இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0556



மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல்
மன்னாவாம் மன்னர்க்கு ஒளி

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:556)

பொழிப்பு: அரசர்க்குக் புகழ் நிலைபெறக் காரணம் செங்கோல் முறையாகும். அஃது இல்லையானால் அரசர்க்குப் புகழ் நிலைபெறாமல் போகும்.

மணக்குடவர் உரை: அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை; அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம்.
முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.

பரிமேலழகர் உரை: மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை - அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம், அஃது இன்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம் - அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.
(விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி: உரை: அரசர்க்குப் புகழ் நிலைபெறுதல் செங்கோலாட்சியாலேயாம். அச்செங்கோலாட்சி இல்லையெனின், அவர்க்குப் புகழ்கள் நிலைபெறாவாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னர்க்கு ஒளி மன்னாவாம்.


மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை:
பதவுரை: மன்னர்க்கு-வேந்தர்க்கு; மன்னுதல்-நிலை பெறுதல்; செங்கோன்மை-நல்லாட்சி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மை;
பரிப்பெருமாள்: அரசர்க்கு ஒளி நிலைபெறுதல் செங்கோன்மையானாம்;
பரிதி: அரசற்குச் செங்கோல் செயங்கொடுக்கும்; மன்னவர் புகழ்பெறுவர்;
காலிங்கர்: மன்னரானவர் தமக்குத் தமது ஒளி நிலைபெறுதலாவது செங்கோன்மை நிலைபெறுதல்;
காலிங்கர் குறிப்புரை: மன்னுதல் என்பது நிலைபெறுதல்;
பரிமேலழகர்: அரசர்க்குப் புகழ்கள்தாம் நிலை பெறுதல் செங்கோன்மையான் ஆம்;

'அரசர்க்கு ஒளி/புகழ் நிலைபெறுதல் செங்கோன்மையால்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மன்னனுக்கு நிலை நல்லாட்சியால் உண்டாகும்', 'அரசர்களுக்கு அமைய வேண்டியது செங்கோல் நடத்தும் பெருமை', 'அரசர்க்குப் புகழ்நிலைபெறுதல் செங்கோன்மையினாலே ஆம்', 'மன்னர்கள் இவ்வுலகில் புகழால் நிலைபெறுதல் நல்லாட்சியால் உண்டாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரசுக்கு ஆட்சி நிலைபெறுதல் செங்கோன்மையினாலாம் என்பது இப்பகுதியின் பொருள்.

அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க்கு ஒளி:
பதவுரை: அஃது-அது; இன்றேல் -இல்லாவிடில்; மன்னாவாம்-நிலைக்க மாட்டாவாம்; மன்னர்க்கு-வேந்தர்க்கு; ஒளி-புகழ்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம்.
மணக்குடவர் குறிப்புரை: முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.
பரிப்பெருமாள்: அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி நிலையாதாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: முறை செய்யாமையால் அவன் நிலைபெறுதல் அருமையெனக் குற்றங் கூறுவார் முற்படப் புகழில்லையாம் என்றார்.
பரிதி: கொடுங்கோலாகில் செயமும் இல்லை; புகழும் இல்லை.
காலிங்கர்: மற்று அஃது இல்லெனின் மன்னர்க்கு நிலையாவாம் ஒளிகளானவை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மன்னாவாம் என்பது நிலையாவாம் என்றது. ஒளி என்பது குலமும் குணனும் கல்வியும் உணர்வும் மரபும் பிறவும் ஆகிய ஒளிகளான பெறு பொருள்கள் என அறிக.
பரிமேலழகர்: அச்செங்கோன்மை இல்லை ஆயின், அவர்க்கு அப்புகழ்கள் தாம் உளவாகா.
பரிமேலழகர் குறிப்புரை: விகாரத்தால் தொக்க மூன்றாவது விரித்து ஆக்கம் வருவித்து உரைக்கப்பட்டது. மன்னுதற்கு ஏது புகழாதல் 'இந்நிலத்து மன்னுதல் வேண்டின் இசைநடுக' (நான்மணி 17 ) என்பதனானும் அறிக. மன்னாமை: ஒருகாலும் நிலையாமை. பழிக்கப்பட்டால்ஒளி மன்னாவாம் : ஆகவே, தாமும் மன்னார் என்பதாயிற்று.வென்றி கொடை முதலிய ஏதுக்களால் புகழ் பகுதிப்படுதலின்,பன்மையால் கூறினார். அவையெல்லாம் செங்கோன்மைஇல்வழி இலவாம் என்பதாம். இவை நான்கு பாட்டானும்கொடுங்கோலனாயின் எய்தும் குற்றம் கூறப்பட்டது.

'அஃதில்லை யாயின் அரசர்க்கு ஒளி/புகழ்கள் நிலையாதாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அது இன்றேல் அவன் அதிகாரம் நிலையாது', 'அது இல்லையானால் அவர்களுக்குக் கீர்த்திகள் சேர்த்த பிரகாசம் உண்டாகாது', 'அச் செங்கோன்மை இல்லையானால் பிற நலத்தால் வரும் புகழ் நிலைபெறாது', 'நல்லாட்சி இல்லையேல் அரசர்க்குப் புகழ் நிலைபெறாது ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது இல்லையானால் அரசுக்குப் புகழ்கள் நிலைபெறா என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரசு நிலைபெற்று நிற்பது நல்லாட்சியினால்தான். அவ்வாறு இல்லாவிடின், அதன் புகழ்கள் மங்கும்.

அரசுக்கு ஆட்சி நிலைபெறுதல் செங்கோன்மையினாலாம்; அது இல்லையானால் அரசுக்கு ஒளி நிலைபெறாது என்பது பாடலின் பொருள்.
'ஒளி' குறிப்பது என்ன?

மன்னர்க்கு என்ற சொல்லுக்கு ஆட்சியாளர்க்கு என்பது பொருள்.
மன்னுதல் என்ற சொல் நிலைபெறுதல் என்ற பொருள் தரும்.
செங்கோன்மை என்ற சொல்லுக்கு நல்லாட்சி என்று பொருள்.
அஃதின்றேல் என்றது அது இல்லையானால் குறித்தது.
மன்னாவாம் என்ற சொல் நிலைபெறா எனப்பொருள்படும்.

ஒரு அரசை நிலைநிறுத்துவது நல்லாட்சியாம்; செங்கோன்மை இல்லையானால் அதன் புகழ்கள் ஒளி மங்கும்.

ஓர் ஆட்சி செங்கோல் செலுத்தும்வரைதான் புகழோடு பேசப்படும். ஆளுவோர்க்கு, அவர்களது புகழ் உலகில் நிலைபெறுதல், அவர்களது செங்கோல் வளையாது செய்யும் ஆட்சியை வைத்துத்தான். அவ்வாறில்லாது கொடுங்கோன்மையுடன் விளங்குமானால், அவர்களது புகழ் நிலைபெறாது என்று விதிகூறி வரையறுத்துச் சொல்லும் பாங்கில் அமைந்த குறள் இது. 'செங்கோன்மை இல்லாவிடில்' என்ற தொடர் கொடுங்கோல் ஆட்சி குறித்தது என்பதும் அவ்வாட்சியில் நாட்டுத்தலைவனது ஒளி நிலையாது என்பதும் பெறப்படும். ஒளி என்ற சொல் இப்பாடலில் 'மன்னா' எனப் பன்மையில் முடிவதால் அவை வெற்றி, கல்வி, கொடை போன்ற புகழுக்குரிய பலவற்றையும் உள்ளடக்கியது என உரைத்தனர்.
நேர்மையான ஆட்சிமுறை தந்து முறைசெய்யும் நாட்டுத் தலைவனே காலங்கடந்து புகழ் பெறுவான். அவ்வாறன்றி கொடுமை செய்தால், அவன் எதற்காகவும் ஏற்கனவே பெற்ற புகழும் மங்கியணைந்து நிலைபெறாது போகும். செங்கோல் கோடியவனது எல்லாப் புகழும் கெடும்.

'ஒளி' குறிப்பது என்ன?

'ஒளி' என்பதற்குப் புகழ், செயமும் புகழும், குலமும் குணனும் கல்வியும் உணர்வும் மரபும் பிறவும், வென்றி கொடை கல்வி தறுகண், அதிகாரம், புகழ்கள், கீர்த்திகள் சேர்த்த பிரகாசம், பிற நலத்தால் வரும் புகழ், புகழ்ஒளி, பெயரும் மதிப்பும் என உரையாளர்கள் பொருள் கூறினர்.
'ஒளி என்பது அரசனுக்குள்ள கடவுட்டன்மை' என்பர் நச்சினார்க்கினியர். இது கடவுளைக் கண்டபோது உண்டாகும் அன்பு கலந்த அச்சவுணர்வு போன்றதோர் உயர்ந்தநிலை என்பர்.
ஒளி என்றதற்கு 'அதிகாரம்' எனக் கருத்துப் பொருள் கூறுவார் வ சுப மாணிக்கம். ‘மன்னா’ என்ற பன்மை கண்டு ஒளிகள் எனக் கொண்டு அவற்றுக் கேதுவாவனவற்றைப் பரிமேலழகரும் காளிங்கரும் தம் உரையில் விரித்துள்ளனர். 'ஒளிமன்னா' என்ற பன்மை முடிவிற்கு பரிமேலழகர் 'வென்றி' 'கொடை' முதலியவற்றைக் கூறினார். முதலிய என்று இவர் உரைத்தற்கு கல்வி, ஆண்மை போன்றவற்றைச் சேர்த்துச் சொல்வர். 'குணமும், குலமும், கல்வியும், உணர்வும், மரபும் பிறவும் ஆகியவற்றால் ஒளி பலவாயின' என்பார் காளிங்கர். நாமக்கல் இராமலிங்கம் இச்சொல்லை 'செங்கோன்மை பல நற்குணங்கள் சேர்ந்தது ஒவ்வொரு நற்குணமும் மன்னனுக்கு ஒரு கீர்த்தியுண்டாக்கும். அதனால் ஒளிகள் மன்னாவாம் என்று பன்மையிற் சொல்லப்பட்டது' என்று விளக்கினார். தேவநேயர் 'ஒருவன்' தன் வாழ்நாளில் எல்லாராலும் மதிக்கப்படும் மதிப்பு; அது பெரும்பாலும் வாய்ச் சொல்லாகநிகழ்வது. புகழ் என்பது ஒருவன் இறந்த பின்பு எல்லாராலும் உயர்த்துச் சொல்லப்படும் உயர்வு. அது பெரும்பாலும் உரைநடையுஞ் செய்யுளுமாகிய இலக்கிய வடிவில் திகழ்வது' என்று ஒளிக்கும் புகழ்க்கும் வேறுபாடு கூறுவார்.
'Sovereignty என்பதொரு கருத்து உண்டு. அஃது அரசியல் அமைப்பின் அடிப்படையானது. இதனை இறைமை எனலாம். 'ஒளி' என வள்ளுவர் கூறுவது இதுதானா என ஆராயவேண்டும்' எனக் கருத்துத் தெரிவித்தார் தெ பொ மீ.

அரசுக்கு ஆட்சி நிலைபெறுதல் செங்கோன்மையினாலாம்; அது இல்லையானால் அரசுக்குப் புகழ்கள் நிலைபெறா என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொடுங்கோன்மையில் ஆட்சியின் புகழ் மங்கும்.

பொழிப்பு

அரசுக்கு நிலை நல்லாட்சியால் உண்டாகும்; அது இல்லையானால் அரசின் புகழ்கள் நிலைபெறா.