இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0524



சுற்றத்தாற் சுற்றப் படஒழுகல் செல்வம்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்

(அதிகாரம்:சுற்றந்தழால் குறள் எண்:524)

பொழிப்பு (மு வரதராசன்): சுற்றத்தாரால் சுற்றப்படும்படியாக அவர்களைத் தழுவி அன்பாக வாழ்தல் ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் பெற்ற பயனாகும்.

மணக்குடவர் உரை: சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது, செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன்.
இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் - செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது, சுற்றத்தால் தான் சுற்றப்பட ஒழுகல் - தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்.
(பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: சுற்றத்தார் சுற்றி இருக்குமாறு உதவுவதே செல்வம் பெற்றால் பெறவேண்டும் பயன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் சுற்றத்தால் தான் சுற்றப் படஒழுகல் .

பதவுரை: சுற்றத்தால்-சுற்றத்தினால், கிளைஞரால்; சுற்றப்பட-சூழப்படுமாறு, சூழப்படும் வகை; ஒழுகல்-நடந்து கொள்ளுதல்; செல்வம்-பொருட்செல்வம், பொருள் மிகுதி; தான்-தான்; பெற்றத்தால்-பெற்ற அதனால்; பெற்ற-அடைந்த; பயன்-விளைவு.


சுற்றத்தாற் சுற்றப் படஒழுகல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது;
பரிப்பெருமாள்: சுற்றத்தாராலே சூழப்பட ஒழுகுவது;
பரிதி: தொன்று தொட்டு வருகிற சுற்றம், தன்னைச் சுற்றியிருக்க வாழ்வதன்றோ;
காலிங்கர்: அங்ஙனம் சுற்றத்தால் சூழப்படுமாறு செய்து ஒழுகலே;
பரிமேலழகர்: தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல். [தழீஇ ஒழுகல் - நெஞ்சங்கலந்து தழுவி நடத்தல்]

'சுற்றத்தாராலே சூழப்படும் வகை ஒழுகுவது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன் சுற்றத்தார் சூழ்ந்து சுற்றிக் கொள்ளும் வகையில் அவர்களைத் தழுவி அன்புடன் நடந்து கொள்ளுதலாம்', 'சுற்றத்தார்கள் தன்னைச் சூழ்ந்திருக்கும்படி நடந்து கொள்வதே', 'சுற்றத்தாரால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி நடந்து கொள்ளுதல்', 'தன்னுடைய சுற்றத்தால் தான் சூழப்படும் வகையில் அச்சுற்றத்தைத் தழுவி ஒழுகுதலேயாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

சுற்றத்தார் சூழப்படுமாறு செய்து ஒழுகுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

செல்வம்தான் பெற்றத்தால் பெற்ற பயன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன்.
மணக்குடவர் குறிப்புரை: இது சுற்றஞ் சூழ்ந்து வருவதாக ஒழுக வேண்டுமென்றது
பரிப்பெருமாள்: செல்வத்தைப் பெற்றவதனால் உண்டான பயன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சுற்றம் தழுவ ஒழுக வேண்டுமென்றது
பரிதி: செல்வம் பெற்ற பயன் என்றவாறு.
காலிங்கர்: அரசனானவன் தான் பெருஞ்செல்வம் பெற்றதனால் பின்பு பெற்ற பயன் யாதோ எனின், அதனை வழங்குமாறு வழங்கி.
காலிங்கர் குறிப்புரை: (இதுவே) அரசர்க்கு இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: செல்வம் பெற்ற அதனால் ஒருவன் பெற்ற பயனாவது.
பரிமேலழகர் குறிப்புரை: பெற்ற என்பதனுள் அகரமும் அதனான் என்பதனுள் அன்சாரியையும்தொடைநோக்கி விகாரத்தால் தொக்கன. இவ் வொழுக்குப்பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார். இவை மூன்று பாட்டானும் சுற்றந் தழால்செல்வத்திற்கு ஏதுவும் அரணும் பயனும் ஆம் என்பதுகூறப்பட்டது. [பெற்ற அதனால் என்பது தொடை நோக்கிப் பெற்றத்தால் எனச் செய்யுள் விகாரமாயிற்று என்பதனைப் பிரித்துப் புணர்த்தி விளக்கியவாறு; அரசாடற்கு ஏதுவாகலின் - அரசு ஆள்வதற்குக் காரணமாகையால்]

'செல்வத்தைப் பெற்ற அதனால் உண்டான பயன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவன் செல்வம் பெற்றதனால் பெற்ற பயன்', 'ஒருவன் செல்வத்தைப் பெற்றதனால் அடையக் கூடிய பயன்', 'செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயனாவது', 'செல்வத்தை அடைந்ததனால் அடைந்த பயன் என்னவெனில்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தான் செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:

செல்வம் பெற்றத்தால் ஒருவன் பெறும் பயன் தான் சுற்றத்தார் சூழப்படுமாறு செய்து ஒழுகுதல் என்பது பாடலின் பொருள்.
'பெற்றத்தால்' என்பதன் பொருள் என்ன?

ஈட்டிய பெரும்செல்வத்தைத் தனியே ஏன் துய்க்கவேண்டும்?

ஒருவன் செல்வத்தைப் பெற்றதால் பெற்றதொரு பயன் யாதென்றால் அது தன் சுற்றத்தினரோடு அளாவளாவி வாழ்தலாகும்.
செல்வத்திற்குப் பல பயன் உண்டு. செல்வத்துத் தலைப்பயன் ஈதல். பிறபயன்களில் ஒன்று சுற்றத்தால் சுற்றப்பட ஒழுகல் அதாவது நிரம்ப உற்றார் உறவினர்கள் தன்னைச் சுற்றி எப்பொழுதும் உள்ளவனாக இருத்தல் என்பது. சுற்றத்தாரின் தேவை அறிந்து உதவி செய்ய, பெற்ற செல்வத்தைப் பயன்படுத்தலாம். அவ்வகையில் செல்வம் சுற்றத்தைப் பெருக்கிக் கொள்ளவும் உதவும். காலிங்கர் 'அதனை வழங்குமாறு வழங்கி சுற்றத்தால் சூழப்படுமாறு செய்து ஒழுகல்' என்கிறார். வழங்குமாறு வழங்குதல் என்பது தேவைப்படும் உதவிகளைச் செய்து சுற்றத்தார் துன்பம் துடைத்து அவர்கள் இன்பங்கள் துய்ப்பதற்கும் செல்வத்தைப் பயன்படுத்தலாம் என்பதைக் குறிக்கும். சுற்றம் தழுவிய வாழ்க்கை செல்வம் ஈட்டவும் உதவும்; சேர்த்த செல்வத்தைப் பாதுகாக்கவும் துணை செய்கிறது; அது துய்ப்பிலும் கூடி நிற்பதுமாம்.
செல்வத்துப் பயன் சுற்றம் முதலிய யாவர்க்கும் கொடுத்துத் தானும் உண்டலாம்.
சுற்றம் தாங்குவதற்கு செல்வம் பயன்பட வேண்டும். செல்வர்க்கு அழகு செழுங்கிளை தாங்குதல் (நறுந்தொகை 3: பொருள்: பொருளுடையவர்க்கு அழகாவது நல்ல சுற்றத்தைப் பாதுகாத்தல்) என்கிறது பிற்கால அறநூல் பாடல் ஒன்று.
'செல்வம் பெற்றத்தால் பெற்ற பயன் தன் சுற்றத்தால் தான் சூழப்படும் வகை அதனைத் தழீஇ ஒழுகுதல்' என்று சொல்லி 'இவ்வொழுக்கு பகையின்றி அரசாள்தற்கு ஏதுவாகலின், இதனைச் செல்வத்திற்குப்பயன் என்றார்' என விரிவுரை தந்தார் பரிமேலழகர். இவ்வுரையை விளக்க வந்த தண்டபாணி தேசிகர் 'செல்வமே அங்ஙனம் அரசாளுதலால் மேலும் செல்வத்தைப் பெருக்கவும், காக்கவும், வழிசெய்தலின் அச்செல்வத்திற்கே பயனாயிற்று என்ற நுண்ணிய சிந்தனையைத் தருதலும் கண்டு இன்புறத்தக்கது' என்று பாராட்டுவார்.
தேவநேயப்பாவாணர் ''சுற்றம் அருப்பறா ஆக்கம் பலவுந்தரும்' என்று முந்தைய குறள் ஒன்றில் கூறிய வள்ளுவர், இக்குறட்பாவால் செல்வத்தாற் பெறும் பயன் சுற்றம் என்கிறார். இது மறுதலை நயம்படக் கூறியது' என்பார். மேலும் 'அரசன் சுற்றந்தழுவுவதாற் சுற்றத்திற் குண்டாகும் நன்மையினும் அரசனுக்குண்டாகும் நன்மை பெரிதென்பதாம்' எனவும் கூறினார்.
செல்வத்தின் பயன் ஈதலும் துய்த்தலும்தாம். ஈதல் கடமை; துய்த்தல் உரிமை. இப்பாடலில் செல்வத்தின் பயன் சுற்றத்தாற் சுற்றப்பட ஒழுகல் என்று கூறப்பட்டுள்ளது. பொருள் மிகுதி பெற்றவர்கள், சுற்றத்தால் சுற்றப்பட்டு வாழும் வாழ்வை அவாவ வேண்டும் என்பது பெறப்படும்.

'பெற்றத்தால்' என்பதன் பொருள் என்ன?

இக்குறளில் உள்ள பெற்றத்தால் என்ற சொல்லுக்கு விளக்கமாக 'பெற்றதால் என்பது அடி எதுகைக்காக அதாவது சுற்றத்தால் என்ற முதல் அடி முதல் சீருடன் ஒத்துவருவதற்காக இடையிலுள்ள தகரம் இரட்டித்து வந்துள்ளது' என்பார் செ வை சண்முகம். பெற்றது - பெற்றதால் - பெற்றத்தால் . பெற்றதால் என்பது எதுகைநோக்கி விரிந்தது.
கற்றதனால் ஆய பயன்... (குறள் 0002) என்பதில் உள்ள கற்றதனால் என்றது கற்ற அதனால் என விரிந்ததுபோல பெற்ற அதனால் என்பது பெற்றத்தால் என வந்தது. பெற்ற என்ற சொல்லையும் அதனால் என்ற சொல்லையும் பெற்றத்தாற் என்ற சொல் உள்ளடக்கி நிற்கின்றது. 'பெற்ற அதனால்-பெற்றதனால்-பெற்றத்தாற் என்று 'த்' சாரியை ஏற்றிச் செய்யுள் திரிபாக்குகின்றார் வள்ளுவர்' என விளக்குவர்.

'பெற்றத்தால்' என்பது பெற்ற அதனால் எனப் பொருள்படும்.

செல்வம் பெற்றதனால் ஒருவன் பெறும் பயன் தான் சுற்றத்தார் சூழப்படுமாறு செய்து ஒழுகுதல் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

சுற்றந்தழாலை செல்வத்தின் பயனாக ஆக்கிக் கொள்க.

பொழிப்பு

சுற்றத்தார் சூழப்படுமாறு ஒழுகுதல் செல்வம் பெற்றதனால் அடையும் பயன்.