இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0515



அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் வினைதான்
சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:515)

பொழிப்பு: (செய்யும் வழிகளை) அறிந்து இடையூறுகளைத் தாங்கிச் செய்துமுடிக்க வல்லவனை அல்லாமல், மற்றவனைச் சிறந்தவன் என்று கருதி ஒரு செயலைச் செய்யுமாறு ஏவக்கூடாது.

மணக்குடவர் உரை: .............................................................................................................

பரிமேலழகர் உரை: அறிந்து ஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் - செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது, வினைதான் சிறந்தான் என்று ஏவற்பாற்றன்று - வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.
('செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம். அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: ஒரு வினையை அறிந்து முடிப்பவனிடமே ஏவுக; பெயர்பெற்றவன் என்பதற்காக ஏவற்க.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வினைதான் அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால் சிறந்தான் என்று ஏவற்பாற்று அன்று.


அறிந்துஆற்றிச் செய்கிற்பாற்கு அல்லால்:
பதவுரை: அறிந்து-தெரிந்து; ஆற்றி-பொறுத்து; செய்கிற்பாற்கு-முடிவு செய்ய வல்லானை; அல்லால்-அன்றி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: வினைதான் உள்பாடு அறிந்து செய்யும் காலத்து உற்ற துன்பத்தையும் பொறுத்துச் செய்ய வல்லாற்கு அல்லது;
பரிதி: இராசகாரியத்தை அறிந்தவன் எந்த வகையாலும் நம்புதலாக இருந்தவன்;
காலிங்கர்: மற்று இங்குச் சொன்ன முறையே 'யாம் இவற்கு இது முடிக்குவம்' என்று அறிந்து, மற்று அவ்வினை முடியும் அளவும் ஒழுக நடத்தி, அங்ஙனம் செய்ய வல்லோர்க்கு அல்லது;
பரிமேலழகர்: செய்யும் உபாயங்களை அறிந்து செயலானும் இடையூறுகளானும் வரும் துன்பங்களைப் பொறுத்து முடிவுசெய்ய வல்லானையல்லது;
பரிமேலழகர் குறிப்புரை: 'செய்கிற்பாற்கு' என்பது வேற்றுமை மயக்கம்.

'வினையை அறிந்து செய்யும் காலத்துத் துன்பங்களைப் பொறுத்துச் செய்யவல்லார்க்கு அல்லது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிய வேண்டுவனவற்றை அறிந்து இடையில் வரும் துன்பத்தைப் பொறுத்துத் தொழில் செய்யும் திறமுடையவனை அன்றி', 'குறிப்பிட்ட வேலையை அறிந்தவனாகவும் அதைச் சமாளித்து முடிக்கக்கூடியவனாகவும் இருந்தாலன்றி', 'வேலை செய்யும் முறையை அறிந்து அதனைச் செய்யுங்கால் இடையூறுகளைப் பொறுத்து மேற்சென்று அதனை முடிக்க வல்லவனையன்றி', 'எல்லாவற்றையும் நன்கு அறிந்து துன்பங்களைப் பொறுத்துச் செய்யும் இயல்புடையானை அல்லது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வினைத்திறம் அறிந்து, வேலையின் அழுத்தத்தைத் தாங்கி, செயல் முடிக்கும் ஆற்றல் உடையவனிடம் அன்றி என்பது இப்பகுதியின் பொருள்.

வினைதான் சிறந்தான்என்று ஏவற்பாற்று அன்று:
பதவுரை: வினைதான்-செயல்தான்; சிறந்தான்-சிறந்தவன்; என்று-என்பதாக; ஏவல்-கட்டளையிடுதல்; பாற்று-இயல்புடையது; அன்று-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: தமக்குச் சிறந்தான் என்று ஒருவனை ஏவும் பகுதி உடைத்தன்று என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வினையினது இயல்பு கூறிற்று.
பரிதி: காரியத்தின் விரோதத்தினாலே தீங்குண்டாதலால் உறவின் முறையானவனையே விசாரிப்பான் என்றவாறு.
காலிங்கர்: வறிதே, இவன் நமக்குப் பெரிதும் நட்பிற் சிறந்தான்' என்று ஒரு வினையை 'நீ இது செய்வாயாக' என்று ஏவுதற்குத் தகாது; அதனால் 'இவ்வினைக்கு இவன் தூயன்' என்று ஏவும் இத்துணை அல்லது சுற்றமும் தொடர்பும் பிறவும் நோக்கி வினைக்கு ஏவுதல் என்றும் தகாது என்றவாறு,
பரிமேலழகர்: வினைதான் இவன் நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று.
பரிமேலழகர் குறிப்புரை: அறிவு ஆற்றல்களான் அல்லது அன்பான் முடியாது என இதனான் வினையினது இயல்பு கூறப்பட்டது.

'தமக்குச் சிறந்தான்/ நட்பிற சிறந்தான்/ நம்மாட்டு அன்புடையன் என்று பிறனொருவனை ஏவுதல் தகாது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவன் நமக்குச் சிறந்த அன்பினன் என்று வேறு ஒருவனை வினை செய்ய ஏவுதல் தகாது', 'ஒருவனை அவனுக்குள்ள வேறு சிறப்புக்களைக் கருதி வேலை செய்ய ஏவக்கூடாது', 'மற்றொருவனைத் தன்னிடத்து அன்புடையவன் என்பது மாத்திரங் கருதி வேலை ஏவுதல் தக்கதன்று', ''இவன் நமக்கு மிகவும் வேண்டியவன்' என்று கருதி ஒருவனை வினையின்கண் செலுத்துதல் கூடாது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மற்ற சிறப்புக்களைக் கருதி பிறனிடம் செயலை ஏவற்க என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்கு அறியப்பட்டவன் என்பதற்காக மட்டும், செயலறிவும் கடும் உழைப்பும் அற்ற, ஒருவனைப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது.

வினைத்திறம் அறிந்து, வேலையின் அழுத்தத்தைத் தாங்கி, செயல் முடிக்கும் ஆற்றல் உடையவனிடம் அன்றி சிறந்தான் எனக் கருதி பிறனிடம் செயலை ஏவற்க என்பது பாடலின் பொருள்.
'சிறந்தான்' யார்?

அறிந்து என்ற சொல்லுக்கு செயல்முறை வழிகளை அறிந்து என்று இங்கு பொருள் கொள்வர்.
ஆற்றி என்ற சொல் செயல் தரும் அழுத்தங்களைத் தாங்கி எனப் பொருள்படும்.
செய்கிற்பாற்கு அல்லால் என்ற தொடர் செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர் அல்லாமல் என்பது பொருள். இங்குள்ள 'கில்' என்பது ஆற்றல் உணர்த்தும் இடைச்சொல் என்பர்.
வினைதான் என்ற தொடர் எவ்வினையுந்தான் என்ற பொருள் தரும்.
என்று என்ற சொல்லுக்கு என்பதாக என்று பொருள்.
ஏவற்பாற்று அன்று என்ற தொடர் ஏவும் தன்மையது அன்று என்ற பொருளது.

எவ்வினையையும், அது பற்றி முழுதும் அறிந்து பொறுமையுடன் செய்யும் இயல்புடையானிடம் ஏவுக; நன்கு அறியப்பட்டவன் என்று கருதி பிறன்கண் ஏவற்க.

பணி அமர்த்தலின் முறையில் என்ன செய்ய ஆகாது என்பதைச் சொல்வது இது.
செயலாற்றுந்திறன் தெரிந்து ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது இக்குறள். எந்தச் செயலாக இருந்தாலும் செயல் தெரிந்தவனையே அங்கு அமர்த்தவேண்டும். ஆடம்பரத் தன்மையன் ஆரவாரம் செய்து தன்னுடைய இருப்பை அறியச் செய்துவிடுவான். அவனுக்கு செயல் பற்றிய அறிவு இராது. கடுமையாக உழைத்து செயலை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலும் இருக்காது. அப்படிப்பட்டவனைத் தேர்ந்தெடுத்தல் சதுரமான முளைக் குச்சியை வட்டமான துளையில் (square peg into a round hole) செருகுவதை ஒக்கும். பொருந்தி வராது. எல்லாத் துறைக்கும் செயலுக்கும் எல்லாரும் பொருந்த முடியாது. எத்துறை அவன்கண் விடப்படுகிறதோ அத்துறையில் அவனுக்கு அறிவு அதாவது நல்ல பயிற்சியும் அனுபவமும் இருக்க வேண்டும். அல்லாமல் எல்லாராலும் அறியப்பட்டவன் என்ற காரணத்திற்காக அவனுக்குப் பழக்கமில்லாத வேறு ஒரு துறையில் அவனை ஈடுபடுத்தலாகாது. பொதுத் திறமையையும் வினைக்குத் தொடர்பில்லாத வேறுகுணத்தையும் கருதித் தெரியாத்துறையில் அமர்த்தக்கூடாது. தான் சிறந்தவர் என்று கருதும் ஒருவரை, பணியின் தன்மை நோக்காமல், பணியமர்த்தலாகாது. செயலின் இயல்பு வேறாக இருப்பதால் அப்படி அமர்த்தப்பட்டவரால் வினையை நிறைவேற்ற இயலாது. தகுதியுடையவர் எனத் தேர்ந்தெடுக்கப்பட்டவரையும் அவர்க்குத் தக்கதுறை இதுவெனத் தெளியப்பட்ட துறைக்கே பொறுப்பாளர் ஆக்குதல் வேண்டும்.

பரிப்பெருமாள் உரை 'வினைதான் உள்பாடு அறிந்து செய்யும் காலத்து உற்ற துன்பத்தையும் பொறுத்துச் செய்ய வல்லாற்கு அல்லது, தமக்குச் சிறந்தான் என்று ஒருவனை ஏவும் பகுதி உடைத்தன்று என்றவாறு' என்று சொல்லி 'இது வினையினது இயல்பு கூறிற்று' என முடிக்கிறது. இதன் பொருள் 'சிறந்தான் என்று, தகுதியில்லாத ஒருவரை, செயலே, தன்னை ஏவ அனுமதிக்காது' என்பதுபோல அமைந்துள்ளது. இதை விளக்குவதுபோல் பரிமேலழகரது 'வினை, நம்மாட்டு அன்பு உடையனென்று, பிறனொருவனை ஏவும் இயல்புடைத்தன்று' என்ற உரை அமைகிறது.

'சிறந்தான்' யார்?

சிறந்தான் என்றதற்கு உறவின் முறையானவன், தமக்குச் சிறந்தான், நட்பிற் சிறந்தான், சுற்றமும் தொடர்பும் பிறவும், நம்மாட்டு அன்பு உடையன், நம்மிடம் அன்பு மிக்கவன், தன்னிடத்து அன்புடையவன், நமக்கு மிகவும் வேண்டியவன், மற்ற வகையில் சிறந்தவன், வேறு வகைகளில் சிறப்புற்றவன், பழக்கமானவன், நெருங்கியவன், உறவினன், அன்பன், நண்பன், உதவியோன், மக்கட் செல்வாக்காளன், நல்லவன், இனியவன், நம்மவன் (கட்சி இனம்) எனப் பலவாறாக உரையாளர்கள் பொருள் கூறினர்.
தனக்கு வேண்டியவன் என்னும் பொருள்படச் ‘சிறந்தான்’ என்பதற்கு பரிமேலழகர் உரை வரைந்தார். நாமக்கல் இராமலிங்கம் 'வேறு சிறப்புக்கள் கொண்டவன்' என உரை கூறினார்.

'சிறந்தான்' என்பது வேறுவகையில் சிறப்புடையவன் அல்லது நன்கு அறியப்பட்டவன் (Popular) குறித்தது.

வினைத்திறம் அறிந்து, வேலையின் அழுத்தத்தைத் தாங்கி, செயல் முடிக்கும் ஆற்றல் உடையவனிடம் அன்றி நன்கு அறியப்பட்டவன் எனக் கருதி பிறனிடம் செயலை ஏவற்க என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவும் ஆற்றலுமே வினை முடிக்க தேவை; ஆடம்பரத்தன்மை அல்ல என்னும் தெரிந்து வினையாடல் பாடல்.

பொழிப்பு

திறம் அறிந்து அழுத்தம் தாங்கி செயல் ஆற்றக்கூடியவனை அன்றி செல்வாக்காளன் என்பதற்காக வேறொருவனை ஏவுதல் வேண்டாம்.