இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0554



கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:554)

பொழிப்பு: (ஆட்சிமுறை கெட்டுக்) கொடுங்கோலனாகி ஆராயாமல் எதையும் செய்யும் அரசன், பொருளையும் குடிகளையும் ஒரு சேர இழந்து விடுவான்.

மணக்குடவர் உரை: பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன், முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.
இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: சூழாது கோல் கோடிச் செய்யும் அரசு - மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன், கூழும் குடியும் ஒருங்கு இழக்கும் - அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
('கோடல்' என்பது திரிந்து நின்றது. முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.

நாமக்கல் இராமலிங்கம் உரை: அரசுக்குரிய முறை கெட்டு, அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யாமல் தன்னிச்சைப்படி ஆட்சி செய்கின்ற (கொடுங்கோல்) அரசன் தன்னுடைய செல்வச் சிறப்பையும் குடிமக்களின் அபிமானத்தையும் ஒருமிக்க இழந்து விடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு.


கூழும் குடியும் ஒருங்கிழக்கும்:
பதவுரை: கூழும்- உணவிற்கேதுவாகிய பொருளும்; குடியும்-குடிமக்களையும்; ஒருங்கு-ஒருசேர; இழக்கும்-இழக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன்;
பரிப்பெருமாள்: பொருளையும் பொருள்தரும் குடியையும் கூட இழப்பன்;
பரிதி: மழையும் மற்றுக் குடியும் இழப்பன்;
காலிங்கர்: இவ்வாறு அன்றிப் பின்னும் தனது நாட்டுள் வாழும் குடிகளையும் அக்குடிகளால் உளவாகும் உணவுப் பொருள்களையும் உடனே இழப்பன்;
பரிமேலழகர்: அச்செயலான் முன் ஈட்டிய பொருளையும் பின் ஈட்டுதற்கு ஏதுவாகிய குடிகளையும் சேர இழக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: முன் ஈட்டிய பொருள் இழத்தற்கு ஏது, வருகின்ற பாட்டான் கூறுப.

'பொருளையும் குடியையும் கூட இழப்பன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி கூழ் என்றதற்கு மழை எனப் பொருள் உரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருளும் குடியும் ஒருசேர இழப்பான்', 'பொருள்களையும் குடிகளையும் ஒருசேர இழப்பான்', 'பொருளையும் குடிகளையும் ஒருங்கே இழப்பான்', 'பொருளையும் மக்களையும் இழப்பான்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பொருளும் குடியும் ஒருசேர இழக்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

கோல்கோடி சூழாது செய்யும் அரசு:
பதவுரை: கோல்-முறை செய்யுங்கோல்; கோடி-தப்ப; சூழாது-கலந்தெண்ணாமல்; செய்யும்-செய்யும்; அரசு-வேந்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.
பரிப்பெருமாள்: முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஆராயாது செய்வதனால்வருங் குற்றங் கூறிற்று.
பரிதி: கொடுங்கோல் நடத்தி நல்ல மந்திரி வார்த்தை கேளாத மன்னவன் என்றவாறு.
காலிங்கர்: யாவன் எனின் நெறியும் நெறியல்லதும் தேராது, கோல் கோடி மற்று இங்ஙனம் செய்யும் அரசனாவன் என்றவாறு.
பரிமேலழகர்: மேல் விளைவது எண்ணாது முறைதப்பச் செய்யும் அரசன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'கோடல்' என்பது திரிந்து நின்றது.

'முறை கோடி ஆராயாது செய்யும் அரசன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். சூழாது என்பதற்கு மணக்குடவர்/பரிப்பெருமாள் 'ஆராயாது' என்றும் பரிதி 'மந்திரி வார்த்தை கேளாத' என்றும் 'நெறியும் நெறியல்லதும் தேராது' என்றும் பரிமேலழகர் 'மேல் விளைவது எண்ணாது' என்றும் பொருளுரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீதிதவறி ஆராயாது செய்யும் அரசன்', 'அமைச்சர் முதலியவரோடு ஆராயாமல் முறை தவறி ஆட்சி செய்யும் கொடிய அரசன்', 'ஆராய்ச்சி இன்றி முறை தப்பி ஆளும் அரசன்', 'மேல்வரப்போவதை நினையாது ஆளும் அறநெறி தவறிச் செல்லும் அரசன்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அமைச்சர் முதலியவரோடு கலந்தெண்ணாமல் முறை தவறி ஆட்சி செய்யும் அரசு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஏந்திய கோல் கோணும்படி, உரியவர்களுடன் கலந்து எண்ணாமல், தன் மனம் போனபடி ஆட்சி நடத்துபவனது அரசு, பொருள்களையும் பற்றாய குடிமக்களையும் ஒருசேர இழக்கும்.

முறை தவறி, சூழாது செய்யும் அரசு பொருளும் குடியும் ஒருசேர இழக்கும் என்பது பாடலின் பொருள்.
'சூழாது செய்யும்' என்ற தொடரின் பொருள் என்ன?

கூழும் குடியும் என்ற தொடர்க்குப் பொருள் வளத்தையும் குடிமக்களையும் என்பது பொருள்.
ஒருங்கிழக்கும் என்றது ஒருசேர இழக்கும் என்ற பொருள் தருவது.
கோல்கோடி என்றது செங்கோல் வளைந்து எனப்பொருள்படும்.
அரசு என்ற சொல் அரசாட்சி என்ற பொருளது.

உரியவர்களுடன் கலந்தெண்ணாமல் தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்பவனது அரசு பொருள்வளத்தையும் குடிகளையும் ஒருசேர இழக்கும்.

கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்றவகையில் ஒருவருடனும் கலந்து எண்ணாமல் அரச நீதி செலுத்தும் ஆட்சியாளன் அரசின் பொருட்செல்வத்தையும் பற்றாயா குடிமக்களையும் ஒருங்கிழந்து கெடுவான். குடிமக்கள் அவனைப் புறக்கணிக்கவும் செய்வார்கள். தன்விருப்பப்படி செயல்படுவன் என்று சொல்வதனாலேயே அவன் செங்கோன்மை பாராமல் கொடுஞ்செயல் புரியத்தக்கவன் என அறியலாம். அது கொடுங்கோன்மைக்கு வித்திடுவதாக அமையும். குறிப்பான ஒரு கொடுமை செய்யாவிடினும் 'சூழாது செய்தலே' கொடுங்கோல் என்பது குறிப்பு.

கூழ் என்ற சொல்லுக்குப் பொருள், மழை, உணவுப் பொருள்கள், முன் ஈட்டிய பொருள், பயிர், நாடு, நாட்டு வளம், தன் செல்வம் எனப் பொருள் கூறினர். இந்த குறளில் கூழ், என்பது பொருட்செல்வம் என்ற பொருளில் வருகிறது. மாந்தர் நுகர்வன எல்லாம் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டே வருதலால் பொருட்செல்வத்தைக் கூழ் என்று குறிப்பிடுவர். ஒரு அரசுக்குத் தேவையான உறுப்புக்களில் ஒன்றாக இருக்கக் கூடிய செல்வத்தைக் கூழ் என்றே குறள் குறிக்கும். கூழ் என்பது உணவு என்ற பொருளுக்கு உரியதாகி அதற்குக் காரணமாகிய பயிரையும் அதற்கு இன்றியமையாத மழையையும், பின் உணவுப் பொருள்கள் அனைத்தையும், பின் நாட்டையும் நாட்டு வளத்தையும் உணர்த்தியதாகக் கொள்கின்றனர். ’கூழ்’ என்பதற்கு உணவுப் பொருள், வரிவருவாய் போன்றவற்றையும் அடக்கிப் பொருள் எனக்கூறும் உரை பொருத்தம்.
பண்டை உரையாசிரியர்கள அனைவரும் அரசு என்னும் சொல்லுக்கு அரசன் என்றே பொருள் வகுத்துள்ளனர். அரசு என்ற சொல்லுக்கு அரசாட்சி என்றும் பொருள் கொள்ள்ப்படுகிறது. குடியும் நாடும் ஆட்சியும் இறைமையும் இணைந்ததே முழுமைபெற்ற அரசு என இன்றைய அறிஞர்கள் எடுத்துக் காட்டுகின்றனர்.

ஆட்சியின் அறம் மீறி செலுத்தப்படும் அரசு வாழும் குடிகளை வாட்டுவதோடு தாழும் பொருளுடன் தானும் தாழ்ந்து போகும். குடிமக்கள் தம்பொருளுடன் பிறநாட்டில் குடியேறிவிடுவர் என்றவாறு சிலர் பொருள் வரைந்தனர். கோல் வளைதல் பற்றிச் சொல்லப்படுவதால் இக்குறள் கொடுங்கோலரசு பற்றிப் பேசுகிறது என எளிதாகப் புரிந்துகொள்ளலாம். கொடுங்கோல் ஆட்சியினின்றும் அகன்று, நல்லாட்சி நடக்கும் நாடுகளை நாடி குடிமக்கள் சென்றுவிடுவார்கள் ஆகையால் நாட்டின் மனிதவளமும் அதனால் கிடைக்கும் பொருட்செல்வமும் ஒரெசேரக் குன்றிவிடும் என்பது இக்குறள் கூறும் கருத்து.

'சூழாது செய்யும்' என்ற தொடரின் பொருள் என்ன?

'சூழாது செய்யும்' என்ற தொடர்க்கு ஆராயாது செய்யும், நல்ல மந்திரி வார்த்தை கேளாத, நெறியும் நெறியல்லதும் தேராது செய்யும், மேல் விளைவது எண்ணாது செய்யும், அமைச்சர்களுடன் கலந்தெண்ணாது செய்யும், அமைச்சர் முதலியவரோடு ஆராயாமல் ஆட்சி செய்யும், அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யாமல், ஆராய்ச்சி இன்றி ஆளும், மேல்வரப்போவதை நினையாது ஆளும் என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

அரசு தொடர்பான எந்த ஒரு முடிவும் குடிமக்களையும் நாட்டையும் நேரடியாக ஆழமாகப் பாதிக்கும். எனவே அப்படிப்பட்ட முடிவை தனி ஒருவனாக ஆட்சித்தலைவன் மட்டுமே எடுக்க இயலாது; எடுக்கவும் கூடாது. அவன் ஆட்சிமனறக் குழுவுடன் கலந்து ஆலோசித்து பாதக, சாதகக் கூறுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு முடிவு எடுக்கவேண்டும். கலக்காமல் எடுக்கப்பெறும் முடிவு தவறு விளைவதற்கான வாய்ப்பு மிகை. அதன் விளைவுகள் காலங்கந்தும் பாதிப்புகளை விளைவிக்கும். 'சூழாது ஆட்சி செய்தல் ஒரு கொடுங்கோன்மைக் கூறாகும்.

அமைச்சர் முதலியவரோடு கலந்தெண்ணாமல் முறை தவறி ஆட்சி செய்யும் அரசு பொருளும் குடியும் ஒருசேர இழக்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்ஒருவன் விருப்பப்படியே ஆட்சி செய்யும் நாட்டுத்தலைவனது செயல்கள் கொடுங்கோன்மையாகவே அமையும்.

பொழிப்பு

கலந்தெண்ணாமல் தன் விருப்பப்படி ஆட்சி செய்பவனது அரசு பொருளையும் குடிகளையும் ஒருசேர இழக்கும்.