இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0525கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய
சுற்றத்தால் சுற்றப் படும்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:525)

பொழிப்பு: பொருள் கொடுத்தலும் இன்சொல் கூறுதலுமாகிய இரண்டும் செய்ய வல்லவனானால், ஒருவன் தொடர்ந்த பல சுற்றத்தால் சூழப்படுவான்.

மணக்குடவர் உரை: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின் தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன்.
இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.

பரிமேலழகர் உரை: கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் - ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின், அடுக்கிய சுற்றத்தான் சுற்றப்படும். - தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.
(இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார். தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.)

வ சுப மாணிக்கம் உரை: கொடுத்தல் இன்சொல் இரண்டும் இருந்தால் சுற்றப்படை சூழ்ந்து விடும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின் அடுக்கிய சுற்றத்தால் சுற்றப்படும்.


கொடுத்தலும் இன்சொலும் ஆற்றின்:
பதவுரை: கொடுத்தலும்-தருதலும்; இன்சொலும்-இனிய மொழியும்; ஆற்றின்-வல்லனானால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்;
பரிப்பெருமாள்: வேண்டுமளவு கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்;
பரிதி: பொருள் கொடுத்தலும் இன்சொல்லும் உள்ள அரசர்க்கு;
காலிங்கர்: பொருள் வழக்கமும் இன்சொல் வழக்கமும் இவர்க்கு நடத்த வல்லவன் ஆயின்;
பரிமேலழகர்: ஒருவன் சுற்றத்திற்கு வேண்டுவன கொடுத்தலையும் இன்சொல் சொல்லுதலையும் வல்லனாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: இரண்டும் அளவறிந்து ஆற்றுதல் அரிது என்பது தோன்ற, 'ஆற்றின்' என்றார்.

'பொருள் கொடுத்தலும் இன்சொற் கூறுதலும் செய்வனாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். மணக்குடவர் 'வேண்டுமளவு' கொடுத்தலைச் சொல்கிறார்; பரிமேலழகர் 'வேண்டுவன' கொடுத்தலைக் குறிக்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சுற்றத்திற்குக் கொடுத்தலையும் இனியசொல் இயம்புதலையும் ஒருவன் செய்வானாயின்', 'வெகுமதிகளைக் கொடுப்பதும் இனிமையான வார்த்தைகளையே பேசுவதும் செய்வதால்', 'சுற்றத்தார்க்கு வேண்டுவன கொடுத்தலும், இன்சொல் சொல்லுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின்', 'வேண்டுவன கொடுத்தலையும், இன்சொல் சொல்லுதலையும் செய்தால்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

அடுக்கிய சுற்றத்தால் சுற்றப் படும்:
பதவுரை: அடுக்கிய-தொடர்ந்த; சுற்றத்தால்-கிளைஞரால்; சுற்றப்படும்-சூழ்ந்து கொள்ளப்படும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாராலே சூழப்படுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.
பரிப்பெருமாள்: தனக்கு முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தாலே சூழப்படுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழுகுந் திறம் கூறிற்று.
பரிதி: தொன்று தொட்டு வருகிற உறவின் முறை உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அவன் பெரிதும் பயின்ற சுற்றத்தினால் சூழப்படும் என்றவாறு.
பரிமேலழகர்: தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றத்தானே சூழப்படும்.
பரிமேலழகர் குறிப்புரை: தம்மில் தொடர்தலாவது - சுற்றத்தது சுற்றமும் அதனது சுற்றமுமாய் அவற்றான் பிணிப்புண்டு வருதல். இவ்வுபாயங்களை வடநூலார் தானமும் சாமமும் என்ப.

'சுற்றத்தாராலே சூழப்படுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். அடுக்கிய என்ற சொல்லுக்கு தனக்கு முன்னாகியும் பின்னாகியும், தொன்றுதொட்டு வருகின்ற உறவின் முறை, பெரிதும் பயின்ற, தம்மில் தொடரந்த பலவகை என்று இவர்கள் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பலவாறாகத் தொடர்ந்து வரும் சுற்றத்தால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான்', 'ஒருவன் அணியணியாகப் பல சுற்றத்தார்களால் சூழப்பட்டவனாக இருப்பான்', 'தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலரால் அவன் சூழப்படுவன்', 'தம்மில் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தினரால் சூழப்படும் நிலை ஏற்படும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தொடர்ச்சியாய் உள்ள சுற்றம் பலவால் சூழப்படுவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கொடுத்துதவும் தன்மை கொண்டவனாயும் இனியசொல் பேசுபவனாகவும் ஒருவன் இருக்கமுடியுமாயின், ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றக் கிளைகளால் அவன் சூழ்ந்து கொள்ளப்படுவான்.

கொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் அடுக்கிய சுற்றத்தால் சூழப்படுவான் என்பது பாடலின் பொருள்.
'அடுக்கிய சுற்றம்' என்பது என்ன?

கொடுத்தலும் என்ற சொல்லுக்கு பொருள் கொடுத்தலும் என்பது பொருள்.
இன்சொலும் என்ற சொல் இனிய சொல் கூறுவதும் என்ற பொருள் தரும்.
ஆற்றின் என்ற சொல்லுக்கு செய்வானாயின் என்று பொருள்.
சுற்றப்படும் என்றது சூழப்படும் எனப் பொருள்படும்.

பொருள் கொடுத்து உதவியும் இன்சொல் கூறியும் நடந்து கொள்ளமுடியுமானால், சுற்றத்தார் மேன்மேலும் சூழ்ந்து கொள்வார்கள்.

சுற்றத்துக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றுவதில் அக்கறை செலுத்தி, அவர் நல்வாழ்வு, வளர்ச்சிக்கு வேண்டியவற்றை அறிந்து கொடுத்து இன்சொல் பேசிப் பழகினால் சுற்றுவட்டம் விரைந்து பெரிதாகும். பொருட்கொடையும் இன்சொற்களும் எப்போதும் எல்லோரையும் வசப்படுத்தும் தன்மை கொண்டன. ஆனால் இவை இரண்டையும் சமன்படுத்தி ஒழுகுதல் கடினம். எனவேதான் இக்குறள் 'ஆற்றின்' எனற சொல்லைச் சேர்த்துச் சொல்கிறது. உரையாளர்கள் ஆற்றின் என்பதற்கு அளவறிந்து ஆற்றின் எனப் பொருள் கொள்வர். கொடையை ஏற்கும் சுற்றத்தின் அளவு, தன் பொருளளவு, பெறுவோன் தகுதி இவற்றையறிந்து அவ்வளவிற்கேற்பக் கொடுத்தல் வேண்டும் என இதை விளக்குவர்; இன்சொல்லும் கொடையும் தரமறிந்து அளவறிந்து செய்தலிலேயே அதன் அருமைப்பாடு அறியப் பெறும் என்பர். பல்வகைச் சுற்றத்தாரும் வந்து தன்னைச் சூழ்ந்திருக்க ஒருவன் விரும்புவனாயின், ஈகையும் இன்சொல்லும், அவன்பால் ஒருங்கமைய வேண்டும் என்கிறது பாடல்.

'அடுக்கிய சுற்றம்' என்பது என்ன?

'அடுக்கிய சுற்றம்' என்ற தொடர்க்கு உரையாசிரியர்கள் முன்னாகியும் பின்னாகியும் வருகின்ற சுற்றத்தார், தொன்று தொட்டு வருகிற உறவின் முறை, பெரிதும் பயின்ற சுற்றம், தம்மில் தொடர்ந்த பல வகைச் சுற்றம், அடுக்கப்பட்ட சுற்றங்கள், தன் சுற்றமும் அதனது சுற்றமும் பின்னும் அவர்கள் அனைவரின் சுற்றமும், தொடர்ந்து வரும் பல்வகைச் சுற்றம், சுற்றப்படை, பலவாறாகத் தொடர்ந்து வரும் சுற்றம், அணியணியாகவுள்ள சுற்றத்தார்கள், தொடர்ச்சியாய் உள்ள சுற்றத்தார் பலர், தம்மில் தொடர்ந்த பலவகைச் சுற்றத்தினர், சுற்றம் அடுக்கடுக்காய் வந்து, சுற்றத்தினது சுற்றம், ஒன்றோடொன்றாகத் தொடர்ந்த பலவகை உறவினம் எனப் பொருள் கூறினர்.
அடுக்கிய சுற்றமாவது சுற்றத்தின் சுற்றமும் அதனது சுற்றமுமாகத் தொடர்ந்து படர்ந்து செல்வதைக் குறிப்பது. இது ஒன்றோடு ஒன்று தொடர்ந்து வருகிற சுற்றம்- சுற்றத்தார் அவர்தம் சுற்றத்தார் என்று சுற்றத்தாரின் எண்ணிக்கை விரிவடைவது. தன் சுற்றமும் அதனது சுற்றமும் பின்னும் அவர்கள் அனைவரின் சுற்றமும், என இது கிளைத்துச் செல்லும்.

கொடுத்தலும், இனியமொழி பேசுதலும் ஒருவன் செய்ய வல்லனாயின் தொடர்ச்சியாய் உள்ள சுற்றம் பலவால் சூழப்படுவான் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கொடுத்தலும் இன்சொல்லும் உடையானுக்குப் பெருங்கிளைகள் உண்டு என்னும் சுற்றந்தழால் பாடல்.

பொழிப்பு

கொடுத்தலும் இன்சொல்லும் இருக்கப் பெற்றால் சுற்றங்கள் பல சூழ்ந்து விடும்