இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0514



எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான்
வேறாகும் மாந்தர் பலர்

(அதிகாரம்:தெரிந்து வினையாடல் குறள் எண்:0514)

பொழிப்பு: எவ்வகையால் ஆராய்ந்து தெளிந்த பிறகும் (செயலை மேற்கொண்டு செய்யும்போது) அச் செயல்வகையால் வேறுபடும் மக்கள் உலகத்தில் உண்டு.

மணக்குடவர் உரை: எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும் அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.

பரிமேலழகர் உரை: எனை வகையான் தேறியக் கண்ணும் - எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும், வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர் - அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
(கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: எல்லாவகையிலும் ஆராய்ந்து தெளிந்தபோதும் ஒரு வினையைச் செய்வதற்கு அமர்த்தப்பட்ட பின்னர் அவ்வினையால் தம் இயல்பு மாறுபடும் மக்கள் பலர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
எனைவகையான் தேறியக் கண்ணும் வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்.


எனைவகையான் தேறியக் கண்ணும்:
பதவுரை: எனை-எல்லா; வகையான்-திறத்தால்; தேறியக்கண்ணும்-தெளிந்தபோதும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்;
பரிதி: நானாவகையினாலும் ஒருவனை விசாரித்து;
காலிங்கர்: உலகத்து அரசர் ஒருவரை எனைத்து வகையானும் தெளிந்த இடத்தும்;
பரிமேலழகர்: எல்லா வகையானும் ஆராய்ந்து தெளிந்து வினைவைத்த பின்னும்;

'எல்லா வகையினாலும் ஆராய்ந்து தெளிந்தவிடத்திலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வாறு தெளிந்தாலும்', 'எல்லாவகையாலும் ஆராய்ந்து தெளிந்து வேலையில் வைத்தாலும்', 'ஆராய்ந்து தேர்ந்தெடுத்தாலும்', 'எப்படிப்பட்ட வகையிலும் ஆராய்ந்து தெளிந்தபின்னும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

எல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும் என்பது இப்பகுதியின் பொருள்.

வினைவகையான் வேறாகும் மாந்தர் பலர்:
பதவுரை: வினை-செயல்; வகையான்-இயல்பினால்; வேறு-மாறுபாடு; ஆகும் மாந்தர்-மக்கள்; பலர்-பலர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர் செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது தெளிந்தே மென்று இகழலாகாதென்றது.
பரிதி: நம்பினான் அவனிடம் உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றவறு.
காலிங்கர்: பின்னும் கரும வகையினால் வேறுபட்டு நிற்கும் மாந்தர் உலகத்துப் பலர் உளர் ஆகலின், அதனால் தாம் பிறர்க்குச் செய்யும் கருமத்தின்கண் வரும் பொருள் முதலாகிய பேறுகண்ட இடத்துத் தமது நெறியினைத் தேராது புரியநிற்கும் புல்லிமையுடையோரும் உளர்; ஆகலாற் பெரிதும் தெரிந்து வினை அடைக்கவேண்டும் என்றவாறு. [புல்லிமையுடையோரும் - இழிதகையுடையோரும்; அடைக்கவேண்டும் - ஒப்படைக்க வேண்டும்].
பரிமேலழகர்: அவ் வினையின் இயல்பானே வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர்.
பரிமேலழகர் குறிப்புரை: கட்டியங்காரன்போல அரச இன்பத்தினை வெஃகி விகாரப்படுவதல்லது, அதனைக்குற்றம் என்று ஒழிந்து தம் இயல்பின் நிற்பார் அரியர் ஆகலின், வேறாகும் மாந்தர் பலர் என்றார். வினை வைப்பதற்கு முன் எல்லாக் குணங்களும் உடையராய், வைத்தபின் விகாரப்படுவாரை இடையாயதொரு வினையை வைத்து அறிந்து ஒழிக்க என்பதாம். இதனான் ஒரு வகையால் ஒழிக்கப்படுவார் இவர் என்பது கூறப்பட்டது.

செய்யும் வினையின் வகையினாலே மனம் வேறுபடும் மாந்தர் உலகத்துப் பலர் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி உறவின் முறையில்லாதவன் வேறுபடும் என்றுரைத்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காரியத்தின் போது வேறாக நடப்பவரே மிகப் பலர்', 'செய்கின்ற தொழில் வகையாலே மனம் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலராவர்', 'குறிப்பிட்ட காரியத்தின் விவரமறிந்து செய்யத் தெரியாதவர்களே அதிகமாக உள்ளவர்கள்', 'வேலையில் அமர்ந்தபின் அதன் முறையினாலே தமது நல்ல தன்மையின் மாறுபடும் மக்கள் உலகத்திலே பலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

செயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தேர்வுமுறையின் பொழுது எப்படி இருப்பரோ அப்படியே பணிக்கு அமர்த்திய பின்னும் இருப்பவர்கள் சிலரே.

எல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், வினைவகையான் வேறாகும் மக்கள் உலகத்தில் பலர் என்பது பாடலின் பொருள்.
'வினைவகையான் வேறாகும்' குறிப்பது என்ன?

எனை என்ற சொல்லுக்கு எல்லா என்பது பொருள்.
முதலில் உள்ள வகையான் என்ற சொல்லுக்கு திறத்தால் என்றும் இரண்டாவது வகையான் என்ற சொல்லுக்கு இயல்பால் என்றும் பொருள் கொள்வர்.
தேறியக் கண்ணும் என்ற தொடர் தேர்ந்தெடுக்கப்பட்ட இடத்தும் என்ற பொருள் தரும்.
மாந்தர் பலர் என்ற தொடர் மக்கள் பலர் என்ற பொருளது.

எவ்வளவோ வழிகளால் ஆராய்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டாலும், செயலை மேற்கொண்டு பணியில் அமர்ந்தபின் நிலையில் வேறுபட்டு விடும் மக்கள் பலராவர். அதனால் பணியில் அமர்த்தும் தலைவர் தொடர்ந்து விழிப்பாயிருத்தல் வேண்டும்.

'தெரிந்து தெளிதல்' அதிகாரத்தில் வினைக்குரியாரை ஆராயும் வகை கூறப்பட்டது. 'அறம்பொருள் இன்பம் உயிரச்சம் ஆகிய நான்கால் தேர்வு செய்யும் முறை அவற்றுள் ஒன்று. இவ்வாறு எவ்வளவு விரிவாக ஆராய்ந்து தெளியப்பட்டாலும், தேர்வு செய்யப்பட்ட பின்னர் கொடுத்த செயலைச் செய்யும் நிலையில், மாறுபடுவர்கள் பலராக இருக்கின்றனர். பலர் என்றதால் தெளியப்பட்டவர்கள் குற்றம் புரிதலுக்கு ஆளாகும் வாய்ப்புகள் மிகை எனக் கொள்ள வேண்டும். பணியில் அமர்த்திய பின்னர் சிறுதுகாலம் கண்காணித்த பின்னர் அவர்களிடம் முழுப்பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும் என்பது இதற்கான ஒரு தீர்வு. அதன் பின்னரும் தொடர்ச்சியாக தலைவன் தனது மேற்பார்வையில் வைத்துக் கொள்ள வேண்டும். தெளிந்தோம் என்று அலட்சியமாக இராமல், இடையில் இவ்வாறு நம்பிக்கைக்கு எதிராகச் செயல்படுவோர்பற்றி விழிப்பாயிருக்க வேண்டும். தேர்வு முறையில் தெளிவாய் இருந்தான் என்ற காரணத்துக்காக அந்தத் துறையின் நடவடிக்கை சரியாக நடந்துவிடுமென்று அவர் போக்கிலே விட்டுவிடக்கூடாது என்பது அறிவுறுத்தப்படுகிறது.
எப்படிப்பட்ட நற்குணம் கொண்டவரும் சூழ்நிலைகளால் மாறிப்போவர். செல்வத்தையும் பதவியையும் பெற்றபோது அவர் மனம் திரிந்து போகும். பலருடைய இயல்பும் வாய்ப்புக்கள் அமையாததினால்தான் நேராக நிற்கிறது. ஆகையால் அதிகாரம் ஒருவரிடம் குவிக்கப்படாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அவர் நிலைமாறாதிருக்கிறானா என்பதை இடையறாது தலைவன் கவனித்தல் வேண்டும். மாறுபடுவது அறியப்பட்டால் அப்படி வேறானவனுக்கு மாற்றுப் பணி தர வேண்டும் அல்லது அவனைப் பணிநீக்கம் செய்ய வேண்டும்..

வினையை மேற்கொள்வதற்கு முன்னர் எல்லா நற்குணங்களும் உடையவர்போல் காணப்பட்டு, வினையை மேற்கொண்ட பின்னர் குணத்தாலும் செயலாலும் வேறுபடுவர் பலர். பணியில் அமர்த்தப்பட்ட பின் அப்பண்புகளினின்றும் வேறுபட்டுப் பல தவறுகளை அல்லது குற்றங்களைச் செய்தல் கூடும் என்பது சொல்லப்பட்டது. எனவே செயல் நடக்கும் காலத்தும், பொறுப்பேற்றவனைக் கண்காணித்துக்கொண்டே வரவேண்டும். அப்பொழுதுதான் குற்றம் நிகழாவண்ணம் தடுக்கலாம்.
பரிமேலழகர் சீவக சிந்தாமணி காப்பியத்தில் வரும் கட்டியங்காரனின் உள இயல்பினை உவமை விளக்கத்திற்குப் பயன்படுத்தினார். தன்னை முழுதாக நம்பிய மன்னன் சச்சந்தனைக் கொன்று ஆட்சியைத் தனதாக்கிக் கொண்டு வினைவகையால் வேறாகினவன் கட்டியங்காரன்.

பொறுப்புக்களை ஏற்று ஒருவன் பணி தொடங்கிய பின்னரும் அவன் ஆராய்தலுக்கு உள்ளாதல் வேண்டும் என்பது செய்தி.

'வினைவகையான் வேறாகும்' குறிப்பது என்ன?

தேர்வு செய்யப்பட்டபொழுது காணப்படும் நடத்தைமுறை பணியில் அமர்ந்தபின் பலரிடம் காணப்படுவதில்லை. அவர்கள் ஏன் மாறுபடுகின்றனர்? தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட செயலின் இயல்பும் ஒரு காரணம். தொழிலியல்பால் மனம் வேறுபடுதலாவது, பெருகிய ஆதாயம் வருவது கருதி அதைத் தனதாக்கிக் கொள்ளும் முயற்சி, சிறப்புடைய பதவிகளை முறையற்ற வழிகளில் அடைய முயலும் வேட்கை, கண்காணித்தல் முதலியவற்றால் மனக்குறைவுபட்டுப் பகை கொண்டு ஒழுகுதல் முதலியன. மேலும் செயலின் இயல்பு என்பது பணியில் உள்ள ஏற்றத்தாழ்வுகள், விருப்பு வெறுப்புக்கள், செயலாற்றும்போது இடையில் ஏற்படும் தடைகள் ஆகியவற்றையும் குறிக்கும். காலிங்கர் தாம் பிறர்க்குச் செய்யும் செயலின் மூலம் வரும் பொருள் முதலாகிய பேறுகண்ட இடத்துத் தமது நெறியினைத் தேராது இழிதகையான செயல்களில் ஈடுபடுவர் என்கிறார். இவர் கையாடல் அல்லது கையூட்டு (லஞ்சம்) பெறுதல் ஆகியவற்றைக் குறிக்கிறார் எனத் தெரிகிறது. தேவநேயப் பாவாணர் '......நேர்மையானவரென்று கருதப் பெற்றவர். வணிகத் துறையதிகாரியானபின் கையூட்டு வாங்குவது, தலைமை யமைச்சராகவும் படைத்தலைவராகவும் அரசால் அமர்த்தப் பெற்றவர் அதிகாரத்தைக் கைப்பற்றியபின் அரசைக் கவிழ்த்து விட்டுத் தாம் தலைவனாவது போன்றவற்றை 'வினைவகையான் வேறாகு மாந்தர் என்பதற்குக் காட்டாகக் கூறுவர்.
'காரியம் செய்கிற விதத்தில் தவறிவிடுவர்; பணியிலே திறமைக் குறைவை காட்டுவர்; வினையில் சோம்பலும் செயலறியாமையு முடையோர்' ஆகியோரும் வினைவகையால் வேறாகுவோராவர்.

வினைவகையான் வேறாகும் என்ற தொடர் 'செயலின் இயல்பால் மாறுபடும்' என்ற பொருள் தருவது.

எல்லாவகையாலும் ஆராய்ந்து தேர்ந்தெடுத்த போதிலும், செயலின் இயல்பால் வேறுபடும் மக்கள் உலகத்தில் பலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தெரிந்து வினையாடல் ஏற்றவரிலும் பலர் செயலில் முரணாக நடப்பது இயல்பு.

பொழிப்பு

எல்லாவகையாலும் தெளிந்தாலும் தொழில் வகையாலே வேறுபடும் மக்கள் உலகத்தில் பலராவர்.