இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0528



பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்
அதுநோக்கி வாழ்வார் பலர்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:0528)

பொழிப்பு: அரசன் எல்லாரையும் பொதுவகையாக நோக்காமல், அவரவர் சிறப்புக்கு ஏற்றவாறு நோக்கினால், அதை விரும்பிச் சுற்றமாக வாழ்கின்றவர் பலர் ஆவர்.

மணக்குடவர் உரை: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின் அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: பொது நோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் - எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அது நோக்கி வாழ்வார் பலர் - அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
(உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி,எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.)

இரா சாரங்கபாணி உரை: அரசன் எல்லாரையும் சமனாகப் பொதுநோக்கு நோக்காமல் அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின் அதுநோக்கி வாழ்வார் பலர்.


பொதுநோக்கான் வேந்தன் வரிசையா நோக்கின்:
பதவுரை: பொது-பலவும் ஒரு தன்மையவாதல்; நோக்கான்-பாராதவனாக; வேந்தன்-மன்னவன்; வரிசையா-தகுதிக்கு ஏற்ற தன்மையாக; நோக்கின்-பார்த்தால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அரசன் எல்லாரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே பார்ப்பானாயின்;
பரிப்பெருமாள்: எல்லோரையும் பொதுவாகப் பாராதே ஒருவனைத் தலைமையாலே அரசன் பார்ப்பானாயின்;
பரிதி: அரசன் உறவின் முறையரான பதினெட்டுப் பேர் முதலான பேரை, எல்லாரும் ஒக்கும் என்று விசாரியாமல் தராதர பாவனையறிந்து பார்ப்பானாகில்;
காலிங்கர்: கீழ்ச்சொன்ன முறைமையின் பொதுப்பட அணைத்தலேயும் அன்றிப் பின்னும் பிறர் குலமும் ஒழுக்கமும் குணமும் கல்வியும் முதலிய மேம்பாட்டு வேற்றுமையானும் குறிக்கொண்டு அணைப்பனாயின்;
பரிமேலழகர்: எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: உயர்ந்தார் நீங்குதல் நோக்கிப்பொது நோக்கை விலக்கி, எல்லாரும் விடாது ஒழுகுதல் நோக்கி வரிசை நோக்கை விதித்தார்.

'எல்லாரையும் ஒரு தன்மையராக நோக்காது அரசன் தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் தலைமைக் குணத்தைப் பார்ப்பானானால் என்றும் மற்றவர்கள் தகுதிக்கேற்ப நோக்குவானால் என்று சொல்கின்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின்', '(ஒரு குடும்பி தன்னுடைய சுற்றத்தார் அனைவரையும் சரிசமானமாக நடத்தலாம். ஆனால் ஓர் அரசன்) தன் சுற்றமாகிய துணைவர்கள் எல்லாரையும் ஒரே மாதிரியாக நடத்தி விடாமல் அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்ய வேண்டும்', 'அரசன் எல்லாரையும் ஒரே தன்மையாக நோக்காது அவரவர் தகுதிக்கேற்ப நோக்கிச் செய்வன செய்தால்', 'எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராது அரசன் அவரவர் தகுதிக்கு ஏற்பப் பார்த்துச் சிறப்புச் செய்வானானால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் அவரவர் தகுதிக்கேற்ப சிறப்பாக நோக்குவானாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுநோக்கி வாழ்வார் பலர்:
பதவுரை: அதுநோக்கி-அது பார்த்து; வாழ்வார்-வாழ்க்கை நடத்துபவர்; பலர்-பலர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒருவனை இளவரசாக்க வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அத்தலைமையை நோக்கி வாழ்வார் பலர் என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: மக்கள் பலர் உண்டானால் எல்லாரையும் ஒக்கப் பாராது நீதிமான் ஒருவனை இளவரசு ஆக்க வேண்டும் என்றது.
பரிதி: அது நோக்கி அரசனைச் சூழ்ந்து இருப்பார் பலர் என்றவாறு.
காலிங்கர்: மற்று அம்மரபு நோக்கித் தாமும் அங்ஙனம் ஒழுகுவர் உலகத்தோர்; எனவே இதனைப் படிமரபாகக் கொண்டு யாவரும் தம்தம் சுற்றம் ஓம்புவார் என்றவாறு. [படிமரபு - வரிசை நோக்கு; தகுதி பற்றிய முறை].
பரிமேலழகர்: அச்சிறப்பு நோக்கி அவனை விடாது வாழும் சுற்றத்தார் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: இந்நான்கு பாட்டானும் சுற்றம் தழுவும் உபாயம் கூறப்பட்டது.

'அப்பார்வை நோக்கி அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் இளவரசு பட்டத்தை அச்சிறப்பாகக் குறிக்கின்றனர் எனத் தோன்றுகிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'அதனால் வாழும் சுற்றத்தார் பலர்', 'அதனால் அநேகர் அரசனை விரும்பித் துணைப்பலமாகச் சூழ்ந்திருப்பார்கள்', 'அது தெரிந்து அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர் இருப்பர்', 'அச்சிறப்புக் கருதி வாழ்வார் பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது வாழ்வார் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தகுதிபார்த்துச் சிறப்பு செய்பவனை அச்சிறப்பு பெறுவதற்காக பல சுற்றத்தார் அவனை விடாது அவனுடன் தங்கி இருப்பர்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் வரிசையா நோக்கின் அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது உடனிருப்பர் பலர் என்பது பாடலின் பொருள்.
'வரிசையா நோக்கின்' என்றால் என்ன?

பொதுநோக்கான் என்றதற்கு எல்லோரையும் ஒரு தன்மையாக நோக்காதவன் என்பது பொருள்.
வேந்தன் என்ற சொல் ஆட்சித்தலைவன் என்ற பொருள் தரும்.
அதுநோக்கி என்ற தொடர்க்கு அச்சிறப்பை எதிர்பார்த்து என்று பொருள்.
வாழ்வார் பலர் என்றது வாழ்பவர்கள் பலர் என்ற பொருளது. இங்கு சுற்றமாய் வாழ்பவர் பலர் எனக் கொள்வர்.

அரசன் ஒருவரது தகுதி நோக்கிச் செய்வன செய்தால், அது தெரிந்து அவனை விடாது வாழுஞ் சுற்றத்தார் பலர் இருப்பர்.

நாட்டை ஆள்வோர் மக்கள் எல்லோரையும் ஒரே நிறையில் கருத வேண்டுமானாலும், ஒவ்வொரு பிரிவினருடைய நிலையை உணர்ந்து அவரவர் தகுதிக்கு ஏற்பச் செயல்பட்டு சிறப்புச் செய்ய வேண்டும். தகுதியுடையவர், தகுதியில்லாதவர் என்று கருதாது யாவரையும் ஒரு தன்மையராகக் கருதி நடந்தால், அந்நடக்கை தம்மைத் தாழ்வுபடுத்தியது நோக்கி தகுதியுடையார் நீங்கிவிடுவர். தக்கோர் விலகாதிருக்கப் பொது நோக்கை நீக்கி, எல்லாரும் விடாது சூழ்ந்து வாழ்தலை நோக்கி வரிசை நோக்கை தலைவன் பின்பற்றவேண்டும். அங்ஙனம் தகுதிக்கேற்ப நடந்து கொள்வானைப் பலரும் சூழ்ந்து வாழ்வர். சுற்றத்துடன் ஒன்றி அவரவர் தகுதிக்கேற்ப அணைத்துச் சென்றால் சுற்றத்தினர் மகிழ்வடைவார்கள்; அரண்சூழ என்றும் முன் நிற்பார்கள்.
சுற்றத்தாரும், தாம் செய்யும் செயல்களால் தனக்குச் சிறப்பு செய்யப்படும் என்று எதிர்பார்த்தால், அந்த எதிர்பார்ப்பின் அடிப்படையிலேயே ஊக்க மடைந்து சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவார்கள். எல்லாச் சுற்றத்தாரையும் ஒன்றுபோல் நடத்தாமல், செயல்திறனுக்கேற்ப ஒருவர் பாராட்டப்படுவர் என்று தெரிந்தால் தலைவனை நீங்காமல் தங்கியிருப்பார். இன்றைய மேலாண்மைக் கோட்பாடும் இந்தக் கருத்தைத்தான் கொண்டுள்ளது.

'உறவின் முறையாரின் அடிப்படைத் தேவைகளைப் பொதுநோக்காலும் சிறப்புத் தேவைகளை வரிசையறிந்தும் அளித்தால் நீங்கார்' என்றும் ஓர் உரை உள்ளது.

'வரிசையா நோக்கின்' என்றால் என்ன?

'வரிசையா நோக்கின்' என்ற தொடர்க்கு தலைமையாலே பார்ப்பானாயின், குலமும் ஒழுக்கமும் குணமும் கல்வியும் முதலிய மேம்பாட்டு வேற்றுமையானும் குறிக்கொண்டு, தத்தம் தகுதிக்கு ஏற்ப நோக்குமாயின், அவரவர் தகுதி திறமைகட்கு ஏற்ப வரிசைப்படப் பார்த்து, தகுதி வரிசையில் வைத்துச் சிறப்புச் செய்வது, பொதுமையின்றிச் சிறப்பாக நோக்கின், அவரவர் தகுதியறிந்து அதற்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அவரவர்கள் பதவிக்குத் தக்கபடி வரிசைகள் செய்தால், அவரவர் சிறப்புவகையால் மதிப்பானானால், அவரவர் தகுதிக்கேற்ப நோக்கி, அவரவ்ர் தகுதிக்கு ஏற்பப் பார்த்து, தரமும் தகவும் உறவும் பார்த்து நடப்பானாயின் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்.
காலிங்கர் 'வரிசையா நோக்கின்' என்பதற்குப் 'படிமரபாகக் கொண்டு' எனப் பொருள் கூறுவார்.
சுற்றத்தார் செயலைக் கண்டு அவர் தகுதி நோக்கிச் சிறப்புச் செய்யவேண்டும் என்கிறது இக்குறட்பா. இக்குறட்கருத்தை ஒப்ப ஒரு சங்கப்பாடல் ஒன்று உள்ளது: ‘வரிசை அறிதலோ அரிதே, பெரிதும், ஈதல் எளிதே மாவண் தோன்றல், அது நற்கறிந்தனை யாயின், பொது நோக்கொழிமது புலவர் மாட்டே’ (புறநானூறு 121: பொருள்: (கொடைத்தன்மை உடையவனை நினைந்து நான்கு திசையினுமுள்ள பரிசின்மாக்கள் பலரும் வருவர்) அவர் வரிசையறிதல் அரிது; கொடுத்தல் மிகவும் எளிது; பெரிய வண்மையை யுடைய தலைவ! நீ அவ்வரிசையறிதலை நன்றாக அறிந்தாயாயின், அறி வுடையோரிடத்து வரிசை கருதாது ஒருதரமாகப் பார்த்தலைத் தவிர்வாயாக). பத்துப்பாட்டு (சிறுபாணாற்றுப்படை 217ம் அடி) பரிசிலருடைய தரமறிந்து அவர்பெறு முறைமையை வரிசையறிதல் என்று குறிக்கிறது. வரிசை நோக்குச் சொல்லப்பட்டதை தேவநேயப்பாவாணர் 'எல்லாவகையிலும் மக்கள் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்றோ தலையாயார் இடையாயார் கடையாயார் என்றோ, முதல்வகுப்பினர் இரண்டாம் வகுப்பினர் எனப்பல வகுப்பின ராகவோ, இயற்கையாகவும் செயற்கையாகவும் பாகுபட்டிருத்தலால், தன்மானமுள்ள மேலோர் நீங்காவாறு பொது நோக்கை விலக்கி எல்லாரையும் தழுவுமாறு வரிசைநோக்கை நெறியிட்டார்' என விளக்கினார்.

வரிசையாக நோக்குதல் என்பது இங்கு 'தகுதியை யுணர்ந்து' என்ற பொருளைத் தரும்.

எல்லாரையும் ஒரு தன்மையராக வைத்துப் பொதுவாகப் பாராமல் அரசன் அவரவர் தகுதிக்கேற்ப சிறப்பாக நோக்குவானாயின் அச்சிறப்பை எதிர்நோக்கி அவனை விடாது வாழ்வார் பலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

செயல்பாட்டிற்குத் தக உயர்வு என்ற முறைமை இருந்தால் பலர் தலைவனை விட்டு விலகமாட்டார்கள் என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

அரசன் பொதுப்பார்வை பாராமல் ஒருவரது தகுதிக்கேற்பச் சிறப்பு நோக்கு நோக்குவானாயின், அச்சிறப்பு கருதி அவனை விடாது வாழ்பவர்கள் பலராவர்.