றவாளிகளை தண்டிக்கும் பொழுது) குற்றத்தைத் தக்கபடி விசாரித்து', 'ஒருவன் குற்றஞ் செய்யின் தக்கமுறையாலதனை ஆராய்ந்து', 'ஒருவர் குற்றம் செய்தபோது அதனைத்தக்க நீதி முறைப்படி ஆராய்ந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து என்பது இப்பகுதியின் பொருள்.

தலைச்செல்லா வண்ணத்தால் ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து:
பதவுரை: தலைச்செல்லா-பின்னும் செய்யாத; வண்ணத்தால்-வகையாக; ஒத்தாங்கு-ஒத்திருக்க; ஒறுப்பது-தண்டிப்பது; வேந்து-அரசு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.
பரிப்பெருமாள்: ஒருவர் ஒருவர்மேற் செல்லாமை காரணமாக உலகத்தார்க்குப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்.
இது செங்கோன்மை யன்றோ எனின், ஒக்கும்; முறை செய்யுங்கால் அரசன் வெருட்சி உடையனாய் உலகத்தார் அஞ்சுமாறு செய்யாது, இம்முறை செய்யாக்கால் ஒருவரையொருவர் அடர்ப்பரென்று உலகத்தார் தாமே இசையச் செய்ய வேண்டும் என்றற்கு வேறுபடுத்துக் கூறப்பட்டது. இவ்வாறு செய்தல் வெருவந்த செய்யாமை என்றது.[அடர்ப்பர்-வருத்துவர்]
பரிதி: தனக்குத் தலைசெல்லாத மாற்றாரை வெல்பவன் அரசன் என்றவாறு.
காலிங்கர்: மற்று ஒருதலைச் சென்று ஒதுங்காத தன்மையான், ஒன்றிலும் ஏற்றத் தாழ்வு இன்றி ஒத்து நிற்கும் பரிசே ஒறுக்க வேண்டுவதனை ஓர்ந்து ஒறுப்பது வேந்தாவது; எனவே அது செய்யாவிடத்து எல்லாம் நல்லளி செய்தலே அரசர்க்கு அழகு என்றவாறு. [ஒருதலைச்சென்று- ஒருசார்பாக]
பரிமேலழகர்: பின்னும் அது செய்யாமற்பொருட்டு அவனை அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசனாவான்.
பரிமேலழகர் குறிப்புரை: தக்காங்கு, ஒத்தாங்கு என்பன ஒரு சொல். 'தகுதி என்பது நடுவுநிலைமையாதல் 'தகுதி என ஒன்றும் நன்றே' (குறள் 111 ) என்பதனாலும் அறிக. இதனானே, தக்காங்கு நாடாமையும், பிறிதோர் காரணம் பற்றி மிக ஒறுத்தலும் குடிகள் அஞ்சும் வினையாதல் பெற்றாம்.

'தலைச்செல்லா வண்ணத்தால்' என்றதற்கு 'ஒருவர்மேற் செல்லாமை காரணமாக' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூறினர். பரிதி 'தனக்குத் தலைசெல்லாத' என்று உரை கூறினார். காலிங்கர் 'ஒரு சார்பாக இல்லாமல்' என்றார். பரிமேலழகர் 'பின்னும் அது செய்யாமற்பொருட்டு' எனக் கூறினார். ஒத்தாங்கு ஒறுப்பது வேந்து என்றதற்கு 'உலகத்துப் பொருந்துமாறு ஒறுப்பவன் அரசன்' என்றனர் மணக்குடவர்/பரிப்பெருமாள். பரிதி 'தனக்குத் தலைசெல்லாத மாற்றாரை வெல்பவன் அரசன்' என்றார். காலிங்கர் 'ஏற்றத் தாழ்வு இன்றி ஒத்து நிற்கும் பரிசே ஒறுக்க வேண்டுவதனை ஓர்ந்து ஒறுப்பது வேந்து' என்கிறார். பரிமேலழகர் 'அக்குற்றத்திற்கு ஒப்ப ஒறுப்பானே அரசன்' என உரை மொழிந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'மேலும் குற்றம் செய்யாவாறு பொருந்தத் தண்டிப்பவனே வேந்தன்', '(மீண்டும் அவர்கள் அந்த குற்றத்தில்) போய்ச் சேராதிருப்பதற்காக ஒத்த அளவோடு (அதிகப்படாமல்) தண்டிப்பதுதான் வேந்தனுடைய தன்மை', 'அவன் பின்னும் அதன்மேற் செல்லாவண்ணம், குற்றத்திற்கு ஏற்ற அளவு அவனைத் தண்டிப்பதே அரசன் செயற்பாலது', 'பின்னும் அக்குற்றத்தைச் செய்யாமல் இருக்குமாறு அக் குற்றத்திற்கு ஏற்பத் தண்டிப்பதே அரசு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

மேலும் குற்றத்தைச் செய்யாமல் இருக்குமாறு, உலகோர் இசையும்படி தண்டிப்பதே அரசு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து, ஒறுக்கப்பட்டவன் மேலும் குற்றத்தைச் செய்யாமல் இருக்குமாறு, ஒத்தாங்கு தண்டிப்பது அரசு என்பது பாடலின் பொருள்.
'ஒத்தாங்கு' குறிப்பது என்ன?

தக்காங்கு என்ற சொல்லுக்கு முறைப்படி என்று பொருள்.
நாடி என்ற சொல்லுக்கு ஆராய்ந்து என்பது பொருள்.
தலைச்செல்லா வண்ணத்தால் என்ற தொடர் 'பின்னும் அது செய்யாமல் இருத்தற்காக' என்ற பொருள் தரும்.
ஒறுப்பது என்ற சொல் தண்டிப்பது எனப் பொருள்படும்.
வேந்து என்ற சொல் அரசு குறித்தது.

அரசானது ஒருவனை ஓறுக்கும்பொழுது குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து, மேலும் அவன் குற்றம் செய்யாவண்ணம், உலகத்தார் ஒத்துக்கொள்ளுமாறு தண்டனை வழங்குதல் வேண்டும்.
நாட்டில் குற்றங்கள் தண்டிக்கப்படாவிடின் குடிகளிடையே அச்சம் உண்டாவதுபோலவே, குற்றத்திற்கு மிகையான த்ண்டனை வழங்கப்பட்டாலும் மற்ற நற்குடிமக்களையும்கூட அது அச்சத்தில் ஆழ்த்தும். எனவே குற்றத்தைத் தக்க முறையில் நடுநிலையில் நின்று ஆய்ந்து குற்றத்திற்கேற்ற தண்டனை அளிக்கப்படவேண்டும். தண்டனையைக் கண்டு மற்றவர் அத்தகைய குற்றங்களில் ஈடுபடாது வாழ வேண்டும் என்பதும் தீயவர்கள் திருத்தப்படவேண்டும் என்பதும் ஒறுத்தலின் நோக்கமாக இருக்க வேண்டும். கொலைத்தண்டனை அளிக்கப்பட்டோர் திருந்துவற்கு வழியில்லை; கொலைத் தண்டனையளிக்கப்பட்டால் பிறர் அஞ்சி கொடியகுற்றங்களைச் செய்யாதிருப்பர் என்பதால், கொடுங்குற்றங்கட்குக் கொலைத் தண்டனை யளிக்கப்படுதலை வள்ளுவமும் ஏற்றுக் கொண்டதே. ஆயினும் சிறு குற்றங்களுக்குக் கடுந்தண்டனை விதித்துக் குடிகளை அச்சுறுத்தலாகாதென்பது இப்பாடலின்வழி தெளிவாக்கப்பட்டது.
உலகோர் ஒத்துக்கொள்ளும்படி, செய்த குற்றத்திற்கு ஒப்ப, ஒறுக்காமல், தன் மனம் போனபடி தண்டனை வழங்கினால், அது வெருவந்த செய்கையாம். முறை செய்யும்போதும் அதாவது செங்கோன்மை வழங்கும்போதும் உலகத்தார் நடுங்குபடி செய்தல் கூடாது; குடிகள் ஒப்பும்படி செய்ய வேண்டும் என்று அரசு வழங்கும் தண்டனையின் நோக்கத்தை இக்குறள் சொல்கிறது.

‘தக்காங்கு’ என்பதற்கு நடுவு நிலைமைப்படி எனவும் குற்றத்திற்குத் தக எனவும் உரைப்பர். தகுதி எனஒன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் (நடுவுநிலைமை குறள் எண்: 111; பொருள்: நடுவுநிலைமை என்று சொல்லப்படும் ஓர் அறமுமே நன்று) என்ற குறளில் ‘தகுதி என்னும் சொல் பகைவர், அயலார், நட்பினர் என்னும் முத்திறத்தாரிடத்தும் அறத்தினின்றும் வழுவாது ஒப்ப நிற்கும் நடுவுநிலைமையைக் குறித்தது. 'குற்றச் செயலைத் தக்காங்கு நாடி ஆராய்வது என்றால், குற்றத்தின் தன்மை என்ன? குற்றம் இழைக்கப்பட்ட விதம் என்ன? குற்றம் எந்தச் சூழ்நிலையில் இழைக்கப்பட்டது? என்ற் கூறுகளை யெல்லாம் ஆராய்தல் வேண்டும்' என்று ஓர் உரை கூறுகிறது.
'தலைச்செல்லா வண்ணத்தால்' என்ற தொடர் 'தொடர்ந்து இக்குற்றத்தை மேலுஞ் செய்யாமைக்காக' என்ற பொருள் தரும். தண்டனை குறைவாயிருந்தாலும், இரக்கப்பட்டு நன்றாக ஆராயமையால் தண்டனை கொடாது விட்டாலும் அதே குற்றத்தைத் திரும்பவும் செய்ய முற்படுவர்; அவ்விதம் செய்ய முயலாமைப் பொருட்டு என்பதை உணர்த்துவது இத்தொடர். இத்தொடர்க்குக் குற்றத்தளவின் தண்டம் மிகாத வண்ணம் என்றும் உரை தருவர்.

'ஒத்தாங்கு' குறிப்பது என்ன?

'ஒத்தாங்கு' என்ற சொல்லுக்கு உலகத்துப் பொருந்துமாறு, உலகத்தார்க்குப் பொருந்துமாறு, ஒன்றிலும் ஏற்றத் தாழ்வு இன்றி ஒத்து நிற்கும் பரிசே, குற்றத்திற்கு ஒப்ப, உலகமும் ஏற்கும் வண்ணம் குற்றத்திற்கு ஏற்றவாறு, குற்றதிற்கு ஏற்றவாறு, பொருந்த, ஒப்ப, ஒத்த அளவில், குற்றத்திற்கு ஏற்ற வகையில், குற்றத்திற்கு ஏற்ற அளவு, குற்றத்திற்கு ஏற்ப, ஒத்தவாறு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உலகத்திற்குப் பொருந்தும் வகையில் அதாவது 'உலகத்தார் தாமே இசையும்படி' என்றும், நடுநிலையில் நின்று என்றும், குற்றத்திற்கு ஏற்ற வகையில் என்றும் பொருள் கிடைக்கின்றது.

ஒத்தாங்கு என்ற சொல்லுக்கு 'உலகத்தார்க்குப் பொருந்துமாறு' என்பது பொருத்தமான பொருள்.

ஒருவனை ஓறுக்கும்பொழுது குற்றத்தை முறைப்படி ஆராய்ந்து, மேலும் அவன் குற்றம் செய்யாவண்ணமும், உலகத்தார் ஒத்துக்கொள்ளுமாறும் தண்டனை வழங்குதல் வேண்டும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அரசானது மிகுதண்டனை வழங்கி குடிகளை வெருவந்த செய்யாமை வேண்டும்.

பொழிப்பு

குற்றத்தைத் தக்கபடி ஆய்ந்து மேலும் குற்றம் செய்யாவாறு, உலகோர் ஒப்பும்படி, தண்டிப்பதே அரசு.