இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0520



நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான்
கோடாமை கோடாது உலகு.

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:520)

பொழிப்பு (மு வரதராசன்): தொழில் செய்கின்றவன் கோணாதிருக்கும் வரையில் உலகம் கெடாது; ஆகையால் மன்னன் நாள்தோறும் அவனுடைய நிலைமையை ஆராய வேண்டும்.

மணக்குடவர் உரை: வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும், ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும். [செவ்வையிலே - செம்மையாக]
இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: வினை செய்வான் கோடாமை உலகு கோடாது - வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது, மன்னன் நாள்தோறும் நாடுக - ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க.
(அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: அரசியல் வினையைச் செய்கின்றவன் நெறிதவறிச் செல்லாமலிருத்தலினால் உலகம் கெடாது; ஆதலின் அரசன் (தலைவன்) வினைசெய்வார் இயல்பை நாள்தோறும் ஆராய்தல் வேண்டும். (தவறிச் சென்றால் தடுத்து நிறுத்தல் தவிர்க்கலாகாக் கடமையாகும்)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நாடோறும் நாடுக மன்னன் வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு.

பதவுரை: நாடோறும்-நாளும்; நாடுக-ஆராய்க; மன்னன்-வேந்தன், ஆட்சியாளர்; வினைசெய்வான்-செயலாற்றுபவன் என்ற பொருளது. இங்கு அரசு அலுவலர் குறித்தது; கோடாமை-கோணாதிருத்தல்; கோடாது-நெறிதவறாது; உலகு-உலகம்.


நாடோறும் நாடுக மன்னன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும்;
மணக்குடவர் குறிப்புரை: இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: ஆதலான் அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய்க;
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினைசெய்வார் செயலை நாடோறும் ஆராய வேண்டுமென்றது.
பரிதி: இராசகாரியம் பார்க்க வைத்த பேர் நாள்தோறும் செங்கோல் கோடாமை விசாரித்தனாகில்;
காலிங்கர்: யாவரையும் கருமத்தின்கண் தெளிதல் அருமைத்தாகலான், தான் தெளிந்தவர்மாட்டும் அவர் தனது வினை செய்யுமிடத்தும் அதனை இகழாது பெரிதும் ஆராய்ந்து போதுக அரசனானவன்;
பரிமேலழகர்: ஆதலால் அரசன் அவன் செயலை நாள்தோறும் ஆராய்க; [அவன் செயலை - வினை செய்வான் செயலை. அதனை நாடும்போது அவன் அறியாமல் ஆய்தல் வேண்டும்]
பரிமேலழகர் குறிப்புரை: அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். இதனான் ஆண்டவழிச் செய்வது கூறப்பட்டது. [ஆண்ட வழிச் செய்வது - ஒருவனை ஒரு செயற்குரியவனாக வைத்து ஆண்டவழி]
பரிமேலழகர் குறிப்புரை: அஃது ஒன்றனையும் ஆராயவே அதன் வழித்தாய உலகம் எல்லாம் ஆராய்ந்தானாம், அதனால் அவன் உரிமை அழியாமல் தன்னுள்ளே ஆராய்ந்து போதுக என்பதாம். [அஃது ஒன்றனை - வினை செய்வான் செயல் ஒன்றனை; போதுக - செல்லுக]

'அவன் செயலை மன்னவன் நாடோறும் ஆராய வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அரசன் நாள்தோறும் அலுவலரை ஆராய்க', 'ஆதலால், அரசன் வேலை பார்க்கும் அலுவலரை ஒவ்வொரு நாளும் கண்காணிப்பானாக', 'இதை ஓர் அரசன் தினந்தோறும் கவனிக்க வேண்டும்', 'ஆதலால், அரசன் அவன் செயலை நாடோறும் ஆராயக் கடவன்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தலைவன் நாள்தோறும் சீராய்வு செய்க என்பது இப்பகுதியின் பொருள்.

வினைசெய்வான் கோடாமை கோடாது உலகு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும்.
பரிப்பெருமாள்: வினை செய்வான் கோடாதொழிய உலகம் கோடாது செவ்வையிலே நிற்கும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: முறை செய்வான் என்றதனால் அற ஆராய்ச்சி செய்வாரை நோக்கிற்றே ஆயினும் ஏனை அமாத்தியர் (வினை) செய்தல் தொழிலுடையராதலால் (இது அவ்வாமாத்தியார் செயலை நோக்கிற்று. [அமாத்தியர் - அமைச்சர்] ) பரிதி: செங்கோல் கொடுங்கோலாகாமல் நடக்கும்.
காலிங்கர்: அது என்னையோ எனின், இங்ஙனம் ஆராயவே மற்று அவ்வினை செய்வோன் தனது இயல்பினாலும் அச்சத்தானும் நெறிகோடான். ஆகலான் கோடாமையாலே அவ்வினைவழியடிப்பட்டு வருகின்ற உலகம் கோடாது; எனவே உலகத்து மக்கள் அனைவரும் அரசன் சூழ்ச்சி அறிந்து அருநெறிக்கண் நிற்பார் என்றவாறு. [அருநெறி - அரிய அரசியல் நெறி]
பரிமேலழகர்: வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது. [கோடாது ஒழிய - மனமொழி மெய்களால் மாறுபடாமல் இருக்க; உலகம் கோடாது - உலகியல்பு மாறுபடாது. அதாவது மன்னவன் ஆணைவழி அறநெறிக்கண் நிற்றல் என்பதாம்]

'வினை செய்வான் கோடாது ஒழிய உலகம் கோடாது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவர் பிசகாவிடின் நாடு பிசகாது', 'வேலை செய்பவன் கோணாமல் ஒழுங்காகப் பார்ப்பானாயின் உலகம் செம்மையின் நீங்கிக் கெடாது', 'நாட்டின் காரியங்களைச் செய்கிற ஊழியர்கள் அதிருப்தியடையாமல் இருந்தால், நாட்டின் நலம் கெடாது', 'அரச வேலையில் அமர்ந்தவன் கோணாது கடமை செய்வானாயின், குடிகளும் கோணாது வாழும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செயல் புரிபவன் கோணாது கடமை ஆற்றினால் நாடும் செம்மையின் நீங்காது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
அரசு செயல் புரிபவன் கோணாது கடமை ஆற்றினால் நாடும் செம்மையின் நீங்காது; அதைத் தலைவன் நாடோறும் நாடுக என்பது பாடலின் பொருள்.
'நாடுக' குறிப்பது என்ன?

அரசுப்பணியாளர்கள் நாளும் கண்காணிக்கப்பட வேண்டியவர்கள்.

அரசுக்காகப் பணியாற்றுபவன் தன் கடமையை நேர்மையாகச் செய்வானானால் உலகமும் கோணாது; ஆதலால் ஆட்சித்தலைவன் நாள்தோறும் அதுபற்றி ஆய்தல் வேண்டும்.
வினைசெய்வான் கோணாது கடமை செய்வானாயின், நாடும் கோணாது இயங்கும். 'வினைசெய்வான்' யார்? 'வினைசெய்வான்' என்ற தொடர்க்கு வினை செய்வான், அமாத்தியர், இராசகாரியம் பார்க்க வைத்த பேர், உத்தியோகம் பண்ணுகிறவன், உத்தியோகத்தைச் செய்கிற மந்திரிகள், தொழில் செய்கின்றவன், அரசு அதிகாரிகள் போலும் வினைமேற் கொண்டு செயலாற்றுபவர்கள், நாடாள்வோரின் செயல்களை ஏற்றுச் செய்வான், அலுவலர், வேலை செய்பவன், (நாட்டின்) காரியங்களைச் செய்கிறவர்கள், செயலாற்ற வல்லவன், அரச வேலையில் அமர்ந்தவன், அரசியல் வினையைச் செய்கின்றவன், தொழில் செய்கின்றவன், பணியாளர், அரசியல் வினைசெய்வான், வினையைச் செய்துகொண்டிருக்கிறவன் என்றவாறு பொருள்கூறினர். இத்தொடர் பொதுப்பட எத்தொழில் செய்வோரையும் குறிப்பது என்று ஒருசாராரும் அது அரசுவேலை செய்கிறவரையே சுட்டியது என இன்னொரு சாராரும் உரைத்தனர். பொறுப்பு வாய்ந்த அரச வேலையில் அமர்ந்தவன் என்பதே வினைசெய்வான் என்றதற்குப் பொருத்தமானது.
ஆட்சித்தலைவன் அரசுத் தொழில் செய்பவனை நாடோறும் ஆராய்வானானால் உலகமும் நெறி தவறாது என்பதாம். பணியாளர்களை அடிக்கடி மேற்பார்த்து வரவேண்டும் எனச் சொல்லப்பட்டது. செயல் செய்பவன் நேர்மையாக இருந்தால் நாடும் கோணாது நேர்வழியில் செல்லும்; செயலாற்றுபவன் செம்மையிலேயே நாட்டின் வளம் அடங்கியிருத்தலால், அவன் செயற்பாடுகளை நாள்தோறும் தலைவன் சீராய்வு செய்யவேண்டும்.

இக்குறள் அரசு எந்திரம் அதாவது அரசுப்பணிக்குழு சீராக இயங்க வேண்டும் என்பதை விளக்கவந்தது. அரசு எந்திரத்தை இயக்குபவர்கள் அரசுத்துறைகளில் முதன்மைப் பொறுப்பில் உள்ளோரும் அவர் கீழ் பணிபுரியும் அலுவலருமாவர். இவர்கள் கடமையிலிருந்து வழுவினால் நாட்டின் வளர்ச்சி திசை திரும்பி கெடும். அலுவலர் தவறு செய்யாத அரசே நல்லரசாக விளங்கும்,
பொதுக்கடமையைச் செய்கின்றவர்களது செயற்பாடுகளை முதற்கண்ணேயே விழிப்பாக இருந்து கண்காணித்து சீர்செய்தால், பேரழிவு உண்டாகாமல் தடுக்க முடியும். வினை செய்வான் நிலை ஒழுங்காகச் செல்லும்படி மேற்பார்வை செய்யவேண்டியது தலைவனின் கடமையாகும்.
எவ்வளவு இடைவெளியில் ஆய்வு செய்யவேண்டும்? வள்ளுவர் 'நாள்தோறும்' செய்ய வேண்டும் என்கிறார். இத்துணை நெருக்கமான கால இடைவெளி, ஆய்வு செய்வதன் பயன் நோக்கை நன்கு விளக்கும்.

சில உரையாளர்கள் கோடாமை என்றதற்கு மனம்கோணாமை எனப்பொருள் கொண்டு 'அரசுப்பணியாளர்கள் உள்ளம் வாடாமல் இருக்கின்றனரா என ஆராய வேண்டும்; அதற்காக தலைவன் நாள்தோறும் ஊழியர்களின் நிலையை அறிதல் வேண்டும்' எனப் பொருளுரைத்தனர். அரசுப் பணியாளர்களின் மனநிறைவையும் குறைவையும் ஆராய்வது அல்ல இக்குறள்; அவர்கள் நடுநிலையோடு தம் பணியைச் செய்கிறார்களா என்பது ஆராயப்படவேண்டும் என்பதைக் கருதுவது இது.

'நாடுக' குறிப்பது என்ன?

நாடுக என்ற சொல் ஆராய்க என்ற பொருள் தருவது. எதை ஆராயச் சொல்கிறது இக்குறட்பா?
நாட்டில் நடப்பன எல்லாவற்றையும் நேரடியாக அறிந்து மேலாண்மை செய்வது என்பது ஆட்சித்தலைவனால் இயலாது. எனவே அவன் அமைச்சர்-வினை செய்வார்கள் துணையுடன் ஆட்சி நடத்துவான். இவர்களை நாடோறும் மறைவில் ஆராய்ந்து வரவேண்டும் என்கிறது பாடல்.

வினை ஆள்வதில் ஒரு பகுதியாக, வினைசெய்வார் இயல்பையும் அவர் நாள்தோறும் செய்யும் செயல்களையும் ஆராய வேண்டும் என்கிறது பாடல். இங்ஙனம் ஆராய்வது அவ்வினை செய்வோன் தனது இயல்பினாலும் அச்சத்தானும் முறைபிறழாமல் செம்மையான அரசியல் நெறிக்கண் நிற்பான் என்ற நோக்கம் கொண்டது. வினை செய்வான் அறியாதவாறு ஆராய வேண்டும் அதாவது தலையிடுவதாகாமல் விலகி நின்று கண்காணிக்க வேண்டும் என்ற குறிப்பும் உள்ளது.
அரசு அலுவல்கள் சுறுசுறுப்பாக திறம்பட இயங்குகிறதா அல்லது வேலைகள் சுணங்கிக் கொண்டிருக்கின்றனவா என்பவை பற்றித் தலைவன் நாள்தோறும் சீராய்வு செய்ய வேண்டும் மக்களின் தேவைகளுக்கான வேண்டுகோள்கள் தூங்காதபடியும் திட்டங்கள் காலங்கடவாதவாறும் உடனுக்குடன் செயல்படுத்தப்படுகின்றனவா என்றும் ஆட்சியாளர் தமது செயலாளர்களை நாள்தோறும் கலந்து அறிந்து கொள்ளவேண்டும். விரைவாக இயங்கும் அரசாட்சியில் வளர்ச்சி வேகமாக இருக்கும்; கையூட்டளித்தல் போன்ற சிறுமைகள் நீங்கும். இவை வளமான அரசுக்கு வழி வகுக்கும். அரசாட்சியில் எல்லாஇடங்களிலும் கையூட்டு மேலோங்கி நின்றால், இதுதான் ஆட்சியின் இயல்பு என்று அந்த முறைமையில் மக்கள் ஒன்றி வாழத் தொடங்கிவிடுவர். அப்பொழுது அழுக்கு தேங்கி நின்று நீரோட்டத்தை நிறுத்துவதுபோல் ஆட்சியில் வளர்ச்சி தடைபட்டு பண்பு கெட்ட அரசாக மாறிவிடும். காலத்தாழ்ச்சியின்றிச் செயல் நிறைவேறுமென்றால் கையூட்டுக் கொடுக்க யாரும் விரும்பார் என்பதும் கருத்து.
இவ்விதம் வினை செய்வானை விலகி நின்று கண்டுவருதல் என்பது அவனை ஐயுறுதல் ஆகாது; அவன் மேற்கொண்ட செயலின் வளர்ச்சியையும், பயனையும் அவன் முயற்சியையும் நாடோறும் கண்டு வருதல் அவன் மேலும் நன்றாக முயல்வதற்கு ஊக்கமூட்டுவதாகவும் அமையும்.

'நாடுக' என்பது அரசியல் வினைசெய்வான் தன் கடமையை நேர்வழியில் செய்கின்றானா என்பதை ஆராய்க என்பதைச் சொல்வது.

அரசுச்செயல் புரிபவன் கோணாது கடமை ஆற்றினால் நாடும் செம்மையின் நீங்காது; அதைத் தலைவன் அதனை நாள்தோறும் சீராய்வு செய்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கோணாது செயலாற்றுகின்றானா என்பதைத் தெரிந்து வினையாடல் வேண்டும் ஆட்சித்தலைவன்.

பொழிப்பு

தலைவன் நாள்தோறும் அரசு அலுவல்களை மேலாய்வு செய்க; அலுவலர் பிசகாமல் கடமை ஆற்றினால் நாடு செம்மை நீங்காது.