இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0527



காக்கை கரவா கரைந்துஉண்ணும் ஆக்கமும்
அன்னநீ ரார்க்கே உள.

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:527)

பொழிப்பு (மு வரதராசன்): காக்கை (தனக்குக் கிடைத்ததை) மறைத்துவைக்காமல் சுற்றத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அத்தகைய இயல்பு உடையவர்க்கே உண்டு.



மணக்குடவர் உரை: காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும். அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது.
இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.

பரிமேலழகர் உரை: காக்கை கரவா கரைந்து உண்ணும் - காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும், ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.)

இரா சாரங்கபாணி உரை: காக்கை இரை கண்டால் மறைக்காமல் தான் மட்டுமன்றித் தன் இனத்தையும் அழைத்துக் கூடி உண்ணும். அத்தகைய கூடியுண்ணும் இயல்புடையவர்க்கே சுற்றத்தால் உண்டாகும் பெருஞ்செல்வமும் துணைப் பெருக்கமும் உளவாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காக்கை கரவா கரைந்து உண்ணும். அன்ன நீரார்க்கே ஆக்கமும் உள.

பதவுரை: காக்கை-காகம்; கரவா-மறையாமல்; கரைந்து- கூவிஅழைத்து, தன் குரல் கொடுத்து; உண்ணும்-தின்னும்; ஆக்கமும்-மேன்மேல் உயர்தலும்; அன்ன-அதுபோன்ற; நீரார்க்கே-தன்மையுடையவர்க்கே; உள-இருக்கின்றன.


காக்கை கரவா கரைந்துஉண்ணும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் சுற்றமெல்லாவற்றையும் அழைத்து உண்ணும்; [இரை- இது உண்ணும் உணவுப் பெயர்]
பரிப்பெருமாள்: காக்கை ஓரிரை பெற்றால் அதனை மறையாது தன் இனமாயின எல்லாவற்றையும் அழைத்து உண்ணும்;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மக்கள் பலர் உண்டானால் எல்லார்க்கும் பகுத்து உண்ணக் கொடுக்கவேண்டும் என்றது.
பரிதியார்: காக்கை இரை பெற்றால் தானே புசியாமல் இனங்கூட்டிப் புசிப்பது போல;
காலிங்கர்: காக்கைகளானவை யாதானும் பலி முதலிய இரை பெற்றால் பலவும் அறியாமல் கரந்து ஒழுகாது என் செய்யும் எனின்; [பலி- உணவு. காக்கைக்கு இடும் உணவின் மரபுப் பெயர்; கரந்து ஒழுகுதல் - மறைந்து ஒழுகுதல்]
பரிமேலழகர்: காக்கைகள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது இனத்தை அழைத்து அதனோடும் கூட உண்ணாநிற்கும்;

'காக்கை இரை பெற்றால் தானே புசியாமல் இனங்கூட்டி உண்ணும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காக்கை தன் சுற்றத்தை அழைத்து உண்ணும்', '(தீனி கிடைத்தவுடன் தனக்குமட்டும் என்று மறைக்காமல்) கரைந்து கத்தித் தன்னுடைய சுற்றமான மற்ற காகங்களையும் உண்ண அழைக்கும்', 'காக்கைகள் தமது இரையை மறையாது தம் இனத்தை அழைத்து அதனோடுங்கூட உண்ணும்', 'காகங்கள் தமக்கு இரையாயின கண்டவழி மறையாது தம் இனத்தை அழைத்து அதனோடுகூட உண்ணும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காக்கை இரை பெறும்போது, அதை மறைக்காமல், தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும் என்பது இப்பகுதியின் பொருள்.

ஆக்கமும் அன்னநீ ரார்க்கே உள:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது. [நுகர்வார் - துய்ப்பார்]
மணக்குடவர் குறிப்புரை: இவை மூன்றும் அன்பமைந்த மக்கட்குச் செய்யுந் திறம் கூறின.
பரிப்பெருமாள்: அதுபோலச் செல்வம் பெற்றால் அதனைத் தன் சுற்றத்தா ரெல்லாரோடும் நுகர்வார்க்கே ஆக்கம் உளதாவது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இவை மூன்று பாட்டானும் அன்பறாத மக்கட்குச் செய்யுந்திறன் கூறிற்று.
பரிதியார்: செல்வம் பெற்றால் தானே புசியாமல் இனத்தைக் கூட்டிக் கொள்வான் என்றவாறு.
காலிங்கர்: தம் இனத்தையும் விளித்துக் கொண்டே நுகரும்; அதனால் அரசர்க்குச் சுற்றம் ஆகின்ற ஆக்கமும் அத்தன்மையார்க்கே உளவாவது என்றவாறு.
பரிமேலழகர்: சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன.
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வாக்கங்களாவன: பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின, எச்ச உம்மையான் அறமும் இன்பமுமேஅன்றிப் பொருளும் எய்தும் என்பது பெறுதும். 'அப்பெற்றித்தாயஇயல்பு' என்றது தாம் நுகர்வன எல்லாம் அவரும் நுகருமாறு வைத்தல்.

'சுற்றத்தான் எய்தும் ஆக்கங்களும் அப்பெற்றித்தாய இயல்பினை உடையார்க்கே உளவாவன' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் சுற்றம் என்கின்ற ஆக்கமும் அத்தன்மையார்க்கே உள எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அப்பண்பினர்க்கே முன்னேற்றம் உண்டு', 'அப்படித்தன் சுற்றத்தாரையும் தானே அழைத்துத் தனக்குக் கிடைத்த செல்வத்தை அவர்களும் அனுபவிக்கச் செய்கிற குணமுள்ளவர்களுக்கே துணைப் பலமும் அதிகப்படும்', 'அப்படிப்பட்ட தன்மையுடையவர்களுக்கே செல்வம் மிகுதியாக உண்டாகும்', 'சுற்றத்தால் அடையும் செல்வங்களும் காகத்தின் இயல்பினையுடையார்க்கே உளவாவன' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பெருக்கமும் அந்தத் தன்மையுடையவர்க்கே உண்டாகும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காக்கை இரை பெறும்போது, அதை மறைக்காமல், தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும்; ஆக்கமும் அந்தத் தன்மையுடையவர்க்கே உண்டாகும் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்டுள்ள 'ஆக்கமும்' என்பதன் பொருள் என்ன?

உறவின் முறையாரைத் தழுவி கூடி வாழும் இன்பத்தால் ஒற்றுமையுணர்வு ஓங்கும்.

காகம் தான் பெற்ற உணவைத் தனக்கென்று மட்டும் மறைத்து வைத்துக் கொள்ளாமல் தன் இனமான பிற காக்கைகளையும் அழைத்துக் கூடியுண்ணும்; அவ்வாறு சுற்றத்தினரைப் பேணும் தன்மையினர்க்கே சுற்றம் மேன்மேலும் பெருகும்.
காக்கை ஒருசிறு பருக்கைகள் கிடைத்தாலும் மறைக்காமல் தன் இனத்தைக் கூவி அழைத்து உண்கின்றது. அது தனியாக ஒருபொழுதும் உண்பதில்லை. ஒரு காக்கை தனக்கு உணவு கிடைத்தவுடன் தம்மினத்தைக் "கா..கா..கா.." என்று கரைந்தழைக்கும் காட்சி நாம் அன்றாடம் பார்க்கக் கூடியது. அது சமயம் சுற்றத்திலுள்ள காக்கைகள் முழுவதும் பறந்துவந்து கூடிவிடுவது கண்ணுக்கும் அவற்றின் குரலெடுப்பு கேட்பதற்கும் இனிமை தருவனதாம். காக்கை தனது இரையை மறைத்து வைக்காமலும் தான் மட்டும் உண்ணாமலும், தம் இனங்கூட்டி அவ்வினத்துடன் சேர்ந்திருந்து புசிப்பது உவமையாக்கப்பட்டது. 'கரவா' (மறைக்காது) என்னும் சொல்லாட்சி இங்கு குறிக்கத்தக்கது. இக்குறள் சுற்றந்தழால் அதிகாரத்தில் வைக்கப்பட்டுள்ளதால் சுற்றத்தாருடன் கிடைத்ததைப் பகிர்ந்துகொள்வது சொல்லப்பட்டதாக உரையாசிரியர்கள் பொருள் கண்டனர்.
அன்னநீர்மை என்றது தான் நுகர்வன எல்லாம் சுற்றமும் நுகருமாறு செய்யும் காக்கையின் இயல்பைக் குறித்தது. பகர்ந்துண்ணும் இயல்பு தவிர்த்து காக்கைக் குணங்களாக அன்பு, ஒற்றுமை, கூட்டுறவு முதலியனவற்றையும் குறிப்பதாக தேவநேயப்பாவாணர் கூறுவார்.

தனக்கு வளமான வாழ்க்கை வாய்த்தபொழுது சுற்றத்தாரை மறக்காமல், அவர்களைத் தழுவி வாழவேண்டும். அவர்களுக்கு உரிய வழியில் பொருள் கொடுத்து உதவியும் இன்சொல் கூறியும் வாழ்ந்தால், சுற்றத்தார் மேன்மேலும் சூழ்ந்து தொடர்பு கொள்வார்கள். தனக்குச் செல்வம் கிடைத்த பொழுது அதைப் பிறருடன் பகிர்ந்து கொள்ளும் உள்ளமுடைய மாந்தர்க்கே சுற்றப் பெருக்கம் தொடரும் என்று கூறி காக்கைகளைப்போல் கிடைப்பதைப் பகிர்ந்து, அன்பு பெருக்கி, சுற்றம் சூழ கூடிவாழச் சொல்கிறார் வள்ளுவர்.

இங்கு சொல்லப்பட்டுள்ள 'ஆக்கமும்' என்பதன் பொருள் என்ன?

'ஆக்கமும்' என்ற சொல்லுக்கு சுற்றம் ஆகின்ற ஆக்கமும், ஆக்கங்களும் (பகையின்மையும், பெருஞ்செல்வம் உடைமையும் முதலாயின), செல்வங்கள் பலவும், செல்வ வளர்ச்சியும், முன்னேற்றம், பெருஞ்செல்வமும் துணைப் பெருக்கமும், துணைவர் பெருக்கமும், ஆள்பலமும், செல்வம் மிகுதியும், உயர்வு, சுற்றத்தால் விளையும் நன்மைகளும் என்று உரை கூறினர்.
ஆக்கம் என்பதற்குப் பலரும் செல்வம் என்றே பொருள் கொண்டனர். சிலர் அதற்குப் பெருக்கம் என்று பொருள் கொண்டு துணைப் பெருக்கமும் என்று விளக்கினர். வ சுப மாணிக்கம் இச்சொல்லுக்கு முன்னேற்றம் எனப் பொருள் கொள்வார். சுற்றம் பெருகும் எனக் கொண்டால் ஆள்பலம் பெருகும் அதாவது துணைப் பெருக்கம் உண்டாகும் என்ற பொருள் கிடைக்கும். காலிங்கர் தனது உரையில் 'சுற்றம் ஆகின்ற ஆக்கமும்' எனக் கூறினார். இதுவே இக்குறளுக்குப் பொருத்தமான பொருளாகும்.

'ஆக்கமும்' என்றது சுற்றப் பெருக்கமும் எனப் பொருள்படும்.

காக்கை இரை பெறும்போது, அதை மறைக்காமல், தன் இனத்தைக் கூவி அழைத்து உண்ணும்; பெருக்கமும் அந்தத் தன்மையுடையவர்க்கே உண்டாகும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சுற்றத்தாரைத் தன்னின் நீங்காமல் அணைத்துச் செல்ல ஓர் வழி சொல்லும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

காக்கை தனக்குக் கிடைத்த உணவை மறைக்காமல் எல்லாக் காக்கைகளையும் விளித்து உண்ணும்; அத்தகைய இயல்பினர்க்கே சுற்றம் என்னும் ஆக்கம் வந்து சேரும்.