இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0526



பெருங்கொடையான் பேணான் வெகுளி அவனின்
மருங்குடையார் மாநிலத்து இல்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:526)

பொழிப்பு: பெரிய கொடையாளியாகவும் சினமற்றவனாகவும் ஒருவன் இருந்தால் அவனைப்போல் சுற்றத்தாரை உடையவர் உலகத்தில் யாரும் இல்லை.

மணக்குடவர் உரை: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின் அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.
இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.

பரிமேலழகர் உரை: பெருங்கொடையான் வெகுளி பேணான் - ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின், அவனின் மருங்கு உடையார் மாநிலத்து இல் - அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.
(மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல் . விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: ஒருவன் மிக்க கொடையாளியாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருப்பின், அவனைப்போலக் கிளைஞர் உடையவர்கள உலகத்தில் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருங்கொடையான் வெகுளி பேணான் அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்.


பெருங்கொடையான் பேணான் வெகுளி:
பதவுரை: பெரும்-பெரியதாகிய மிக்க; கொடையான்-கொடையுடையவன்; பேணான்-விரும்பமாட்டானாக; வெகுளி-சினம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்;
பரிப்பெருமாள்: மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்;
பரிதி: கொடையினாலே பெரியவன் கோபமில்லாதவனாகில்;
காலிங்கர்: உலகத்து வேந்தனானவன் இனமும் வரிசையும் அறிந்து அணைத்தலே அன்றி, மற்றும் யாவரும் வந்து தன்னோடு மருவும் பெருங் கொடையாளனாய்ச் சினத்தைக் கொண்டிரான் எனில்;
காலிங்கர் குறிப்புரை: பேணான் வெகுளி என்பது சினத்தைக் கொண்டிரான் என்றது.
பரிமேலழகர்: ஒருவன் மிக்க கொடையை உடையனுமாய் வெகுளியை விரும்பானுமாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: மிக்க கொடை: ஒன்றானும் வறுமை எய்தாமல் கொடுத்தல். விரும்பாமை: 'இஃது அரசற்கு வேண்டுவதொன்று' என்று அளவிறந்து செய்யாமை.

'மிகக் கொடுக்க வல்லவனாய்ச் சினத்தையும் விரும்பானாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கொடுப்பான் கடுகடுக்க மாட்டான் என்றால்', 'ஒருவன் மிக்க கொடை செய்பவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால்', 'பெரிய கொடையாளியாகவும் கோபம் இல்லாமல் கொடுப்பவனாகவும்', 'மிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய் வெகுளியை (கோபத்தை)க் கொள்ளதவனாய் இருப்பின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுதியாகக் கொடுத்தலை உடையவன், சினத்தை விரும்பாதவன் என்பது இப்பகுதியின் பொருள்.

அவனின் மருங்குடையார் மாநிலத்து இல்:
பதவுரை: அவனின்-அவனை விட; மருங்குடையார்-சுற்றம் உடையார்; மா-பெரிய; நிலத்து-பூமியின்கண்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனின் துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறிய அளவின்றி யிவ்வாறு செய்யின் துணை யுடையானா மென்றது.
பரிப்பெருமாள்: அவனின் மிக்க துணையுடையார் பெரிய உலகின்கண் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: மேற்கூறியவாறன்றி இவ்வாறு செய்யின் துணை யுடையானாம் என்றது; இது செய்தல் அருமையின் வேறு வகுத்துக் கூறினார்.
பரிதி: அந்த அரசனைப் போலே சுற்றம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: அவனைப் போலச் சுற்றம் உடையார் மற்று இனி இடம்படு ஞாலத்து யாவரும் இல்லை என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: மருங்குடையார் என்பது சுற்றமுடையார் என்றது.
பரிமேலழகர்: அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை.

'அவன்போலக் கிளை உடையார் இவ்வுலகத்து இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவன்போல் சுற்றமுடையார் உலகத்திலில்லை', 'அவனைப் போல நிறைந்த சுற்றமுடையவர் இவ்வுலகில் இல்லை', 'உள்ளவனைவிடப் பக்கபலம் உள்ளவர்கள் இந்தப் பெரிய உலகத்தில் யாரும் இல்லை', 'அவன் போலச் சுற்றம் உடையார் இவ்வுலகத்தில் யாரும் இலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அள்ளி வழங்குவான் சிறுதும் சினம் கொள்ளான் என்றால் அவனைவிட சுற்றப் பக்கத்துணை உடையார் உலகத்தில் வேறு யாருமில்லை.

மிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது பாடலின் பொருள்.
சினம் பற்றி இங்கு ஏன் சொல்லப்பட்டது?

பெருங்கொடையான் என்ற சொல்லுக்கு மிகுந்த கொடையாளி என்பது பொருள்.
அவனின் என்றது அவனைவிட என்ற பொருள் தரும். அவன்போல் என்றும் கூறுவர்.
மருங்குடையார் என்ற சொல் மருங்கு+உடையார் என விரியும். மருங்கு என்ற சொல் பக்கம் என்ற பொருளது. மருங்குடையார் பக்கத்தாரரான சுற்றத்தாரையும் துணைவரையும் உணர்த்திற்று.
மாநிலத்து இல் என்ற தொடர் இந்தப் பெரிய உலகத்தில் இல்லை என்ற பொருள் தருவது.

பெருங்கொடையாளனாகவும் சீற்றத்தைச் சிறுதும் கொள்ளாதவனாகவும் இருந்தால் அவனுக்கு மருங்குடையார் மிகையாக அமைவர்.

கொடுப்பதைச் சுருக்கிக் கொள்ளுதலும் சினமும் சுற்றத்தை அகற்றிவிடும். ஆதலால், சுற்றத்தைத் தழுவுவதற்கு பெரிய வள்ளன்மையும் வெகுளி விரும்பானாகவும் இருத்தல் வேண்டும். குறள் கொடை என்று சொல்லாமல் பெருங்கொடை என்கிறது. இதற்கு வறுமை நீங்க அளித்தல் எனவும் பலபேருக்குக் கொடுத்தல் எனவும் பொருள் கூறுவர். முந்தைய பாடலில் இன்சொல்லுடன் கொடுக்க வேண்டும் எனச் சொல்லப்பட்டது. இங்கு சினம் இன்றிக் கொடை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. பொருளுக்காகவும் குண நலத்துக்காகவும் பலர் இவனை நெருங்கி வருவார்கள். இதனால் அவனது சுற்றம் பெருகும். எனவே, இவனுக்கு இருக்கும் சுற்றத்தை விட இந்த உலகத்தில் வேறு யாருக்கும் இருக்கமுடியாது என்கிறது பாடல்.

சினம் பற்றி இங்கு ஏன் சொல்லப்பட்டது?

கொடைக் குணத்தால் பலர் சுற்றமாய்ச் சூழ்ந்து கொளவர் என்பதையும் வெகுளி பேணாதவனாக இருந்தால் சேர்ந்தவர்கள் பிரிந்து போகாமல் இருப்பார்கள் என்பதையும் குறிக்கவே சினம் பற்றி இங்கு சொல்லப்பட்டது. சினத்தொடு கொடுத்தால் கொடுத்ததன் பயன் கெட்டுவிடும். மேலும் இன்சொல்லுடன், வெகுளியின்றி, கொடை பெற்றவர் எப்போதும் நன்றியுடன் இருப்பர். பரிமேலழகர் தனது விரிவுரையில் 'சினம் அரசற்கு வேண்டுவதொன்றென்று அளவிறந்து செய்யாமை' என்கிறார். இது அரசன் வெகுளியை அளவோடு செய்யலாம் அதாவது வரம்பு கடந்து சினம் கொள்ளக்கூடாது எனப் பொருள்படும். சினம் முற்றும் நீக்க வேண்டிய குற்றம் அல்ல என்பதாலேயே குறள் வெகுளி 'பேணாமை' என்கிறது என்பது பரிமேலழகர் கருத்து.

மிகுதியாகக் கொடுத்தலை உடையவனாய்ச் சினத்தை விரும்பாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இப்பெரிய உலகில் யாரும் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சீற்றம் இல்லாமல் கொடுத்தால் சுற்றம் மிகையாகச் சூழும் என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

மிக்க கொடுப்பவனாய்ச் சினம் கொள்ளாதவனாய் இருந்தால், அவனைவிட நிறைந்த சுற்றமுடையவர் இவ்வுலகில் இல்லை