இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0519



வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக
நினைப்பானை நீங்கும் திரு

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:519)

பொழிப்பு (மு வரதராசன்): மேற்கொண்ட தொழிலில் எப்போதும் முயற்சி உடையவனின் உறவைத் தவறாக நினைக்கும் தலைவனை விட்டுச் செல்வம் நீங்கும்.

மணக்குடவர் உரை: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.

பரிமேலழகர் உரை: வினைக்கண் வினை உடையான் கேண்மை - எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை, வேறாக நினைப்பானைத் திரு நீங்கும் - அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும்.
(கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம் . ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: காரியத்தில் கருத்தாக இருப்பவன் பண்பைத் தவறாக நினைத்தால் செல்வம் தவறும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக நினைப்பானை திரு நீங்கும்.

பதவுரை: வினைக்கண்-தொழிலில்; வினைஉடையான்--தொழில் பொறுப்பாக்கப் பெற்றவன், செயல் உடைமையாகக் கொண்டவன்; கேண்மை-தொடர்பு, நட்பு, உறவு, சுற்றமாய் நடந்து கொள்ளுந்தன்மை; வேறுஆக-வேறுவிதமாக; நினைப்பானை-எண்ணுபவனை; நீங்கும்-அகலும்; திரு-செல்வம்.


வினைக்கண் வினையுடையான் கேண்மை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை;
பரிப்பெருமாள்: வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை;
பரிதி: ஒருவன் ஒரு காரியத்துக்கு வல்லவனாகி, அவனை அவநம்பிக்கை பண்ணுவனாகில்;
காலிங்கர்: தனது காரியத்தின்கண் சூழ்ச்சி பெரிதும் உடையோன் யாவன், அவனது நட்பினை;
பரிமேலழகர்: எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயறலை உடையான் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை; [முயறல் - முயல்+தல் = முயலுதல்]

'வினையிடத்து வினை செய்ய வல்லவனது நட்பை' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிதி வினைசெய்வான் வல்லவனாகி தலைவனுக்கு அவநம்பிக்கை உண்டாக்கினால் என உரைத்தார். காலிங்கர் செயலை விடுத்து வினைசெய்வான் நட்பு பற்றிப் பேசுகிறார். பரிமேலழகர் உரையும் காலிங்கர் உரையைத் தழுவிப் பொருள்கூறி வினையின் காரணமாக தலைவனுடன் உறவினனாக ஒழுகுகின்ற தன்மையை என்று விரிப்பார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எப்பொழுதும் தன் தொழிலிலே ஈடுபட்டுப் பணி செய்பவனது தொடர்பை', 'வேலை நடந்து கொண்டிருக்கும்போது அந்த வேலைக்குப் பொறுப்பாளியாக அதைச் செய்து கொண்டிருக்கிறவனுடைய உறவு', 'எடுத்த முயற்சியில் சலியாது திறம்பெற வேலை செய்யும் இயல்புடையானது நட்பினை', 'எப்பொழுதும் தன் வினையில் ஈடுபட்டு அதனைச் செய்து முடிப்பதனையே தொழிலாக உடையவனின் உறவுமுறைகளை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

செயலுடன் செயலுக்குரியானது உறவுமுறையை என்பது இப்பகுதியின் பொருள்.

வேறுஆக நினைப்பானை நீங்கும் திரு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்.
பரிப்பெருமாள்: வேறாக நினைக்கும் அரசனைத் திருமகள் நீங்குவள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினை செய்ய வல்லாரை அருள் பண்ண வேண்டும் என்பதூஉம், அவருடன் மாறுபட ஒழுகின் பொருட்கேடுவரும் என்பதூஉம் கூறிற்று.
பரிதி: அரசனாகிலும் திருமகளும் விட்டுப் போம் என்றவாறு.
காலிங்கர்: யாதானும் ஒருவாற்றான் வேறுபடக் கருதும் வேந்தனை நீங்கிப்போம் செல்வம்; ஆகலான் அது நோக்கி அவனொடு பெரிதும் நட்புடையான் ஆதல் அரசற்கு இயல்பு என்றவாறு.
பரிமேலழகர்: அது பொறாதார் சொற்கேட்டு அரசன் மாறுபடக் கருதுமாயின், திருமகள் அவனை விட்டு நீங்கும். [சொல் - பொய், குறளை, இடுவந்தி முதலிய சொற்கள்]
பரிமேலழகர் குறிப்புரை: கேளாய் ஒழுகுகின்ற தன்மையாவது: தான் பிறனாய் நில்லாது கேளிர்செய்தொழுகும் அவனை அவமதிப்பாகக் கொண்டு செறக்கருதுமாயின், பின் ஒருவரும்உட்பட்டு முயல்வார் இல்லையாம். ஆகவே, தன் செல்வம்கெடும் என்பது கருத்து. இந்நான்கு பாட்டானும் ஆடற்குரியானைஆளும் திறம் கூறப்பட்டது.

'வேறுபாடாக நினைக்குமவனைத் திருமகள் நீங்குவள்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். வினைசெய்வானொடு நட்பு பாராட்டுதல் இயல்பு என்று காலிங்கரும் பொறாமைப்பட்டோர் சொற்கேட்டு வினைசெய்வானை மாறுபட அரசன் கருதுவானாயின் என்று பரிமேலழகரும் மேலும் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிறர் குறைகூறக் கேட்டு மாறுபடக் கருதுபவனைத் திருமகள் நீங்குவாள்', 'கெட்டுப் போகும்படி குறுக்கிடுகிற எசமானுடைய சிறப்புகள் நீங்கிவிடும்', 'பாராட்டாது மாறுபடக் கருதுகின்றவனைத் திருமகள் விட்டு நீங்குவள்', 'வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டு எல்லாச் செல்வங்களும் நீங்கும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செயலுடன் செயலுக்குரியானது தொடர்பை வேறாக கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது பாடலின் பொருள்.
'வேறாக நினைப்பது' என்பது என்ன?

வேலையில் உண்மையாய் இருப்பவனது உறவைப் பாராட்டத் தெரியவேண்டும்.

செய்ய மேற்கொண்ட வேலையின்மீது கருத்தாக இருப்பவனது உறவைத் தவறாக நினைக்கும் தலைவனிடமிருந்து செல்வம் நீங்கிவிடும்.
இப்பாடல் பொறுப்பேற்றவன் வினையுடன் கொண்ட உறவைத் தலைவன் வேறுபட நினைப்பது பற்றிச் சொல்கிறது. தலைவன் செயல் செய்யத்தக்கவனை ஆராய்ந்து தெளிந்து அவனிடம் செயல் செய்வதற்கான முழு அதிகாரத்தையும் வழங்கி அவனை செயற்குரியனாகச் செய்கிறான். அவ்விதம் அதிகாரம் பெற்றவன் செயலில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை நிறைவேற்றத் தொடங்குகிறான். எப்பொழுதும் வேலை வேலை என்று பணிவிலங்காக மாறிவிடுகிறான். அது சமயம், ஏதோ ஒரு காரணத்தால், தலைவனுக்கு செயலேற்றவன் தொழிலுடன் கொண்ட ஈடுபாடு பற்றி ஐயம் கொள்கிறான் அதாவது வினையுடன் வினைசெய்வானுக்குள்ள நட்பை வேறாக நினைக்கிறன். இப்படிப்பட்ட தலைவனிடமிருந்து திரு நீங்கும் என்கிறது பாடல்.
திரு நீங்கும் என்பதற்கு செல்வம் நீங்கும், சிறப்பு அல்லது பெருமை நீங்கும், செல்வாக்கு நீங்கிவிடும், தலைமை அகலும் எனப் பொருள் கூறுவர். இவையனைத்தும் பொருந்தவருகிறது என்றாலும் செல்வம் நீங்கும் என்பது ஏற்றதாகும்.
செல்வம் நீங்குவது எவ்விதம்? தலைவனுக்குத் தன்மேல் ஐயம் விழுந்துவிட்டது என்று அறிந்தால் செய்யப்படும் வினை கலங்கிப்போகும்; செய்வானது ஊக்கம் குன்றும்; செயல் முற்றுறாது; எனவே இழப்பு ஏற்பட்டு செல்வம் நீங்கும் என்பது ஒரு கருத்து. சிலர் தொழில் முயற்சியுடையவனைப் பிறர் பேச்சைக் கேட்டு வேறாக எண்ணினால் பின் யாரும் முயலமாட்டார்; அதனால் அரசனது செல்வம் குறையும் என்று விளக்கினர். இன்னும் சிலர் அவ்வினையைச் செய்ய திறமையுள்ளவர்கள் வேறு கிடைப்பது கடினமாதலால் செல்வமானது நீங்கிவிடும் என்றனர்.
ஒருவனை வினைக்குரியனாக்கியபின் அவன் மீது ஆதாரமின்றி ஐயம் கொள்ளக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது. இதுபோன்ற சமயங்களில் அவனுடனான உறவை வேறாக்கிக் கொள்ளாமல் மறைமுகமாக அவன் ஏதாவது தவறு அல்லது குற்றம் செய்கிறானா எனத் தலைவன் ஐயம் தீரும்வரை கண்காணிக்கலாம்.

'வேறாக நினைப்பது' என்பது என்ன?

வினைக்கண் வினையுடையான் கேண்மை வேறுஆக நினைப்பது பற்றி இக்குறள் சொல்வதாக அமைகிறது பாடல்.
ஆனால் பெரும்பான்மை உரையாசிரியர்கள் வினையுடையான் என்பதற்கு எப்பொழுதும் தன் வினையின்கண்ணே முயலுதலை உடையவன் அவ்வுரிமையால் தனக்குக் கேளாய் ஒழுகுகின்ற தன்மையை வேறாக நினைக்கும் தலைவன் எனக் கூறினர். எப்பொழுதும் தன் வினையில் ஈடுபட்டு அதனைச் செய்து முடிப்பதனையே தொழிலாக உடையவன் தன்னிடம் கேள்போல் உரிமையுடன் நெருங்கிப் பழகும் உறவைத் தப்பாக எண்ணும் தலைவன், வினைசெய்வான்மேல் பொறாமைகொண்டு அவனைப்பற்றி மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அவனுடைய உரிமையான உறவை மாறுபடக் கருதும் தலைவன் என்னும் பொருள்பட இவர்கள் உரைப்பர்.
வினையுடன் வினையாள்பவனுக்குள்ள கேண்மையே இங்கு சொல்லப்படுகிறது. எப்பொழுது வினைக்குரியனாகச் செய்யப்பட்டான் கருமமே கண்ணாகச் செயல்படுவதைத் தலைவன் வேறாக நினைப்பான்? பொறுப்பை ஏற்றவுடன் வினைசெய்வானுக்குத் தொழிலுடன் ஓர் உறவு உண்டாகிவிடுகிறது. தாங்கள் செய்யும் வேலையிலேயே குறியாய் இருப்பவர்கள் தங்களால் முடிந்த அளவைவிட மிகையாகப் பணிகளை மேற்கொண்டு மிகையான நேரம் தொழிலுக்காக செலவழிப்பர்; தான் மேற்கொண்ட செயலுக்காக உரிமையோடு பல செயல்களைச் செய்வர், இப்படிப்பட்ட பொறுப்பாளர்களிடம் சில சமயம் தலைவனுக்கு ஐயம் ஏற்படுவது இயல்பு. அல்லது அவனைச் சுற்றியுள்ளவர்கள் அவனிடம் ஐயத்தை விளைவிப்பார்கள். இதனால் பணி மேற்கொண்டவனுக்கு வினையுடன் உள்ள தொடர்பை வேறாகத் தலைவன் நினைக்கத் தொடங்கலாம். வினையாற்றுபவன் கையாடல் செய்வதாகவோ அல்லது அவன் கையூட்டு வாங்குகிறானோ என்ற ஐயம் தலைவனுக்கு எழலாம். எந்த அடிப்படையும் இல்லாமலும் தலைவன் இவ்விதம் வேறாக நினைக்கும் நேரங்களும் உண்டு. அப்படி நினைத்து வேண்டாத் தலையீடு செய்தால் நலங்கள் ஏற்படாமல் பொருளாதாரக் கேடுதான் உண்டாகும். அப்படிச் செயலும் கெட்டு திருவும் நீங்கும்படி செய்யவேண்டாம் என அறிவுறுத்துகிறது இக்குறள்.

வினையினிடத்து வினைக்குரியனாகச் செய்யப்பட்டவனது நட்பையே தலைவன் 'வேறாக நினைப்பான்' என்று சொல்லப்பட்டது.

செயலுடன் செயலுக்குரியானது தொடர்பை வேறுவிதமாகக் கருதுகின்றவனை விட்டுச் செல்வங்கள் நீங்கும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தெரிந்து வினையாடல் தொடங்கியபின் செயலில் நேர்மையாய் இருப்பவனை மதிப்புடன் நடத்தவேண்டும்.

பொழிப்பு

செயலுடன் தொழில் பொறுப்புடையவன் கொண்டுள்ள தொடர்பை வேறுவிதமாக நினைத்தால் செல்வம் நீங்கும்.