இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0555



அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீர்அன்றே
செல்வத்தைத் தேய்க்கும் படை

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:555)

பொழிப்பு (மு வரதராசன்): (முறை செய்யாதவனுடைய) செல்வத்தைத் தேய்த்து அழிக்கவல்ல படை, அவனால் பலர் துன்பப்பட்டுத் துன்பம் பொறுக்க முடியாமல் அழுத கண்ணீர் அன்றோ?



மணக்குடவர் உரை: நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்.
இஃது அவ்வரசன் கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே - அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை - அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
(அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர் - 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.)

குன்றக்குடி அடிகளார் உரை: கொடுங்கோன்மை மிக்க அரசின்கண் அகப்பட்டுக் கொண்ட மக்கள், அல்லல் பொறாது அழுது வடிக்கும் கண்ணீர் அரசின் செல்வத்தை அழிக்கும் படையாகும். நாட்டு மக்களை வறுமையில் உழலவிட்டு விட்டுச் சுகபோகத்தில் திளைக்கும் அரசுகள் மக்களின் துன்பத்தால் வீழும் அல்லது மாற்றப்படும். அரசியல் புரட்சிகளை உருவாக்கும் ஆற்றல் ஏழைகள் அழுத கண்னீருக்கு உண்டு என்பது கருத்து.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றே, செல்வத்தைத் தேய்க்கும் படை.

பதவுரை:
அல்லற்பட்டு-துன்பம் உற்று; ஆற்றாது-பொறுக்கமாட்டாது; அழுத கண்ணீர்-அழுது வடிக்கும் கண்ணீர்; அன்றே-அல்லவோ?; செல்வத்தை-பொருளை; தேய்க்கும்-தேய்த்து அழிக்கும்; படை- கருவி (ஆயுதம்), போர்வீரர்களின் தொகுப்பு (சேனை) என்ற பொருளும் உண்டு.


அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர்அன்றே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ;
பரிப்பெருமாள்: நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ;
பரிதியார்: கொடுங்கோல் பொறாமல் குடி அழுத கண்ணீரன்றோ;
காலிங்கர்: கொடுங்கோல் மன்னன் செய்யும் கொடுவினையால் குடிகள் சாலத் துயரம் உற்று அது பொறுக்க மாட்டாது அழுதகண்ணீர் அதுவே; [சாலத் துயரம் - மிகுந்த துன்பம்]
பரிமேலழகர்: அரசன் முறை செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரன்றே;
பரிமேலழகர் குறிப்புரை: அழுத கண்ணீர்: அழுதலான் வந்த கண்ணீர்.

'நீதியல்லன செய்தலானே அல்லற்பட்டு அதற்கு ஆற்றாது அழுத கண்ணீரன்றோ' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுமை தாங்காது குடிகள் அழுத கண்ணீர்', 'அரசன் முறை செய்யாததால் துன்பமுற்று அதனைத் தாங்க மாட்டாது குடிகள் வடித்த கண்ணீர் அல்லவா?', 'கொடுங்கோல் ஆட்சியினால் துன்பப்பட்டு, பொறுக்க முடியாமல் குடிமக்கள் அழுது வடிக்கிற கண்ணீரே', 'அரசன் நெறிமுறை தவறி ஆளுவதால் குடிகள் துன்பம் அடைந்து அதனைப் பொறுக்க முடியாது அழுத கண்ணீரே', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

அரசின் கொடுமைகளைப் பொறுக்கமாட்டாமல் குடிமக்கள் அழுத கண்ணீரன்றோ? என்பது இப்பகுதியின் பொருள்.

செல்வத்தைத் தேய்க்கும் படை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தைத் தேய்க்கும் ஆயுதம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவ்வரசன் கெடுமென்றது.
பரிப்பெருமாள்: அரசன் செல்வத்தைத் தேய்க்கும் படையாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவ்வரசன்தான் கெடுமென்றது. இவை இரண்டும் அல்லவை செய்ததனாலே இம்மை மறுமை இழப்பர் என்று கூறின.
பரிதியார்: அரசன் பாக்கியத்தை வெட்டும் ஆயுதம் என்றவாறு.
காலிங்கர்: அரசனானவன் அங்ஙனம் ஈட்டிய பெரும் பொருளைத் தேய்க்கும் வழிக்குக் கருவியாகலான் இவ்வினையினார்க்கு வேறு ஓர் பகைவினை வேண்டா என்றவாறு.
பரிமேலழகர்: அவன் செல்வத்தைக் குறைக்கும் கருவி.
பரிமேலழகர் குறிப்புரை: 'செல்வமாகிய மரத்தை' என்னாமையின், இஃது ஏகதேச உருவம். அல்லற்படுத்திய பாவத்தது தொழில் அதற்கு ஏதுவாகிய கண்ணீர்மேல் நின்றது, அக் கண்ணீரில் கொடிது பிறிது இன்மையின். செல்வம் கடிதின் தேயும் என்பது கருத்து.

'செல்வத்தைத் தேய்க்கும்/வெட்டும்/குறைக்கும் ஆயுதம்/படை/கருவி' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசை அடியோடு அழிக்கும் படையாகும்', 'அவனது செல்வத்தை அழித்தொழிக்கும் படைக் கருவி', 'அந்த ஆட்சியின் செல்வத்தை அழித்துவிடக்கூடிய ஆயுதம்', 'அரசசெல்வத்தை அழிக்கும் கருவியாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

செல்வத்தைத் தேய்க்கும் கருவி என்பது இப்பகுதியின் பொருள்.



நிறையுரை:
அரசின் கொடுமைகளைப் பொறுக்கமாட்டாமல் குடிமக்கள் அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் கருவி? என்பது பாடலின் பொருள்.
கண்ணீர் எப்படிச் செல்வத்தை அழிக்கும்?

ஆற்றிக் கொள்ள வகையில்லாமல் ஆள்வோரால் துன்புறுத்தப்பட்டு அழுததன் கண்ணீரே அரசின் ஆட்சிபலத்தைத் தேய்க்கும் கருவியாய் விடும்.

முறை தவறி ஆட்சி செய்யும் அரசால் குடிமக்கள் துயரப்பட்டுத் தாங்கமாட்டாமல் அழுத கண்ணீருக்கு அளவற்ற ஆற்றல் உண்டு. அது அரசின் வளத்தை அழிக்கவல்ல ஆயுதம் போன்றது.
ஆட்சித் தலைவன் தீயவனாக அமைந்துவிட்டால், முறையான ஆட்சி இல்லாமல் போய்விடும். அரசியலார் தவறான முறைகளைக் கையாண்டு பொருள் தேட முனைவர். கொடியவர்களும் இவருடன் சேர்ந்து மக்களைச் சுரண்டுவர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏழை மக்கள் அழுது புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்யமாட்டாதவர்களாகி விடுவர். ஆனால் திக்கற்று வாடும் அவர்களின் கண்ணீரே வலிமையுற்றுப் பெரும்படையாகி முறை தவறிய அரசின் வளங்களைத் தேய்த்து அழித்து விடும் என்கிறது குறள். 'தேய்க்கும்' என்றது சிறுகச் சிறுகத் தேய்த்து அழித்துவிடும் என்ற பொருளில் வந்தது.

குடியாட்சி ஆனாலும் முடியாட்சி ஆனாலும் அல்லது பொதுவுடைமைக் குழுவாட்சி ஆனாலும் அவை மக்களுக்குக்காகத் தானே உள்ளது? எந்தவகை ஆட்சியாக இருந்தாலும் மக்கள் சீற்றத்தின் வெளிப்பாடாகக் கண்ணீர் விடும் நிலையில் அவ்வாட்சி இருந்தால் அந்த அரசு வளங்குன்றி அழிந்துபோகும் என்பது கருத்து.
இக்குறளில் வரும் 'படை' என்ற சொல்லுக்கு 'கருவி', 'ஆயுதம்', 'சேனை' எனப் பொருள் கொண்டனர்.

'அல்லல்உற்று ஆற்றாது அழுவாளை' என்று வள்ளுவரின் சொல்லாட்சியையே இளங்கோ அடிகளும் பயன்படுத்தியுள்ளார். அப்பாடல்:
அல்லல்உற்று ஆற்றாது அழுவாளைக் கண்டிரங்கி
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம்மயங்கிக்
களையாத துன்பம்இக் காரிகைக்குக் காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது
(சிலப்பதிகாரம்: ஊர்சூழ் வரி: பொருள்: வருத்தமுற்றுப் பொறாது அழுகின்றாளை வளமிக்க மதுரை நகரத்தார் யாவரும் கண்டு ஏக்கமுற்றுக் கலங்கி நீக்க வொண்ணாத துன்பத்தினை இக்காரிகைக்குச் செய்து எஞ்ஞான்றும் கோடாத செங்கோல் கோடிற்று)

கண்ணீர் எப்படி செல்வத்தை அழிக்கும்?

ஓர் அரசு ஆணவத்துடன் நடந்து கொள்வதற்கு ஒரு காரணம் அதன் செல்வநிலை. (குடிமக்கள் அரசியலில் இதை ஆட்சிபலம் என வாசிக்கலாம்). நாட்டின் செல்வம் மிகையாக இருக்கும்போது அதன் தலைவன் அதைத் தன் வலுவான பின்புலம் என்பதாகக் கருதுவான். அது அழிக்கமுடியாதது என்ற எண்ணத்தில் ஆணவம் கொண்டு நீதியல்லாத செயல்களில் ஈடுபடத் தொடங்குவான். அரசு கொடுங்கோன்மையாக இருக்கும்போது மக்கள் சட்டம்-ஒழுங்கிற்குக் கட்டுப்படமாட்டார்கள். நாடு பாலைவனமாகும். நீதிக்கும் தண்டனைக்கும் உரிய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசோ பொருள்வலி மிக்காரோ பிறவலி மிகுந்தாரோ தம் ஆற்றல்களால் மெலியோரை துன்புறுத்துவர். இவை கொடுங்கோல் ஆட்சியின் அடையாளங்களாகும். நடுநிலை இல்லா அரசாட்சி, அடக்குமுறை, கொடுமையான வரிச்சுமை, வீண்போர்கள் போன்றவற்றாலும், நீதிமுறையைக் கண்டுகொள்ளாததாய், அருளாட்சி இல்லாததாய்க் குடிமக்களின் நலத்தையும் பாதுகாப்பினையும் எண்ணிப் பார்க்காததாய் உள்ள அரசாய் இருப்பதாலும், ஆளப்படும் மக்கள் பெருந்துன்பத்துக்கு ஆளாவார்கள். 'ஐயோ இவ்வாட்சியின் கொடுமையைத் தாங்க முடியவில்லையே' என்று அல்லற்பட்டுத் தாங்க முடியாது எளியமக்கள் அழுவர். அவர்கள் அழுது புலம்புவதைத் தவிர வேறொன்றும் செய்ய முடியாத நிலையில் இருப்பர். கொடுங்கோல் அரசு செய்யும் நீதியல்லாத கொடுஞ்செயல்களால் துன்பப்பட்டு, அது பொறுக்கமுடியாது, சொல்லவும் மாட்டாமல், ஆற்றாமையின் வெளிப்பாடாக, அந்நாட்டின் குடிமக்கள் கண்ணீர் விடுகின்றனர். அவர்கள் அழுத கண்ணீர் என்ன செய்யவல்லது?
அழுது அழுது விடுகின்ற கண்ணீர் வீண்போகாது. அந்தக் கண்ணீருக்கு அளவற்ற ஆற்றல் உண்டு. அந்தக் கண்ணீர்தான் கொடுங்கோலனுடைய பலமிக்க ஆட்சியை அழிக்கக் கூடிய பெரும்படை ஆகும். இவர்கள் கலங்கி விடுகின்ற கண்ணீர், வலிமையுடையதாகி, கூர் பெற்று, முறை தவறிய மன்னனின் செல்வத்தை அழித்து விடவல்லது என்கிறது இப்பாடல். கண்ணீர் எப்படி அழிக்கின்றது என்பதை வெளிப்படையாகக் காண முடியாவிட்டாலும் ஆட்சிபலம் அழிவது புலனாகாமலே மறைந்துவிடும் என்பது கருத்து.
ஏழையின் அல்லல் கண்டு மக்கள் திரண்டு புரட்சி செய்து அரசனை வீழ்த்துவர் என்று இக்குறள் கூறுகிறது எனச் சிலர் சொல்வர். வன்முறைப் புரட்சியால் வீழ்த்தப்பட்ட கொடுங்கோலர் பற்றிய வரலாறுகள் பல உள. ஆயினும் சாது மிரண்டு காடு கொள்ளா முறையில் ஆட்சியாளனை வீழ்த்துவதாக இக்குறளைக் கருதவேண்டியது இல்லை. இதில் சொல்லப்பட்ட கண்ணீர்ப்படை அறவழிப்பட்டது. அழிக்கவே முடியாதது என இறுமாந்திருக்கும் ஆட்சியாளரது வளத்தைக் கண்ணீர்ப் பலம் என்ற அரம் கொண்டு சிறுகச் சிறுக அறுத்துத் தேய்த்து அழிப்பதுவே இங்கு கூறப்படுகிறது. கொடியவனுக்குத் துணையாக இருந்தவர்கள் எல்லோரும் பகைவர்களாக மாறுவார்கள். அவனுக்கு அடங்கியிருந்தவர்களே அவனை அடக்கி வெல்ல எழுவார்கள். இவ்வாறாக இருந்த இடத்திலிருந்தே அமைதியாக மெல்ல அரசின்பலம் 'தேய்ந்து போகும்' என்று நுட்பமாகச் சொல்லப்பட்டது.
'உண்மையாகப் படை வைத்துக்கொண்டு தற்காப்புச் செய்து கொள்ளும் கொடுங்கோலனுடைய ஆற்றலை அந்தப் படையில் காட்டாமல் அதை வெறும் செல்வம் என்று சொல்லிக் கழித்தார். வலிமையும் இழந்து படையும் இல்லாமல் வாடும் மக்களின் கண்ணீரின் ஆற்றலை உணர்த்துவதற்காக அதையே படை என்று குறிப்பிட்டார்' என்பார் மு வரதராசன். செல்வத்தை என்பதற்கு 'அரசை' என்றே பொருள் கூறினார் வ சுப மாணிக்கம்.

வள்ளுவர் குடிமக்களின் ஆற்றலை எவ்வளவு உயர்வாகக் கணித்திருந்தார் என்று இப்பாடல் தெரிவிக்கிறது.
எளியோரை வலியோர் வாட்டினால் வலியோரைத் தெய்வம் வாட்டும். ஆதலால், கொடுங்கோலரசனை இறைவனே அழித்து விடுவான் என்பது கருத்து என்று தேவநேயப்பாவாணர் இக்குறட்கருத்தை விளக்கினார். அரசியல் பிழைத்தோரை அறம் அழிக்கும். அறமே அவர்களுக்குத் தண்டனை தரும். செங்கோல் ஆட்சியில் மழையும் விளைச்சலும் மிகையாவது, கொடுங்கோல் ஆட்சியில் வான்துளியின்மை, அல்லற் பட்டு ஆற்றாது அழுத கண்ணீரும் ஆட்சியைத் தேய்க்கும் என்பன மக்கள் நம்பிக்கை மட்டுமல்ல உண்மையுங்கூட என்பதைக் கடந்த காலங்கள் காட்டியுள்ளன.

அரசின் கொடுமைகளைப் பொறுக்கமாட்டாமல் குடிமக்கள் அழுத கண்ணீரன்றோ செல்வத்தைத் தேய்க்கும் கருவி கருவி? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கொடுங்கோன்மைக் கூறுகள் மிகத் தோன்றும்போது ஒரு அரசு தேய்வுகளை எதிர்நோக்கும் என்னும் பாடல்.

பொழிப்பு

முறை செய்யாத அரசின் இன்னல்களைத் தாங்க மாட்டாது குடிகள் பெருக்கிய கண்ணீர் அல்லவா அவனது செல்வத்தைத் தேய்க்கும் கருவி?