இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0553



நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாள்தொறும் நாடு கெடும்

(அதிகாரம்:கொடுங்கோன்மை குறள் எண்:553)

பொழிப்பு (மு வரதராசன்): நாள்தோறும் தன் ஆட்சியில் விளையும் நன்மை தீமைகளை ஆராய்ந்து முறை செய்யாத அரசன், நாள்தோறும் (மெல்ல மெல்லத்) தன் நாட்டை இழந்து வருவான்.

மணக்குடவர் உரை: குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன் நாடு நாடோறும் கெடும்.
இது நாடு கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: நாள்தொறும் நாடி முறை செய்யா மன்னவன் - தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன், நாள்தொறும் நாடு கெடும் - நாள்தோறும் நாடு இழக்கும்.
(அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.)

நாமக்கல் இராமலிங்கம் உரை: தினந்தோறும் (விசாரிக்க வேண்டியவற்றை) விசாரித்து நியாயம் வழங்காத (கொடுங்கோல்) மன்னவனுடைய நாடு நாளுக்கு நாள் சீர்கெட்டுப் போகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடு நாள்தொறும் கெடும்.

பதவுரை: நாள்தொறும்-ஒவ்வொரு நாளும்; நாடி-ஆராய்ந்து; முறை-நீதி; செய்யா-இயற்றாத; மன்னவன்-ஆட்சியாளன்; நாள்தொறும்-நாளுக்கு நாள், (கொஞ்சம் கொஞ்சமாக); நாடு-நாடு; கெடும்-கெட்டுச்செல்லும்.


நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன்;
பரிப்பெருமாள்: குற்றமும் குணமும் நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன்;
பரிதி: நாடொறும் குடிகள் செய்கிற கிரமங்களை விசாரித்துச் செங்கோல் முறைமை செய்யாத மன்னற்கு; [கிரமங்களை - முறைகளை]
காலிங்கர்: ஒரு மாத்திரைப் பொழுதும் இடைப்படாமை நாள்தோறும் ஆராய்ந்து செங்கோன்மை செய்து ஒழுகாத மன்னவன்தன்; [மாத்திரைப் பொழுதும்-கைந்நொடிக்காலமும் கண்ணிமைக்காலமுமாகிய கால அளவு; இடைப்படாமை-இடையில் காலக் கழிவு உண்டாகாதபடி]
பரிமேலழகர்: தன் நாட்டு நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன்;

'நாடோறும் ஆராய்ந்து அதற்குத் தக்க முறை செய்யாத அரசன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாள்தோறும் ஆராய்ந்து ஆளாத அரசனது', 'தன் நாட்டில் நிகழும் தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து முறை செய்யாத அரசனது', 'ஒவ்வொரு நாளும் தன் நாட்டிலே ஏற்படுங் குற்றங்களை ஆராய்ந்து முறை செய்யாத அரசன்', 'தன் நாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளை நாள்தோறும் ஆராய்ந்து அதற்கேற்ப முறைமையினைச் செய்யாத அரசன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தன் நாட்டின் நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் ஆராய்ந்து முறை செய்யாத ஆட்சியாளன் என்பது இப்பகுதியின் பொருள்.

நாள்தொறும் நாடு கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நாடு நாடோறும் கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது நாடு கெடுமென்றது.
பரிப்பெருமாள்: நாடு நாடோறும் கெடும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது நாடு கெடுமென்றது.
பரிதி: நாள்தோறும் நாடு கெடும்.
காலிங்கர்: நாடானது நாள்தோறும் கெட்டுச் செல்லும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: இனி இவ்வாறன்றி அரசனும் நாள்தோறும் கெட்டுச்செல்லும் என்றவாறு.
பரிமேலழகர்: நாள்தோறும் நாடு இழக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: அரசனுக்கு நாடு, உறுப்பு ஆகலின், அதன் வினை அவன்மேல் நின்றது. இழத்தல்: பயன் எய்தாமை. 'மன்னவன் நாடு நாள்தொறும்கெடும்' என்று உரைப்பாரும் உளர்.

நாடு நாள்தோறும் கெடும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிமேலழகர் 'நாள்தோறும் நாடு இழக்கும்' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நாடு நாளும் கெட்டுக்கொண்டே போகும்', 'நாடு நாள்தோறும் கெட்டழியும்', 'நாடோறுந் தன் நாட்டினை இழந்து வருந்துவான்', 'நாள்தோறும் தன் நாட்டை இழப்பான்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

நாடு நாளுக்கு நாள் கெட்டுக்கொண்டே போகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் நாட்டின் நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் ஆராய்ந்து முறை செய்யாத ஆட்சியாளனது நாடு நாளுக்கு நாள் கெடும் என்பது பாடலின் பொருள்.
'நாடு கெடும்' குறிப்பது என்ன?

கண்ணிமைக்காலமும் சோராமல் கருத்துச் செலுத்தி ஆளாவிட்டால் அந்நாடு தேய்ந்துகொண்டே போகும்.

ஒவ்வொரு நாளும் தன் நாட்டில் ஏற்படும் குற்றங் குறைகளை ஆராய்ந்து ஆட்சி செலுத்தாத ஆட்சியாளன் நாள்தோறும் தன் நாட்டிற்கு கேடு உண்டாக்குவான்.
ஆட்சி நடத்துவதிலும், முறை செய்வதிலும் குறைபாடுகள் உண்டாகின்றனவா என்று ஒவ்வொரு நாளும் ஆராய்ந்தறியாத ஆட்சியாளரின் நாடு கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுப்போகும்.
முந்தைய கால நிகழ்வுகள் பற்றி நாள்தோறும் மதிப்பாய்வு செய்து ஆளாத அரசு நாட்போக்கில் கெட்டழியும். நாட்டில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் அதன் பின்னணிகளையும் எதிர் விளைவுகளையும் இடைவிடாமல் நாள்தோறும் ஆட்சியாளர் குடிமக்களை நேரில் அழைத்துக் கேட்டும், உளவுத்துறை போன்ற அமைப்புகள் வழி ஆராய்ந்தும், தேவைப்பட்டால் தாமே நேரில் சென்று கண்களால் கண்டும் முறைமை செய்தல் வேண்டும். ஒரு நிகழ்வின் நன்மை தீமைகளை ஒருகாலத்தில் இருந்த நிலையிலேயே இருக்கும் என்ற அடிப்படையில் ஆட்சி செலுத்துதல் நன்றன்று. சமூகச் சூழ்நிலை மாற்றத்தாலும் காலத்தின் மாறுதல்களாலும் நன்மை தீதாதலும் தீமை நன்மையாதலும், நல்லவர் கலகக்காரராகவும் குற்றம் புரிந்தவர் திருந்தியவராகவும் ஆதல் உண்டு. காலத்துக்குக் காலம் தேவைகள் மாறும் தன்மை கொண்டதாகையால், அரசு ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்தின் தேவைகளை, அந்தச் சமுதாயத்தின் முழுமையான வளர்ச்சிக்குரிய நீதிமுறைகளை நாள்தோறும் ஆராய்ந்து அந்தந்த நிலைமைகளுக்கு ஏற்றவாறு நீதியை வழங்க வேண்டும்.
'நாடி' என்றதால் நீதி எல்லா நேரங்களிலும் இயல்பாக அமையும் என்று எதிர்பார்க்க முடியாது; பலவேளைகளில் அதை நாடிச் சென்றுதான் கண்டு கொள்ள வேண்டும் என்பதும் உணர்த்தப்பட்டது.
முறை செய்வதில் குடிகள் அலைத்தல் செய்யப்படுகின்றனரா, அவர்கள் காக்க வைக்கப்படுகின்றனரா போன்றவற்றை நாள்தோறும் ஊடுருவிப் பார்ப்பது இன்றியமையாதது; காலத்தாழ்ச்சியின்றி அரசு செயல்கள் நடக்குமென்றால் கையூட்டு கொடுக்கல்/வாங்கல் வாய்ப்புக் குறைந்துவிடும். ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள்தோறும் ஆராய்ந்து அவற்றிற்குத் தக்கவாறு ஆட்சியின் குறைகளைத் திருத்திக்கொள்ள வகைசெய்யாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும். தம் ஆட்சிமுறை பற்றி அடிக்கடி மீள்நோக்குச் செய்யாது நிர்வாக இயங்கு முறையைக் கைநழுவ விடும் அரசு செங்கோல் அரசு ஆகாது.

'நாடு கெடும்' குறிப்பது என்ன?

'நாடு கெடும்' என்பதற்கு நாடானது கெட்டுச் செல்லும், நாடு இழக்கும், நாடு கெட்டுப்போகும், நாடு அழிந்து வரும், நாடு கெட்டுக்கொண்டே போகும், நாடு கெட்டழியும், நாடு சீர்கெட்டுப் போகும், நாடு எல்லா நலங்களும் இழந்து போகும், நாட்டினை இழந்து வருந்துவான், நாட்டை இழப்பான், நாடு தாழ்நிலை பெற்றுக் கீழிறங்கும், நாடிழப்பான், நாடும் சீர்கெட்டுக்கொண்டே வரும்; அரசனும் கெடுவான் என்று உரைகாரர்கள் பொருள் கூறினர்.

'நாடு கெடும்' என்ற தொடர்க்கு மன்னனது நாடு கெடும் என்று ஒரு சாராரும் மன்னன் நாடோறும் நாடிழக்கும் என்று இன்னொரு சாராரும் இக்குறளை விளக்குவர். நாடு இழப்பர் என்பதைவிட நாடு கெடும் என்ற பொருளே பொருத்தமானது. அரசு முறை செய்யாமற் போகுமானால் ஆட்சியாளன் கெடுவான்; அவனால் நாடும் கெடும் என்று பொருள் கொள்வது சிறந்தது.
முறை செய்யாத அரசு கொடுங்கோல் அரசு என்று அறியப்படும். கொடுங்கோல் அரசு நீதி வேண்டும் என்று முறையிடுவோரை அடக்கத்தான் முன்வரும். கொடுங்கோன்மை ஆட்சியில், அரசு மீது நாட்டு மக்களிடம் வெறுப்புக் குடி கொண்டு, உட்பகை வளர்ந்து வரும்; நாட்டின் வளமும் வருவாயும் குன்றும்; குடிகளின் அரசப்பற்று குறையும்; நாடு பகைவர்க் கிடமாகும். பொல்லார் ஆட்சியில் மக்கள் புலம்பிக் கொண்டிருப்பர். அந்தக் கொடிய அரசை ஒழிக்கவே அவர்கள் விரும்புவர். இவ்வாறாகப் பலவகைத் தீமை வளர்வதால் 'நாடு கெடும்' எனப்பட்டது.
ச சோமசுந்தர பாரதி 'நாள்தொறும் நாடி முறைசெய்யா மன்னவன் ஆள்தொறும் நாடு கெடும் எனப் பிரித்துப் பொருள் கொண்டால் மன்னவன் ஆள்தொறும் நாடு கெட்டுக் கொண்டே யிருக்கும் என்ற பொருள் கிடைக்கும் என்பார். முறைசெய்யாத ஆட்சியாளன் அரசுக்கட்டிலில் உள்ளவரை அவன் நாடு கேடுற்றுக்கொண்டே செல்லும் என்ற உரையும் சிறந்து காணப்படுகிறது.

தன் நாட்டின் நிகழ்வுகளை ஒவ்வொருநாளும் ஆராய்ந்து முறை செய்யாத ஆட்சியாளனது நாடு நாளுக்கு நாள் கெட்டுக்கொண்டே போகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

நாட்டு நடப்பில் நாளும் அக்கறை செலுத்தாத ஆட்சி கொடுங்கோன்மையாம்.

பொழிப்பு

ஒவ்வொரு நாளும் நாட்டின் நிகழ்வுகளை மறுசீராய்வுடன் முறை செய்யாத ஆட்சியாளனது நாடு நாளுக்கு நாள் கெட்டுக்கொண்டே போகும்.